தொழில்புரட்சிதான் இயந்திரமயமாக்கலைக் கொண்டுவந்தது. எந்த ஒரு பிரச்னை அல்லது தேவைக்கும் ஓர் இயந்திரம் அல்லது ஒரு நுகர்பொருள் தீர்வாகும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அழுக்கான துணிகளைக் கைவலிக்கத் தோய்ப்பது பிரச்னை. அதைத் தீர்க்க உருவாக்கப்படுவது தோய்க்கும் இயந்திரம் (Washing Mechine). நாவிதர் துணையின்றி சவரம் செய்துகொள்வது தேவை. அந்தத் தேவையைத் தீர்த்துவைப்பது தூக்கியெறியக்கூடிய சவரக்கத்தி (Disposable Razor). காலையில் சமைக்காமல் சாப்பிட ஏதுவான பலகாரம் - தேவை. பாக்கெட்டில் அடைத்த தானிய உணவு (Cereals), தீர்வு.
பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று தோன்றியதுமே அடுத்து அதனைப் பெருமளவு உற்பத்தி செய்ய (Mass Production), தொழிற்சாலை வேண்டியிருந்தது. உற்பத்தி செய்த பொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல விநியோக முறை, விளம்பர உத்திகள் ஆகியவை தேவைப்பட்டன. பெரு நிறுவனங்கள் (Corporations) உருவாயின. இவற்றை நடத்தத் தேவையான மூலதனத்தை - பங்கு மூலதனமாகவும் கடன்களாகவும் - வழங்க நிதி நிறுவனங்கள் உருவாயின.
இந்தச் சூழ்நிலையில், உற்பத்தியின் முக்கியமான அங்கமான தொழிலாளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும்கூட, முக்கியத்துவத்தில் பெரிதும் கீழே சென்றனர். அதிகமான வேலை நேரம் (நாளுக்கு 8 மணிநேரத்துக்கு மேல்), மோசமான பணியிடச் சூழல், உயிருக்கே ஆபத்தான வேலைகள், விடுமுறை என்பதே இல்லாத சூழல், காப்பீடு இல்லாத நிலை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இழப்பீடும் தரப்படாமல் வேலை போகலாம் என்ற நிலை, சம்பளம் குறைக்கப்படலாம் என்ற சூழல், தொழிலாளர் நலச் சட்டதிட்டங்கள் என்று ஏதும் இல்லாமை, அரசும் காவலர்களும் முதலாளிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருத்தல் - போன்றவற்றால் தொழிலாளர் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
1860களுக்குப் பிறகு அமெரிக்காவில் தடவண்டிப் பாதைகளை அமைத்தவர்கள், கச்சா எண்ணெய் தோண்டியவர்கள், இரும்பு-எஃகு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று அனைவருமே இப்படியான சூழலில்தான் வேலைசெய்தனர். ஒருநாள் கூட ஓய்வு இன்றி, (ஞாயிறு கூட ஓய்வு கிடையாது!) நாளுக்கு 12-14 மணிநேரமெல்லாம் வேலை செய்துள்ளனர். கார்னெகியின் இரும்புக் கம்பெனிகளில் லாபம் கொழிக்கும்போதுகூட தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துகொண்டே வந்துள்ளது.
இரும்பு, சிமெண்ட், ரசாயனத் தொழிற்சாலைகளில் பல வேதிப் பொருள்களும் உடலில் படுவதால், சுவாசிக்கப்படுவதால் உடல்நலம் குன்றி இறந்த தொழிலாளர்கள் எத்தனையோ பேர்.
தொழிலாளர்கள் சங்கம் (Union) அமைத்து, ஒன்றுகூடி, பல விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருந்தது.
- எட்டு மணிநேர வேலை நாள்
- வார விடுமுறை
- உடல்நலக் குறைவு விடுமுறை, பண்டிகை விடுமுறைகள், பிற விடுமுறை
- விடுமுறை நாள்களுக்கும் சம்பளம்
- குறைந்தபட்ச சம்பளம்
- தொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமை
- பணியிடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்
- தொழிலாளர் சங்கம் மூலம் சம்பளப் பேச்சுவார்த்தை (Collective negotiation)
- லாபத்தில் பங்கு (Bonus)
- வேலைக்கான இலக்கு (Target)
- பணியிடத்தில் நிர்வாகத்தால் கண்ணியத்துடன் நடத்தப்படுதல்
- ஓவர்டைம் நேரத்தில் அதிகச் சம்பளம்
- ஓய்வூதியம்
- தம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை
- பிற வசதிகள்
இன்று தொழிற்சாலை என்பதைத் தாண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் என்பதிலிருந்து பணியாளர் என்ற நிலை. அரசு அலுவலகங்களில், தனியார் சேவை அலுவலகங்களில், கடைகளில், உணவகங்களில் என்று எங்கு பார்த்தாலும் பணியாளர்கள்.
