Monday, March 29, 2010

அறுபத்து மூவர் 2010

சுமார் 4 மணிக்கு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து நடையாகவே கிளம்பினோம். அப்படியே சி.பி.ராமசாமி தெரு வழியாக சாய்பாபா கோயில் வழியாக நடந்து மாடவீதி. இம்முறை அப்ரதட்சிணமாகச் சுற்றலாம் என்று முடிவு செய்தோம். நேரம் அதிகமாக அதிகமாக தெற்கு மாடவீதிக்குள் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் வந்துவிட்டால், அங்கே தெருவில் நிற்கவே முடியாது. எனவே தெற்கு மாடவீதியில் நுழைந்து, அப்படியே கிழக்கு, வடக்கு என்று சுற்றி, மீண்டும் அலுவலகம் நோக்கி நடந்து சென்றுவிடுவது.

நடுத்தெருவில் சூடம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர் பலர். கொஞ்சம் அபாயமான விஷயம்தான் இது. சரியாகக் கவனிக்காதவர்கள் உடையில் நெருப்பு பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.


ஒவ்வொரு முனையிலும் காவல்துறை கண்காணிப்பு ‘கோபுரம்’ மாதிரி ஒரு தாற்காலிக மேடை அமைத்து வீடியோ கேமரா கண்காணிப்பும் உள்ளது. ‘இவர்கள் பிக்பாக்கெட் திருடர்கள்’ என்று ஒரு பட்டியல் அங்கே காணப்பட்டது. அதில் பல முகங்கள். பெண்களுக்கான 33% அளவுக்கு அதிலும் இட ஒதுக்கீடு இருந்தது! அதைப் பார்த்தபின் சுற்றி யாரைப் பார்த்தாலும் பிக்பாக்கெட் போலவே தோன்றியது.


தெற்கு மாடவீதியில் ஒரு கட்டடத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் இருந்தன. வெள்ளைக்கார சிப்பாய்கள் போல பல கட் அவுட்கள் வாசலில் தூணுக்குத் தூண் தென்பட்டன. இதன் தாத்பர்யம் என்ன என்று புரியவில்லை.


கொஞ்சம் தள்ளி, ஒரு காய்கறிக் கடைக்காரர் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைக் கட்டி தூக்கி எறிந்துகொண்டிருந்தார். ஆள் ஆளுக்குப் பிரசாதம் வழங்குவதைப் போல இவர் காய்கறிப் பிரசாதம்! பின் திடீரென மாங்காய்கள் பறக்க ஆரம்பித்தன.


கொஞ்சம் தள்ளி சுடச்சுட சர்க்கரைப் பொங்கல். பல இடங்களிலும் சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது. அதற்குள் பல விக்கிரகங்கள் உலா வரத் தொடங்கியிருந்தன.


தெற்கு மாடவீதியில் கூட்டம் அதிகமாக, குளத்தை ஒட்டிய தெருவில் நுழைந்து மாமி மெஸ் வழியாக வந்தால், அங்கு நல்ல எலுமிச்சை சர்பத். பிறகு மீண்டும் சர்க்கரைப் பொங்கல்! அப்படியே கிழக்கு மாடவீதிக்குள் நுழைந்தால் மீண்டும் கூட்டம் அப்பியது. அங்கே சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று கொட்டகை போட்டு ‘தனலட்சுமியை அப்படியே வாரி எடுத்துக்கொண்டு போங்கள்’ என்று மைக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஒரு மாமி. வாங்கிச் சென்றால், ‘அறுபதே நாட்களில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’ என்று தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்.


வந்த வழியே திரும்பி, கோயில் வாசலுக்குச் சென்றோம். அங்கிருந்து சந்நிதித் தெரு வழியாக தேர் வரை கூட்டமே இல்லாமல் போகமுடிந்தது.


தேர் அருகில் ஒரு வீட்டில் போளி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கூட்டம் அம்மியது. தேரை ஒட்டிப் பின்னால் திரும்பினால் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தது.


