Tuesday, November 16, 2004

புஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் (US Secretary of State) காலின் பவல் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதில் கண்டோலீசா ரைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கேபினெட்டில் நிதி, உள்துறை, இராணுவம், வெளியுறவு, வர்த்தகம், மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் போட்டா போட்டி நிலவும். ஆனால் அமெரிக்க கேபினெட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான துறை வெளியுறவு மட்டும்தான். மற்றதெல்லாம் - இராணுவம், நீதி, உள்துறை கூட - அதற்குப் பின்னால்தான். நிதி பற்றி யாரும் அவ்வளவாகக் கவலைப்படுவதேயில்லை. (வேண்டுமென்றால் பவல், இராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், நீதித்துறையின் ஜான் ஆஷ்கிராஃப்ட், உள்துறை டாம் ரிட்ஜ் ஆகியோர் பெயர்கள் தவிர வேறெந்த கேபினெட் அமைச்சர் பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்பதைச் சொல்லவும்.)

வெறியரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இன்னமும் உள்ளே இருக்கும்போது, ஈராக் போர் கூடாது என்று கொஞ்சமாவது வாதாடிய காலின் பவல் வெளியே போவது புஷ்ஷின் இரண்டாம் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது. கண்டோலீசா ரைஸ், ரம்ஸ்பெல்ட் (அடிப்பொடி உல்போவிட்ஸ்), டிக் செனி அனைவரும் ஒன்றுசேர்ந்து அடுத்து யாரோடு சண்டை போடப்போகலாம் என்று ஒவ்வொரு கேபினெட் மீட்டிங்கிலும் பேசலாம்.

இன்னமும் Project for the New American Century கோஷ்டியிலிருந்து யாரை என்ன பதவிக்குப் போடலாம் என்று புஷ் யோசிக்கிறாரோ என்னவோ?

ஹிட்லர், தன் புத்தகம் Mein Kampf இல் நன்கு எழுதிவைத்ததை மட்டும்தான் செயல்படுத்தினார். யாருமே அவர் முன்னெச்சரிக்கை இல்லாமல் எதையாவது செய்தார் என்று குற்றம் சாட்ட முடியாது. அதைப்போலவே புது அமெரிக்க நூற்றாண்டைக் கொண்டுவர முனைபவர்களும் தங்களது இணையத்தளத்தில் அறிவித்துவிட்டேதான் செய்கிறார்கள். யாரும் அவர்களைக் குறை சொல்லவே முடியாது. உதாரணத்திற்கு ஈராக்கில் அமெரிக்கா என்ன செய்யவேண்டும் என்பதை பால் உல்போவிட்ஸ் விளக்கிச் சொல்லியிருப்பதை இங்கே காணலாம். (தேதி: 18 செப்டெம்பர் 1998) பின், தான் இராணுவ உதவியமைச்சரானதும் இந்தத் திட்டங்களை இன்னமும் விரிவாக்கிப் படையெடுக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துவிட்டது.

சரி, ஈராக் எந்த அளவுக்கு முக்கியம்? எதனால்? இதைப்பற்றி PNAவின் வில்லியம் கிறிஸ்டல் 22 மே 2002 அன்றே நன்றாக எழுதிவிட்டார்.

"9/11க்குப் பிறகு சவுதி அரேபியாவை இனியும் நம்ப முடியாது. ஆனால் சவுதியில் உடனடியாக 'ஆட்சி மாற்றங்களை' ஏற்படுத்த முடியாது. ஈராக் எண்ணெய்வளங்களை உலகச் சந்தைக்குக் (அதாவது அமெரிக்காவுக்கு) கொண்டுவந்து விட்டால் சவுதி அரேபியா அவ்வளவு முக்கியமில்லாமல் போய்விடும். மேலும் ஈராக்கில் 'மக்களாட்சி'யைக் கொண்டுவந்துவிட்டால் - அரபு நாடுகளில் மக்களாட்சி வேலை செய்யும் என்பதை நிரூபித்துவிட்டால் - சவுதியிலும் அதை வைத்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம்."

