தமிழகக் கடற்கரை ஓரங்களில் புயல் அடிப்பது அல்லது பயங்காட்டுவது தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று. எப்போதாவது நிஜமாகவே கடுமையான புயல் கரையைக் கடக்கும்.
எனக்கு சிறு வயதில் இது தொடர்பாக நிறையவே கேள்விகள் இருந்தன. ஆனால் பள்ளிக்கூடங்களில் இதைப் பற்றியெல்லாம் உருப்படியான பதில்கள் வந்ததே கிடையாது. நான் பார்த்த மிகக் கடுமையான புயல் 1977-ல் என்று நினைக்கிறேன். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாகப்பட்டினம் தமிழகத்தின் பிற பாகங்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பள்ளிக்கூடம் இல்லை என்று ஞாபகம். எங்கள் வீட்டின் ஓடுகள் அனைத்துமே பறந்துவிட்டன. அப்போது அவ்வளவாக காங்க்ரீட் வீடுகள் கிடையாது. வீட்டின் ஒரு மூலையில் என் அம்மா, அப்பா, அத்தை, நான், என் 2 வயதுத் தங்கை, வீட்டிலேயே இருந்த ஒரு பூனைக்குட்டி என அனைவரும் ஒண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.
புயலுக்கு முன் அமைதி என்பதைப் போல, அன்றைய மாலை நிசப்தமாக இருந்தது. அன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று ஆல் இந்தியா ரேடியோ செய்தியில் சொல்லியிருந்தார்கள். கரையைக் கடந்த புயல், கடும் நாசத்தை விளைவித்திருந்தது. கரையோர மீனவர் குடிசைகள் அனைத்தும் அடித்துப் பறந்துபோய்விட்டன. ஊருக்குள் இருந்த ஓட்டு வீடுகள் அனைத்தும் மொட்டையாகக் காட்சியளித்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்து, முழு வீடுகள் உடைந்து நொறுங்கியிருந்தன.
தெருவெங்கும் பெரும் மரங்கள் பிய்த்து எறியப்பட்டிருந்தன. உயிர்ச்சேதம் எத்தனை என்று ஞாபகம் இல்லை. பலர் முன்னதாகவே கோயிலின் பத்திரத்தில் வந்து தங்கிவிட்டனர். அடுத்த சில நாள்கள், தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் எல்லோருமே கோயில்களிலும் பள்ளிகளிலும்தான் தங்கியிருந்தனர். ஒரு வாரத்துக்குப் பின்னரே மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் ஊருக்கு உள்ளே வந்து நிவாரணப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.
அதற்குப் பின், இன்றுவரை அதுபோன்ற கடுமையான புயல் தமிழகத்தில் அடித்ததில்லை. ஆனால், தமிழகத்தை பயமுறுத்திவிட்டு ஆந்திரா அல்லது ஒரிஸ்ஸா சென்று அங்கு நாசத்தை விளைவிக்கும்.
இன்று நாகப்பட்டினத்துக்கு அருகே வேதாரணியத்தில் கரையைக் கடக்கும் என்கிறார்கள். [பார்க்க: இந்திய வானிலை அமைப்பின் தகவல் அறிக்கை; பக்கத்தில் புயலின் இன்றைய காலை படம்]
***
வங்காள விரிகுடாவில் ‘புயல்’ என்று நாம் குறிப்பிடுவது, ஆங்கிலத்தில் Cyclone எனப்படுவது. சுழற்புயல் என்று சொல்லலாம். சூறாவளி என்று சொல்லலாம்.
நில நடுக்கோட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் ஒரு குறிப்பிட்ட தூரம் (23.4 டிகிரி வடக்கு அட்ச ரேகை, தெற்கு அட்ச ரேகை) வரை உள்ள பகுதிகள்தான் வெப்ப மண்டலப் பகுதிகள். இந்தியாவைப் பொருத்தமட்டில், தென்னிந்தியா மட்டும்தான் இதில் மாட்டும். வட இந்தியா, இதற்கு வெளியே உள்ளது.
தென்னிந்தியாவின் வங்காள விரிகுடாக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாக ரேடியோவில், தொலைக்காட்சியில் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதென்னது?
பொதுவாக, ஒவ்வொரு நாளுமே கடல் காற்று (Sea Breeze), நிலக் காற்று (Land Breeze) என்பன வீசும். காலையில் சூரியக் கிரணங்கள் படும்போது, மண் தரை வேகமாகச் சூடாகிறது; கடல் நீர் மெதுவாகச் சூடாகிறது. (இதற்குக் காரணம் specific heat என்ற தன்மை. அதை இப்போது பார்க்கவேண்டாம்.) இதனால், தரைக்கு மேல் உள்ள காற்று வேகமாகச் சூடாகி, அதன் அடர்த்தி குறைந்து, மேலே செல்கிறது. அதனால் ஏற்படும் காற்றழுத்தக் குறைவைப் போக்க, சற்றே குளிர்ந்த காற்று கடலுக்கு மேலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. இதுதான் கடல் காற்று.