இதில் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்த பிற அரசு அலுவலகங்களுக்கு லாபம் என்ற நோக்கு கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கு உடையன அல்ல. ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நான்கு தனிப்பட்ட பங்காளிகள் உள்ளனர். முதலீட்டாளர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், பிற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள். இவர்கள் அனைவரது நோக்கங்களும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை. வாடிக்கையாளர் குறைந்த விலையில் சிறந்த சேவையை/பொருளை நாடுகிறார். ஆனால் இது முதலீட்டாளர்களது லாபத்தைப் பாதிக்கும். நிர்வாகிகள் முடிந்தவரை தங்களுக்கு நல்ல சம்பளமும் நிறுவனத்தை மேம்படுத்த நிறையப் பணமும் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பாதிக்கும். லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தையும் மோசமான பணியிடத்தையும் தந்தால் அது பொருளை/சேவையைப் பாதிக்கும். வாடிக்கையாளர் மனம் கோணுவார். வருமானம் குறையும்.
ஆனால் இந்த நான்கு பங்காளிகளுக்குள் எப்பொழுதுமே அதிகம் பாதிக்கப்படுவது பணியாளர்கள்தாம். தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் வேறு பொருளை/சேவையை நாடிப் போய்விடுவார்கள். மேல்மட்ட நிர்வாகிகள் பொதுவாகவே அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். இரண்டு மாதங்கள் விடுப்பில் போய் வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். சில தொழில்முனைவோரை விடுத்து, பொதுவாக முதலீட்டாளர்கள் கையில் நிறைய பசையுள்ளவர்கள்தாம். அதனால் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.
ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.
ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும்.
மொத்தத்தில் பணியாளர் நிலை உயரவேண்டும் என்றால் அவர்கள் முதலாளிகளாக ஆனால் மட்டுமே இது ஏற்படும். அதற்கு ஒவ்வொரு லாப நோக்குள்ள நிறுவனத்திலும் கீழ்நிலைப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து 10% பங்குகளையாவது வைத்திருக்கவேண்டும். ஸ்டாக் ஆப்ஷன் முறை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். மேலும் பணியாளர் பிரதிநிதி ஒருவராவது நிறுவனத்தின் போர்டில் (Board Of Directors) இயக்குனராக இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான் நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட், மேல்மட்ட நிர்வாகிகளின் சம்பளம், அடிமட்டத் தொழிலாளியின் சம்பளம், பணியிட வசதிகள், வேலை நேரம், விடுமுறை, போனஸ் போன்ற பலவற்றிலும் பணியாளர்களது கருத்தும் கேட்கப்படும்.
கம்பெனியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இது சாத்தியமானது. ஆனால் சிறு நிறுவனங்கள், கம்பெனியாக நிறுவப்படாத நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இதனைச் செய்வது கடினமாக இருக்கலாம்.
இருந்தும், பெரும் நிறுவனங்களிலாவது 10% பங்குகள் பணியாளர்களுக்கான அறக்கட்டளையில் இருப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.
தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.
//
ReplyDeleteதொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.
//
well said..
//
ReplyDeleteதொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.
//
சி.பொ.மையங்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது
http://timesofindia.indiatimes.com/NEWS/India_Business/Govt_plays_safe_on_labour_laws_in_SEZs/articleshow/1907515.cms
ஆனால் இந்திய தொழிலாளர் சட்டம் மாற்றி அமைக்கப்ப்பட வேண்டும்.இப்போதிருக்கும் சட்டங்களால் தொழிலாளருக்கு தான் பாதிப்பு.100 பேருக்கு மேல் ஓரு கம்பனியில் வேலை செய்தால் அவர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்ய அரசின் அனுமதியை வாங்கவேண்டும்.இதற்கு பேசாமல் காண்டிராக்ட் தொழிலாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் நினைக்கும்போது தூக்கலாம்.கோவை மில்களில் அப்படித்தான் நடக்கிறது.
தொழிலாலர் சட்டம் கடுமையாக கடுமையாக தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை கூடும்.கடைசியில் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமே இருக்காது.
கல்கத்தாவில் கிரேட் ஈஸ்டர்ன் என்று ஒரு ஓட்டல் இருக்கிறது.அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அங்கே தங்கும் கஸ்டமர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.இருந்தாலும் யாரையும் வேலையை விட்டு தூக்க முடியாது.கல்கத்தா..கம்யூனிச கோட்டை.
