Sunday, April 10, 2005

நீதிக்கட்சி

டி.நகர் என்று வெறும் இனிஷியல் மட்டும் வைத்திருக்கும் தியாகராய நகர், அங்குள்ள பனகல் பார்க், நடேசன் பூங்கா - இவையெல்லாம் யாருடைய நினைவுச் சின்னங்கள் தெரியுமா?

நீதிக்கட்சி என்றொரு கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாக, மாற்றாக நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானது. South Indian Liberal Federation அல்லது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நீதிக்கட்சி அல்லது Justice Party என்ற பெயரில்தான் பொதுமக்களால் அது அறியப்பட்டது.

இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் பார்ப்பனரல்லாதார் நலன். அந்நேரத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகள் இதில் உண்டு) மக்கள் தொகை 4.75 கோடிகளாகவும், அதில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 75 லட்சமாகவும் இருந்ததாம். ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர். உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் பார்ப்பனர். அப்பொழுது பதவியில் இருந்த டிப்டி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128-ல் 93 பேர் பார்ப்பனர். 1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் பார்ப்பனர்களில் கல்வி கற்றோர் 75%. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் பார்ப்பனர். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 100 பேர் பார்ப்பனர், 29 பேர்தான் பார்ப்பனரல்லாதோர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் பார்ப்பனர்.

முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அத்திட்டத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிகமாக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற விருப்பம் காங்கிரசில் சிலரிடம் இருந்தது.

ஆனால் 1916 சமயத்தில் சுயாட்சி கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் பார்ப்பனரின் மேலாதிக்கம்தாண் இருக்கும் என்று பார்ப்பனரல்லாத பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானித்தனர். அதன் விளைவே நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பார்ப்பனரல்லாதோர் சமூகங்களும் கல்வியில் முன்னேறி பார்ப்பனர்களுக்குச் சமமாக இருக்கும்போது சுயாட்சி அல்லது முழு விடுதலை கிடைத்தால் சமூக நீதி நாட்டில் இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் 'Justice' என்ற ஆங்கிலத் தினசரி, 'திராவிடன்' என்ற தமிழ்த் தினசரி, 'ஆந்திரப் பிரகாசினி' என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை நடத்தினர்.

நீதிக்கட்சியின் முதல் பொதுச்செயலராக இருந்தவர் சர். தியாகராய செட்டியார். இவர் பெயரில்தான் தியாகராய நகர்.

ஹோம் ரூல் இயக்கம் வெற்றி பெறவில்லை.

1918-ல் முதலாம் உலகப்போர் முடிந்ததும், 1919-ல் பிரிடிஷ் பாராளுமன்றம் இயற்றியிருந்த சட்டப்படி (Government of India Act 1919) இந்தியாவில் மாகாணங்களுக்குத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் இந்தியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தீர்மானமானது. இந்த இந்திய உறுப்பினர்கள் பிரிடிஷ் கவர்னர்கள் கீழ் ஆட்சி செய்வார்கள். காங்கிரஸ் இந்தத் தேர்தல்களை பகிஷ்கரித்தது. வடக்கிந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் காங்கிரசின் எதிரி முஸ்லிம் லீக், இந்தத் தேர்தல்களை ஆதரித்தது. தெற்கிந்தியாவில் காங்கிரஸ் எதிரியான நீதிக்கட்சி இந்தத் தேர்தல்களை ஆதரித்தது. அப்படியாக 1920 முதல் 1923 வரையில் முதலாவது சட்டசபை இருந்தது. இந்த சமயத்தில் முதன்மந்திரியாக இருந்தவர் பனகல் ராஜா எனப்படும் ராமராயநிங்கார். இவரது பெயரில்தான் பனகல் பார்க்.

