கவிஞரின் கற்பனைக்குத் தேவையான உரிமைகள் இருக்கென்றாலும் tasteless கற்பனையாகவே எனக்குத் தோன்றுகிறது. எண்ணக் குமுறல்களை எடுத்துச் சொல்வதிலும் ஒரு அழகியல் தேவை.நான் இதனைச் சொல்லும்போது இந்தக் கவிதை என் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று எங்கும் சொல்லவில்லை. எனக்கு மதத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. சடங்குகள் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை.
கடவுளர்கள் புராணங்களில் நம்பிக்கையில்லையென்றால் அதனை விடுத்து நேரடியாக மோதவேண்டியவர்களிடத்தே மோதலாம். நாராயணன் டாய்லெட் போவதைப் பற்றியும் அதற்கு துடைத்துக் கொள்ள லட்சுமி டாய்லெட் பேப்பர் எடுத்துக் கொடுப்பதாகவும்தான் நான் கவிதை எழுதுவேன், ஏனெனில் நான், என் இனம் "பெரிதாக இழந்திருக்கிறது" என்று போக்குக் காண்பிப்பது அசிங்கம்.
கடவுள்கள் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அப்படி நம்பிக்கை இருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகப் பேசவேண்டுமென்றால்தான் கடவுள்களைக் கேலி செய்வதும், தொன்மங்களை 'மீள்பார்வை' பார்ப்பதும் வேண்டும். பெரியார் அதைத்தான் செய்தார். அவரது கொள்கை கடவுளர்களும், புராணங்களும் புருடா, கட்டுக்கதை. அது தமிழர்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளது. அந்தக் கடவுளர்களைக் கேலி செய்வதால் நாக்கு வெந்துவிடாது, கண் குருடாகி விடாது என்பதைக் காட்டும் விதமாகவே கேலி செய்தார்.
ஆனால் இங்கு சுந்தரவடிவேல் குமுதினி கொலைகளைப் பற்றிக் குமுறுகிறார். எனவே முக்கிய நோக்கம் குமுதினி கொலைகள், அதையொட்டிய மனிதத்தின் இறப்பு பற்றிய ஆதங்கம் ஆகியவையே. கடவுளர்கள், புராணங்கள் ஆகியவை இங்கு தேவையற்ற கற்பனையாகத் தோன்றுகிறது. அந்தக் கற்பனையிலும் தேவையற்ற, தரக்குறைவான படிமங்கள்: இருக்கும் உலகங்கள் அடி, வெட்டு, குத்து என்று இருப்பதால் அதையெல்லாம் அழித்து விட்டு இன்னுமொரு உலகம் செய்வதாகச் சொல்லி வாயில் நீர் விட்டுக் கொப்புளிக்க, அந்த நீரில் மனிதக் கவிச்சி அடிக்க, திருமால் முகம் சுளிக்க, லெட்சுமி அது ஈழத்தண்ணீர் என, திருமால் வாயைக் குடைந்து ஓக்காளித்துத் துப்பியும் முந்தைய 'கமலப்பூ' மணம் வரவில்லையாம். சரி, போகட்டும் என்று விட்டுவிட்டு திருமகளின் கொங்கையைப் பற்றி, சிலமுறை புணர்ந்து தூங்கிப் போய் விட்டானாம்.
சரி, இதற்கும் சொல்லவந்த கருப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்?
எனது சுருக்கமான மறுமொழிக்குப் பின்னர் சுந்தரவடிவேல் எழுதிய பதிவு இது: நம்பிக்கைச் சாடலும், அழகியலும்
நம்பிக்கைத் தகர்வே முக்கியமான கருப்பொருள் என்றால் அதில் எந்தவிதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் ஒரு துன்பியல் நிகழ்வைப் பற்றிப் பாடுகையில் வலியப் புகுத்திய கடவுளர் நம்பிக்கைத் தகர்வு அதிர்வைத் தருவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஈழத்துத் துன்பத்தையும், உலகின் மற்ற துன்பங்களையும் திருமால் வந்து தீர்த்து விடுவார் என்று சத்தியஞ்செய்யும் கூட்டத்திடையே போய் "சும்மா கதைக்க வேண்டாம், உங்கள் கடவுள் ஒரு வெத்துவேட்டு" என்று பொருள் படச் சொல்வதென்றால் சரி. அவர்களோ உங்கள் இலக்கு?
