Tuesday, October 16, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)

முதல் பகுதி

சுதந்தர வர்த்தகம் நடக்காதிருக்க, அரசு பல வழிகளில் கட்டுப்பாடுகளை, தடைகளை விதிக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இந்தக் கட்டுப்பாடுகள் இருப்பதால் யார் பலன் பெறுகிறார்கள், யார் நஷ்டம் அடைகிறார்கள்? இந்தக் கட்டுப்பாடுகள் எப்போதும் இருக்கவேண்டுமா? அல்லது அவற்றை அவ்வப்போது நீக்கிவிட்டு, தேவை ஏற்பட்டால் மீண்டும் கொண்டுவரலாமா?

ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

சென்ற பதிவில் பாம் ஆயில் பற்றிச் சொல்லியிருந்தேன். இந்தியாவின் எண்ணெய்த் தேவை ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் டன். இதில் 8 மில்லியன் டன்னை (50%-ஐ விட அதிகம்) நாம் மலேசியா, இந்தோனேசியா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அப்படி இருக்கும்போதும் நாம் இந்த இறக்குமதிமீது வரி விதிக்கிறோம். இந்த வரி, அரசின் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக.

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களின் செயல்திறமின்மைக்காக இந்திய நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை நீக்கினால் ஒரு கிலோ எண்ணெயின் விலை சுமார் 40 ரூபாய் குறையும் என்பது என் கணக்கு. இப்போது வெவ்வேறு பிராண்ட் எண்ணெய்களின் விலையைப் பார்த்தால் லிட்டருக்கு சுமார் 80 முதல் 120 ரூபாய் வரை இருக்கிறது. இது 50-80 ரூபாய் என்றுதான் இருக்கவேண்டும்.

குறைந்த விலை என்பது நல்லதுதானே? பிறகு ஏன் இந்த இறக்குமதி வரி? ஏன் நுகர்வோரைப் பற்றிக் கவலைப்படாமல், உள்நாட்டு உற்பத்தியாளரைக் காப்பாற்றவேண்டிய அவசியம்? இதற்கு இரண்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி என்றால் அதற்கான பணம் அமெரிக்க டாலரில் இருக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால், நாளை இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகக் குறைந்தால், நாம் அதிக அளவு அந்நியச் செலாவணியைச் செலவழிக்கவேண்டி வரும். (பெட்ரோல் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடுங்கள்.)

மற்றொன்று: இறக்குமதி வரி விதிக்கப்படவில்லை என்றால், இந்திய உற்பத்தியாளர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் அவர்கள் தொழிலை விட்டே போய்விடுவார்கள். அப்போது ஒட்டுமொத்த உற்பத்திக்கும் நாம் அந்நிய நாடுகளை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் விலையை ஏற்றத்தொடங்கினால் நாம் காலி! (இந்த விவாதத்தைக் கவனத்தில் வைத்திருங்கள். இதைத்தான் நாம் திரும்பத் திரும்பச் சந்திக்கப்போகிறோம்.)

இந்த இரண்டுமே பலவீனமான ஒரு நாடு யோசிக்கவேண்டிய விஷயங்கள். உலகமயமாதலில் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது மிகவும் பின்தங்கியுள்ள நாடுகள் - ஒரு கானாவோ ஒரு மலாவியோ - சிந்திக்கவேண்டிய விஷயங்கள். இந்தியா இப்படி யோசிக்கவேண்டுமா?

