Monday, October 15, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)

ஊழலுக்கு அடுத்து இன்று பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் விஷயங்கள் இரண்டு: (1) அணு மின் நிலையங்கள் வேண்டுமா, வேண்டாமா. (2) சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா, வேண்டாமா.

அந்நிய நேரடி முதலீட்டைச் சற்றே அலசுவோம்.

இன்றைய சந்தைப் பொருளாதார முறையை எதிர்ப்பவர்கள் (இடதுசாரிகள்), கட்டாயமாக எல்லாவிதமான அந்நிய நேரடி முதலீட்டையும் எதிர்க்கிறார்கள். இது தத்துவார்த்த எதிர்ப்பு. அவர்களைப் பொருத்தமட்டில் சந்தைப் பொருளாதாரம் என்பதே மக்களுக்கு எதிரானது. எனவே எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள். தொழிலாளிகளை நசுக்குபவர்கள். மக்களைச் சுரண்டுபவர்கள். ஆனால் இரண்டு முதலாளிகளுக்கு இடையே என்று பார்த்தால், சிறு/குறு முதலாளியாவது பரவாயில்லை; பெருமுதலாளிதான் அதிகம் கெட்டவன். ஆனால் இந்தியப் பெருமுதலாளியையும்விடக் கெட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வதேசப் பணமுதலை அல்லது பன்னாட்டு நிறுவனத்தான். இவன் நம் நாட்டையே கொள்ளையடித்துப் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடுவிடுவான்; ஊழல் மிகுந்தவன்; கிழக்கிந்தியக் கம்பெனியின் மறு அவதாரம்; என்ரான், யூனியன் கார்பைடு... போன்றவன்.

இப்படிப்பட்ட கொள்கை கொண்டோரிடம் விவாதம் செய்வது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே தங்கள் முடிவுகளை எடுத்துவிட்டனர்.

ஆனால் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் பலரும்கூட அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறார்கள். சிலரோ, சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்தாலும் சில்லறை வணிகத்தில் மட்டும் கூடவே கூடாது என்கிறார்கள்.

இப்படி கருப்பு-வெள்ளை என்று இல்லாமல், இந்த விவாதத்தில் பல சாம்பல் நிறங்கள் பரவியுள்ளன.

சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போருடனான விவாதமாகவே நான் என் கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.

***

சந்தைப் பொருளாதார முறை என்பது கட்டுப்பாடுகள் அற்ற ஒன்றாக எப்போதுமே இருந்ததில்லை. அமெரிக்காவில்கூட இதுதான் நிலை. பொதுவாக ஓர் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவைத்திருக்கும். இந்தியாவில் நிலவும் சில கட்டுப்பாடுகளைப் பார்ப்போம்:

1. சில துறைகளில் சிறு, குறு அமைப்புகள் மட்டுமே ஈடுபடலாம்.


உற்பத்தித் துறை என்றால், குறுந்தொழில் (மைக்ரோ) என்றால் இயந்திரங்களில் முதலீடு ரூ. 25 லட்சத்துக்கு உள்ளாக இருக்கவேண்டும். சிறுதொழில் (ஸ்மால்) என்றால் இயந்திர முதலீடு ரூ. 25 லட்சத்துக்குமேல், ரூ. 5 கோடிக்குக்கீழ் இருக்கலாம்.

சேவைத் துறை என்றால் குறுந்தொழில் முதலீடு ரூ. 10 லட்சத்தைத் தாண்ட முடியாது. சிறுதொழில் என்றால் ரூ. 10 லட்சத்துக்குமேல், ரூ. 2 கோடிக்குக்கீழ் இருக்கவேண்டும்.

உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.

2. சில பொருள்களை, உற்பத்தி செய்வோரிடமிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியாது. 

உதாரணம்: விவசாய விளைபொருள்கள்.

ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்து, Model APMC Act என்ற ஒன்றை இயற்றியது. கடந்த சில வருடங்களில் 16 மாநிலங்கள் இதனைப் பின்பற்றித் தத்தம் சட்டங்களை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளன. இருந்தாலும் அவை இந்தத் துறையில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.

