Friday, September 28, 2012

பாய்ஸ் டவுன்

சில்ட்ரன்ஸ் டவுனில் சில குழந்தைகள்
இரு நாள்களுக்குமுன் மதுரை சென்றிருந்தபோது பேராசிரியர் ரெங்கசாமியுடன் பாய்ஸ் டவுன் என்ற நிறுவனத்துக்குச் சென்றோம். பாய்ஸ்டவுன் என்பது ஆதரவற்றோர் இல்லம். ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இடம். ஆதரவற்ற என்றால் பல நேரங்கள் தாய், தந்தை இருந்தும் வறுமை காரணமாகப் பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருந்தால், அப்படிப்பட்ட பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அவர்கள் படித்து ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கைக்கான பொருளை ஈட்டும் காலம் வரை ஆதரவளிக்கிறார்கள்.

இதைப்போன்ற அமைப்புகள் பல நாடு முழுதும் இருக்கலாம். ஆனால் பாய்ஸ் டவுனை ஏற்படுத்தியவரின் கதை சுவாரசியமாக இருந்தது. ஜோ ஹோமன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உருவாக்கிய அமைப்பு இது. பிரிட்டிஷ்காரரான இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து, உலகெங்கும் உள்ள பிற மத மக்களிடையே சுவிசேஷத்தை எடுத்துச் செல்லவும் அவர்களை மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார். பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆசிரியராக இருந்தபின், இந்தியாவில் மதுரையில் கல்வி கற்றுத்தரவும் மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார்.

இவர் 1960-களில் இந்தியா வந்தபோது மதம் மாற்றுவதைவிட மக்களின் ஏழைமையைப் போக்குவதே முக்கியம் என்று புரிந்துகொண்டார். தன் சக பாதிரியார்களின் மதமாற்ற அணுகுமுறையை எதிர்க்கலானார். இதனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து இவரை மீண்டும் பிரிட்டனிலிருந்து அழைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டனர். பிரிட்டனில் சில மாதங்கள் பணியாற்றியவர், அங்கு கிடைத்த ஊதியத்தையும் நண்பர் ஒருவர் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா கிளம்பிவிட்டார். கத்தோலிக்க ஆர்டரிலிருந்து விலகி, மதமாற்ற எண்ணம் இல்லாமல் இந்தியர்களுக்காக ஒரு ஆதவற்றோர் இல்லம் தொடங்குவது அவருடைய இலக்காக இருந்தது.

கப்பல் வழியாகக் கொழும்பு வந்து, அங்கிருந்து தரை வழியாக யாழ்ப்பாணம் சென்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு விமானம் வழியாகவும் அங்கிருந்து மதுரைக்குத் தரை வழியாகவும் பயணம் செய்யவேண்டும். கையில் இருந்த 200 பவுண்டை டிரான்சிஸ்டர் ரேடியோக்களாக வாங்கிக்கொண்டார். அக்காலத்தில் இந்த ரேடியோக்களுக்கு இந்தியாவில் பெரும் தேவை இருந்தது. அவற்றின்மீது பெரும் சுங்கவரி விதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ரேடியோக்களை கஸ்டம்ஸ் தாண்டி எடுத்துச் சென்று சந்தையில் விற்றால் கிடைக்கும் பணம் அதிகமாக இருக்கும். அதனைக் கொண்டு ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது எளிது.

திருச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரியைச் சரிக்கட்டி, வெளியேறி, மதுரை வந்து டிரான்சிஸ்டர் ரேடியோக்களை விற்றுக் கிடைத்த பணத்துடன், திருமங்கலம் அருகே தன் நண்பர்கள் கொடுத்த தரிசு நிலத்தில் ஆதரவ்ற்றோர் இல்லத்தை ஹோமன் ஆரம்பித்துவிட்டார்.