இந்திய விவசாயம் உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. நாட்டுக்குத் தேவையான எண்ணெய் வித்துக்களையும் பருப்பு வகைகளையும் நாம் வேண்டிய அளவு உற்பத்தி செய்வதில்லை. எண்ணெயும் பருப்பும் குறைந்தவிலையில் கிடைக்காததுமே மக்களுக்குச் சத்துணவு கிடைக்காமைக்கு ஒரு காரணம். அரிசியும் கோதுமையும்தான் குறைந்தவிலையில் ரேஷன் கடையில் கிடைக்கும். மீதமெல்லாம் தெருக்கோடி அண்ணாச்சி கடையில் காசு கொடுத்தால்தான் கிடைக்கும். உலகின் பல நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகையின் தேவைக்கு மேலாகப் பருப்பும் எண்ணெய் வித்துக்களும் பயிராகின்றன. அவற்றை எவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைக்குமோ அந்த விலைக்கு வாங்குமாறு செய்வதுதானே நம் அரசின் கடமை? அதைவிடுத்து செயற்கையான தடைகளை நாமே நம் மக்கள்மீது சுமத்தியிருக்கிறோம்.

இது இந்தியாவின் சோஷலிசப் பின்னணியால் வரும் ஆபத்து. வெளிநாட்டில் பொருள்கள் வாங்குவதாலேயே நாம் நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கப்போவதில்லை. தேவைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அதே நேரம், பிற நாடுகளின் எந்தத் தேவையை நம் நாட்டிலிருந்தபடி பூர்த்தி செய்யவேண்டும் என்பதைச் சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்.

***

இதேபோல இன்னொரு பிரச்னைதான், உலகச் சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யாதது. ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு போன்ற மசாலாப் பொருள்களை உலகுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவை நாட்டில் அதிகமாக விளைகின்றன. இந்தியத் தேவைக்கு அதிகமாகவே.

ஆனால் பருத்தியை எடுத்துக்கொண்டால், நமக்குமே பற்றாக்குறைதான். அப்படியானால் விளைந்த பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாதா? ஒரு நாடு தன் தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்தபின்னர் உள்ள மிச்சத்தைத்தான் ஏற்றுமதி செய்யவேண்டுமா?

தனி நபர் லாபம் சம்பாதிக்கும் உரிமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான பொருள்கள் கிடைப்பதற்கான பொது நலம், ஓர் அரசு தன் நாட்டை, பிரச்னைகள் ஏதும் இன்றி வழிநடத்திச் செல்வதற்கான கடமை ஆகிய மூன்றையும் ஏறிட்டுப் பார்த்துதான் சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

தனி நபர் உரிமைகள்தான் முக்கியம் என்பதை முன்வைத்தால் ஒரு விவசாயி தன் விளைபொருள்களை உலகச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஓர் அரசு தன்னிடம் வேண்டிய அளவு உணவு தானியக் கையிருப்பு இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அந்தப் பொருள்களை அவற்றுக்கான நியாயமான விலை கொடுத்து இந்தியாவிலும் அதன்பின் வெளிநாடுகளிலும் வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே இந்தியாவில் நடைபெறுவதில்லை. இந்திய அரசு விவசாயிகள்மீது அழுத்தம் கொடுத்து, குறைந்த விலையில் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான பண்டகசாலைகளைக்கூட சரியாக அமைப்பதில்லை. நம் கண் முன்னேயே பல லட்சம் டன் தானியங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

விளைபொருள்களைத் தனியாருக்கு எந்தத் தடையுமின்றி விற்கலாம் என்ற நிலை வந்தால், உரிய விலையை சந்தை தீர்மானிக்கும். உலகின் வளர்ந்த நாடுகளின் விவசாயிகளைப் போல இந்திய விவசாயியும் வளமான வாழ்க்கையை நோக்கிப் போக இதுதான் ஆரம்பப் புள்ளி. இப்போது இந்திய விவசாயி ஒரு கொத்தடிமை போலத்தான் வாழ்கிறார்.

உடனேயே இடைத்தரகர்கள் பற்றிப் பேச்சு வரும். விவசாயிக்கு ஒன்றும் கிடைக்காது; எல்லாம் இடைத்தரகர்களுக்குத்தான் போய்ச் சேரும் என்பார்கள்.

எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொரு வேலையைச் செய்துவருகிறார்கள். அவர்கள்தான் கல்யாணத் தரகர்கள். அவர்கள்தான் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரு மேடைக்குக் கொண்டுவருகிறார்கள். இவ்விரண்டு தரப்பில் ஒரு பக்கம் இருப்பவர் ஏமாளி என்றால் தரகர்கள் கட்டாயம் அவர்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள். இது மனித குணம். எனவே ஏமாறாமல் இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குக் கல்வி அவசியம் என்றால் அதைக் கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். உலக கமாடிட்டி சந்தைகளில் ஓடும் விலைகளைப் பார்க்கவேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். இது தெரியாதவர்கள் தடுமாறுவார்கள். ஓர் அரசு, தடுமாறுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். முன்னேறுபவர்களைத் தடுக்கக்கூடாது.

இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்காமல் இருக்க, நமக்கு ஆப்ஷன்ஸ் அதிகம் வேண்டும். அந்த வாய்ப்பை முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்ட சந்தை மட்டும்தான் கொடுக்க முடியும்.

இங்கு அரசுக்கும் இடம் உண்டு. அதுதான் முக்கியமான பொருள்களுக்கான strategic reserve. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் ஒவ்வொன்றையும் அரசு கணக்கில் எடுத்து அதற்கான ஒரு குறிப்பிட்ட கையிருப்பைக் கையில் வைத்திருக்கவேண்டும். அந்தப் பொருள் சந்தையில் மிகக் குறைவாக வந்து, அதனால் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்தால் அரசு தலையிட்டு தன் ரிசர்விலிருந்து பொருள்களைச் சந்தைக்கு விடுவித்து விலையைக் குறைக்கலாம். அதேபோல உற்பத்தி மிக அதிகமாக ஆகிவிட்டால், விலை வீழ்ச்சியடைந்து விவசாயி நஷ்டப்படாமல் இருக்க, அதிக உற்பத்திப் பொருள்களை அரசு வாங்கிச் சேமித்துக்கொள்ளலாம். இது அர்த்தசாஸ்திரத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்ட ஒன்று. அமெரிக்க அரசின் கச்சா எண்ணெய் ரிசர்வ் இப்படிப்பட்ட ஒன்றுதான். இந்திய அரசு கட்டாயமாக கச்சா எண்ணெய், உணவு தானியம் இரண்டிலும் ரிசர்வ் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

***

கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அரசு முதலில் கவனத்தில் வைத்திருக்கவேண்டியது நுகர்வோரை மட்டுமே. நுகர்வோருக்கு நியாயமான, மலிவான விலையில், தரமான பொருள்கள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ரூல் நம்பர் ஒன். ஏனெனில் இது நாட்டின் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு செயல்.

அடுத்து, இந்தியாவின் ஸ்பெஷல் நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் இரண்டாவதாக வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் subsistence நிலையில் இருப்பவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளைப் பாதிக்காத செயல்கள் அல்லது விவசாயிக்கு அதிக வருமானம் கிடைக்கும் செயல்கள், கொள்கை முடிவுகள் எவை என்பதை அரசு எடுக்கவேண்டும். நுகர்வோருக்கும் விவசாயிக்கும் ஒரு பிரச்னை என்றால், பெரும்பாலும் நுகர்வோர் பக்கம்தான் அரசு சாயவேண்டும். ஆனால் விவசாயிக்கு அநீதி ஏற்பட்டுவிடக் கூடாது.

மூன்றாவதாக சிறு வியாபாரிகள். ஒரு சிறு வியாபாரி பணம் முதலிட்டு ஒரு பொருளை வாங்கி விற்கிறார். அதில் லாபம், நஷ்டம் என்பது சகஜம். அரசின் கொள்கை, முதலில் நுகர்வோருக்கு ஆதரவாகவும், அடுத்து விவசாயிக்கு ஆதரவாகவும், மூன்றாவதாக சிறு வியாபாரிக்கு ஆதரவாகவும் இருந்தால் போதும். வியாபாரி தான் செய்யும் வர்த்தகத்தில் நஷ்டப்படக்கூடும் என்றால் அதனை விட்டுவிட்டு வேறு பொருளை வர்த்தகம் செய்வதற்கு மாறிக்கொள்ளலாம்.