1923-ல் மற்றுமொரு தேர்தல் நடந்தது. இதில் நீதிக்கட்சியின் ஆட்சி மீது அதிருப்தி உடைய சிலர் நீதிக்கட்சி வேட்பாளர்களையே எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்களுள் முக்கியமானவர் நடேச முதலியார். (நடேசன் பூங்கா). நடேச முதலியார் வெற்றி பெற்றார். கவர்னர் தன்னைத்தான் ஆட்சியமைக்கக் கூப்பிடுவார் என்று நடேச முதலியார் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கட்சித்தலைவர் தியாகராய செட்டியாரை அழைக்க, அவரும் முன்போலவே பனகல் ராஜாவையே முதன்மந்திரியாக நியமித்தார். தியாகராய செட்டியார் கடைசிவரை எந்தப் பதவியும் வகிக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் தமிழர், ஆந்திரர் என்ற பிரிவினைப் பாகுபாடும் தோன்றியுள்ளது. இரண்டாவது சட்டசபையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்று ஒரு கருத்து தோன்றி அதற்காக சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்பூசல் காரணமாக 1926 தேர்தலில் அக்கட்சி தோல்வியுற்றது. அப்பொழுதும் காங்கிரஸ் தேர்தலில் பங்குகொள்ளாததால் காங்கிரஸ் சார்புக்கட்சியான சுயராஜ்யக் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் ஆட்சியை அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் சுயேச்சையான சுப்பராயன் என்பவர் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அவரை சுயராஜ்யக் கட்சி தொடக்கத்தில் ஆதரித்தாலும் பின்னர் அந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது! அப்பொழுது உடனே நீதிக்கட்சி சுப்பராயன் மந்திரிசபையை ஆதரித்து, காப்பாற்றியது.

இதற்கிடையில் 1920-ல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1925-ல் காங்கிரஸ் தலைவர்களின் வர்ணாஸ்ரமக் கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸை விட்டு விலகி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அத்துடன் நீதிக்கட்சியையும் வெகுவாக ஆதரித்தார். 1930 தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. சில குழப்பங்களுடன் முதலில் திவான் பகதூர் முனுசாமி நாயுடு தலைமை அமைச்சரானார், பின் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலகி பொப்பிலி ராஜா என்பவர் முதல் மந்திரியானார்.

ஆனால் இந்தச் சட்டசபை முடியும் நேரத்தில் நீதிக்கட்சி கலகலத்துப் போயிருந்தது. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இந்நேரத்தில் நீதிக்கட்சியின் பலரும் காங்கிரஸில் சேர்ந்து அதன்மூலமாகவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். அப்படியே பலரும் காங்கிரஸில் சேர்ந்தனர். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் கிடைக்கவில்லை.

1937-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் முதன்முறையாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியும், நீதிக்கட்சி படுதோல்வியும் அடைந்தன. சில நாள்கள் மந்திரிசபை அமைக்க முடியாவிட்டாலும் முடிவாக சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தது.

இந்த ஆட்சியின் போதுதான் ஹிந்தித் திணிப்பும், அதன் எதிர்ப்பும் முதலில் தொடங்கியது. ஹிந்தியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் பெரியார் ராமசாமி நாயக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது 1938-ல் நீதிக்கட்சியினர் கூடி பெரியாரையே கட்சியின் தலைவராக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதன் பின்னர் நீதிக்கட்சி எப்பொழுதும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. நீதிக்கட்சி மறைந்து போய் பெரியார், திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி அரசியலமைப்பில் ஈடுபடாது தன் கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அன்றுமுதல் இன்றுவரை திராவிட பாரம்பர்யத்தின் வழிவந்த கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன.

உதவிய புத்தகங்கள்:

1. நீதிக்கட்சி வரலாறு, பண்டித எஸ்.முத்துசாமிப்பிள்ளை, முதல் பதிப்பு 1938, நான்காம் பதிப்பு 2000, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, விலை ரூ. 16
2. தமிழர் தலைவர். (பெரியார் வாழ்க்கை வரலாறு), சாமி.சிதம்பரனார், முதல் பதிப்பு 1939, பன்னிரெண்டாம் பதிப்பு 2001, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, விலை ரூ. 95
3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம். இருநூற்றாண்டு வரலாறு, அருணன், 1999, வைகை வெளியீட்டகம், விலை ரூ. 40

20 comments:

  1. பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி பத்ரி.

    //1975-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%.//

    1915?

    ReplyDelete
  2. ஆம். 1915தான். திருத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  3. தியாகராயர் எந்தப் பதவியும் வகிக்கவில்லை என்பது சரியல்ல.அவர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். அவர் மேயராக இருந்த காலத்தில்தான் சிறிய அளவில் சத்துணவு திட்டம் துவங்கியது. தியாகராயரின் சிலை இப்போதும் மாநகராட்சி கட்டிடம் உள்ள வளாகத்தில் இருக்கிறது.