அது இன்று விரிவாகி, சில்ட்ரன்ஸ் டவுன், பாய்ஸ் டவுன், கர்ல்ஸ் டவுன் என்ற பெயரில் சுமார் பத்து இடங்களில் உள்ளது. சுமார் 850 பேர் அங்கே சேர்ந்து வசிக்கிறார்கள், படிக்கிறார்கள். சில்ட்ரன்ஸ் டவுன் என்ற இடங்களில் 5-10 வயதுக் குழந்தைகள் (இரு பாலர்) இருப்பார்கள். இவர்களுக்கு தாதித் தாய்கள் உண்டு. குழந்தைகளை வளர்ப்பது, உணவிடுவது, அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது ஆகியவை தினசரி வேலைகள். 10 வயதைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஆண்களாக இருந்தால் பாய்ஸ் டவுன், பெண்களாக இருந்தால் கர்ல்ஸ் டவுன்.

ஆண்களை 10-வது வரை படிக்கவைப்பார்கள். பெண்களை 12-வது வரை. ஆண்கள் பத்தாவது படித்தபின், நல்ல மதிப்பெண் இருந்தால் பாலிடெக்னிக். இல்லாவிட்டால் ஐடிஐ. பத்தாவது பாஸ் செய்ய முடியாவிட்டால் ஓராண்டுத் தொழில்பயிற்சி (ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவிங் போல்). இப்படிக் கற்று முடித்ததும் எப்படியாவது வேலையில் சேர்த்து, அவர்கள் வாழ்க்கை வசதியாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜோ ஹோமன் இன்று 80 வயதுக்கும் மேற்பட்டவர். தினசரி வேலைகளைப் பார்ப்பதில்லை. பெரும்பாறை என்ற இடத்தில் இப்போது வசிக்கிறார். இந்தத் தொண்டமைப்பின் செயலராகத் தற்போது இருப்பவர் பேரா. நாராயண் ராஜா என்பவர். இவர் மதுரை சமூக அறிவியல் கழகம் என்ற கல்லூரியில் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். பேரா. ரெங்கசாமியும் இதே கல்லூரியில்தான் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

பேராசிரியர் ரெங்கசாமியும் பேராசிரியர் நாராயண் ராஜாவும்
ஒவ்வொரு பாய்ஸ் டவுன் இடமும் சில ஏக்கர்களில் மரம் செடி கொடிகளுடன் விஸ்தாரமாக உள்ளது. ஆடு, கோழிகள் வளர்க்கிறார்கள். எளிமையான கட்டடங்கள். நான் சென்றிருந்தபோது காலாண்டு விடுமுறை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு சில்ட்ரன்ஸ் டவுனில் நான்கைந்து குழந்தைகள் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

அடுத்த தீபாவளி விருந்து
பாய்ஸ் டவுன் இருப்பிடங்கள் அனைத்திலும் இந்துக் கோயில் (போன்ற அமைப்பு) உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முக்கியமாக தீபாவளியின்போது மாணவர்களின் உறவினர்களையும் வரவழைத்து ஆடு அடித்து, கறி சோறுடன் பெரும் விருந்துக் கொண்டாட்டமும் நிகழ்கிறது. இதெல்லாம் 1960-களிலிருந்தே தொடர்ந்து நடந்துவருவதாம்.

எந்தப் பகுதியில் இந்த இல்லங்கள் உள்ளனவோ அப்பகுதியில் உள்ள மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வொரு இல்லத்திலும் ‘மாணவர்கள் பாராளுமன்றம்’ நடைபெறுகிறது. அவர்கள்தான் இல்லத்தை நடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இந்த அமைப்புக்கான நிதி பெரும்பாலும் பிரிட்டனிலிருந்து வருகிறது. ஜோ ஹோமன் சாரிட்டி என்ற பிரிட்டிஷ் அமைப்பு நிதி திரட்டி, அதனை இந்திய அமைப்புக்கும் இதேபோன்ற அவர்களுடைய தாய்லாந்து அமைப்புக்கும் அனுப்புகிறது. ஒரு காலத்தில் பாய்ஸ் டவுனின் 100% நிதி பிரிட்டனிலிருந்து வந்துகொண்டிருந்தது. இப்போது உள்ளூரில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது சுமார் 20-25% நிதியை உள்ளூரிலேயே திரட்டிக்கொள்கிறார்கள். கிராம மக்கள் பலர், பணமாக இல்லாவிட்டாலும் உடல் உழைப்பாகவும் உதவுகிறார்கள்.

