Monday, September 24, 2012

அசோகமித்திரன் 82


எழுத்தாளர் அசோகமித்திரனின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு விருட்சம் அழகியசிங்கர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் 22 செப்டெம்பர் 2012 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. சுமார் 20 பேர் பேச அழைக்கப்பட்டிருந்தனர். சச்சிதானந்தம் தலைமை தாங்க, எழுத்தாளர்கள் முதுபெரும் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் அசோகமித்திரன் புத்தகங்களைப் பதிப்பித்துவரும் கிழக்கு பதிப்பகம் (சார்பில் நான்), காலச்சுவடு (சார்பில் தேவிபாரதி) ஆகியோரும், உயிர்மையின் மனுஷ்ய புத்திரன், கல்கியின் வெங்கடேஷ், அசோகமித்திரனின் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் கல்யாணராமன், நிறைய எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரும் ஆளுக்கு ஓரிரு வார்த்தைகள் பேசினர். ரவி சுப்ரமணியன் தான் பேசும்போது அசோகமித்திரனைக் கொஞ்சம் மிமிக்ரி செய்தார். (ரசிக்கத்தக்கதாக இருந்தது.)

நான் மூன்று மணி நேரம் அரங்கில் உட்கார்ந்துவிட்டு, வேறொரு வேலை இருப்பதால் கிளம்பிவிட்டேன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும், ஒளிப்பதிவு செய்து வலையில் ஏற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாஹித்ய அகாதெமிக்காக அம்ஷன் குமார் எடுத்திருந்த அசோகமித்திரன் குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. ஏற்கெனவே பார்த்த குறும்படம்தான் என்றாலும் மீண்டும் பார்க்கும்போது அசோகமித்திரனை ஃப்ரெஷாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு பதிப்பாளன் என்பதைவிட அசோகமித்திரனின் வாசகன் என்றவகையில்தான் நான் பேசமுடியும். திரும்பத் திரும்பப் பலமுறை அவருடைய சிறுகதைகளை, குறுநாவல்களைப் படித்துக்கொண்டே இருப்பேன். இப்போதும் செய்கிறேன். அவருடைய நாவல்களில் ஒருசில என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை. சில எனக்குப் பிடிக்காதவை. தண்ணீர், கரைந்த நிழல்கள், 18-வது அட்சக்கோடு, ஒற்றன் - மிக அற்புதமானவை. மானசரோவர் எனக்குப் பிடிக்கவில்லை. ஒற்றன் அசோகமித்திரனின் ஆகச்சிறந்த படைப்பு என்பது ஒரு வாசகனாக என் அபிப்ராயம். (இப்போது காலச்சுவடு பதிப்பு. இதனைப் பதிப்பிக்கமுடியாதது என் வருத்தம்.) அவருடைய கட்டுரைகள் அனைத்தையும் பலமுறை படித்திருக்கிறேன்.

தமிழ் எழுத்துப் பரப்பில் அசோகமித்திரனின் இடம் இது என்றெல்லாம் சொல்லும் விருப்பமோ தகுதியோ எனக்கில்லை. ஆனால் நானும் அசோகமித்திரனின் பதிப்பாளன் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயமாகவே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அசோகமித்திரனின் புத்தகங்கள் (எனக்குத் தெரிந்து) கலைஞன் பதிப்பகம் வாயிலாகவும் நர்மதா பதிப்பகம் வாயிலாகவும் வெளிவந்தன. அவருடைய சிறுகதைகள் இரு பெரும் தொகுதிகளாக கவிதா பதிப்பகம் வாயிலாக வெளிவந்தன. இப்போது அவற்றைப் பிய்த்து பல சிறுகதைத் தொகுதிகளாக கவிதா வெளியிட்டுள்ளது. அவருடைய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து இரு பெரும் தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து கிழக்கு அவருடைய பல்வேறு நூல்களைக் கொண்டுவந்துள்ளது. அனைத்தும் இப்போது அச்சில் உள்ளன. காலச்சுவடு ஒற்றன், தண்ணீர் ஆகிய நாவல்களை கிளாசிக் பதிப்புகளாகக் கொண்டுவந்தது. அவருடைய புதிய சிறுகதைகளை ஒரு பதிப்பாகக் கொண்டுவந்தது.

அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பத்தை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் ஒரு பத்துக் கதைகளை ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அசோகமித்திரனின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. அதில் மூன்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். கரைந்த நிழல்கள் (Star-Crossed), இன்று (Today), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Men, Women and Mice ). கல்யாணராமனின் மொழிபெயர்ப்பில் இரு நாவல்கள்: ஒற்றன் (Mole!), மானசரோவர் (Manasarovar), சில சிறுகதைகள் (Sand and Other Stories) வெளியாகியுள்ளன. தவிர அவருடைய சிறுகதைகள் பல மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. அவை கீழ்க்கண்ட பெயர்களில் ஆங்கிலத்தில் வந்துள்ளன: The Colours of Evil, A Most Truthful Picture and Other Stories. லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ராம் அவருடைய தண்ணீர் (Water) நாவலையும் சில சிறுகதைகளையும் (My Father's Friend) மொழிபெயர்த்துள்ளார்.

மலையாளம் முதற்கொண்டு சில இந்திய மொழிகளில் அசோகமித்திரனுடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அசோகமித்திரனின் படைப்புகள் (பெரும்பாலானவை) வாங்க

ஆங்கிலப் புத்தகங்களை வாங்க (அமேசான்)

5 comments:

  1. இந்த புகைப்படம் தான் ஹைலைட்! பாரதி இறங்கி வந்து அசோகமித்திரனாக அமர்ந்திருப்பது போல் சிலிர்க்க வைக்கிறது!

    ReplyDelete
  2. அசோகமித்திரனின் ”பதினெட்டாவது அட்சக்கோடு” நாவலை கோமதி நாராயணன் “The Eighteenth Parallel" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இது ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு.

    ReplyDelete
  3. பதினெட்டாவது அட்சக் கோடு ஹைதராபாத் வாழ்க்கை பற்றிய அழகான பதிவு. முடிவு தரும் அதிர்ச்சி மனதைக் கலங்க வைக்கும். அசோக மித்திரன் சிறுகதைகள் எளிமையாக, ஆனால் கடைசியில் மறக்க முடியாத முத்தாய்ப்பான ஒரு பஞ்ச்சுடன் முடியும். அவர் நூறாண்டு காண வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. asokamithran is one of the greatest writers .may GOD bless him with long life and happiness.

    ReplyDelete
  5. ஒற்றன் போன்ற சில புத்தகங்களைப் படித்தேன். அவ்வளவு சிலாகிக்கும் படியாக இல்லை.
    ஒரு நான்கு தலைமுறைக்குப் பயணிக்கும் நாவல்,கதாநாயகன் பிரித்தானிய இந்தியாவில், பாகிஸ்தானுக்கு அருகில் ரயில்வே வேலையில் இருக்கும் நிலை பற்றிய கதை; படிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.கதை நடையிலும் சுற்றிச் சுற்றிச் செல்லும் குழப்பம்! ஒரு வேளை அதுதான் அமி.னின் சிறப்பம்சமோ,தெரியவில்லை.
    புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், திஜா, கநாசு போன்றோர் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நின்றார்கள்.

    சில எழுத்தாளர்கள் நுணுக்கங்களுக்கும், சிலர் உணர்வுகளுக்கும், சிலர் சமூக நோக்கத்தை கேள்வி எழுப்புவதாலும் நினைவில் நிற்கும் எழுத்துக்களுக்காக அறியப்பட்டார்கள்.

    அமி. எதற்காகக் கொண்டாடப்படுகிறார் என்று அறிவித்தால் நலம்!

    ReplyDelete