    டாக்டர்.நடேசன் ஆற்றிய தொண்டுகளில் ஒன்று பிராமணர் அல்லாத மாணவர்களுக்கான விடுதி. திருவல்லிக்கேணியில் இருந்தது. வெளியூரிலிருந்து சென்னைக்குப் படிக்க வரும் பிராமணர் அல்லாத மாணவர்கள் உணவு விடுதிகளில் சாப்பிடஅனுமதிக்கப்படவில்லை.' பிராமணாள் காபி கிளப்' என்ற வாசகத்தை பழைய திரைப்படங்களிலும் கதைகளிலும் பார்க்கலாம். அதற்காகத் தவக்கப்பட்ட விடுதி அது. அதில் படித்து உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகவும் ஆனவர்கள் உண்டு. நடேசன் பெயரில் ஐஸ் அவுஸ் பகுதியில் ஒரு தெரு இருக்கிறது.

    இவர்களோடு குறிப்பிடத் தகுந்த நீதிக்கட்சிப் பிரமுகர் டி.எம்.நாயர். அவர் பெயரால் தியாகராயர்நகரில் ஒரு சாலை இருக்கிறது. பாரதியார் இவரை ஓரிடத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களளைக் கொண்ட, ஏறத்தாழ ஒராண்டுகளுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசில் நான் எழுதிய, ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எனது வலைப்பதிவில் இட்டிருக்கிறேன்.

    மாலன்

    ReplyDelete
  4. மாலன் கட்டுரையின் சுட்டி இங்கே:

    http://maalans.blogspot.com/2005/04/blog-post.html

    ReplyDelete
  5. நல்ல சுவாரசியமான பதிவு. கட்சி இன்று இல்லை என்றாலும்., நீதிக்கட்சிக் காரர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் சென்னையில் ஒரு லாண்ட்மார்க்காக நிலைத்திருக்கிறார்கள். பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, சுப்பராயன் தெரு, சர்.பி.டி. ராஜன் சாலை, பொப்பிலிராஜா தெரு என்ற பெயர்களில். உண்மையில், அந்த ராஜா பெயர் பனகல் இல்லையாம், பானகல் என்பது தான் சரியான உச்சரிப்பு என்று ராண்டார்கை, ஒரு ஹிந்து கட்டுரையில் சொல்லி இருந்தார். அப்புறம், நீங்கள் குறிப்பிட்டிருந்த தியாகராஜ செட்டியார் தான், கருமுத்து தியாகராஜன் செட்டியாரா என்று யாராவது தெளிவு படுத்தினால் நலம்.

    ReplyDelete
  6. நன்றி பத்ரி! சென்னையில் புகழ் பெற்ற சில இடங்களுக்குப் பெயராக விளங்கும் தலைவர்களின் வரலாற்றை முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
  7. நல்ல கட்டுரை. நன்றி பத்ரி.

    ReplyDelete
  8. பிரகாஷ்: கருமுத்து அல்ல. இவர் சர்.பி.தியாகராய செட்டியார். (ராஜ அல்ல, ராய). சர் வரும் முன்னால் 'ராவ் பஹதூர் தியாகராய செட்டியார்' ஆக இருந்தவர்.

    பானகல் vs பனகல் - நான் படித்த முத்துசாமிப் பிள்ளை புத்தகம் 1939-ல் எழுதப்பட்டுள்ளது. இவர் அப்பொழுது 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக இருந்திருக்கிறார். எனவே பனகல் ராஜா பி.ராமராயநிங்கார் பெயரை சரியாகவே கேட்டறிந்திருப்பார் என நினைக்கிறேன்.

    மாலன் சொன்ன டாக்டர் டி.எம்.நாயர் - இவர்தான் நீதிக்கட்சி உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர். இவரைப் பற்றியும், பிற சென்னை மாகாண முக்கியத் தலைவர்கள் பற்றியும் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட வேண்டும்.

    நமக்குத்தான் வரலாற்றின் மீது இருக்கும் பற்று நன்கு தெரிந்ததாயிற்றே? எதையும் ரெகார்ட் செய்ய மறந்துவிடுவோம். இப்பொழுது காலதாமதம் ஆகுமுன்னே உடனே செய்தல் நலம்.

    ReplyDelete
  9. ஜாதீயம் என்பது எல்லோர் மனத்திலும் நேரடியாகவோ மறைமுகமோ அந்தக்காலத்தில் மறைந்துகிடந்தது மிகச்சிலரைத்தவிர. அதன் நேரடியான வெளிப்பாடே 'நீதிக்கட்சி'. பார்ப்பணர் ஆதிக்கம் எல்லாத்துறைகளிலும் மேலோங்கி இருந்தது என்பது உண்மை தான். அதற்கான எதிர்வினையாக 'வெள்ளையர்களின்' கால்களில் போய்விழுந்த அசிங்கத்தை செய்தது 'நீதிக்கட்சி'யும் அதன் பின் தோன்றிய ஈ.வே.ரா.வின் 'சுயமரியாதை' அமைப்பும். அதைத்தான் வெள்ளையர்களும் எதிர்பார்த்தார்கள், சாதூர்யமாகப் பயன்படுத்தவும் செய்தார்கள்.