பாய்ஸ் டவுன் இந்தியாவின் இணையத்தளம்

நீங்கள் மதுரைப் பகுதியில் இருந்தால், பாய்ஸ் டவுன் அமைப்புக்கு எந்தவிதத்தில் உதவ முடியும் என்று பாருங்கள். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பணம் கொடுத்து உதவலாம்.

அவர்களைத் தொடர்புகொள்ள:

General Secretary
Boys Town Society,
Tirumangalam – 625 706
Ph. No: 04549-294473 / 294493
btsindia@yahoo.com

Thursday, September 27, 2012

ரயில் டிக்கெட் வித்தவுட்

இன்று காலை கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி புறநகர் மின்சார ரயிலில் ஏறி கிண்டி நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன்.

விதிப்புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக்கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்டில் ஏறி தாம்பரம் வந்து இறங்கி, அங்கே மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால் முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக மின் ரயிலுக்கான டிக்கெட் வாங்கவேண்டும்.

எனவே என் தவறுக்காக, 250 ரூபாய் அபராதமும் தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக 5 ரூபாயும் சேர்த்து 255 ரூபாய் கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.)

அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பறங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டுமாம்.

ஆனால் இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றுகிறது; இதனைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். டிக்கெட் பரிசோதகர்மீது எந்தக் குற்றமும் இல்லை. இருக்கும் விதிகளின்படி அவர் நடந்துகொள்கிறார். விதிகள் மாறவேண்டுமானால், அது அமைச்சகத்தின் கைகளில்தான் இருக்கிறது.

உங்கள் கருத்து என்ன? முன்பதிவு செய்தபின் இஷ்டத்துக்கு இறங்கி, வெவ்வேறு ரயில்கள் மாற்றிச் செல்வது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லாதிருக்கலாம். ஆனால் கடைசிக் கட்டத்தில் தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில் மாற்றி நான்கு ஸ்டேஷன்கள் தாண்டி வந்து இறங்குவது தவறு என்றா உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன் ரயில்வே அமைச்சகம் இப்படிப்பட்ட ஒரு அபத்தமான விதியைக் கொண்டுவந்தது? எப்போதுமுதல் கொண்டுவந்தது? கையில் பெட்டிகளுடன் குழந்தை குட்டிகளுடன் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி வெளியே சென்று டிக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் நிலையத்துக்கு உள்ளே வந்து பயணத்தைத் தொடரவேண்டும் என்றா ரயில்வே அமைச்சகம் எதிர்பார்க்கிறது?

Monday, September 24, 2012

அசோகமித்திரன் 82


எழுத்தாளர் அசோகமித்திரனின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு விருட்சம் அழகியசிங்கர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் 22 செப்டெம்பர் 2012 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. சுமார் 20 பேர் பேச அழைக்கப்பட்டிருந்தனர். சச்சிதானந்தம் தலைமை தாங்க, எழுத்தாளர்கள் முதுபெரும் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் அசோகமித்திரன் புத்தகங்களைப் பதிப்பித்துவரும் கிழக்கு பதிப்பகம் (சார்பில் நான்), காலச்சுவடு (சார்பில் தேவிபாரதி) ஆகியோரும், உயிர்மையின் மனுஷ்ய புத்திரன், கல்கியின் வெங்கடேஷ், அசோகமித்திரனின் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் கல்யாணராமன், நிறைய எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரும் ஆளுக்கு ஓரிரு வார்த்தைகள் பேசினர். ரவி சுப்ரமணியன் தான் பேசும்போது அசோகமித்திரனைக் கொஞ்சம் மிமிக்ரி செய்தார். (ரசிக்கத்தக்கதாக இருந்தது.)