நான்காவதாகப் பெரு நிறுவனங்கள் பற்றிக் கவலைப்பட்டால் போதும். நுகர்வோர், விவசாயி, சிறு வியாபாரி ஆகியோரை அழித்துவிட்டு பெரு நிறுவனங்கள் வளர்வதை நாம் யாரும் விரும்பப் போவதில்லை. அது sustainable-உம் அல்ல.

கொஞ்சம் இருங்கள்... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது அதைத்தானே செய்யப்போகிறது என்கிறீர்களா? அது உண்மைதானா என்பதைப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

10 comments:

  1. Really a good article

    ReplyDelete
  2. கேபிள் டிவி வந்தபோது வீடியோ வாடகைக்கு விடும் தொழில் அழிந்தது; டிடிஎச் வந்தபோது கேபிள்காரர்களின் பிஸினஸ் குறைந்தது; செல்ஃபோன் வந்தபோது எஸ்.டி.டி. பூத் நடத்தியவர்கள் தொழில் அழிந்தது (அவர்கள் சிம்கார்டு விற்பனையாளர்களாக மாறிவிட்டார்கள்). அப்பொழுதெல்லாம் யாரும் அழியும் வியாபாரம் பற்றிக் கூப்பாடு போடவில்லையே? மளிகைக்கடைகள் மேல் மட்டும் ஏன் இந்த அக்கறை?

    சரவணன்

    ReplyDelete
  3. //எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொரு வேலையைச் செய்துவருகிறார்கள்//

    இது முழுவதும் சரி இல்லை; எங்கெல்லாம் தரம் குறைந்து இருக்கோ அங்கெல்லாம் தரகு கை ஓங்கும் !
    நாம் இந்தியாவில் தரம் என்பதை ஒரு தரம் கூட நினைத்து பார்ப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
    இதை தாண்டியவர்கள் தரகில் சிக்காமல் பொருட்களை ஏற்றுமதி மட்டும் செய்து சிறப்பாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வர்த்தகத்தில் தரகர்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அவர்கள்தான் தகவல் சேகரிப்பில் முதன்மை இடத்தில் உள்ளனர். சில தொழில்களில் தரகை உடைத்து direct sale என்பது நடக்கலாம். ஆனால் பெரும்பாலும் தரகு இல்லாமல் தொழில் என்பது இல்லவே இல்லை.

      புத்தகக் கடைகள் தரகு வேலை செய்கிறார்கள். பதிப்பாளரையும் வாசகரையும் இணைக்கிறார்கள். பதிப்பாளர்களே தரகர்கள்தான். எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் வேலையைச் செய்கிறார்கள். தரகர்களும் பணம் முதலீடு செய்யவேண்டியுள்ளது.

      நாளை, வாசகர்களும் எழுத்தாளர்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் வரலாம். ஆனால் இது அனைத்துத் துறைகளிலும் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