    இன்றைக்கு இருக்கும் பல ஜாதி அமைப்புகளின் தோற்றத்திற்கு முதல் பூவைப் போட்டவர்கள் 'நீதிக்கட்சியினர்'. காங்கிரஸ¤க்கு வெளியே ஒரு அமைப்பை ஆரம்பித்து தமிழர் அனைவரையும் (தமிழ் நாட்டிற்கு வெளியே இந்தியர் அனைவரையும்) ஒன்றிணைத்து வெள்ளையரை வெளியேற்றி நிஜமான 'சுயமரியாதை'யோடு வாழ வழிவகை செய்யாமல், பொருளாதார வகையில் பார்ப்பணருக்கு நிகராகவும், பல வேளைகளில் அவர்களைவிடவும் மிகப் பணம் படைத்த (கீழ் ஜாதி மக்கள் மீது கொத்தடிமை முறையை வலியுறுத்தி வந்த பார்ப்பணரல்லாத) ஜமீன்களை ஆதரித்த, அவர்களின் ஆதிக்கம் ஆட்டம் காணமல் இருக்க வெள்ளையர்களூக்கு 'சொம்பு' தூக்கிய அமைப்புதானே 'நீதிக்கட்சி'? இந்திய '·பியூடலிச'த்தின் எச்சம் தானே 'நீதிக்கட்சி'?

    பழமையான சமூகத்திலிருந்த இந்தியாவிற்கு ('கிளர்க்குகளை' மட்டுமே உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையில்) ஆங்கிலேயர்கள் அளித்த 'மெக்காலே' அடிப்படைக் கல்விமுறையின் பின் விளைவாகத் தோன்றியது 'சுதந்திர இயக்கம்'. இந்தியா என்ற கட்டுக்கோப்பே அந்தக் கல்வியால் தான் கிட்டியது என்றாலும் அது தனக்கு கல்வி பயில்வித்த அமைப்பையே எதிர்க்கத் துணிந்தது. பழைய 'பிரபுத்துவ' சமூகத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டு மிரண்டு போன ஜமீன்கள் வெள்ளையர்கள் இருக்கும் வரை தனக்கு பாதுகாப்பு என்பதை சரியாகப் புரிந்துவைத்திருந்தனர். வெள்ளையர்களுடைய அரசு எந்திரம் மக்களை ஒடுக்குவதற்கு வெகு சாதகமாக பயன்பட்டதால், அவர்களுடன் இந்த ஜமீன்களும் 'piggy back' செய்தனர். இந்தியாவின் மற்றப் பிரதேசங்களில் இருந்த பல இந்து அரசர்களும் கூட வெள்ளையர்களை ஆதரித்ததை இதைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். 'ஹிந்து மஹா சங்கம்' ஒரு உதாரணம். பல ஜமீன்தார்களும் காங்கிரஸ¤க்கு ஒரு மாற்றாக (வெள்ளையர்களை ஆதரிக்கும்) சங்கங்களை ஆதரித்தார்கள்.

    உங்கள் கட்டுரையில் இந்த விஷயங்கள் வரவில்லையே என்பதால் எழுதினேன். ரொம்பவும் நீளமாகப் போய்விட்டது. மன்னித்து விடுங்கள்.

    வினோபா.

    ReplyDelete
  10. ஒரு 40 வருசத்துக்கு முன்னாடி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகாரரின் மேடைப்பேச்சை பழைய பேப்பரில் இருந்து படிச்ச மாதிரி இருந்துச்சு வினோபா. இப்ப கம்யூனிஸ்ட்டு பார்வை கொஞ்சம் மாறியிருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் இத பழைய கம்யூனிஸ்டு பேச்சுங்கறத விட, அத கேட்டுட்டு திராவிடக்கட்சிகளின் மேலான தன்னோட வெறுப்பைச் சொல்ற ஒரு மயிலாப்பூர் வாசியின் துக்ளக் கடிதம் மாதிரி இருக்குது உங்க பின்னூட்டம்னு சொல்லலாம்.

