Tuesday, July 01, 2008

மூன்று மகன்கள்

(From: Grimms' Fairy Tales, The Three Children of Fortune, abridged and retold)

வயதான கிழவர் ஒருவருக்கு மூன்று மகன்கள். தனது காலம் முடிவடையப்போகிறது என்று தெரிந்ததும் தந்தை தனது மகன்களை அழைத்துப் பேசினார். “உங்களுக்கென்று நான் சொத்து எதுவுமே சேர்த்துவைக்கவில்லை. என்னிடம் இருப்பதை உங்களுக்குத் தருகிறேன். அவை இல்லாத இடமாகப் பார்த்து அவற்றை எடுத்துச்சென்று பயனடையுங்கள்” என்று சொன்னார்.

முதல் மகனுக்கு ஒரு சேவலைக் கொடுத்தார். இரண்டாவது மகனுக்கு கதிர் அறுக்கும் அறுவாள். மூன்றாவது மகனுக்கு ஒரு பூனை. சீக்கிரமே தந்தை இறந்துபோனார்.

சில நாள்கள் கழித்து, முதல் மகன் சேவலை எடுத்துக்கொண்டு தந்தை சொல்படி கிளம்பினான். எந்த நகரத்துக்குச் சென்றாலும் தேவாலயத்தின்மேல் திசைகாட்டியில் சேவல் செதுக்கப்பட்டிருந்தது. எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீடுகளின் கூரையில் உயிருள்ள சேவல்களே இருந்தன. கடைசியாக முதல் மகன் ஒரு தீவுக்குச் சென்றான். அங்குள்ள மக்கள் சேவலை முன்பின் பார்த்தே அறியாதவர்கள்.

சேவலே இல்லையென்பதால் அந்தத் தீவு மக்களுக்கு நேரம் என்பதே தெரியவில்லை. அவர்களுக்கு பகல் தெரியும், இரவு தெரியும். ஆனால் எப்போது இரவு போய் பகல் வரும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முதல் மகன் அவர்களிடம் சேவலைக் காட்டி அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசினான். “இதன் தலையைப் பாருங்கள், கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. இதன் கால்களைப் பாருங்கள், சிறப்புக் காலணி அணிந்துள்ளது. இது இரவு நேரத்தில் மூன்றுமுறை கூவும். மூன்றாவது முறை கூவும்போது சரியாக காலை ஆறு மணியாகியிருக்கும்; பொழுதும் விடிந்திருக்கும்” என்றான்.

அன்று இரவு, அந்தத் தீவின் மக்கள் விழித்திருந்து சோதனை செய்தனர். சரியாக இரண்டு மணிக்கு சேவல் கூவியது. அடுத்து நான்கு மணிக்குக் கூவியது. கடைசியாக ஆறு மணிக்கு சேவல் கூவும்போது சூரியன் உதித்தது. மக்கள் மகிழ்ந்தனர். அந்தச் சேவலை விலைக்கு வாங்க எவ்வளவு வேண்டுமானால் தருவதாகக் கூறினர். முதல் மகன் ஒரு கழுதை சுமக்கும் அளவுக்குத் தங்கம் கேட்டான். தந்தனர். வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினான்.

அடுத்து இரண்டாவது மகன், கதிர் அறுவாளுடன் கிளம்பினான். அவனுக்கும் முதலில் சென்ற இடங்களிலெல்லாம் தோல்விதான். கடைசியில் அவனும் ஒரு தீவைக் கண்டுபிடித்தான். அங்குள்ள மக்கள் அறுவாளையே பார்க்காதவர்கள். அவர்களுக்கு பயிர்களை அறுவடைசெய்ய வெகு காலம் பிடித்தது. இரண்டாம் மகன் அறுவாளைக் கொண்டு ஒரு வயலை சில மணிகளுக்குள்ளாக அறுவடை செய்துகாட்டினான். அந்தத் தீவு மக்கள் கதிர் அறுவாளை வாங்கிக்கொள்ள விரும்பினர். ஒரு குதிரை சுமக்கும் அளவுக்குத் தங்கம் வாங்கிக்கொண்டு அந்த அறுவாளை விற்றுவிட்டு அவனும் திரும்பினான்.

மூன்றாவது மகன் பூனையை எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றினான். கடைசியில் அவனும் ஒரு தீவை வந்தடைந்தான். அங்கே எலிகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் இருந்தது. அந்த ஊர் மக்கள் அரசனிடம் முறையிட்டு எந்தப் பலனும் இல்லை. பூனையையே அறியாத தீவு அது. மூன்றாம் மகன் பூனையை அங்கே எடுத்துச் சென்றதும், பூனை தாவிச்சென்று சில விநாடிகளுக்குள்ளாக சில பல எலிகலைப் பிடித்து கபளீகரம் செய்தது. அதைக் கண்ட மக்கள் நேராக அரசனிடம் சென்று அந்தப் பூனையை வாங்குமாறு கேட்டுக்கொண்டனர். அரசனும் ஒரு கோவேறுகழுதை சுமக்கும் அளவுக்குத் தங்கத்தைக் கொடுத்து பூனையை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

[கதை இத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், தவறு!]