'மனதைப் புண்படுத்தினால் வருந்துகிறேன்' என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. புண்படுத்த விழைவதுதான் குறிக்கோள் என்றால் "புண்படுத்தினேன், ஆம், அப்பொழுதுதான் உனக்குச் சொரணை வரும்" என்று சொல்லிவிட்டுப் போகலாம். திருமால் பக்தர்கள் நிச்சயமாக மேற்சொன்ன கவிதையைக் கண்டு துணுக்குறுவார்கள். அவர்கள் கொண்டுள்ள பக்திக்கும், அவர்களது மனிதநேயக் கருத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஒருவனது மதந்தொடர்பான நம்பிக்கைகள் மூலம் ஒருவன் பிறருக்குத் துன்பம் விளைவிப்பானானால் அவனது மதத்தையே கேள்விக்குறியாக்கி எழுதலாம். எ.கா: இந்து மதம்-நான்கு வர்ணங்கள்-சாதியம்-இரட்டைக் குவளை. ஆனால் இங்கு குமுதினிப் படகு நிகழ்ச்சிக்கும், திருமால் நம்பிக்கையுடையோருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எதற்காக இந்தத் தேவையில்லாத தொடர்பை ஏற்படுத்த வேண்டும்?
அழகியல் பற்றி நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. இந்த கருப்பொருளைப் பற்றிப் பேசும்போது கையாண்டுள்ள அழகியல் தேவையற்றது என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே.
மாடு கழுவலாம்
சூத்தும் கழுவலாம்
நாங்க மட்டுந்தான்
தண்ணி மொள்ளக் கூடாது
என்று ஒரு தலித் கவிதை எழுதும்போது அத்தனை சொற்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. கருப்பொருள் அப்படிப்பட்டது.
பத்ரி, குமுதினி ஒரு தூண்டுதலென்றாலும் அதை மட்டுமே நான் கவிதையிலோ, பின்குறிப்பிலோ சொல்லவில்லை. அமெரிக்கனின் தலை ஈராக்கிலே அறுக்கப்பட்டது வரை உலகம் குழம்பிக்கிடக்கும் நிலையைச் சொல்லியிருக்கிறது கவிதை. வாயிலே நோய் என்பது வெறும் பயங்கரவாதத்தை மட்டும் சொல்லாமல், துருப்பிடித்த கலப்பையையும் சேர்த்தேதான் சொல்லியிருக்கிறேன். chaos, இத்துடன் திருமால் விஸ்வரூபத்தில் சம்பந்தப்படுபவர், எனவேதான் அவரை அடையாளமாக வைத்தேன். இவ்விடத்திலே ஏசுவையோ அல்லாவையோ வைக்கவேண்டியிருந்திருந்தால் அதற்குத் தயங்கியிருந்திருக்க மாட்டேன். வாழ்வு குறித்த நம்பிக்கை வீழ்ச்சிகள், சமயம் மற்றும் உன்னதங்கள் எனக் கருதப்படும் விழுமியங்களைத் தாக்கும் என்பதையே உணர்த்த விரும்பினேன். அஞ்சாமல் "உனக்கும் சுரணை வரும்" பாணிக் கவிதைகளை நான் எழுதியே இருக்கிறேன். இங்கு வருந்துகிறேன் என்று சொன்னது நீங்கள் புண்பட்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே; இதிலே நான் நாடகமாட வேண்டிய அவசியமில்லை. மற்றபடி மாற்றுத் தளங்களைத் தொடாமல், அதற்குத்தனி இதற்குத்தனி என்று ஒற்றை ஒற்றையான தளங்களிலும் கவிதை எழுதலாம். அல்லது இது மாதிரி ஒரு தளத்தின் நிகழ்வு மற்ற தளத்தில் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
ReplyDeleteBadri, I agree with your views.
ReplyDelete