Monday, May 23, 2005

ஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா?

இந்த வார நட்சத்திரப் பதிவான கிச்சுவின் எண்ண அலைகளில் சில பாடங்களையாவது ஆங்கிலத்தில் பயிற்றுவிப்பது அவசியமோ என்றதொரு கேள்வியை முன்வைக்கிறார் கிச்சு.

தான் கிராமத்தில் உள்ள ஒரு பையனின் தமிழ்வழி அறிவியல் புத்தகத்தில் கண்டதைச் சொல்கிறார் கிச்சு.
லூயிஸ் டிபிராக்ளேயின் பொருண்மையின் ஈரியல்புத் தன்மையைப் பற்றிய ஆய்வானது எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் கட்டமைப்புக்கும், எலெக்ட்ரான் விளிம்பு வளைவின் மூலம் திண்மங்களின் பரப்பின் அமைப்பைப் பற்றி அறிவதற்கும் உதவுகிறது. அவருடைய ஆய்வானது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் போன்ற சிறிய துகள்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
இதைப் படித்தபின், தான் அந்த மாணவனை விளக்கிச் சொல்லக் கேட்டதாகவும், அவனால் முடியவில்லை என்றும், அதனால் இதுபோன்ற பாடங்களை ஏன் ஆங்கிலத்தில் வைக்கக்கூடாது என்றும் கேட்கிறார் கிச்சு.

இந்த மேற்கோளின் ஆங்கில மூலம் இப்படியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
Louis de Broglie's research in duality of objects resulted in the development of electron microscope and through electron edge deviation helped understanding the structure of the surface of objects. His research is applicable to even atoms and sub-atomic particles.
இப்படி ஆங்கிலத்தில் படித்திருந்தால் மட்டும் அந்த மாணவன் கிச்சுவுக்கு இதன் பொருளை விளக்கியிருப்பானா?

கிராமங்களை விட்டுவிடுவோம். சென்னையை எடுத்துக்கொள்வோம். இன்றும் பல பள்ளிகளில் தமிழில் மட்டும்தான் பாடம் நடத்தப்படுகிறது. எனது அலுவலகத்தில் ஒருவர் வேலை செய்கிறார். பத்தாவது தேர்வில் தோல்வியுற்றவர். ஆங்கிலத்தில் 34 மதிப்பெண்கள் பெற்றதால் தோல்வியுற்றார். பின் மீண்டும் தேர்வு எழுதினாராம். இம்முறை 33 பெற்றார். மீண்டும் தோல்வி. முதல்முறை தேர்வெழுதும்போதே அறிவியலில் 50க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர். தமிழில் 60க்கும் மேல் மதிப்பெண்கள். அவரது வகுப்பில் மொத்தம் 65 பேர் இருந்தனர். பத்தாவது அரசுத்தேர்வில், இந்த 65-ல் 45 பேர் ஃபெயில்! அனைவரும் ஆங்கிலத்தில் ஃபெயில்! ஒவ்வொருவரும் அறிவியலில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஆங்கிலத்தில் அறிவியல் பரீட்சையையும் நடத்தினால் அதிலும் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஃபெயில் ஆகியிருப்பர்.

இதைத்தானா நாம் விரும்புகிறோம்?

"இத்தனைக்கும் எங்கள் எச்.எம்மே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார்" என்று வருத்தத்துடன் சொன்னார் என் அலுவலகத் தோழர்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் பத்தாவது தேர்வு முடிவுகள் வரும். அதில் 35% பேர் தோல்வி அடைந்திருப்பர். அதில் 80% பேர் ஆங்கிலப் பாடத்தில்தான் தோல்வியுற்றிருப்பர்.

என்னைக்கேட்டால் ஆங்கிலம் என்னும் பாடம் பத்தாவது வரையில் ஒரு விருப்பப்பாடமாக இருக்கட்டும். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லையென்றால் அதற்காக பத்தாவது ஃபெயில் என்று சொல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களை மேற்படிப்புக்கு எடுத்துக்கொள்ளும்போது வேண்டுமானால் ஆங்கிலத்தில் தேர்ச்சி இல்லை என்று சேர்த்துக்கொள்ளாமல் போகட்டும். திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலம் அவர்கள் தத்தம் மொழியில் மேற்படிப்புப் படித்து பிழைத்துக்கொள்ளலாம்.