பூனை அடுத்த சில மணிநேரம் அரண்மனையில் இருந்த எலிகளைப் பரலோகம் அனுப்பிக்கொண்டிருந்தது. அதற்கு திடீரென தாகம் எடுத்தது. தண்ணீர் வேண்டும் என்பதற்காக மியாவ், மியாவ் என்றது. பூனை என்ன சொல்கிறது என்று அங்குள்ள யாருக்கும் புரியவில்லை. அரசன் தனது அமைச்சர்களை அழைத்தான். ஆலோசனை செய்தனர். பிறகு ஒரு தூதனை அழைத்து பூனையிடம் சென்று கத்தாமல் இருக்குமாறும், தொடர்ந்து கத்தினால் பீரங்கியால் அதனைச் சுடவேண்டியிருக்கும் என்ற தகவலை சொல்லச் சொன்னார்கள்.

தூதன் பூனையிடம் சென்று கத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டான். பூனை பதிலுக்கு மியாவ், மியாவ் என்றது. “மாட்டேன், மாட்டேன்” என்று அது சொல்கிறது என்று இவர்கள் எடுத்துக்கொண்டனர். உடனே தளபதி தனது பீரங்கிப் படைகளைக்கொண்டு பூனையைச் சுற்றி வளைத்துக்கொண்டார். முதல் குண்டு பூனைமீது பாய்வதற்குள் பூனை தாவிக் குதித்து ஓடிவிட்டது. பீரங்கிகளால் மாற்றி மாற்றிச் சுட, அரசனது அரண்மனை சுக்குநூறாக உடைந்து தூள் தூளாகியது!

[இப்பத்தாங்க கதையே முடியுது!]

10 comments:

  1. மூன்றாவது மகனுக்குதான் பெரிய twist இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இந்த மாதிரி ஒரு முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கல.

    ReplyDelete
  2. பத்ரி சார், இப்படி சின்ன பசங்க கதையெழுதி எங்களையெல்லாம் ஏமாத்தாதீங்க...! ப்ளீஸ்...

    ReplyDelete
  3. இந்த கதைகளில் எல்லாம் Moral ஒன்றும் இல்லையே...

    தவிர வன்முறை (கத்தி, பீரங்கி, துப்பாக்கி) அதிகம் வருவது போல் இருக்கிறதே

    ReplyDelete
  4. புரூனோ: இதில் மாரல் ஏதும் கிடையாது. 19-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் புழங்கிவந்த வாய்மொழிக் கதைகளை கிரிம்ஸ் சகோதரர்கள் (பேராசிரியர்கள், ஜெர்மன் அகராதி உருவாக்கியவர்கள்) இருவரும் சேகரித்து எழுத்துவடிவம் கொடுத்துள்ளனர். “தேவதைக் கதைகள்” என்று பெயர் கொடுத்தாலும் எல்லாக் கதைகளிலும் தேவதைகள் வருவதில்லை.

    ReplyDelete
  5. //“தேவதைக் கதைகள்” என்று பெயர் கொடுத்தாலும் எல்லாக் கதைகளிலும் தேவதைகள் வருவதில்லை.//

    உண்மையே :-)

    இணையத்தில் இப்போது ஜட்டிக்கதைகள் கூட எழுதுகிறார்கள். எல்லா கதைகளிலும் ஜட்டி வருவதில்லை!

    ReplyDelete
  6. இரவில் பூனை பக்கத்து ஊருக்கு சென்று சேவலை கபளீகரம் செய்துவிட்டது. அவர்கள் அடுத்த நாள் லேட்டாக எழுந்தார்கள்.

    அதற்குள் தங்கள் வயலை அறுத்து முடித்த அடுத்த ஊர்க்காரர்கள், சேவல் ஊர் வயலையும் அரிவாள் கொண்டு வெட்டி எடுத்துக் கொண்டுபோய்விடுகிறார்கள்.

    மூன்று ஊருக்கும் போர் நடக்கிறது.

    (இப்படி முடியுமோமின்னு எதிர்பார்த்தேன்)

    ReplyDelete
  7. //மூன்று ஊருக்கும் போர் நடக்கிறது//

    பாலா, அமெரிக்க அதிபராக இருக்க நீங்கதான் சரியான ஆள்.

    ReplyDelete
  8. //பாலா, அமெரிக்க அதிபராக இருக்க நீங்கதான் சரியான ஆள்.//

    :) :) :)

    ReplyDelete
  9. சுரேஷ்,

    Karl rove ஆக இருக்க சரியான ஆள் என்று 'பாராட்டாமல்' இருக்கும் வரை மகிழ்ச்சிதான் ;)

    ReplyDelete