Friday, December 23, 2005

ஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி, ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று இன்றைய தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது. செட்டியார் இந்த ஆவணப்படத்தை 1940-ம் ஆண்டு எடுத்திருக்கிறார். "மஹாத்மா காந்தி - இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி" என்று தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 55 நிமிடங்கள் செல்கிறதாம்.

ஆனால் வெங்கடாசலபதிக்குக் கிடைத்தது இந்தப் படத்தின் அமெரிக்க வடிவம். செட்டியார் தான் ஏற்கெனவே எடுத்த படத்தை ஹாலிவுட்டில், 1953-ல், மீண்டும் எடிட் செய்துள்ளார். இதில் சில மாறுதல்கள் இருப்பதுடன், பின்னணிக் குரல் ஆங்கிலத்தில் உள்ளது.

தமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது.

தமிழ் வடிவமும் அதன்பின் தெலுங்கு டப்பிங்குடனும் இந்தப் படம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஆங்கிலேய அரசாங்கத்தால் பிரச்னை வரும் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை ஆனபோது, ஹிந்தி டப்பிங்குடன் இந்தப் படம் காண்பிக்கப்பட்டுளதாம்.

காபிரைட் ஏதும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் படம் விசிடி, டிவிடி மூலம் பரவலாக அனைவரும் பார்க்கக் கிடைக்க வேண்டும்.

3 comments:

  1. எ.கே. செட்டியாரின் 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற புத்தகம் இந்த ஆவணப்படம் தொடர்பாக அவர் எடுத்த முயற்சிகளையும் மற்ற பல அரிய தகவல்களையும் கொண்டது. இந்தப்படத்துக்காக செட்டியார் உலகை இரண்டுமுறை சுற்றி வந்ததாக படித்தனென்ற நினைவு. இந்த படம் (மறுமுறை) வெளியிடப்படும் போது பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் பத்ரி.

    சமீபத்தில் சுந்தர ராமசாமி அவர்கள் ஏ.கே. செட்டியாரைப் பற்றி புதிய பார்வை இதழில் குறிப்பிட்டிருந்தார். அப்போது அந்த படங்கள் கிடைக்காதிருப்பது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

    ReplyDelete