    //காங்கிரஸ¤க்கு வெளியே ஒரு அமைப்பை ஆரம்பித்து தமிழர் அனைவரையும் (தமிழ் நாட்டிற்கு வெளியே இந்தியர் அனைவரையும்) ஒன்றிணைத்து வெள்ளையரை வெளியேற்றி நிஜமான 'சுயமரியாதை'யோடு வாழ வழிவகை செய்யாமல்,...//

    காங்கிரசுக்கு வெளிய போனாலும் காங்கிரஸ்காரன்கள் நம்புற மாதிரியே, அந்த வழியிலேயே சிந்திக்கனும்னு நீங்க நினைக்கிறது புரியுது. அதான் இந்திய காம்ரேடுகளின் சிந்தனை வழியும் கூட. ஆனா தமிழ் நாட்டுக்கு வெளியே, இந்தியாவுக்கு உள்ளே அப்படீங்குற If கண்டிசனையெல்லாம் எல்லாரும் அப்படியே பின்பற்றி யோசிக்கனும்னு நினைக்கிறாங்க பாருங்க இந்த இந்திய இடது சாரிங்க, அதான் எனக்கு வேடிக்கையா இருக்கு. இவங்க ருஸ்யா, சீனா, இல்லாட்ட அகில இந்தியா இப்படி நிறுவனத்தை தூக்கி தலையில வச்சுக்காம எப்பாவது மக்கள்கிட்ட இருந்து சிந்திப்பாங்கன்னு பார்க்குறேன். பார்க்கலாம்! (வரதராஜன் இப்ப ஈழ தேசிய அரசியல் பற்றிய தனது கட்சி நிலைப்பாட்டை படிச்ச பிறகும் இப்படி நம்புறது என்னொட தவறோ!)

    பதிவுக்கு நன்றிகள் பத்ரி!

    ReplyDelete
  11. வினோபா: சுயமரியாதை இயக்கத்துக்கு பின்னர் வரலாம். முதலில் நீதிக்கட்சியின் மேலான குற்றச்சாட்டை மட்டும் பார்ப்போம்.

    ஆங்கிலேய ஆட்சி காலத்தில், அதாவது கிழக்கிந்திய கம்பெனி வெளியேறி பிரிட்டிஷ் ராஜா/ராணிகள் ஆட்சியின் காலத்தில் இந்தியாவின் பல்வேறு பட்ட குழுக்களும், பல்வேறு காலங்களில் அந்த ஆட்சியை வரவேற்றிருக்கிறார்கள்.

    ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா என்றொரு ஒருமித்த தேசிய உணர்வு யாருக்கும் இருக்கவில்லை.

    குறுநில மன்னர்கள் தமது சொந்த லாபத்தை மட்டும் பார்த்து ஆங்கிலேயன் இருப்பதே சரி என்று நினைத்தனர். ஒருவருக்கொருவர் சண்டை இல்லை. அவர்களுக்கு வேண்டிய அளவு பணம் கிடைத்தது. வசதிகள் இருந்தன.

    காங்கிரஸ் இயக்கம் ஒன்றுதான் முழு விடுதலை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் இரட்டை ஆட்சிமுறையாவது வேண்டும் என்று கேட்டது. காந்தியோ, பாரதியாரோ பல இடங்களில் இந்தியர்கள் இன்னமும் இந்திய நாட்டை ஆளும் அளவுக்குத் திறமை படைத்திருக்கவில்லை என்றே சொன்னார்கள். நீதிக்கட்சியும் வேறு வகையில் அதையேதான் சொன்னது. தாம் யார் நலனுக்காக போராடுகிறோமோ, அவர்கள் சுய ஆட்சி செய்யக்கூடிய அளவில் இல்லை. அதனால் இன்னும் கொஞ்ச நாள் ஆங்கிலேயே ஆட்சியே நடக்கட்டும், பின் சமுதாய சம்பாடு ஏற்பட்டபின்னர் விடுதலையை நோக்கிப் போகலாம் என்பதே அவர்கள் கருத்து.

    நீதிக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருமே ஜமீன்தார்கள்தான். அதில் தவறென்ன? கையில் காசு இருப்பவன் மட்டும்தான் படிப்பு பெற்றான் அன்று. படிப்பு இருந்தால்தான் பொதுவாழ்க்கைக்கு அன்று வரமுடிந்தது. பெரியார் போன்ற ஒருசிலரே இதற்கு விதிவிலக்கு. மிகக் குறைவாகப் படித்திருந்தும் அவரால் பகுத்தறிவின் மூலமாக, அனுபவ அறிவின் மூலமாக நிறைய விஷயங்களைப் பற்றிப் பேச முடிந்தது, எழுதவும் முடிந்தது.

    கம்யூனிஸ்டுகள் பொதுவாக ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் ஆனாலும் காங்கிரஸின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை.