பொதுவாக, இந்தச் சட்டத்தின் அடிப்படை, விவசாய விளைபொருள்களை அரசு விரும்பினால் அரசு மட்டும்தான் வாங்கலாம் என்பதே. அடுத்ததாக, அரசு அனுமதி அளிக்கும் வியாபாரிகள் மட்டும்தான், அரசு அமைக்கும் சந்தையில் மட்டும்தான் மேற்படிப் பொருள்களை வாங்கலாம். அரசு தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கியபின்னரேயே தனியார் வர்த்தகர்களுக்கு இந்தப் பொருள்களை வாங்க அனுமதி தரும். உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பிற பணப்பயிர்கள், காய்கள், கனிகள் என்று அனைத்தையுமே இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும். இதனால் சந்தை என்பது விலையை நிர்ணயிப்பதில்லை. அரசுதான் விலையை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான பொருள்களை அரசு கொள்முதல் செய்யும்போது அவர்களுக்கு விற்காமல் காத்திருந்து பிறகு தனியாரிடம் விற்று அதிக விலை பெறலாமா என்றால் அதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வாங்கிச் சென்றபிறகு தனியார் வர்த்தகர்கள் யாருமே வாங்கத் தயாராக இல்லை என்றால் கோவிந்தாதான். எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசு கேட்கும் பொருள்களை அரசு சொல்லும் விலைக்கு விற்றுவிட்டு, பணம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். (அரசு கேட்கும் விலையில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்போல.)

உங்களால் நேரடியாக முன்கூட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் எளிதில் இறங்கமுடியாது. சந்தைக்குப் பொருள்கள் வந்து அங்கே கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமம் இருந்தால்மட்டுமே உங்களால் அங்கே பொருள்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் வாங்கிய இடை நபரிடமிருந்து அவர் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.

3. சில துறைகளில் கார்பொரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை.

சில்லறை வணிகம் அப்படிப்பட்ட நிலையில்தான் சில ஆண்டுகளுக்குமுன்வரை இருந்தது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கின.

4. சில வகைப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடும் வரி விதிக்கப்படும்.


இந்தியப் பொருள்களுக்கான சந்தை அழிந்துபோய்விடாமல் இருக்க அந்நியப் பொருள்கள் மீதான வரி (tariff) அதிகரிக்கப்படும். உதாரணமாக பனை எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1, 2012 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் சொல்லும் செய்தி இது:
சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டுத் தொழில் துறையை அழியாது பாதுகாக்கவும் ஒரு டன் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 484 டாலர் என்பதிலிருந்து 1,053 டாலர் என்று இந்தியா உயர்த்தியுள்ளது.
அரசின் இந்த ஆணைமூலம் பனை எண்ணெய் விலை முன்னர் இருப்பதைவிட லிட்டருக்கு ரூ. 30 அதிகமாகியுள்ளது. இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் இந்த விநாடியே பனை எண்ணெய் விலை லிட்டருக்கு 55 ரூபாய் குறையும்.

5. சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.

சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.

6. உரிமங்கள், உற்பத்திக்கான கோட்டா ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சில துறைகளை அரசு கட்டுப்படுத்தும்.

உரிமங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைவாக இருப்பதால் ஒரு மாநிலத்தில் இத்தனை மொபைல் போன் நிறுவனங்கள்தாம், உரிமம் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்று அரசு தீர்மானிக்கிறது.

அதேபோல முன்பெல்லாம், ஒரு துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மீட்டர் துணி உற்பத்தி செய்யலாம், எத்தனை டன் உருக்கு உற்பத்தி செய்யலாம் என்பதற்குக் கோட்டா பெறவேண்டியிருந்தது. பெற்ற கோட்டாவைவிட அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. நல்லவேளையாக அந்தச் சனியனிலிருந்து இன்று முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிட்டது.

