Monday, August 23, 2004

அக்கு யாதவ் கொலை

13 ஆகஸ்ட் 2004, வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அக்கு யாதவ் என்பவனை ஒரு பெண்கள் கூட்டம் நீதிமன்ற வளாகத்திலேயே கல்லால் அடித்தே கொலை செய்து விட்டது.

அக்கு யாதவ் நாக்பூரைச் சேர்ந்தவன். அவனை அடித்துக் கொலை செய்த கிட்டத்தட்ட 200 பெண்கள் கஸ்தூர்பா நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கஸ்தூர்பா நகரின் தாதாவாக வலம் வந்த அக்கு யாதவ் கடந்த 14 வருடங்களில் அந்த பஸ்தியின் பெண்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளான் என்கிறார்கள் அந்தப் பெண்கள். கஸ்தூர்பா நகரில் வசிக்கும் தலித் மக்கள் நாள் கூலிக்கு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள். கடந்த 14 வருடங்களில் அக்கு யாதவின் ஆட்கள் இந்த வீடுகளில் நுழைந்து அங்குள்ள ஆண்களை அடித்துப் போட்டுவிட்டு பெண்களை வன்புணர்வார்களாம். பிள்ளைகளைக் கடத்திச் சென்று, திருப்பிக் கொடுக்க பணயப் பணம் கேட்டு வசூலிப்பார்கள்.

கடந்த 12 வருடங்களில் அக்கு யாதவ் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் 43 வன்புணர்வுக் குற்றங்கள் பற்றி சாட்சியங்கள் இருந்தும் ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொண்டு யாதவ் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். இதனால் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மக்கள் தயங்கினர்.

பல குடும்பங்கள் இந்தச் சேரியை விடுத்து வேறு இடங்களுக்கு வசிக்க ஓடிப்போகலானார்கள். ஆனால் எத்தனை பேர்தான் ஓடிப்போக முடியும். கடைசியாக அக்கு யாதவ் 13 ஆகஸ்ட் அன்று நீதிமன்றம் வருவான் என்பதை அறிந்ததும் பெண்கள் ஒன்றுசேர்ந்து அங்கேயே அவனைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்துள்ளனர். கூட்டமாகப் போய் அடித்துக் கொண்று விட்டனர்.

தங்களுக்கு காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்று இந்தப் பெண்கள் சொல்லியிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பெண்களை உடனே காவல்துறை கைது செய்து ஜெயிலில் போட்டுள்ளது. அந்த ஐவர் மீதான நீதிமன்றக் காவல் பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடக்க இருக்கும்போது மேலும் 150 பெண்கள் கூட்டமாக நீதிமன்றம் வந்து தங்களையும் கைது செய்யுமாறு போராட்டம் நடத்த, கடைசியாக அந்த ஐந்து பெண்களுக்கும் பெயில் வழங்கப்பட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அந்தப் பெண்களுக்காக இலவசமாக வாதாட முன்வந்துள்ளனர். தேசியப் பெண்கள் கமிஷனின் தலைவர் பூர்ணிமா அத்வானி இந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசியுள்ளார்.

இனி என்ன நடக்க வேண்டும்? என்னதான் தற்காப்புக்கான கொலை என்றாலும் இது குற்றம்தான். அதுவும் திட்டமிட்டு நடந்த கொலை. இந்தப் பெண்களை அப்படியே விட்டுவிடுவதால் இது போன்ற கூட்டமாக மக்கள் ஈடுபடும் பல கொலைகள் நிகழலாம். எல்லாவற்றுக்கும் நீதித்துறையில் கையாலாகாத் தனம் காரணமாகச் சொல்லப்படும். குஜராத்தில் கூட சில வெறிக்கூட்டங்கள் (mobs) கூட்டமாகப் போய் பல முஸ்லிம் குடும்பங்களைக் கொன்று தள்ளியுள்ளது.

இந்தப் பெண்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனையை மட்டும் அளித்து, அத்துடன் அந்த தண்டனையையும் குறைத்து, பெயிலும் வழங்கலாம்.

அத்துடன் முக்கியமாக காவல்துறை, நீதித்துறை களுக்கு தாங்கள் ஒருசில விஷயங்களைச் சரியாக கவனிக்காவிட்டால் பொதுமக்களே அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். அக்கு யாதவ் நிச்சயமாக அந்த சுற்றுப்புறத்தில் உள்ள அரசியல்வாதிகளையும், காவல் துறை உயரதிகாரிகளையும் தன் கையில் போட்டு வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 14 வருடங்கள் தப்பித்துக் கொண்டே இருந்திருக்க முடியாது.

பெருநகரங்களில் உள்ள தாதா கும்பல்களை - அக்கு யாதவ் போன்ற அக்கிரமக்காரக் கும்பல்களை - அழிக்க ஒவ்வொரு மாநில அரசும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுபற்றிய அவுட்லுக் கட்டுரை.

3 comments:

  1. http://groups.yahoo.com/group/Maraththadi/message/18704

    ReplyDelete
  2. அத்தனை பேரை அக்கு கொடுமைப்படுத்தும்போது கைகட்டி இருந்த காவல்துறை அவனை கொன்றதும் பெண்களை கைது செய்கிறது, நீதித்துறையும் விழித்துக்கொண்டுவிட்டது. போலீஸ் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத்தள்ளுவதை இந்தப் பெண்கள் கல்லால் செய்துவிட்டார்கள். புரட்சிப்பெண்கள்.

    இது போன்ற சம்பவங்களில் நீதித்துறை நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கலவரம், சரியான சாட்சிகள் இல்லாதது போன்ற வகைகளில் அந்தப் பெண்கள் தண்டனை இல்லாமல் வெளியில் வர முடியும். ஒருவனை ஒரு ஆளாக போட்டுத்தள்ளினால் அது கொலை கேஸ், அதே ஆளை ஐந்து பேர் சேர்ந்து காலி பண்ணினால் அது கோஷ்டி மோதல், அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம். தண்டனை அளவும் குறைந்துகொண்டே வரும். சாமி படத்தில் சும்மாவா சொன்னாங்க :-).

    ReplyDelete
  3. //அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம்.//
    இவ்வகையான கலவரத்தை நான் மக்கள் புரட்சி என்கிறேன்.

    ReplyDelete