    ஹிந்து மஹாசபா காங்கிரஸை ஆதரிக்கவில்லை. முஸ்லிம் லீக் ஆதரிக்கவில்லை. நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை. இதனால் இவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்வது காங்கிரஸ் சூழ்ச்சி மட்டும்தான்.

    ஒவ்வொருவரும் தமது குறுகிய நலனை அந்நேரத்தில் பார்த்தது சரியே. காங்கிரஸ் தெற்கில் பார்ப்பனர்கள் கட்சியாகவும், வடக்கில் ஹிந்துக்கள் கட்சியாகவும் இருந்ததால்தான் அதற்கு எதிராக வடக்கில் முஸ்லிம் லீகும், தெற்கில் நீதிக்கட்சியும் தோன்ற வேண்டியிருந்தது. காங்கிரஸ் inclusive கட்சியாக இருந்திருந்தால் யார் மனதிலும் பயம் இருந்திருக்காது. வேறு கட்சிகள் தோன்ற வாய்ப்பிருந்திருக்காது.

    காங்கிரஸ் கட்சியே, காந்தி முழுமையான ஆளுமையில் இருக்கும்போதே பல்வேறு நிலைகளை எடுத்துள்ளது. அதையும் எடுத்த எடுப்பிலே குறை சொல்லக்கூடாது. வரலாற்றை கவனிக்கும்போது குறை சொல்வதை முழுமையாக விடுத்து ஒரு காரியம் நடந்துள்ளது என்றால் ஏன் நடந்துள்ளது என்பதை மட்டும் கவனித்தால் அனைவருக்கும் நல்லது.

    நாம் எடுத்த எடுப்பிலேயே இவன் கெட்டவன், அவன் நல்லவன் என்றே பார்த்தால், அந்த கலர் கண்ணாடி கடைசிவரை நமக்கு முழுமையான வரலாற்றைக் காண்பிக்காது.

    பாரதியின் முழு வரலாறு சீனி.விசுவநாதன் எழுதியுள்ளார். நேற்று மீண்டும் ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாரதியார் செனையிலிருந்து தப்பி, புதுவையில் வசிக்கும்போது சென்னை கவர்னருக்கு சில கடிதங்கள் எழுதியுள்ளார். கடிதப் பிரதிகள் கிடைக்கவில்லை. அதனால் அதில் என்ன உள்ளது என்று இப்பொழுதைக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் அவர் தான் ஆங்கில அரசுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டேன் என்று எழுதியிருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

    அதனால் பாரதியின் பேரில் ஏதாவது நாம் குற்றமாகச் சொல்ல முடியுமா? அதேபோல சாவர்க்கர் மீது ஹிந்துத்துவம் தொடர்பாக குற்றம் சாட்டும் நாம், அவர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து, அதனால் பல ஆண்டுகள் சிறையில் இருந்து, பின் மன்னிப்புக் கடிதம் எழுதியதைக் குற்றம் சொல்வதும் தவறு.

    ReplyDelete
  12. //எப்பாவது மக்கள்கிட்ட இருந்து சிந்திப்பாங்கன்னு பார்க்குறேன். பார்க்கலாம்!// -- சிரிப்புத்தான் வருகிறது தங்கமணி!

    பதிலுரைக்கு நன்றிகள் பத்ரி.

    //குறுநில மன்னர்கள் தமது சொந்த லாபத்தை மட்டும் பார்த்து ஆங்கிலேயன் இருப்பதே சரி என்று நினைத்தனர். ஒருவருக்கொருவர் சண்டை இல்லை. அவர்களுக்கு வேண்டிய அளவு பணம் கிடைத்தது. வசதிகள் இருந்தன.// -- இது தவறு இல்லையா?

    //நீதிக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருமே ஜமீன்தார்கள்தான்.// --- ஜமீன்களுக்கும் குறு நில மன்னர்களுக்கும் என்ன வேறுபாடு?

    //ஆனால் அதில் அவர் தான் ஆங்கில அரசுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டேன் என்று எழுதியிருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
    அதனால் பாரதியின் பேரில் ஏதாவது நாம் குற்றமாகச் சொல்ல முடியுமா? அதேபோல சாவர்க்கர் மீது ஹிந்துத்துவம் தொடர்பாக குற்றம் சாட்டும் நாம், அவர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து, அதனால் பல ஆண்டுகள் சிறையில் இருந்து, பின் மன்னிப்புக் கடிதம் எழுதியதைக் குற்றம் சொல்வதும் தவறு.
    // -- பாரதியே இதைச் செய்தாலும் தவறுதான். சாவர்க்கரையும் பாரதியாரையும் ஒப்பிடாதீர்கள் பத்ரி. பாரதி ஒரு மானுடன். அவனுக்கு முஸ்லிமும் இந்துவும் கிருத்துவனும் ஒன்றே. சாவர்க்கருக்கு அப்படியில்லை.