உரிமங்கள் சில துறைகளில் இருக்கவேண்டியது அவசியம். இவை இரண்டு விதமானவை. ஒன்றில், அரசு மட்டுமே உற்பத்தியை, சேவையைச் செய்யலாம் (ராணுவத் தளவாடங்கள் முதலியன). இன்னொன்றில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இருக்கலாம் (தொலைத்தொடர்பு).

7. அந்நிய முதலீட்டை அரசு கட்டுப்படுத்தும்.

மேலே சொன்ன அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை யார் வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு. அதாவது யார் யார், எந்த எந்தத் துறைகளில், எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றியது. அதன்மூலமும் அரசு கட்டுப்படுத்துதலைச் செய்கிறது.

இந்திய நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், அந்நிய நேரடி நிறுவனங்கள் என்ற மூன்று வெவ்வேறு நபர்களை/அமைப்புகளை நாம் பார்க்கிறோம்.

அந்நிய நேரடி நிறுவனங்களுக்கும் அந்நிய நிதி நிறுவனங்களுக்குமான வித்தியாசம் என்ன? வால்மார்ட் இந்தியா வந்து சில்லறை வியாபாரம் செய்ய விரும்புவது அந்நிய நேரடி முதலீடு. ஒரு நிறுவனம் தனக்கு எந்தத் தொழிலில் அனுபவம் இருக்கிறதோ அதே தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்வது. மாறாக கலிஃபோர்னியா அரசுத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி என்ற அமைப்பு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவது அந்நிய நிதி நிறுவன முதலீடு. இதில் அந்நிய நிறுவனத்தின் கட்டுப்பாடு இருக்காது. அதன் முதலீடு, வருமானத்தைப் பெருக்குவது என்பதற்காக மட்டுமே. நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இந்தியர்கள் கையில் இருக்கும்.

உதாரணமாக மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் கம்பெனியில் பிரிட்டனைச் சேர்ந்த தி சில்ரன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (டி.சி.ஐ) என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற வகையைச் சாரும். அதே, பி.எச்.பி பில்லிடன் என்ற உலகிலேயே பெரிய கரி மற்றும் தாது நிறுவனம் கோல் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அது டிரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட்.

ஒரு துறையில் யார் முதலீடு செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துவதோடு, எத்தனை சதவிகிதம் பங்கு வைத்திருக்கலாம் என்பதையும் அரசு கட்டுப்படுத்துகிறது. சில துறைகளில் ஒரு நிறுவனத்தின் 100% பங்குகளையும் அந்நிய நிறுவனங்கள் தம் கையில் வைத்திருக்கலாம். சில துறைகளில் 74%, 51%, 49%, 26% என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும். அவ்வப்போது அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.

(தொடரும்)

23 comments:

 1. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள இடங்களில் அந்தந்த ஊராட்சி பேரூராட்சி நகராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி நிலுவையில்லாமல் வரியை செலுத்திக் கொண்டுருக்கிறார்களா?

  ReplyDelete
  Replies
  1. இதற்கு நான் எப்படி பதில் சொல்லமுடியும்? சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாநில, மத்திய அரசுகள்தான் பதில் சொல்லவேண்டும்.

   வரி கட்டாமல் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசிடம் உண்டு.

   மேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

   Delete
  2. @ஜோதிஜி திருப்பூர்

   Do you mean small companies pay their taxes and only the MNCs evada ?? !!!!!

   If yes, what makes it possible for the MNC to evade taxes to localbodies ??

   Delete
 2. பத்ரி,

  சில்லரை வர்த்தகத்தில் நேரடி முதலீடு போல எதிர்காலத்தில் விவசாயத்தில் நேரடி முதலீடு / கார்பரேட் முதலீடு சத்தியமா?

  அதாவது மக்களின் மனநிலைப்படி இன்னும் 10/15 வருடத்தில் விவசாயம் செய்ய யாரும் இருக்க போவதில்லை;

  அத்தகைய சூழலில் மேட்டூர் அணையை - ரிலையன்ஸூம், மைசூர் அணையை - வால்மார்ட்டும், முல்லைப் பெரியாறு அணையை - பிர்லா குரூப்பும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது சாத்தியமா???