ஒவ்வொரு கம்பனியும் 45 மத்திய அரசு சட்டங்களையும் 180 மாநில அரசு சட்டங்களையும் தொழிளாளர் விசயத்தில் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு வருடமும் வேலை நிறுத்தத்தால் 15 மில்லியன் வேலை நாட்கள் வீணாகின்றன. சீனாவில் ஸ்ட்ரைக் எண்ணிக்கை பூஜ்யத்தை தொடுகிறது.ஆனால் அங்கே இந்தியாவை விட ச்ம்பளம் அதிகம்.வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் அதிகம்.
ungkaL pathivum selvanin pinnuuttangkaLum yoosikka vaippavai. nam naadu silveelaikalil paiththiyakaaran pola wadakkirathoo enru thonum. nice article friend.
ReplyDelete//ஆனால் இந்திய தொழிலாளர் சட்டம் மாற்றி அமைக்கப்ப்பட வேண்டும்.இப்போதிருக்கும் சட்டங்களால் தொழிலாளருக்கு தான் பாதிப்பு.100 பேருக்கு மேல் ஓரு கம்பனியில் வேலை செய்தால் அவர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்ய அரசின் அனுமதியை வாங்கவேண்டும்.இதற்கு பேசாமல் காண்டிராக்ட் தொழிலாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் நினைக்கும்போது தூக்கலாம்.கோவை மில்களில் அப்படித்தான் நடக்கிறது.
ReplyDeleteதொழிலாள்ர் சட்டம் கடுமையாக கடுமையாக தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை கூடும்.கடைசியில் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமே இருக்காது.//
எப்படி டாலர் செல்வன், உங்க ஊரில் செருப்புக்கு ஏத்த மாதிரி கால வெட்டுவீங்களோ? ஆயிரத்தெட்டு சட்டம் நியாயம் பேசத் தெரிந்த டாலருக்கு சுலபமாக காண்ட்ராக்ட் தொழிலாளருக்கு சில கடுமையான சட்ட பாதுகாப்பு கொடுக்க வைக்கும் யோசனை தோன்றாதது ஆச்சரியமல்ல. சட்டத்தை குறுக்கு வழியில் மீறும் பெரு முதலாளிகளை ஆதரித்து குரு படம் போல எடுக்கச் சொல்கிறீர்களா செல்வன்?
முதலாளீ தவறு செய்கிறான் என்றூ சட்டம் போட்டால், செல்வன் சொல்கிறார், அந்த சட்டத்தையும் மீறி அவன் வேறு குறுக்கு வழியில் தவறு செய்கிறான் எனவே சட்டத்தை இலகுவாக்குங்கள் என்று. ஏன் இதே நடைமுறையை இந்திய நக்சல்பாரிகள் விசயத்தில் கடைபிடிக்கச் சொல்லி டாலர் செல்வன் ஒரு பதிவு போடக் கூடாது? அதாவது சட்டம் கடுமையாக கடுமையாக நக்சல்பாரிகள் வலுவடைந்து வருகிறார்கள் எனவே சட்டத்தை இலகுவாக்குங்கள் என்று. அப்படிச் சொல்லமாட்டார். அவரது இரட்டை நிலைப்பாடுகள்தான் தமிழ்மண பிரசித்த பெற்றதே.
//
கல்கத்தாவில் கிரேட் ஈஸ்டர்ன் என்று ஒரு ஓட்டல் இருக்கிறது.அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அங்கே தங்கும் கஸ்டமர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.இருந்தாலும் யாரையும் வேலையை விட்டு தூக்க முடியாது.கல்கத்தா..கம்யூனிச கோட்டை.//
அது சரி அந்த ஹோட்டலை மூடி விட்டார்களா என்ன?. ஓடிக் கொண்டுதானே இருக்கிறது? ஆக, தொழிலாளருக்கு ஓரளவு வசதி செய்து கொடுத்தால் கூட உங்க ஆளுஙக்ளுக்கு பெரிதாக ஒன்றும் நஸ்டமில்லை. ஆயினும் நீங்கள் அங்கு ஏற்ப்படும் குறைந்த அளவிலான நஸ்டத்திற்க்கு ஒப்பாரி வைப்பீர்கள்.
அசுரன்
//சி.பொ.மையங்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது//
ReplyDeleteசி.போ.ம இந்தியாவின் எந்த உள்ளாட்சியமைப்பின் கீழ் வருகிறது? பஞ்சாயத்து ராஜ்? ஊராட்சி, நகராட்சி? எதுவும் கிடையாது.
அது ஒரு தனி ராஜ்யம். சும்மா வார்த்தை ஜாலங்கள் வேலைக்காகது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டோ ம் என்றூ சொல்லிய ஆறே மாதத்தில் கோதுமையை இறக்குமதி செய்த அளவில்தான் உங்க ஆட்களின் பேச்சு நேர்மை உள்ளது. அதுவும் பா. சி., மன்மோகன் கூட்டணியின் பொய்யுரைகளூக்கு தனி புத்தகமே போடலாம்.
அசுரன்