    வினோபா

    ReplyDelete
  13. வினோபா: குறுநில மன்னன் - ஜமீன்தார் இருவரும் வேறு. மன்னன் நாட்டின் முழு உரிமையாளன். சட்டம் இயற்ற, வேண்டிய அளவு வரி வசூலிக்க, படை வைத்துக்கொள்ள என்று பல உரிமைகளை உடையவன். ஜமீன்தார், மிராசுதார் மற்றும் பல்வேறு பெயர்களில் இந்தியா முழுதும் இருந்த இவர்கள் நிலத்தின் மீது மட்டும் உரிமை செலுத்தக் கூடியவர்களாக, தன் மன்னனுக்கு வரி செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

    ஒரு மன்னரின் ராஜ்ஜியத்தில் பல ஜமீன்தார்கள் இருந்தார்கள்.

    ஆங்கிலேயர் வந்ததும் நிலைமை சற்று மாறியது. முக்கால்வாசிக் குறுநில மன்னர்கள் டம்மியாக்கப்பட்டார்கள். அவர்களது நாட்டைப் பிடுங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓர் அரண்மனையும், வருட பென்ஷனும் கொடுக்கப்பட்டது. ஜமீன்தார்கள் தொடர்ச்சியாக தங்களது பழைய தொழிலையே செய்து வந்தனர். நிலத்துக்கான வரியை ஆங்கிலேயர்களுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று.

    ===

    ஒருவர் செய்வது தவறா, சரியா என்பது அவரவர் நிலையிலிருந்து பார்த்தால்தான் சொல்ல முடியும். இங்கு absolute எதுவும் கிடையாது. எல்லாமே relative தான். குறுநில மன்னர்கள் செய்தது அவர்கள் பார்வையில் சரிதான்.

    ===

    பாரதி, சாவர்கார் - நான் இவர்கள் இருவரையும் எந்த விஷயத்தில் ஒப்புமை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இருவருமே ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தனர்.

    ஒருவரது பிற குறைகளைக் காரணம் காட்டி அதனால் அவர் மீது முழுவதுமாகக் குற்றம் சாட்டுவது எனக்கு ஏற்புடைத்ததல்ல.

    ReplyDelete
  14. குறு நில மன்னர்-ஜமீன் --- இங்கு நான் சொல்ல வந்தது ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு பாகங்கள் தான் என்பதாக. ரெண்டு பேருமே மக்களை தளையில் வைத்திருந்தார்கள் அல்லவா?

    வினோபா

    ReplyDelete
  15. வினோபா,

    மன்னராட்சி, ஜமீன், பிராமண மேலாண்மையை ஒத்துக்கொண்ட வல்லரசுகள் இவையெல்லாம் மக்கள் விரோதமானவை; தீயவைகள் என்றெல்லாம் ஒரு பக்கமாகவே பார்க்கமுடியாதில்லையா? அவைகள் ஒரு காலத்திய நிறுவனங்கள். அவைகளின் மேல் நாம் எந்த விமர்சனத்தையும், கண்டனத்தையும் வைக்கமுடியாது. ஆனால் இந்த அமைப்புகள் இன்றும் போற்றத்தக்கன. பின்பற்றத்தக்கன, இழந்துவிட்ட உன்னதங்கள் என்று அவற்றை ஒளிரூட்டி அவைகளை முழுவதாகவோ, அல்லது அவற்றின் சில கூறுகளையோ மீள்நிருவனப்படுத்த ஒரு தனி நபரோ, இயக்கமோ முனையும் போதே அந்நிருவனங்களின் மக்கள் விரோதத் தன்மைகளை விமர்சிப்பதும், கண்டிப்பதும் செய்யப்படவேண்டியுள்ளது; அவ்வாறு செய்வது அழிந்துபோன அந்நிறுவனங்களை விமர்சிப்பதாகாது மாறாக அதை மீள்நிறுவனப்படுத்த முயலும் இன்றைய சக்திகளையே விமர்சிப்பதாகும், இல்லையா?