  இதுபோல் பெருவிவசாயத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் ஏதேனும் உண்டா???

  உற்பத்தியாளர்களும் அவர்களே, விற்பனையாளர்களும் அவர்களே, என்னும் சூழலில் விலை விண்ணைத்தொடுமே....

  அரசு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்று நாம் நினைக்கலாம், பேசலாம், எழுதலாம். அவை நேர்மையான அரசாக இருந்தால்;

  அந்த நேர்மை நம் மக்களிடமும் இல்லை அரசுகளிடமும் இல்லை.

  :) :)

  ReplyDelete
 3. /// ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் ///

  நிறுவனத்தின் பெயர் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' என்று நினைக்கின்றேன். அவர்கள் 3 வித ஃபார்மாட்டில் கடைகளை வைத்திருக்கிறார்கள் - 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்', 'ரிலையன்ஸ் சூப்பர்' மற்றும் 'ரிலையன்ஸ் மார்ட்'. பலரும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்றே எழுதுகிறார்கள். அது மூன்றில் ஒரு ஃபார்மாட் மட்டுமே.

  சரவணன்

  ReplyDelete
 4. வால்மார்ட் வந்துடும் என்று பயமுறுத்துபவர்கள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வியாபாரிகளே...கடந்த ப்த்து வருசங்களாக விவசாயிகள் தற்கொலை செய்கிறதுக்கு காரணம் கார்ப்பரேட்களா...இல்லவே இல்லை.வியாபாரிகள்தான்.

  கடந்த பத்து வருடமாக வியாபாரிகளுக்கு போட்டியே இல்லை.விவசாயிக்கு ஆப்சனே இல்லை. ஏற்கனவே நிறையபேர் விவசாயத்தை விட்டு போய்விட்டார்கள்.மீதி இருப்பவருக்குத்தான் இது உதவும்.அதேசமயம் வெளிநாட்டு சில்லறை நிறுவனம் ஆதிக்கம் செலுத்தாமலிருக்கு என்ன செய்ய என்றும் கேள்வி இருக்கத்தான் செய்கிறது...

  ReplyDelete
 5. Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும், இப்போ வால்மார்ட் வந்தா இதே கதி அரிசிக்கும், காய்கறிகளுக்கும், தானியங்களுக்கும் ஏற்படுமா?

  ReplyDelete
 6. From wiki:
  In 1870, 70-80 percent of the US population was employed in agriculture.As of 2008, approximately 2-3 percent of the population is directly employed in agriculture
  *****

  Something similar will happen in India. With more options available, the younger generation is not willing to do the manual work in the fields.

  We are witnessing a society, in which a majority of population is moving into manufacturing and services.

  I see these things happening in the next 15 years:
  1) Corporate farming
  2) Land ceiling act will be modified to allow bigger landholdings
  3) Organic farming in a big way
  4) Food processing becoming a major industry

  ReplyDelete
 7. //Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும்,//

  பத்திருபது வருடங்களுக்கு முன்னால் அவையெல்லாம் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனின்னு கொடி கட்டிப் பறக்கவில்லையே? அவைகளுக்கு அன்றிருந்த உள்ளூர் மோனொப்பொலியை சாதகமாக்கி வளர்ந்தார்கள் அல்லவா?

  கோக்கோ கோலா எவ்வளவு முயன்றும் தம்ஸ்அப் ப்ராண்டை உடைக்க முடியவில்லையே.

  ReplyDelete
 8. மேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  மின் அஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தாமல் சென்று விட்டேன். இப்போது தான் பார்த்தேன்.

  நிறைய விசயங்கள் எழுத வேண்டும் போல் உள்ளது. உங்கள் பார்வையைப் போல எனக்கும் ஆசை தான். போட்டி உருவாகும். தரமானது பெற முடியும். ஆனால் நம் நாட்டில் எதார்த்தம் வேறு விதமானது.

  குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளை நீங்களும் படித்து இருக்கக்கூடும். அமெரிக்காவில் அந்தந்த மாநிலங்களே வால் மார்ட் உள்ளே வரக்கூடாது என்று விரட்டுகிறார்கள். காரணம் என்ன?

  பன்னாட்டு நிறுவனங்கள் பெறும் ஆதாயங்கள், இவர்கள் மூலம் அரசியல்வாதிகள் பெறும் ஆதாயங்கள் போன்றவற்றை சில தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். உண்மையிலே இந்த நிறுவனங்களால் நமக்கு என்ன லாபம்? நாட்டிற்கு என்ன லாபம்? என்பதை மற்றவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும். இது அரசாங்கத்தின் கொள்கை என்பது போன்ற வார்த்தைகள் இருந்தாலும் இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தானே?

  ReplyDelete
 9. தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது!

  இதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.

  ReplyDelete
 10. 1991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில் 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் அதிகார வர்க்கமே கடனாகத் தர முன் வந்தன.

  என்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7. இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே - என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆன போது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது மராட்டியத்தில் திவாலாகிப் போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுக்காக வாங்கிக் கொண்டார்.

  ReplyDelete
 11. முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சுரண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில் நுட்பப் பூங்கா என்ற பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி - என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு. தமிழ் நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.

  இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்கு கட்டும் ‘வாட்’ வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பி செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 12. சாய்நாத் எழுதிய கட்டுரை இது.

  இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

  2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

  ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்

  ReplyDelete
 13. ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம்

  ReplyDelete
 14. ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

  ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

  அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

  The Hindu 7/3/2011

  ReplyDelete
 15. உள்ளே வருகின்றவர்களுக்கு ஒரே நோக்கம் லாபம். தொழிலில் லாபத்தைத் தவிர வேறு எதுவும் நோக்கமும் தேவையில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நம்மவர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு அத்தனை பேர்களையும் அடகு வைக்கும் இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் சமானியர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? இதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டுருக்கும் நிறுவனங்களுக்கு உள் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் போன்றவற்றில் நாம் கொட்டிக் கொடுக்கப்போகும் பணம் என்பது அடிப்படை அடித்தட்டு மக்களிடம் இருந்து தானே பிடுங்கி கொடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.

  சட்டங்கள் சரியானதாக இருந்தது, அதை கையாளும் இடத்தில் இருப்பவர்கள் நம்பகத்தன்மையாக இருந்தால் எவர் வந்தாலும் போட்டி போடலாம். இங்கே பேஸ்மெண்ட் வீக். ஆனால் பன்னாட்டுநிறுவனங்கள் உள்ளே வந்து நம்முடைய பொருளாதார கட்டிடத்தை ஸ்ட்ராங்காக மாற்றி விடுவார்கள் என்று நாமும் நம்பிக்க் கொண்டுருக்கின்றோம்.

  மன்மோகன் இன்னும் சில வருடங்களில் "போய்" விடுவார். நீங்களும் நானும் நடக்கப் போகும் கூத்துக்களை பார்க்கத்தான் போகின்றோம்.

  ReplyDelete
 16. பத்ரி,
  ஏகப்பட்ட தகவல் பிழைகளை இந்தப் பதிவில் பதிந்திருக்கிறீர்கள்.

  || உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.||

  ருசி ஊறுகாய் தயாரிக்கும் கவின்கேரின் 2011 விற்றுமுதல் 11,000 மில்லியன் இந்திய ரூபாய்கள். அந்த அளவு முதல் போட்டுச் செய்யும் வியாபாரம் வேண்டிய அளவு லாபம் கிடைக்குமா என்று வேண்டுமானால் பெரு நிறுவனங்கள் பார்க்கலாம்..

  ||ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. ||

  கிராமங்களில் விளைவிப்பவர்கள் தாங்கள் விரும்பும் தனியார்களிடம் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டரீதியாக யாரும் அவர்களைத் தடை செய்வதாகத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. badhri has this knack.....