      Delete
  4. பருத்தி விலை அதிகமானால் நூல் உற்பத்தியாளர்கள் ஐயோ அப்பா அம்மா நாங்கள் தொழில் செய்ய முடியாது, இறக்குமதி செய்ய அனுமதி கேட்பார்கள். பருத்தி விலை வீழ்ச்சி அடைந்தால் வணிகர்கள் ஏற்றுமதி செய்தாவது பிழைத்துக்கொள்கிறோம் என்பார்கள்.அரசின் கொள்கை பல நேரங்களில் யார் கொடுத்த அழுத்தம் எப்படி வேலை செய்கிறது என்பதை பொருத்தே உள்ளது.அப்போது பொருளாதார கோட்பாடுகள் புறந்தள்ளப்படுகின்றன என்பதுதான் உண்மை.
    இன்றும் உயர்ரக பருத்தியை இந்தியா இறக்குமதி செய்கிறது.
    வேறுவகை பருத்தியை ஏற்றுமதி செய்கிறது.
    இறக்குமதி,ஏற்றுமதி பற்றி எழுதும் போது dumping பற்றியும் எழுத வேண்டும்.நீங்கள் அதைக் குறிப்பிடுவதில்லை.அரசு தன் கொள்கைகளை எந்த அளவிற்கு வகுக்க முடியும் என்பதற்கும் வரையரை உண்டு. WTO Agreements, Regional Trade Agreements இவற்றை அரசு புறக்கணிக்க முடியாது.எனவேதான் தேயிலை இறக்குமதிக்கு எதிராக குரல்கள் எழுந்தாலும் அரசு தேயிலை இறக்குமதி குறித்து முடிவு எடுக்கும் போது மேற்கண்ட ஒப்பந்தங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக dumping பற்றிப் பேசவேண்டும். வரைமுறையற்ற கொட்டுதலைத் தடுக்க டாரிஃப் அவசியமே.

      சர்வதேச ஒப்பந்தங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை பொதுவாக எதற்கு அவசியம், ஏன் அவற்றைச் சிலர் ஆதரிக்கின்றனர், சிலர் எதிர்க்கின்றனர் என்பது பற்றியும் கட்டாயம் பேசவேண்டும். இதே தொடரில் எழுதுகிறேன். ஓர் அரசு இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தங்களில் ஈடுபடவேண்டுமா, கூடாதா; இவ்வகை ஒப்பந்தங்களால் நாட்டில் யாருக்கு லாபம், நஷ்டம் என்பதையும் அதில் பார்ப்போம்.

      Delete
  5. Clear and interesting article.Waiting for your next part..

    ReplyDelete
  6. நல்ல பதிவு. அப்படியே எனது கேள்விக்கும் பதில் சொல்லி விடுங்கள். ரியல் எஸ்டேட்டில் அரசின் கட்டுப்பாடு என்பது காலாவதியாகி அப்படி ஒன்று இருக்கிறதா என்பது தெரியாத அளவு சந்தை வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. தனியார் லாபம் சம்பாதிக்க சகல வித வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அரசுக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின் MARKET FORCES ஏன் வெற்றிகரமாக இயங்கவில்லை? 2008 இல் அமெரிக்காவில் வீடுகளின் விலை அதல பாதாளத்துக்குச் சென்றது. இங்கு ஏன் அது போல் நிகழவில்லை? அதற்குப் பொறுப்பான சக்திகள் எவை? அதே சக்திகள் உணவு, விவசாயப் பொருள் விற்பனை, சில்லரை வணிகம் எல்லாவற்றிலும் சந்தையைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்குமா? அவ்வாறு செயல்பட ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த நம்மிடம் அமைப்புகள் உள்ளனவா?
    இவை எனது எதிர்ப்புக்கான வாதங்கள் அல்ல, (யார் எவ்வளவு எதிர்த்தாலும் நிகழ வேண்டிய மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் என்னும் நிலையில் எதிர்ப்பது வீண். பொருளாதார சீர்திருத்தங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளா விட்டாலும் அவை வந்தே தீரும் என்ற நிலையில் இதன் நிறை குறைகளுக்கு எதிர்ப்பாளர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதே சிறந்தது என்பது என் கருத்து.)
    இவை எனது சந்தேகங்கள் மட்டுமே.
    விளக்கம் தர இயலுமா?

    ReplyDelete
  7. பதிவுக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி.

    அதென்ன சமீப காலமாக உங்கள் பதிவுக்க அனானி ரூபத்திலே பலரும் வருகிறார்கள்.

    ReplyDelete