கன்யாகுமரியிலிருந்து திருநெல்வேலி ரயில் பாதையில் பயணம் செய்தால் வயல்வெளிகளெங்கும் முளைத்திருக்கும் ராட்சஸக் காற்றாடிகளைப் பார்க்கத் தவறமாட்டீர்கள்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் விளைபொருள்களைப் பயிரிடுவதற்குப்பதில் காற்றாடிகளைப் பயிரிட்டு, மின்சாரத்தை விளைவிப்பதன் மூலம் அதிகமாகப் பணம் பார்க்கமுடியும் என்று மக்களுக்குத் தோன்றியுள்ளது என்று நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு ஏக்கருக்கு நூற்றுக்கணக்கில் காற்றாடிகள்.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம், அதை பிற விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம், நிறுவனங்கள் மின்சாரத்துக்கான கிரெடிட்டைப் பெறலாம் என்ற நிலை புதிய மின்சாரக் கொள்கைகளுக்குப் பிறகு உருவானதாலும், மாற்று மின்சாரம் தயாரிப்பதன் அவசியத்தை இந்தியா உணர்ந்ததாலும் இன்று காற்றாடி மின்சாரம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. மின்சார கிரெடிட் என்றால் எந்த ஒரு நிறுவனமும் எங்காவது மின்சாரத்தைத் தயாரித்து அதை பவர் கிரிட்டில் சேர்த்து, பின் வேறெங்காவது மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது தான் தயாரித்த அளவுக்கான மின்சாரத்தைக் கழித்துக்கொண்டு மீதிக்குப் பணம் செலுத்தினால் போதும்.
தூத்துக்குடியில் பல இடங்களில் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் காற்றாடிகளைப் பார்த்தேன்.
சுஸ்லான் எனப்படும் குஜராத்தி நிறுவனம் (இந்தியாவில் உருவான பன்னாட்டு நிறுவனம்) இப்பொழுது இந்தியாவில் சக்கைபோடு போடுகிறது. இப்பொழுது இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட விரும்பி ஐபிஓ செய்கிறது.
இந்த நிறுவனத்தில் Red herring prospectus-ஐப் படித்துப் பார்த்தேன். நிறுவனத்தின் புரோமோட்டர்கள் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் கிரிஸ்கேபிடல், சிடிபேங் ஆகியவை இந்த நிறுவனத்தில் வென்ச்சர் முதலீடு செய்து நிகழும் ஐபிஓ சமயத்தில் கன்னா பின்னாவென்று பணம் பார்க்கப்போகின்றன. (சிடிகார்ப் ஒரு ஷேருக்கு ரூ. 21.60 என்று ஏப்ரல் 2004ல் முதலீடு செய்து இப்பொழுது 18 மாதங்களுக்குள்ளாக கிட்டத்தட்ட ரூ. 425-510 பார்க்கப்போகிறது. கிரிஸ்கேபிடல் ஷேருக்கு ரூ. 27.10 செலவு செய்து ஏற்கெனவே ரூ. 385.60 பார்த்து விட்டதாம்! இனி அதற்கு மேலும் கிடைக்கும்.)
சுஸ்லான் நிறுவனத்தின் கடந்த வருட வளர்ச்சிக்கு - நிகர லாபம் ரூ. 146 கோடியிலிருந்து ரூ. 361 கோடியாக உயர்ந்துள்ளது - தமிழகத்தில் அவர்களது விற்பனை பெரும் அளவு இருப்பதுதான் முக்கியக் காரணமாகும். தமிழகத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பாதிக்கப்படுவதால் நாளடைவில் தமிழகம் ஒட்டுமொத்தமாக மின்சார அறுவடையை நோக்கிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சில ஆச்சரியமான புள்ளிவிவரங்கள்:
காற்றாடி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் உலகிலேயே இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது - 3595 மெகாவாட். (ஜூலை 2005 வரையில்)
இந்தியாவிலேயே தமிழகம் மிக முன்னணியில் - முதல் இடத்தில் உள்ளது. 2037 மெகாவாட்! (அதில் பெரும்பகுதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில்)
இது தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்துவகை மின்சாரத்திலுமாக 18% ஆகும்!
Subscribe to:
Post Comments (Atom)
வாவ். 18% என்பது கணிசமான அளவு.
ReplyDeleteபுள்ளி விவரங்களுக்கு நன்றி. நான் கூட காற்றின் மூலம் தயாரிக்கப்படும் மின் அளவு மிகக்குறைந்த அளவே இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
ReplyDelete