சற்று தள்ளி மூன்று பேர் தாரை, தப்பு வைத்துக்கொண்டு அடித்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் படம் எடுக்க ஆரம்பித்ததும் சூடு அதிகமாகியது. என்ன ஒரு ஒருங்கிணைப்பில் ‘தாளம்’ மாறுகிறது என்று பாருங்கள்.


எதிரே என் ஃபேவரிட்டான அம்மன் முகம் வந்தது.


அதைத் தாண்டியதும் திருவள்ளுவர், வாசுகியுடன் பவனி வரத் தொடங்கினார். இதற்குமுன், இப்படி தாடி வைத்து விக்கிரகமாக வழிபடப்படும் திருவள்ளுவரை நான் தரிசித்ததில்லை. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று சொல்லியா இவரை தினம் தினம் அர்ச்சிப்பார்கள்?


கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் அழகாக எஸ்கேப் ஆகி, அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். இரண்டு முழு மணி நேரங்கள். கால் வலி. நிறையப் பிரசாதம்.



மற்றுமொரு 63-வர் நிறைவுற்றது.

2007 | 2005

7 comments:

  1. அருபத்துமூவர் உற்சவத்தை கூட்டத்தில் சிக்கி நொந்து நுலாகமல் விட்டில் இருந்தபடியே பார்க்க வைத்துவிட்டீர்கள்.நன்றி நண்பரே.நல்ல பதிவு பகிர்வுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  2. 2009 அறுபத்து மூவர் சென்றிருந்தேன். தாங்க முடியாத, ஒரு ஒழுங்கே இல்லாத அலை பாயும் கூட்டம் மகா அவஸ்தையாக இருந்தது.

    மிக மிக இரைச்சலான போலீஸ்காரர்களின் நான்ஸ்டாப் எச்சரிக்கை காதைத் தவிடுபொடியாக்கியது. ஒரு செகண்ட் கூட இடைவெளியே இல்லாமல் ரெகார்டிங் மூலம் திரும்பத் திரும்ப அவர்கள் அலறியதை மறக்கவே முடியாது! அந்த காது கிழியும் சத்தத்திலிருந்து தப்பிப்பதற்காகவே சில கடைகளுக்குள் ஒதுங்கினாலும் அங்கேயும் இந்த சத்தம்! கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாமல் இப்படியா செய்வார்கள்?

    இந்த ஆண்டு எப்படியோ?!

    ReplyDelete
  3. தாரை தப்பட்டைகளும் நவீனமாகிவிட்டன ;) அடி பின்னியெடுக்கிறார்கள், ஆனால் கூட்டம் சுரத்தே இல்லாமல் வேடிக்கை பார்ப்பது போலுள்ளது.

    ReplyDelete
  4. ராம்: அறுபத்து மூவர் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி அல்ல. ஆங்காங்கே ஆளாளுக்கு ஈடுபட்டு நடத்தும் ஒரு நிகழ்வு. தமிழகக் கோயில்களின் பெருவிழாக்கள் எல்லாமே இப்படித்தானே?

    கூட்டம் மிக அதிகம். உண்மை. அதனைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஸ்டாம்பீட் நடக்க வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் நடந்தால் என்ன ஆகுமோ, தெரியாது.

    காவல்துறை இந்த முறை அதிகமாகவே காணப்பட்டனர். மாடவீதிகளுக்கு உள்ளாகவே அவர்களது காரில் மைக்கில் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள். யாரும் அதனைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

    ஒழுங்கு செய்யப்படாத ஒரு கூட்டத்தில் பலவிதமான மையங்கள், ஆங்காங்கே செயல்பட்டுக்கொண்டு, தத்தம் கடமையை ஆற்றும் இந்த நிகழ்வில் ஏதோ ஒன்று என்னை இழுக்கிறது. அது நிச்சயம் பக்தி அல்ல. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் போய்ப் பார்த்துவிடுகிறேன். ஏதோ ஒன்று நாகப்பட்டினம் காவடி/செடில் உற்சவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்! அதுவும் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  5. தப்பட்டை அடிபின்னி எடுத்து இருக்காங்க .. super

    ReplyDelete
  6. இலவச புத்தகங்கள் பட்டியலை காணவில்லையே!

    ReplyDelete