இந்த நான்கு வருடங்களுக்குள்ளேயே இதைச் செய்ய முயல்வார்களா, இல்லை அடுத்து ஜெப் புஷ்/டிக் செனி ஆட்சியில் செய்வார்களா என்று பார்க்கலாம்.

எனக்கென்னவோ, அடுத்த குறி சவுதிதான்; சிரியா, ஈரான், வடகொரியா ஆகியவை மீது ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.

6 comments:

  1. வில்லியம் க்றிஸ்டல் பேசுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கவேண்டுமே!! அடடா! அடடா. இதைவிட காட்டமான மூளைச்சலவை வியக்தி கென் மெல்மேன் (Ken Mehlman)க்கு பெரும் பதவி வேறு குடியரசுக் கட்சியில்! உல்ஃபோவிட்ஸ், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர். சாதாரண ஆட்களா இவர்களெல்லாம்? PNAC குறித்து முன்பு ஒரு பதிவில் சுட்டியிருந்தேன்.
    http://dystocia.blogspot.com/2004/11/blog-post_02.html
    ஜனநாயகம் மத்தக் கருமாதி எல்லாம் அவர்களுக்கு ஒரு பாடே இல்லை. இந்தியாவோ பாகிஸ்தானோ சீனாவோ ரஷ்யாவோ இங்கிலாந்தோ போலந்தோ ஜனநாயகமாக இருந்தால் என்ன? PNAC வலைத்தளத்தில், அணுவெடிப்புச் சோதனைகளுக்குப்பிறகு இந்தியாவை எப்படிக் 'கையாள' வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் pdf ஐ வாய்ப்பிருந்தால் படித்துப்பார்க்கவும். என்னைப் பொறுத்தவரை பெரும் சக்திகளின் கோட்பாடெல்லாம், 'நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், சேர்ந்து சமைக்கலாம், பிறகு அதை நான் பெருந்தன்மையுடன் சமபங்காகப் பிரித்துத் தருகிறேன்' என்பதுதான்! Outsourcing ல் வேலை போகிறது வேலை போகிறது என்று பிரலாபிப்பவர்களுக்கு, கோக்கும் பெப்ஸியும் இந்தியாவுக்குள் நுழைந்தபோது காணாமல்போன இந்திய சோடாக் கம்பெனிகள் பற்றிய கதையைத் தெரிந்துகொள்ள ஆர்வமிருக்காது. காலின் பவெல், இந்தளவு பெரிய பதவியில் இல்லாமல் இருந்திருந்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்க வாய்ப்பிருக்கும். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என்பதால், அடுத்த தேர்தலில் ஜெப் புஷ்/ருடி ஜியுலியானியின் leadership lessons ஐக் கேட்க இப்போதே நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளலாம். என் அனுமானம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் காலின் பவெல் ஒரு புத்தகம் எழுதுவார், அதில் என்னென்ன தவறுகளையெல்லாம் தான் தவிர்த்திருக்க முடியுமென்று பட்டியலிடுவார்...ஊடக எந்திரங்கள் தொடர்ந்து கரும்பு ஜூஸ் போட்டுக்கொண்டேயிருக்க வேண்டுமில்லையா?

    By: Montresor

    ReplyDelete
  2. நான் காலின் பவலின் தீவிர ரசிகனாக நீண்ட காலமாக இருந்துள்ளேன். 1996-ல் வெளிவந்த அவரது "என் அமெரிக்கப் பயணம்" (My American Journey) என்ற புத்தகத்தைப் படித்த பின்னரே இங்கிலாந்தில் என் மேல்படிப்பைத் தொடரவிருந்த நான் அமெரிக்காவைத் தேர்வு செய்தேன். அவர் அவ்வாண்டிலேயே கிளிண்டனை எதிர்த்து அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாதா எனக்கூட வேண்டினேன். (இலண்டனிலிருந்து வெளிவரும் 'தி இகானமிஸ்ட்' என்ற வார இதழ் கூட பவலைக் களத்தில் குதிக்கும்படி பரிந்துரைத்தது. ஆனால், பவல் செய்யவில்லை. பயம் அவருக்கு.) அது ஒரு காலம்.