அதேபோல மாலையில் சூரியன் மறைந்ததும், தரை வேகமாகக் குளிர்கிறது. கடல் குளிர்வதில் நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் கடலுக்கு மேல் உள்ள காற்று சூடாகி மேலே செல்கிறது. நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. நிலக் காற்று.
இது கடலோரத்தில் தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆனால் இதற்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்கும் வித்தியாசங்கள் உண்டு.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ச்சியாக இது ஏற்படும். சுற்றியுள்ள காற்றின் வெப்பம் குறைகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து தொலைவில் இருப்பதால், சூரியனின் கிரணங்கள் சாய்வாக விழுகின்றன. ஆனால் கடலின் வெப்பம் சட்டென மாறுவதில்லை. கடலில் உள்ள வெப்ப நீரோட்டம் காரணமாக வங்காள விரிகுடாக் கடலில் நீரின் வெப்பம் 26-27 டிகிரி செண்டிகிரேட் என்ற அளவிலேயே உள்ளது. இதனால், கடலில் மேல் உள்ள காற்று சூடாகிறது. அத்துடன் கடல் நீர், நீராவியாகி காற்றுடன் சேர்ந்து மேலே போகிறது.
பொதுவான கடல் காற்று, நிலக் காற்று விஷயத்தில் இந்த சூடான காற்று மேலே சென்று சூட்டை இழந்துவிடும். ஆனால் இப்போது நாம் பார்ப்பதில் மட்டும் ஒரு வித்தியாசம் ஏற்படுகிறது.
தினசரி போல் அல்லாது, அக்டோபர், நவம்பர் மாதம் கடலுக்கு மேலே செல்லும் வெப்பக் காற்றில் எக்கச்சக்கமான நீராவி இருக்கிறது. ஒரு பக்கம் காற்று மேலே சென்று குளிரத் தொடங்குகிறது. அப்போது நீராவி, தன் வெப்பத்தை விடுத்து, நீராகி மேகத்துக்குள் சென்று தங்குகிறது. நீராவி வெளிவிட்ட வெப்பம், காற்றைச் சூடாக வைத்திருக்கிறது. இதனால், மையத்தில் சூடான காற்றும் அதைச் சுற்றிக் குளிர்ந்த காற்றும் கொண்ட சுழல் உருவாகிறது. இந்தச் சுழலின் மையத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கிறது.
இதுதான் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.
இந்தத் தாழ்வு மண்டலத்தின் காற்றழுத்தம் குறைவாக இருப்பதால் அது தன்னை நோக்கி வெளியிலிருந்து காற்றை இழுக்கிறது. அப்படி உள்ளே வரும் காற்றும் நிறைய நீராவியுடன் இருந்தால், அந்த நீராவி குளிர, அதனால் மேலும் வெப்பம் வெளியாக, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விரிவடைந்துகொண்டே போகிறது.
இதற்கிடையில் இந்த சுழல் அள்ளிக்கொண்டுபோன தண்ணீரால், கடல் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெருமழை பெய்யும். இந்த மழை கனமானதாக, இடியுடன் கூடியதாக இருக்கும். ஆங்கிலத்தில் Thunderstorm என்பார்கள்.
இங்கே கொரியாலிஸ் விசை என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம்.
பூமி தன் அச்சில் சுழலும்போது, அதன் மேல் நிற்கும் நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து சுழல்கிறோம். நமக்கு நாம் சுழல்வதே தெரிவதில்லை. ஆனால் பூமியில் பரப்புக்கு சற்று மேலே இருக்கும், மிதக்கும் வஸ்துக்களுக்கு என்ன ஆகும்? அவை பூமியுடன் சேர்ந்து சுழலும்; ஆனால் பூமியுடன் ஒத்தபடிக்குச் சுழலா. உதாரணமாக, நாம் பார்த்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்கெனவே நீராவி சேர்ந்த காற்றினால் ஒரு சுழற்சியைக் கொண்டுள்ளது. அத்துடன் அது இடமிருந்து வலமாகவும் (clockwise) சுழலும். இந்தச் சுழற்சி, நாம் வட அரைகோளத்தில் இருப்பதால் இப்படி இடமிருந்து வலமாக இருக்கிறது. இதை உருவாக்குவது கொரியாலிஸ் விசை. இதையும் இப்போதைக்கு சாய்ஸில் விட்டுவிடுவோம்.
ஆகமொத்தம் சுழன்றுகொண்டிருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மையம் கொண்டிருக்கும். அந்த மையத்தை cyclonic eye என்று குறிப்பிடுவர்.