நான் மூன்று மணி நேரம் அரங்கில் உட்கார்ந்துவிட்டு, வேறொரு வேலை இருப்பதால் கிளம்பிவிட்டேன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும், ஒளிப்பதிவு செய்து வலையில் ஏற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாஹித்ய அகாதெமிக்காக அம்ஷன் குமார் எடுத்திருந்த அசோகமித்திரன் குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. ஏற்கெனவே பார்த்த குறும்படம்தான் என்றாலும் மீண்டும் பார்க்கும்போது அசோகமித்திரனை ஃப்ரெஷாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு பதிப்பாளன் என்பதைவிட அசோகமித்திரனின் வாசகன் என்றவகையில்தான் நான் பேசமுடியும். திரும்பத் திரும்பப் பலமுறை அவருடைய சிறுகதைகளை, குறுநாவல்களைப் படித்துக்கொண்டே இருப்பேன். இப்போதும் செய்கிறேன். அவருடைய நாவல்களில் ஒருசில என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை. சில எனக்குப் பிடிக்காதவை. தண்ணீர், கரைந்த நிழல்கள், 18-வது அட்சக்கோடு, ஒற்றன் - மிக அற்புதமானவை. மானசரோவர் எனக்குப் பிடிக்கவில்லை. ஒற்றன் அசோகமித்திரனின் ஆகச்சிறந்த படைப்பு என்பது ஒரு வாசகனாக என் அபிப்ராயம். (இப்போது காலச்சுவடு பதிப்பு. இதனைப் பதிப்பிக்கமுடியாதது என் வருத்தம்.) அவருடைய கட்டுரைகள் அனைத்தையும் பலமுறை படித்திருக்கிறேன்.

தமிழ் எழுத்துப் பரப்பில் அசோகமித்திரனின் இடம் இது என்றெல்லாம் சொல்லும் விருப்பமோ தகுதியோ எனக்கில்லை. ஆனால் நானும் அசோகமித்திரனின் பதிப்பாளன் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயமாகவே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அசோகமித்திரனின் புத்தகங்கள் (எனக்குத் தெரிந்து) கலைஞன் பதிப்பகம் வாயிலாகவும் நர்மதா பதிப்பகம் வாயிலாகவும் வெளிவந்தன. அவருடைய சிறுகதைகள் இரு பெரும் தொகுதிகளாக கவிதா பதிப்பகம் வாயிலாக வெளிவந்தன. இப்போது அவற்றைப் பிய்த்து பல சிறுகதைத் தொகுதிகளாக கவிதா வெளியிட்டுள்ளது. அவருடைய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து இரு பெரும் தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து கிழக்கு அவருடைய பல்வேறு நூல்களைக் கொண்டுவந்துள்ளது. அனைத்தும் இப்போது அச்சில் உள்ளன. காலச்சுவடு ஒற்றன், தண்ணீர் ஆகிய நாவல்களை கிளாசிக் பதிப்புகளாகக் கொண்டுவந்தது. அவருடைய புதிய சிறுகதைகளை ஒரு பதிப்பாகக் கொண்டுவந்தது.

அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பத்தை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் ஒரு பத்துக் கதைகளை ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அசோகமித்திரனின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. அதில் மூன்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். கரைந்த நிழல்கள் (Star-Crossed), இன்று (Today), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Men, Women and Mice ). கல்யாணராமனின் மொழிபெயர்ப்பில் இரு நாவல்கள்: ஒற்றன் (Mole!), மானசரோவர் (Manasarovar), சில சிறுகதைகள் (Sand and Other Stories) வெளியாகியுள்ளன. தவிர அவருடைய சிறுகதைகள் பல மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. அவை கீழ்க்கண்ட பெயர்களில் ஆங்கிலத்தில் வந்துள்ளன: The Colours of Evil, A Most Truthful Picture and Other Stories. லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ராம் அவருடைய தண்ணீர் (Water) நாவலையும் சில சிறுகதைகளையும் (My Father's Friend) மொழிபெயர்த்துள்ளார்.