    இன்று, பவல் புஷ்ஷின் கருவறையை விட்டு விலகுவதே நல்லது என்று நினைக்கின்றேன். சென்ற ஆண்டு அவர் ஐ.நா.வில் அவிழ்த்து விட்ட அத்தனை அண்டப் புழுகுகளுக்குப் பிறகு -- அவை அனைத்தும் பொய் என்று உலகம் அறிந்த பிறகு -- அவர் இவ்வளவு காலம் நீடித்ததே தவறு. (பார்: http://slate.msn.com/id/2086924/ ) உண்மை வெளிவந்ததும் தன்மானத்தைக் காக்கவாவது பவல் அன்றே பதவி துறந்திருக்கலாம். விசுவாசி. அதனால், அப்படிச் செய்யவில்லை. இன்று, காலால் எட்டி உதைக்கப்பட்டுள்ளார்.

    ரீஸைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சென்ற மாதம் கூட அல் காக்கா ஆயுதக் கிடங்கிலிருந்து 400 டன்னுக்கும் அதிகமான அனுஆயுத தயாரிப்பிற்குப் பயன் படுத்துக்கூடிய கச்சா பொருட்கள், ஈராக் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னர் காணமற் போய்விட்டது என்று ஐ.நா. அனு ஆயுத நிருவனம் சொல்ல, நம் ரீஸ் அப்படி ஏதும் இல்லை என்று சாதித்தார். புஷ்ஷிற்க்காக எதையும் சொல்லக்கூடியவர்; செய்யக்கூடியவர். அவ்விதத்தில், இதுகாரும், உலகை ஓரளவாவது மதிக்கும் வகையில் இயங்கி வந்த ஒரே அமைச்சும் இன்று ஆதிக்க வெறியர்களில் கையில் அகப்பட்டுக் கொண்டது.

    ஒரு நிலையில், அவரது நியமிப்பானது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கிடைத்த ஒரு 'சிம்போலிக்' வெற்றியாகவே கருதலாம். அடிமைகலாக அவர்கள் அமெரிக்க கண்டத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இன்று அவர்களில் ஒருவர் உலகிலிலேயே மிகவும் சக்திவாய்த ஒரு பதவியில் அமரவிருக்கின்றார்! வெற்றிதானே அது? (அதே வேளையில் வேறொரு ஆப்பிரிக்க அமெரிக்கர், கிலேரண்ஸ் தாமஸ், அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்ற பேச்சும் அடிபடுகின்றது.)

    இறுதியாக, அமெரிக்க எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதில், பத்ரி, உங்களைப் போலவே எனக்கும் கவலை உள்ளது. இருப்பினும், நீங்கள் வருந்துவது போல், அமெரிக்கா மற்ற மேற்காசிய நாடுகளின் மேல் படை எடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. (ஏதாவது கீழறுப்பு வேலை செய்யலாம். அது வேறு விடயம்.) காரணம்: அமெரிக்கப் படைகள் அதிகமாக விரிந்த நிலையில் உள்ளன. ஈராக்கில் அவ்வளவு எளிதாக அமைதியை நிலை நாட்டிவிடலாகாது. சொற்பமான ஈராகியப் படைகளே பயிற்சிப் பெற்றுள்ளதால், இன்னும் சில ஆண்டுகளுக்காவது, அமெரிக்கர்கள் அங்கு இருக்க வேண்டி வரும். சண்டை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. புதிய அமெரிக்க நூற்றாண்டைச் சேர்ந்த நியோ-கான்களைப் பற்றியும் அவர்களின் போர் திட்டங்கள் பற்றியும் சில காலத்திற்கு முன் நான் எழுதிய (ஆங்கிலக்) கட்டுரை: http://groups.yahoo.com/group/Indian-Malaysian/message/9649

    ReplyDelete
  3. இளஞ்செழியன்: உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்கள் மேலே எழுதியுள்ளதையும் பார்த்தேன்.

    நியோகான்கள் "military might and moral clarity" மீது பெருத்த நம்பிக்கை வைத்தவர்கள். தன் நாட்டவர் சில ஆயிரம் சாவதில் அவர்களுக்கு என்றுமே வருத்தம் இருந்ததில்லை. மேலும் பல பில்லியன்களை இராணுவத் தளவாடங்களுக்காகவும், போர்களுக்காவும் செலவு செய்வதிலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. (as an aside, read a very interesting article in The New Left Review at http://www.newleftreview.net/NLR26303.shtml - on remilitarising Japan. இப்படி, அப்படி யாருக்காவது ஆயுதங்கள் விற்று காசு பார்த்துவிடலாம்.)