இப்படிப் பெரிதான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் அல்லது பிசுபிசுத்துப் போகலாம். கடல் நீரின் வெப்பம் குறைந்தால், தாழ்வு மண்டலத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான நீராவி கிடைக்காது. அப்போது தாழ்வு மண்டலம் குலைந்துபோகும். அப்படி இல்லாமல், தாழ்வு மண்டலம் மிகப் பெரியதாக ஆகிவிட்டால், அடுத்து அது நகர்ந்தபடியே வந்து கரையைக் கடக்க முயற்சி செய்யும்.
கரையைக் கடக்கும்போது சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70-150 கி.மீ வேகத்தில் இந்தக் காற்று கரையை அடிக்கும். கூடவே இந்தப் புயல் அள்ளிக்கொண்டுவரும் நீரும் மழையாகக் கொட்டும். கடலை விட்டு விலகி கரைக்குள் வந்ததால், அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நீராவி மேற்கொண்டு கிடைக்காமல் போய்விடும். எனவே புயல் ஓய்ந்துவிடும்.
ஆனால் அதற்குள்ளாகக் கடும் அழிவை ஏற்படுத்திவிடும்.
***
இதை எழுதிமுடிக்கும்போது சென்னை அமைதியாக, மழை கொட்டாமல், காற்றடிக்காமல் உள்ளது. இன்று மாலை சிறிது நேரம் சுழன்று சுழன்று காற்றடித்தது. நேற்றும். நேற்று முழுவதும் கடுமையான மழை.
இன்று இரவு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் சொல்லியுள்ள இந்த புயல் முடிந்த போது எங்கள் பள்ளியில் எங்களை பக்கத்து ஊருக்கு போய் சுத்தம் செய்யும் வேலையை செய்யச்சொன்னார்கள் அப்போது அங்குள்ள பிரமாண்ட மரம், சும்மா துணியை முறுக்கிப்பிழிந்து போட்டால் எப்படி இருக்குமோ அப்படி போட்டிருந்தது புயல்.
ReplyDeleteமுதல் நாள் மாலை மயான அமைதி என்று சொல்லலாம்,இன்று வரை அந்த அமைதியை எங்கும் உணர்ந்ததில்லை.
மறுபடியும்... சுழற்காற்றைப் பற்றிய எளிமையான விவரனை.
1983 வாக்கில் ஒரு புயல் வந்தது. சேரன்மகாதேவியில் இருந்தேன் அப்போது. நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஊருக்குள் வந்திருந்தது. நதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கிமீ வரை ஒரே நீர் வெள்ளம்.
ReplyDelete1991ல் ஒரு புயல். திருநெல்வேலியே மிதந்தது. பாளையம்கோட்டையும் நெல்லை ஜங்க்ஷனும் துண்டிக்கப்பட்டன. கடும் வெள்ளம். ஜங்க்ஷனில் இருந்த கவிதா ஷாப்பிங் செண்டர் என்னும் கடை முழுக்க மூழ்கி, இரண்டாம் தளத்தில் நீர் புகுந்திருந்தது. எங்கள் வீட்டுக்குக் கீழே எல்லாம் முழங்கால் அளவு தண்ணீர். ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லை. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் இரவு போன்று இருந்தது. எல்லாப் பள்ளிகளிலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு வீடு இழந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மருத்துவ முகாம், உணவு என ஏகப்பட்ட விஷயங்களில் மாணவர்கள் உதவினார்கள். தேவர் மகன் படமும் பாண்டியன் படமும் அப்போதுதான் வந்தது. இந்த இரண்டு படங்களின் பாடல்களைக் கேட்கும்போதும் புயலின் நினைவுகள்தான் வரும்.
புயல் வீசும் இரவில் கடற்கரை பக்கத்தில் இருந்தால் அதன் முழு வீச்சு தெரியும்.
ReplyDeleteஎனக்கு இரு அனுபவங்கள் உள்ளன. திடீர் திடீரென காற்று பேய்த்தனமாக வீசும். அப்போதெல்லாம் தரையோடு படுத்துகொள்ள வேண்டும். திடீரென்று எங்கிருந்தோ ஒரு வீட்டின் கூறை பறந்து போகும்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர்...
உய்ய் உய்யென்று காற்று கிட்டதட்ட உலகம் அழிவது போன்ற திகிலான தோற்றம் கிடைக்கும்.
ஹ்ம்ம் இப்ப நெனச்சுபாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இன்றைய புயல் எனக்கு ஏற்படுத்தி இருக்கும் ஆபத்தும் நஷ்டமும் ரொம்ப அதிகம். எப்போ கரையை கடக்குமென்று அப்டேட்ஸ் பாத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரே வித்தியாசம் இப்போ புயலில் இருந்து 300 KM தொலைவில் வீட்டுக்குள் இருந்து...
