Friday, September 28, 2012

பாய்ஸ் டவுன்

சில்ட்ரன்ஸ் டவுனில் சில குழந்தைகள்
இரு நாள்களுக்குமுன் மதுரை சென்றிருந்தபோது பேராசிரியர் ரெங்கசாமியுடன் பாய்ஸ் டவுன் என்ற நிறுவனத்துக்குச் சென்றோம். பாய்ஸ்டவுன் என்பது ஆதரவற்றோர் இல்லம். ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இடம். ஆதரவற்ற என்றால் பல நேரங்கள் தாய், தந்தை இருந்தும் வறுமை காரணமாகப் பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருந்தால், அப்படிப்பட்ட பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அவர்கள் படித்து ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கைக்கான பொருளை ஈட்டும் காலம் வரை ஆதரவளிக்கிறார்கள்.

இதைப்போன்ற அமைப்புகள் பல நாடு முழுதும் இருக்கலாம். ஆனால் பாய்ஸ் டவுனை ஏற்படுத்தியவரின் கதை சுவாரசியமாக இருந்தது. ஜோ ஹோமன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உருவாக்கிய அமைப்பு இது. பிரிட்டிஷ்காரரான இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து, உலகெங்கும் உள்ள பிற மத மக்களிடையே சுவிசேஷத்தை எடுத்துச் செல்லவும் அவர்களை மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார். பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆசிரியராக இருந்தபின், இந்தியாவில் மதுரையில் கல்வி கற்றுத்தரவும் மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார்.

இவர் 1960-களில் இந்தியா வந்தபோது மதம் மாற்றுவதைவிட மக்களின் ஏழைமையைப் போக்குவதே முக்கியம் என்று புரிந்துகொண்டார். தன் சக பாதிரியார்களின் மதமாற்ற அணுகுமுறையை எதிர்க்கலானார். இதனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து இவரை மீண்டும் பிரிட்டனிலிருந்து அழைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டனர். பிரிட்டனில் சில மாதங்கள் பணியாற்றியவர், அங்கு கிடைத்த ஊதியத்தையும் நண்பர் ஒருவர் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா கிளம்பிவிட்டார். கத்தோலிக்க ஆர்டரிலிருந்து விலகி, மதமாற்ற எண்ணம் இல்லாமல் இந்தியர்களுக்காக ஒரு ஆதவற்றோர் இல்லம் தொடங்குவது அவருடைய இலக்காக இருந்தது.

கப்பல் வழியாகக் கொழும்பு வந்து, அங்கிருந்து தரை வழியாக யாழ்ப்பாணம் சென்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு விமானம் வழியாகவும் அங்கிருந்து மதுரைக்குத் தரை வழியாகவும் பயணம் செய்யவேண்டும். கையில் இருந்த 200 பவுண்டை டிரான்சிஸ்டர் ரேடியோக்களாக வாங்கிக்கொண்டார். அக்காலத்தில் இந்த ரேடியோக்களுக்கு இந்தியாவில் பெரும் தேவை இருந்தது. அவற்றின்மீது பெரும் சுங்கவரி விதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ரேடியோக்களை கஸ்டம்ஸ் தாண்டி எடுத்துச் சென்று சந்தையில் விற்றால் கிடைக்கும் பணம் அதிகமாக இருக்கும். அதனைக் கொண்டு ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது எளிது.

திருச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரியைச் சரிக்கட்டி, வெளியேறி, மதுரை வந்து டிரான்சிஸ்டர் ரேடியோக்களை விற்றுக் கிடைத்த பணத்துடன், திருமங்கலம் அருகே தன் நண்பர்கள் கொடுத்த தரிசு நிலத்தில் ஆதரவ்ற்றோர் இல்லத்தை ஹோமன் ஆரம்பித்துவிட்டார்.

அது இன்று விரிவாகி, சில்ட்ரன்ஸ் டவுன், பாய்ஸ் டவுன், கர்ல்ஸ் டவுன் என்ற பெயரில் சுமார் பத்து இடங்களில் உள்ளது. சுமார் 850 பேர் அங்கே சேர்ந்து வசிக்கிறார்கள், படிக்கிறார்கள். சில்ட்ரன்ஸ் டவுன் என்ற இடங்களில் 5-10 வயதுக் குழந்தைகள் (இரு பாலர்) இருப்பார்கள். இவர்களுக்கு தாதித் தாய்கள் உண்டு. குழந்தைகளை வளர்ப்பது, உணவிடுவது, அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது ஆகியவை தினசரி வேலைகள். 10 வயதைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஆண்களாக இருந்தால் பாய்ஸ் டவுன், பெண்களாக இருந்தால் கர்ல்ஸ் டவுன்.