   Delete
  2. இதற்கு பதில் எழுதியதாக நினைத்திருந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ பதில் வெளியாகவில்லை. ருச்சி ஊறுகாய் மட்டுமல்ல, ஹிந்துஸ்தான் லீவர் முதல் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பல பொருள்களும் சிறு, குறு தொழிற்சாலைகளால் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவை. ஆனால் பெரு நிறுவனங்கள் அவற்றை மார்க்கெட்டிங் செய்யலாம். நான் சொன்னது தகவல் பிழையல்ல. நீங்கள்தான் புரிந்துகொள்ளவில்லை. ஊறுகாயை ருச்சி நிறுவனம் உற்பத்தி செய்யமுடியாது. சிறு/குறு தொழிற்சாலை வைத்திருப்போரிடம் செய்யச்சொல்லி தங்கள் பாட்டில்களில் அடைத்து விற்கமுடியும். சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பல தொழிற்சாலைகள் இவ்வாறு பெரும் நிறுவனங்களுக்காக இயங்கிவருகின்றன.

   அதேபோலத்தான் விவசாய விளைபொருள்கள் சட்டம் பற்றி நான் எழுதியதும். எல்லா விவசாயப் பொருள்களையும் எல்லா மாநில அரசுகளும் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அரசின் பட்டியலில் உள்ள பொருள்களை விவசாயிகள் யாருக்கும் விற்றுவிட முடியாது. தயவுசெய்து ஆ.பி.எம்.சி சட்டங்களின் வரைவை இணையத்தில் படியுங்கள்.

   Delete
  3. எல்லோருக்கும் வணக்கம் , ஐயா பல வருடங்களுக்கு முன்பு போபாலில் விஷ வாயு கசிந்ததே அதனுடைய இழப்பு என்ன ? நினைவில் கொள்ளுங்கள் எவ்வளவு உயிர்கள் ,எவ்வளவு பொருளாதாரம் ,இன்னும் வடியாமல் இருக்கும் சோகத்தின் அளவு எத்தனை என்று தெரியுமா ,இன்னும் எத்தனை தலைமுறைக்கு நம் சகோதரி முடமான குழந்தையை பெற்றுக்கொண்டு இருக்கப்போகிறாள் ,நேற்றைய ஒரு சாண்டி புயுலுககே ஆடிப்போன அமெரிக்கா,போபாலில் என்ன செய்து கிழித்தார்கள் இரவோடு ,இரவாக முக்காடு போட்டு க் கொண்டு ஓடிப் போனானே அந்த ஆண்டர்சன்,நம் சட்டம் அவனை என்ன செய்தது ,இதுதான் நாளையும் இங்கு நடக்கும் ,இல்லை இல்லை அது வேறு இது வேறு என்று சொல்கிறார்களா ,சரி முதலில் போபாலுக்கு செல்லுங்கள் அங்கு ஏற்ப்பட்ட அணைத்து நஷ்டங்களுக்கும் கணக்குப்போட்டு முதலில் ஈடு செய்யுங்கள் ,அந்த மனிதர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுங்கள் ,அது திருப்தியாக இருந்தால் திரும்பவும் அப்படி ஒரு விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உத்திரவாதம் கொடுத்தால் பிறகு அந்நிய முதலீடு பற்றி யோசிக்கலாம் .

   Delete
 17. || சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.

  சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.||

  தயாநிதி மாறன் இருந்த போது செய்த லாபியின் காரணமாக பருத்தி ஏற்றுமதித் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது;பயனடைந்தவர்கள் பெரு ஏற்றுமதியாளர்கள் மட்டுமே.

  விவசாயிகளும், உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

  (ஜான்சன் நிறுவனம் தனது உள்ளாடைகளுக்கான விலையை நான்கு மாதங்களில் 12 தடவைகள் மாற்றியது.)

  வியாபாரிகளும் பொதுமக்களும் நொந்து போனார்கள்.

  ReplyDelete