I remember another cyclone that hit Tamilnadu during the early 90s (do not remember the year?). That also brought lot of destruction in the coastal districts including chennai.
ReplyDeleteYour description is simple and effective!
அன்புள்ள பத்ரி அவர்களே,
ReplyDeleteஉங்கள் வலைப்பூ அருமை.
//1991ல் ஒரு புயல். திருநெல்வேலியே மிதந்தது. பாளையம்கோட்டையும் நெல்லை ஜங்க்ஷனும் துண்டிக்கப்பட்டன. கடும் வெள்ளம். ஜங்க்ஷனில் இருந்த கவிதா ஷாப்பிங் செண்டர் என்னும் கடை முழுக்க மூழ்கி, இரண்டாம் தளத்தில் நீர் புகுந்திருந்தது.//
ReplyDeleteஅது 1992 வருடம் நவம்பர் மாதம் என்று நினைக்கிறேன்
//தேவர் மகன் படமும் பாண்டியன் படமும் அப்போதுதான் வந்தது. இந்த இரண்டு படங்களின் பாடல்களைக் கேட்கும்போதும் புயலின் நினைவுகள்தான் வரும்.//
1992 தான். !!
அப்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருந்தனர். இந்திய தென்னாப்பிரிக்க டெஸ்ட் ஆட்டங்களின் வானொலி ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தவர் இன்றையை தொடர்வண்டி துறை இணையமைச்சர் தான் :) :)
//எங்கள் வீட்டின் ஓடுகள் அனைத்துமே பறந்துவிட்டன.//
ReplyDelete//ஊருக்குள் இருந்த ஓட்டு வீடுகள் அனைத்தும் மொட்டையாகக் காட்சியளித்தன. //
இது எப்படி நடக்கிறது என்று அறிந்து கொள்ள இந்த பதிவிற்கு செல்லுங்கள்.
ஒரு குடிசை வீட்டின் மேல் அதிவிரைவாக காற்று வீசுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்
அப்பொழுது
கூரைக்கு மேல் ஒன்றும் இல்லை. கூரைக்கு கீழ் சுவர் இருப்பதால் வேகத்தை கட்டுப்படுத்துகிறது
கூரையின் மேலுள்ள வேகம் > கூரையின் கீழுள்ள வேகம்
பெர்னாலி கூற்றுப்படி
கூரையின் மேலுள்ள அழுத்தம் < கூரையின் கீழுள்ள அழுத்தம்
இதனால் தான் பக்கவாட்டில் வீசும் புயல் காற்றின் போது கூரை மேல் நோக்கி (பிச்சுக்கிட்டு) போகிறது
இது தவிர பெர்னோலி கூற்றுக்கு உதாரணங்கள்
ReplyDelete1. பெயிண்ட் அடிக்கும் கருவி (Spray paint)
2. நம்து மூக்கின் அருகில் இருக்கும் para nasal sinusகளிலிருந்து சளி வெளிவருவது
3. வானூர்திகளின் சிறகில் இருக்கும் Slat (Slat deployment பற்றி மைக்கேல் க்ரைடன் ஒரு அருமையான புதினம் எழுதியுள்ளார். தலைப்பு மறந்து விட்டது)
4. கேஸ் அடுப்பு (கேஸ் அடுப்பில் பார்த்தீர்கள் என்றால் ஒரு துளை இருக்கும். ஆனால் அது வழியாக பொதுவாக எரிவாயு வெளிவராது. ஆனால் அழுத்தம் குறைந்தால் வெளிவரும். எரிவாயு நாற்றத்தை வைத்து ”கேஸ் தீரப்போகுது” என்று நம் வீட்டு பெண்கள் கூறுவதற்கு பின்னர் பெர்னோலி கூற்று உள்ளது
5. சாலையில் ஒரு பேரூந்தோ மூடுந்தோ வேகமாக செல்லும் பொழுது மரங்கள் ஆடுவது
6. சாலையில் தேங்கியிருக்கும் நீர் வேகமாக செல்லும் வாகனத்தின் மீதே திரும்பி தெரிப்பது
7. இரு சக்கர வாகன கார்பரேட்டர்
என்று உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
பத்ரி ஸார்..
ReplyDeleteவழக்கம்போல இதுவும் பல பயனுள்ளத் தகவல்களைத் தந்தது..
நான் பார்த்த முதல் புயல் திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டையை அழித்த புயல்.. 1978 என்று நினைக்கிறேன்.. எப்போதும் புயலும், மழையும் ஓயும் என்று தெரியாமல் ரேடியோவே கதி என்று அமர்ந்திருந்தோம்.
நினைத்துப் பார்க்க வைத்தது உங்கட இந்தப் பதிவு..