    ReplyDelete
  16. அப்புறம் இன்னொன்று வினோபா, திராவிடக் கட்சிகளின் மேல் (நீதிக்கட்சி தொடங்கி) நீங்கள் வைப்பது விமர்சனமற்ற ஒரு டிப்பிக்ல் தீண்டாமை மனப்பான்மை. இதைத்தான் சோவும், ஜெயகாந்தனும் செய்கிறார்கள். இல்லையா?

    மக்களை தளையில் வைத்தது பற்றி ஒரு தனிநபராக ஒருவர் பேச நியாயம் உள்ளது ஆனால் எந்த அமைப்பின் பேராலும் யாரும் பேசமுடியாது. சோவியத் யூனியன், சீனம் செய்யவில்லையா தளைப்படுத்துதலை?

    நானும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் போது ஒரு இடது சாரி நிலைப்பாட்டைத்தான் எடுப்பேன், ஆனால் அது அமைப்பினைக் காப்பாற்ற இருக்காது.

    ReplyDelete
  17. /நானும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் போது ஒரு இடது சாரி நிலைப்பாட்டைத்தான் எடுப்பேன், ஆனால் அது அமைப்பினைக் காப்பாற்ற இருக்காது./
    நன்றே சொன்னீர்.

    ReplyDelete
  18. நன்றிகள் பத்ரி.
    சிறப்பான கட்டுரை.

    ReplyDelete
  19. //அப்புறம் இன்னொன்று வினோபா, திராவிடக் கட்சிகளின் மேல் (நீதிக்கட்சி தொடங்கி) நீங்கள் வைப்பது விமர்சனமற்ற ஒரு டிப்பிக்ல் தீண்டாமை மனப்பான்மை. இதைத்தான் சோவும், ஜெயகாந்தனும் செய்கிறார்கள்.//

    தங்கமணி, நீதி கட்சி போலவே காங்கிரஸும் தொடக்க காலத்தில் பிரிடீஷ் ஆதரவு அமைப்புதான். காங்கிரஸ் கூட்டங்களில் ஜார்J மன்னனை புகழ்ந்து ராஜ வாழ்த்து பாடிவிட்டே தொடங்குவதுண்டு. வினோபா நீதி கட்சி பற்றி சொன்ன மற்றவைகளும் காங்கிரஸுக்கும் பொருந்தும். காங்கிரஸுக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நீதிகட்சிக்கு மாறாமலிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    ஆனால் இதை கூட வினோபா நேர்மையாய் செய்யவில்லை. ஏனேனில் நீதிகட்சியை திட்டும் அதே தொனியில் பின்னாள் சுயமரியாதை இயக்கத்தையும் சுட்டுகிறார். ஆனால் பெரியாரின் முந்தய காங்கிரஸ் வாழ்க்கையையும், அதில் கொண்ட ஈடுபாடு போராட்டம், எல்லாவற்றையும் விட முக்கியமாக நீதிகட்சியினராலேயே (காங்கிரஸில் இருந்த போது) வசை பாடபட்டதையும் சொல்லிவிட்டு அல்லவா செய்ய வேண்டும். பெரியார் இயக்கத்தாலேயே 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' தமிழில் முதலில் வந்தது தொடங்கி கம்யூனிஸ்டுகளுடன் முடிந்த தேனிலவையும் சொல்லிவிட்டு அல்லவா செய்ய வேண்டும்.

    பெரியார் இந்த எல்லா விஷயத்தையும் தொடக்க காலம் தொட்டு தொடங்கி எம்ஜியார் பிரிந்த நிகழ்வு வரை, கடைசி நாட்களில் ஒரு கூட்டத்தில், பேசியிருக்கிறார். முடிந்தால் படிக்கவும்.

    ReplyDelete
  20. பத்ரி, தங்கமணி, ரோசா வசந்த்,

    உங்கள் வாதங்களுக்கு நன்றிகள். அனைத்தையும் நான் மிகவும் ரசித்தேன்.

    பெரியாரின் சமூக சாதனைகளையும் போராட்டங்களையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சுதந்திர இயக்கத்திற்கு எதிரணியில் பெரியார் பெரும் காலம் இருந்ததால் அவரைக் குறிப்பிட்டேன். அவ்வளவுதான். ஒரு பின்னூட்டத்தில் நூற்றாண்டுகால சரித்திரத்தையும் அலசிவிடுதல் சாத்தியமில்லை. பின்னூட்டத்திற்கு பின்னூட்டமாக இதை நீட்டிக்கொண்டே போவதிலும் எனக்கு விருப்பம் இல்லை. தனி ஊட்டமாக இன்னொரு நாள் விரிவாக விவாதிப்போம்.

    வினோபா.

    ReplyDelete