மலையாளம் முதற்கொண்டு சில இந்திய மொழிகளில் அசோகமித்திரனுடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அசோகமித்திரனின் படைப்புகள் (பெரும்பாலானவை) வாங்க

ஆங்கிலப் புத்தகங்களை வாங்க (அமேசான்)

Sunday, September 23, 2012

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.

இன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்டு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.

தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.

வெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.

இன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

அரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும்.

வளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.

இதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் - இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை - மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.

டீசல் விலை

டீசல் விலை ஏற்றம் கண்டு பலர் கொதித்துப்போயுள்ளனர். உண்மையில் இந்த விலையேற்றம் தாமதமாக வந்துள்ளது. பலமுறை பெட்ரோலின் விலை ஏற்றப்பட்டபோதெல்லாம் டீசல் விலை ஏற்றப்படவேயில்லை. அல்லது மிகக் குறைவாக ஏற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை ஏற்றவேண்டுமா என்பதிலேயே சில கேள்விகள் உள்ளன. அதீதமான வரிவிதிப்பு காரணமாகவே பிற நாடுகளைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்த விலையைக் குறைக்க MGNREGA போன்ற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (என்ன அற்புதமான பெயர்! வேலையே நடக்காத ஒன்றின் பெயர் வேலை வாய்ப்புத் திட்டம்) செய்யப்படும் வீண் செலவுகளைக் குறைக்கலாம் என்பேன். இடதுசாரிகள் வேறு மாதிரி பேசுவார்கள். தொழில்துறைக்கு அள்ளித்தரும் பல லட்சம் கோடி சலுகைகளைக் குறைத்து வரிகளாக விதித்துத் தள்ளினால், பெட்ரோல் விலையைக் குறைத்துவிடலாம் என்பார்கள். இன்னும் சிலர், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு, கரியை ஏலம் விட்டால் எத்தனை கோடிகோடி பணம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்பார்கள்.

வரி அதிகம் என்பது உண்மைதான். ஆனால் அதிலுமே சமநிலையற்ற தன்மை நிலவுகிறது என்பதும் உண்மை.

டீசல், பெட்ரோல் இரண்டையும் கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்ய, கிட்டத்தட்ட ஒரே செலவுதான் ஆகிறது. ஆனால் டீசல் விலை குறைவு. ஏனெனில் டீசல்தான் விவசாயிகளுக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும் மிக அவசியம். டீசல் அடிப்படைப் பொருளாகவும் பெட்ரோல் ஆடம்பரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் லாரிகள் மட்டுமல்ல, மெர்சிடிஸ் பென்ஸ் காரும் டீசலில் ஓடுகிறது, வோல்வோ பஸ்ஸும் டீசலில் ஓடுகிறது.

பெட்ரோல் விலையை 10 ரூபாய் ஏற்றி, டீசல் விலையை 1 ரூபாய் ஏற்றும் நிலைக்கு பதிலாக, டீசல் விலையை மட்டும் 5 ரூபாய் ஏற்றியதால் நாடே கொந்தளித்துள்ளது.

ஆனால் இந்த விலை ஏற்றத்தாலும் வேறு சில காரணங்களாலும் ஏற்றிய விலை விரைவில் இறங்கும் என்று கருதுகிறேன்.

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்கள், கடந்த ஒரு வருடத்தில்
நன்றி: http://www.x-rates.com/graph/?from=USD&to=INR&amount=1
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 10% வீழ்ந்துள்ளது. (கிட்டத்தட்ட 16% வீழுந்து பின்னர் வீழ்ச்சி குறைந்துள்ளது.) டீசல் விலையேற்றம் 10%-க்கும் குறைவே.

தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்வதன்மூலம் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குள் பாய்ச்ச முடியும். அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். இழந்த 10%-ஐ மீட்டாலே, டீசலில் விலை மீண்டும் பழைய இடத்துக்கே சென்றுவிட முடியும். பெட்ரோலின் விலையையும் குறைக்கலாம்.

மமதா மத்திய ஆட்சியிலிருந்து விலகி இந்தியாவுக்கு மிகப் பெரும் உதவி செய்திருக்கிறார்.