Zee தமிழ் சானலில், காலை 8.30 (மறு ஒளிபரப்பு இரவு 10.00) மணிக்கு “முதல் குரல்” என்ற நிகழ்ச்சி வருகிறது. சுதாங்கன், ஜென்ராம் ஆகியோருடன் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு நடத்தப்படும் விவாதம்.
தேர்தலுக்கு முன் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிந்து வெளியே வருவோரிடம் நடத்தப்படும் கணிப்பு ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் தடை செய்யுமா, செய்யலாமா என்பது பற்றிய விவாதம் நேற்று ஒளிபரப்பானது. பத்திரிகையாளர் ஞாநியும் நானும் கலந்துகொண்டிருந்தோம். சென்ற வாரம் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்றுதான் ஒளிபரப்பானது.
கருத்துக் கணிப்பு மக்களின் மன ஓட்டத்தை மாற்றி, அவர்கள் வாக்களிக்க நினைத்திருக்கும் தேர்வில் மாற்றத்தை உண்டாக்குமா? ஜெயிப்பவருக்கே தனது வாக்கு போகவேண்டும் என்றா மக்கள் நினைக்கிறார்கள்?
என் கருத்து: கருத்துக் கணிப்பு என்பது நிச்சயமாக மக்கள் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்தக் காரணத்தாலேயே கருத்துக் கணிப்பைத் தடை செய்யமுடியாது. தேர்தல் பிரசாரமும்தான் மக்கள் மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கருத்துக் கணிப்பை மட்டுமே நம்பி அதில் சொல்லப்படும் திசையில் அப்பாவி மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள் என்பதை நான் ஏற்கவில்லை.
இடைத்தேர்தலில் பணம் வாரி இறைக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்களுக்கு நேரடியாக லஞ்சம் கொடுக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்கள்மீது வன்முறை செலுத்தப்படும் என்ற பயம் இருக்கும் நேரங்களைத் தவிர்த்து, பொதுவாக மக்கள் சில முன்தீர்மானங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை போன்ற மாபெரும் நிகழ்வுகள் தவிர்த்து, வேறு எதுவும் மக்கள் தீர்மானங்களை எளிதாக மாற்றிவிடுவதில்லை.
ஞாநி, ராஜீவ் கொலையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். திமுகதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து, அதன் காரணமாக திமுக தோற்கடிக்கப்பட்டது. இதே கட்டத்தில், ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தி, 80% மக்கள் திமுகதான் இந்தக் கொலையைச் செய்தது என்று நம்புகிறார்கள் என்று சொன்னால் மக்கள் மேலும் அதிகமாக இதனை நம்பும் வாய்ப்புகள் இருந்திருக்கும் என்றார்.
கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்களோ, சில தனிப்பட்ட அமைப்பினரோ தங்களுக்குச் சாதகமாகத் திரிப்பதில் விருப்பம் கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால், நம் மக்கள் முட்டாள்கள், படிப்பறிவில்லாதவர்கள், இந்தக் கணிப்புகளை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதை நம்பி, தங்களது வாக்குகளை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதேபோல, யார் ஜெயிக்கப்போகிறார்களோ அவர்களுக்குத்தான் தனது வாக்கு போலவேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.
அதே நேரம், இந்தியக் குடியாட்சி முறை மேலும் முதிர்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் கருத்துக் கணிப்புகளைக் கண்டு - திரிக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும் சரி, நியாயமான கருத்தாக இருந்தாலும் சரி - எந்தப் பிரிவினரும் அஞ்சவேண்டிய தேவையே இல்லை. கருத்துக் கணிப்பை யார் வழங்குகிறார்கள், கருத்துக் கணிப்பு மெதடாலஜி என்ன (எத்தனை பேரிடம் கருத்துகளைக் கேட்டனர்; எந்த மாதிரியான கேள்விகள், சாம்பிள் ஸ்பேஸை எப்படி வரையறுத்தனர், எந்த மாதிரியான அனாலிசிஸ் செய்யப்பட்டது...), கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பின்னணி எப்படிப்பட்டது, அவர்கள் நம்பத்தகுந்தவர்களா ஆகியவற்றை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
இணையம் வழிப் பிரசாரம், எஸ்.எம்.எஸ் பிரசாரம் ஆகியவை பற்றியும் ஓரிரு கருத்துகள் சொல்லப்பட்டன.
கருத்துக் கணிப்புகள் கூடாது என்பதல்ல தன் கருத்து, ஆனால், ஒரு level playing field இருப்பதற்காக தேர்தல் ஆணையம் சில regulatory mechanisms வைத்திருக்கவேண்டும் என்றார் ஞாநி.
தேர்தலை ஒழுங்காக நடத்தி முடிவுகளை அறிவிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருக்கவேண்டும்; மாறாக கருத்துக் கணிப்பு இருக்கலாமா, கூடாதா, தேர்தல் பிரசாரம் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும், எப்படியெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்யலாம், கூடாது, போஸ்டர் ஒட்டலாமா, கூடாதா, இணையத்தளம் நடத்தலாமா, கூடாதா ஆகியவையெல்லாம் தேர்தல் கமிஷனின் வேலையாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து.
***
சுவாரசியமான நிகழ்ச்சிதான். ஆனால் அரை மணி நேரத்தில் (23 நிமிடம்?) நான்கு பேர் பேசுவதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கடினம். பல விஷயங்கள் சொல்லப்படாமலேயே அல்லது எதிர்க்கப்படாமலேயே நிகழ்ச்சி உடனடியாக முடிந்துவிடுவதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது. நான்கு பேர் பேசுவதற்கு இந்தக் குறைவான நேரம் போதுமா என்று தெரியவில்லை.
இதுவே அதிகம் என்று பார்வையாளர்கள் ஒருவேளை நினைக்கலாம்:-)
***
நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிந்து வாசலில் சில நிமிடங்கள் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். ஊடகங்கள் - முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் - எந்த அளவுக்கு அரசியல் சார்புள்ளவையாக, கட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன என்று பேச்சு எழுந்தது. அப்போது, இணையம் எந்த வகையில் மாற்று ஊடகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி விவாதித்தோம். இணையம் அதிகமாகப் பரவவில்லை என்றாலும் விரைவில், செல்பேசிகள் (3G) பரவி, அதன்மூலம் மக்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று பேசினேன்.
இதில் சிலவற்றை எழுத முயற்சி செய்கிறேன்.