ஆண்களை 10-வது வரை படிக்கவைப்பார்கள். பெண்களை 12-வது வரை. ஆண்கள் பத்தாவது படித்தபின், நல்ல மதிப்பெண் இருந்தால் பாலிடெக்னிக். இல்லாவிட்டால் ஐடிஐ. பத்தாவது பாஸ் செய்ய முடியாவிட்டால் ஓராண்டுத் தொழில்பயிற்சி (ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவிங் போல்). இப்படிக் கற்று முடித்ததும் எப்படியாவது வேலையில் சேர்த்து, அவர்கள் வாழ்க்கை வசதியாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜோ ஹோமன் இன்று 80 வயதுக்கும் மேற்பட்டவர். தினசரி வேலைகளைப் பார்ப்பதில்லை. பெரும்பாறை என்ற இடத்தில் இப்போது வசிக்கிறார். இந்தத் தொண்டமைப்பின் செயலராகத் தற்போது இருப்பவர் பேரா. நாராயண் ராஜா என்பவர். இவர் மதுரை சமூக அறிவியல் கழகம் என்ற கல்லூரியில் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். பேரா. ரெங்கசாமியும் இதே கல்லூரியில்தான் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

பேராசிரியர் ரெங்கசாமியும் பேராசிரியர் நாராயண் ராஜாவும்
ஒவ்வொரு பாய்ஸ் டவுன் இடமும் சில ஏக்கர்களில் மரம் செடி கொடிகளுடன் விஸ்தாரமாக உள்ளது. ஆடு, கோழிகள் வளர்க்கிறார்கள். எளிமையான கட்டடங்கள். நான் சென்றிருந்தபோது காலாண்டு விடுமுறை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு சில்ட்ரன்ஸ் டவுனில் நான்கைந்து குழந்தைகள் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

அடுத்த தீபாவளி விருந்து
பாய்ஸ் டவுன் இருப்பிடங்கள் அனைத்திலும் இந்துக் கோயில் (போன்ற அமைப்பு) உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முக்கியமாக தீபாவளியின்போது மாணவர்களின் உறவினர்களையும் வரவழைத்து ஆடு அடித்து, கறி சோறுடன் பெரும் விருந்துக் கொண்டாட்டமும் நிகழ்கிறது. இதெல்லாம் 1960-களிலிருந்தே தொடர்ந்து நடந்துவருவதாம்.

எந்தப் பகுதியில் இந்த இல்லங்கள் உள்ளனவோ அப்பகுதியில் உள்ள மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வொரு இல்லத்திலும் ‘மாணவர்கள் பாராளுமன்றம்’ நடைபெறுகிறது. அவர்கள்தான் இல்லத்தை நடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இந்த அமைப்புக்கான நிதி பெரும்பாலும் பிரிட்டனிலிருந்து வருகிறது. ஜோ ஹோமன் சாரிட்டி என்ற பிரிட்டிஷ் அமைப்பு நிதி திரட்டி, அதனை இந்திய அமைப்புக்கும் இதேபோன்ற அவர்களுடைய தாய்லாந்து அமைப்புக்கும் அனுப்புகிறது. ஒரு காலத்தில் பாய்ஸ் டவுனின் 100% நிதி பிரிட்டனிலிருந்து வந்துகொண்டிருந்தது. இப்போது உள்ளூரில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது சுமார் 20-25% நிதியை உள்ளூரிலேயே திரட்டிக்கொள்கிறார்கள். கிராம மக்கள் பலர், பணமாக இல்லாவிட்டாலும் உடல் உழைப்பாகவும் உதவுகிறார்கள்.

பாய்ஸ் டவுன் இந்தியாவின் இணையத்தளம்

நீங்கள் மதுரைப் பகுதியில் இருந்தால், பாய்ஸ் டவுன் அமைப்புக்கு எந்தவிதத்தில் உதவ முடியும் என்று பாருங்கள். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பணம் கொடுத்து உதவலாம்.

அவர்களைத் தொடர்புகொள்ள:

General Secretary
Boys Town Society,
Tirumangalam – 625 706
Ph. No: 04549-294473 / 294493
btsindia@yahoo.com

7 comments:

  1. Homen's Perumbarai set up is a destination for many bird watchers. Amazing man, amazing set up. We took children of HLC International School there and benefited from his talk.

    ReplyDelete
  2. மதுரை டி.பி. ரோடில் பாய்ஸ் டவுன் மர ஃபர்னிச்சர் கடை உண்டு. 1960-களில் மதுரை அரசு (இராஜாஜி) பொது மருத்துவமனை கட்டப்பட்டபோது அதற்குத் தேவையான ஆபரேஷன் தியேட்டர்களுக்கான கதவுகளை (தியேட்டர் கதவுகள், சாதாரண நம் வீட்டுக் கதவு மாதிரி இல்லாமல் விசேஷ வடிவமைப்புடன் இருக்குமாம்) பாய்ஸ் டவுன் அமைப்பு சிறப்பாகத் தயாரித்து அளித்தது என்று அக்கட்டிடப் பணியில் அன்று ஈடுபட்டிருந்த பொறியாளரான என் மாமா கூறியிருக்கிறார்.

    சரவணன்

    ReplyDelete
  3. ஒரு மூன்று மணி நேரத் திரைப்படம்/ 1000 பக்க நாவலுக்குக் களன் இருக்கு போலிருக்கிறதே!

    ReplyDelete
  4. இதுக்கு மதுரை போய்ட்டு வர்ற வழியில தான் வித் அவுட்ல மாட்டிக்கிட்டீங்களாக்கும்.... ஜோ ஹோமன் சுங்க அதிகாரிகளை சரிக்கட்டி (1960களிலேயே) ட்ரான்சிஸ்டர்களை எடுத்து வந்திருக்கார். 2012ல பத்ரி வித் அவுட்ல வந்து மாட்டிப் பதிவு போட்டு நொந்திருக்கார். நல்ல ஐரனி...

    ReplyDelete
  5. Thanks for writting about the services of Boys Town and the remarkable person Joe Homan

    ReplyDelete
  6. You have briefed 45 years of labour in short. Your visit inspired the staff and they started perceiving the reality in a different perspective. Thank you for your valuable time.
    Narayana Raja

    ReplyDelete