தமிழகத்தில் அடிமட்டத்தில் இலங்கைப் பிரச்னை தொடர்பான ஒரு கொந்தளிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. அதன் culmination-தான் நேற்று சாஸ்திரி பவனுக்கு எதிரில் நடந்த முத்துக்குமாரின் தீக்குளிப்பு.
இந்த மக்கள் கொந்தளிப்பின் ஒரு விளைவுதான் பல கல்லூரிகளில் மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து தெருவில் போராடுவது. மாணவர்கள் படிப்பின்மீது அக்கறையில்லாமல்தான் இதனைச் செய்கிறார்கள் என்று அரசுகள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதுபோன்ற மாணவர் போராட்டங்கள்தான் இட ஒதுக்கீடு, மொழிப் போராட்டம் ஆகியவற்றில் கடுமையாக வெடித்துள்ளது.
மத்திய அரசு, இலங்கைப் பிரச்னை விஷயத்தில் கடந்த ஒரு வருடமாக நாடகம் மட்டுமே ஆடிவருகிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆர்வம் காட்டினால் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை எளிதில் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்குரிய எந்த முயற்சியையும் இந்த அமைச்சகம் எடுக்கவில்லை. “விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்துக் கட்டும் முயற்சியில் எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை; அதனால் எந்தப் பாதகமும் இல்லை” என்பது ராஜபக்ஷே மற்றும் சிங்களத் தீவிரவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது தமிழக, அதன் காரணமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக்கூடாது.
ஆனால் அதுதான் நடந்துள்ளது. இதில் குற்றம் முழுவதுமே திமுக மேல்தான். பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அவர்களால் முடிந்தவரை, இந்தப் பிரச்னையை முன்னெழுப்பியுள்ளனர். ஆனால் திமுக முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மழையில் கைகோர்த்து நிற்பது, கடிதங்கள் எழுதுவது ஆகியவை பிரயோசனமில்லாமலேயேதான் இருந்துள்ளன.
இன்று காலம் சற்று அதிகமாகவே கடந்துவிட்டது. தேர்தல் இரண்டே மாதங்களில் என்ற நிலையில் இன்றைய மத்திய அரசை ஆட்டுவிக்கும் திமுகவின் பலம் குறைவுதான். ஆனால் ஆறு மாதங்களுக்குமுன், திமுக, மத்திய அரசை வற்புறுத்தி, போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். செய்யவில்லை.
இலங்கைப் பிரச்னையை ஒரு காரணமாக வைத்து இன்று தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதனால் விளைவுகள் தெளிவாக இருக்காது. அதற்குக் காரணம், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் அதிமுகவும் காங்கிரஸ்+திமுகவும் இலங்கைப் பிரச்னையில் கிட்டத்தட்ட ஒரே நிலையை எடுத்துள்ளதுதான். அத்துடன் மூன்றாவது அணி என்று எதுவும் வலுவாக இல்லாததுமே.
“பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? அப்படிச் செய்தால் அவர்களால் என்ன சாதிக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இதுவே சட்டமன்றத் தேர்தலாக இருந்து, இவர்கள், இலங்கைப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால், தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். குறைந்தபட்சம் இந்தக் கூட்டணியால் 60-70 இடங்களைக் கைப்பற்ற முடியும். அத்தகைய நிலையில் இலங்கைப் பிரச்னையில் குறிப்பிட்ட நிலையை எடுக்கவைக்க தமிழக, அதன்மூலம், மத்திய அரசைச் செலுத்தமுடியும்.
இலங்கைப் பிரச்னையை முன்வைத்து தெளிவான அரசியல் கூட்டணியை உருவாக்க முடியாததே இன்றைய ஏமாற்றங்களுக்குக் காரணம். இருக்கும் கட்சிகளில் அல்லது கூட்டணிகளில் ஏதோ ஒன்றை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கமுடியும். அதைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.
***
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எனவே, இலங்கைப் பிரச்னையின் ஒரு தீர்வு, வலுவான விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கை அரசுடன் அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தையில் இறங்குவதில்தான் உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்போதுதான் சிங்களத் தரப்பும் போருக்கு பதில், கொஞ்சம் விட்டுக்கொடுத்தாவது அமைதி பெறுவதே மேலானது என்ற எண்ணத்துக்கு வரும்.
இந்த நிலை மீண்டும் வருவதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் வலுப்பெற வேண்டும். தொடர்ந்து சண்டைபோட அல்ல. தங்களால் இலங்கை ராணுவத்துக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தமுடியும் என்பதைக் காண்பிப்பதற்கு. அப்படிப்பட்ட நிலையில், இந்தியா போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, ஃபெடரல் அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, இடைத் தரகராக இருந்து விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் பேசவைத்து ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினால், நீண்டகால அமைதி இலங்கையில் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு. அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேபோடவும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
விடுதலைப் புலிகள் மீண்டும் வலுவாகும் காலகட்டத்தில் அவர்கள் செய்யவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவது, மாற்றுக் கருத்துள்ளவர்களைக் கொலை செய்யாதிருத்தல். இரண்டாவது, பிற ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு நேசக்கரம் நீட்டி, கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவரவர் அவரவர் வழியில் தத்தம் இலக்கை அடைவதை ஏற்றுக்கொள்ளுதல். மூன்றாவது, இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துடனும் - முக்கியமாக, காங்கிரஸ் - உறவை வளர்த்துக்கொள்ளுதல்.
அது வரும் பத்தாண்டுகளுக்குள் நடைபெற்றால் அனைவருக்கும் நல்லது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மறைமுகமாக ராஜபக்ஷேவை ஜெயிக்கவைத்த சோக நிகழ்வு மீண்டும் கண்ணுக்கு முன் வருவதைத் தடுக்க முடியவில்லை.
தொன்மங்களுக்கான மனநிலை
4 hours ago