Wednesday, September 03, 2008

பேரரசர் அசோகரின் ஆணை

இன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று பேசியதை வைத்து ஏழெட்டு பதிவுகள் எழுதலாம். பார்ப்போம்.

பேசும்போது, பேரரசர் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் இருந்த நிர்வாகவியல் கருத்து ஒன்றைச் சொன்னார். முதன்மை அலுவலர் என்பவர் அறைக்குள் அடைபட்டவாறு இருக்கக்கூடாது. அவர் சாமானிய அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் அகப்படுமாறு இருக்கவேண்டும் என்றார். எந்தக் கட்டத்திலும் தகவல்கள் தன்னை வந்து அடையுமாறும், மக்கள் நலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று அசோகர் தனது கல்வெட்டில் சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் சொல்லியிருக்கிறார். அது இதற்குமுன் நான் கேள்விப்படாதது. உடனே கூகிளில் தேடிப்பார்த்தேன். இதோ கீழே:

பேரரசர் அசோகரின் கல்வெட்டு எண் 6

கடவுளுக்குப் பிரியமான அரசர் பியாதாசி (பிரியதர்சி) இவ்வாறு சொல்கிறார்: இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. அதனால் இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன். இனி எந்த நேரத்திலும் - நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கயறையில் இருந்தாலும், தேரில் இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், பூங்காவில் இருந்தாலும், வேறெங்கு இருந்தாலும் - அலுவலர்கள்மூலம் எனக்கு மக்களது பிரச்னைகள் தொடர்பான தகவல்களை அனுப்பவேண்டும். அதன்மூலம் உடனடியாக மக்களது பிரச்னைகளை என்னால் கவனிக்கமுடியும்.

கொடைகள் அல்லது பொது அறிவுப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தையாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர அலுவல்கள் ஆகியவை தொடர்பாக மன்றத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவை தொடர்பான தகவல்கள் உடனடியாக என்னிடம் வந்துசேரவேண்டும். இது என்னுடைய ஆணை.

வேலையைச் செய்வதிலும் அதற்காக அதிகமான முயற்சியை மேற்கொள்வதிலும் நான் எப்போதுமே “இது போதும்” என்று திருப்தி அடைவதில்லை. அனைவரது நலத்தையுமே நான் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் செவ்வனே செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதுமில்லை. அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நான் அனைவருக்கும் பட்டிருக்கும் கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அவர்களுக்கு இம்மையில் மகிழ்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் கிடைப்பதாக!

இந்த தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், எழுதப்படுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த அதிகம் உழைக்கவேண்டும்.

[The Edicts of King Asoka, An English rendering by Ven. S. Dhammika, The Wheel Publication No. 386/387, ISBN 955-24-0104-6]

3 comments:

  1. ஆணையின் ரெண்டாவது பாராவை பார்த்தா பிரமிப்பா இருக்குங்க..

    ReplyDelete
  2. //இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. //

    bottom up approach என்று இன்று (வரை) பேச்சளவிலேயே இருக்கும் ஒரு விஷயம் குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்த அசோகர் பாராட்டுக்குரியவர் தான்.

    -

    //அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது//

    இந்த ஆணை இருந்தும் கூட மகளின் காதல் குறித்த தகவல் சரியான நேரத்திற்கு வரவில்லையே :)

    ReplyDelete
  3. asoka manan thanudaia karuthukkal than santhikkum theriya vendum endru kalvetu eluthi vaithar, anl intha kalvetai yentha arasial vathiyum iethu varai padikkavillaiya. selva

    ReplyDelete