Wednesday, October 15, 2003

இலக்கியவாதிகளும் துதிபாடிகளும்

நான் இலக்கியப் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இதுவரை போனதில்லை. போன வாரம் திங்கட்கிழமை அன்று ஜெயமோகனின் எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன, அதற்கு ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா ஆகியோர் வரப்போகிறார்கள் என்றதால் போயிருந்தேன். லா.ச.ரா வரவில்லை. மற்ற இருவரும் வந்திருந்தனர்.

அதற்கு முந்தைய நாள் மற்றுமொரு புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த விழாவில் இளையபாரதி ஏழு புத்தகங்களை வெளியிட்டாராம், அதையெல்லாம் விட முக்கியமாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி விழாவிற்கு வந்திருந்தாராம். இவ்விழாவிலும் அசோகமித்திரன் மேடையில் அமர்ந்திருந்திருக்கிறார். ஜெயமோகன் உட்பட பார்வையாளர்கள் முக்கால்வாசிப்பேர் இரண்டு கூட்டங்களுக்கும் போயிருக்கிறார்கள்.

முதல் நாள் நடந்த கூட்டம் கருணாநிதியின் இலக்கியத் திறமைகளைப் பாராட்டும் கூட்டமாக ஆகி இருந்திருக்கிறது. இதைப்பற்றி அடுத்த நாள் பேசுகையில் ஜெயமோகன் இவ்வாறு சொல்கிறார்:

"வண்ணதாசன் அங்கு பேசிய பிற திராவிட இயக்க பேச்சாளர்களை விடத் தரம் தாழ்ந்த ஒரு உரை ஆற்றினார். மு.கருணாநிதி அவர்களை மிக மிக ஆர்ப்பாட்டமான வார்த்தைகளால் புகழ்ந்து, அவரை ஒரு இலக்கிய மேதையாக வர்ணித்தார். கவிஞர் கலாப்ரியா மு.கருணாநிதியை தன் ஆதர்ச எழுத்தாளராகவும் தன்னுடைய வழிகாட்டியாகவும் சொல்லிப் புகழ்மொழிகளை அடுக்கினார்."

"அதைவிடக் கீழிறங்கி கவிஞர் ஞானக்கூத்தன் பிரதமர் வாஜ்பாய், மு கருணாநிதி ஆகியோரைத் தொட்டபோது தன்னுடைய கரங்களின் ஒரு அதிர்வு ஏற்பட்டது என்று சொன்னார்."

"அம்மேடையில் இன்குலாப் பேசிய பேச்சு கீழ்த்தரமான துதிபாடலாக இருந்தது."

"அந்த மேடையில் முற்போக்கு எழுத்தாளர்களான பா.கிருஷ்ண குமார், வேல ராமமூர்த்தி ஆகியோர் பேசிய சொற்கள் என்னை கூச வைத்தன."

இப்படி இந்த முற்போக்கு எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள் ஏன் கருணாநிதியின் இலக்கியத் திறமை பற்றி துதிபாட வேண்டும்? பிரதமர் வாஜ்பாயி, கலைஞர் கருணாநிதி, (அல்லது எல்லோருக்கும் பிடித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்) ஆகியோர் படைப்புகள் தீவிர இலக்கியம் எதிலும் சேர்த்தியில்லைதான். அவர்களது அரசியல் செல்வாக்கு, பதவி ஆகியவை தரும் மயக்கத்தில் எதற்காக இப்படி உண்மையான, நல்ல படைப்புகளைச் சாதித்த இலக்கியவாதிகள், தரமில்லா எழுத்துகளைப் படைப்பவர்களை பொய்த்துதி பாட வேண்டும்? எங்கே போயிற்று இவர்களது இலக்கிய நேர்மை? தைரியம்?

இளையபாரதி விழா மேடையில் பேசிய கவிஞர் அப்துல் ரகுமான் இவ்வாறு சொன்னாராம்:
[தான் உள்பட] திராவிட இயக்கம் உருவாக்கும் எழுத்து 97 சதவீதம், சிற்றிதழ் எழுத்தாளர்களும் முற்போக்கு எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதும் எழுத்து 3 சதவீதம். அந்த 3 சதவீதம், மற்றவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளே அல்ல என்று தங்களுக்குள் முணு முணுத்துவந்தார்கள். மு.கருணாநிதியின் இலக்கிய சாதனைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இப்போது இளையபாரதி ஒரு பெரிய படைப்பாளி என்று சொல்கிறார்கள். கருணாநிதியை இலக்கியவழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் சொல்கிறார்கள். அந்த 3 சதவீதம் இறங்கி வந்திருக்கிறது .

பின்னர் பேசிய கலைஞர் "அவர்கள் [இந்த 3 சதவீதத்தினர்] நம் ஆதரவை, அங்கீகாரத்தைக் கேட்டு வந்திருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதே முறை" என்றாராம்.

ஜெயமோகன் கொள்ளும் வருத்தம் நியாயமானதே. இப்படியா முற்போக்கு, தீவிர இலக்கியவாதிகள் கேவலப்பட வேண்டும்?

ஜெயமோகன் தன் பேச்சை முடித்துக் கொள்ளும் போது ஆணித்தரமாக "இந்த மேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன் , திரு மு.கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள், தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல." என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களோடு அவரது நேர்மையையும், தைரியத்தையும் கூடச்சேர்ந்து பாராட்ட வேண்டும்.

3 comments:

  1. வணக்கம்,

    இதேபோன்று தமிழ் இணையமும் துதிபாடிகளும் என்ற தலைப்பில், குறிப்பாக மு.ஆனந்தகிருஷ்ணன், பொன்னவைக்கோ போன்ற சபரிசூட் டவாலிகளின் தமிழ் இணையப் பங்களிப்பு,இவர்களால் தமிழ் இணையத்திற்கு என்ன கிடைத்தது என்ற தகவல்களுடன் இந்த டவாலிகளைத் துதிபாடி யாரெல்லாம் விருது பெற்றார்கள், ஆதாயம் பெற்றார்கள் என்று எழுதுவீர்கள் என்றால் நல்லது.

    \\ இப்படியா முற்போக்கு, தீவிர இலக்கியவாதிகள் கேவலப்பட வேண்டும்? \\ என்பதைப் போல் இப்படியா தொழில்நுட்பியலாளர்கள் கேவலமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற வரிகளையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏன், அதனை நீங்களே செய்யலாமே விருபா? உங்கள் கவிதையை நான் ஏன் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

      தமிழ் இணைய, கணினித் துறை பங்களிப்பில் வெகு சிலரே சிறப்பான பணி ஆற்றியுள்ளனர். மீதியெல்லாம் ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்களே என்பதை நான் அறிவேன். என்னைவிட நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எழுதுங்கள்.

      அதைவிடச் சிறப்பு, உண்மையான பங்காற்றுபவர்களைப் பாராட்டி வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது.

      Delete