    ஈராக்கில் இன்றுகூட அதிகப் படைகளை அனுப்பவில்லை என்றுதான் நியோகான்கள் வருத்தப்படுகிறார்கள். இன்னமும் 'மோசமாக' ஈராக்கிய 'எதிரிகளை' கவனிக்கவில்லை என்பதே அவர்களது வருத்தம். பொதுமக்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றியெல்லாம் இவர்கள் என்றுமே கவலைப்பட்டது கிடையாது.

    நியோகான்கள் தம் PNAC தளத்தில் தேவையின்றி எதையும் எழுதுவதேயில்லை என நினைக்கிறேன். இவர்களது போக்கைத் தடுத்த நிறுத்த இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று - டெமாக்ரட் ஆள்கள் யாராவது தொடர்ச்சியாக இரண்டு, மூன்று முறை பதவியில் இருப்பது. இரண்டு - ரிபப்ளிகன் கட்சியிலேயே பவல் போன்ற மிதவாதிகள், நியோகான்களைத் துரத்தி விட்டு ஆட்சிக்கு வருவது.

    ReplyDelete
  4. Montresor: இந்தியா, பாகிஸ்தான் பற்றியெல்லாம் நியோகான் அதிகாரபூர்வ இணையத்தளம் என்ன சொல்கிறது என்று நேற்று நோட்டம் விட்டேன். நியோகான்களுக்கு சீனா மீது அதிக பயம் உள்ளது (தேவைதானே?) என்றும் அதற்கு இந்தியாவை எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிப்பதாகத் தெரிகிறது.

    ஆனால் இன்னமும் விளக்கமாக இந்தியாவுடன் அமெரிக்கா அடுத்த சில வருடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை பேப்பர்கள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லையே? ஏதாவது சுட்டி இருந்தால் கொடுக்கவும். ஒருவேளை மத்தியக் கிழக்கை ஒருகை பார்த்துவிட்டு அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியா, சீனாவை கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவைத்திருக்கிறார்களோ என்னவோ.

    ReplyDelete
  5. ஒரு விடயம் கவனிக்க வேண்டும் நீங்கள்: நியோகான்கள் அனைவரும் (பொதுவாகவே) யூதர்கள்தான். இவர்கள் இடச்சாரி சமூக சிந்தனைக்காரர்கள். பொருளாதார விடயத்தில் சற்று வலப்பக்கம் சார்ந்திருக்கலாம். ஆனால், போர் என்று வந்தால், இவர்கள் கழுகுகள்தான். இவர்களைப் பொருத்த வரை இஸ்ரேல் தவறு இழைக்கவே முடியாது. இன்று நியோகான்கள் அனைவரும் குடியரசுக் கட்சியில் இருந்தாலும், ஒரு காலத்தில் (70-களிலும் அதற்கு முன்னாலும்) இவர்கள் டி.என்.சி.இல் இருந்தவர்களே. உதாரணம்: பேட்ரிக் மொய்நிஹேன்.

    படிக்க வேண்டிய ஒரு கட்டுரை: http://www.thepublicinterest.com/notable/article2.html (பில்லி கிரிஸ்டலின் தந்தை எழுதியது.)

    By: evolutionary

    ReplyDelete
  6. பத்ரி,

    இந்த மாதிரி ஒரு வலைத்தளத்தில் இவ்வளவு வெளிப்படையாக இவர்கள் எந்த நாட்டை எப்படி வழிக்கு கொண்டுவரலாம் என்று விளக்குவதும், இதை பற்றி ஊடகங்கள் அவ்வளவாக விமர்சிக்காததும் எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. இதைப்படித்தீர்களா? http://www.newamericancentury.org/northkorea-20041122.htm. நவம்பர் 22 தேதியிட்ட இந்த கட்டுரையின் தலைப்பு:Toward Regime Change in North Korea!

    ReplyDelete