எவனோ ஒருவனது மொழியைப் படித்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், கடைசியில் தேர்ச்சி பெறாமல் மனமுடைந்து போவது எவ்வளவு கொடுமை? இதெல்லாம் பலருக்கும் புரிவதில்லை.

15 comments:

  1. ஏதோ நீங்க ஒர்த்தராவது இப்படி சொல்றீங்களே, அது வரைக்கும் சந்தோஷம்.

    ReplyDelete
  2. //எவனோ ஒருவனது மொழியைப் படித்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், கடைசியில் தேர்ச்சி பெறாமல் மனமுடைந்து போவது எவ்வளவு கொடுமை?//

    மிகவும் நன்றாகச் சொன்னீர்கள் பத்ரி!

    ReplyDelete
  3. என்னைக் கேட்டால் (யாரும் கேட்பதில்லை, அது வேறு விஷயம்), இருக்கும் ஐந்தாறு கட்டாயப் பாடங்கள் என்னும் நிலை போய், இரண்டு மூன்று விருப்பப் பாடங்கள் என்னும் நிலை வரவேண்டும். வேண்டுமானால் ஒரு மாணவருக்கு எல்லா ஆறு பாடங்களிலும் தேர்வு வைத்து, அதிக மதிப்பெண் பெறும் இரண்டு மூன்று பாடங்களை அவரது விருப்பப் பாடங்களாகக் கொள்ளலாம். இந்த இரண்டு மூன்று பாடங்களில் குறைந்தப்பட்ச மதிப்பெண்களைப் பெற்றால் அவரை தேர்ந்தவராக அறிவிக்கலாம். இந்த பாடங்களிலேயே அவருக்கு மேற்படிப்பு பெறும் வாய்ப்புகளையும் அளிக்கலாம்.

    இவ்வாறு செய்தால், மக்கள் தாம் விரும்பிய பாடங்களிலேயே மேற்படிப்பும் படிக்க வழிசெய்வதாக இருக்கும். ஒவ்வொருவருடைய தனித்துவமும் வெளிபடும். கட்டாய பாடம் என்று தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்று எதையும் திணிக்கக் கூடாது. அவரவர் விரும்பியதை பின்பற்றி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளட்டும்.

    இம்முறையில், பெரும்பாலோர் பொறியாளராகவோ, மருத்துவராகவோ விருப்பமின்றி பயிற்சியடையும் அவலமும் ஏற்படாது. தமிழிலக்கியம், ஆங்கிலவிலக்கியம், பொருளாதாரவியல் என்று ஏனைய துறைகளிலும் விருப்பமுள்ளவர் சென்று புலமை பெறும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

    ReplyDelete
  4. எதுவுமே நாம் சிந்திக்கும் மொழியிலேயே படித்தால் எளிதில் விளங்கும்.

    அதற்காக எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி தமிழ்ப்படுத்தினால், பட்ட மேற்படிப்பின் போது ரொம்பவும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

    நீங்கள் மேற்கோள் காட்டிய பாடம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

    லூயிஸ் டிபிராக்ளேயின்(Louis de Broglie) பொருண்மையின் ஈரியல்புத் தன்மை(duality of objects)யைப் பற்றிய ஆய்வானது எலெக்ட்ரான் நுண்ணோக்கியி(electron microscope)ன் கட்டமைப்புக்கும், எலெக்ட்ரான் விளிம்பு வளைவின்(edge deviation) மூலம் திண்மங்களின் பரப்பின் அமைப்பைப் பற்றி அறிவதற்கும் உதவுகிறது. அவருடைய ஆய்வானது அணுக்கள்(atoms) மற்றும் மூலக்கூறுகள்( sub-atomic particles) போன்ற சிறிய துகள்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

    Technical terminologies-ஐயும் தமிழ்ப்படுத்துவது அவசியமா என்பது தான் கேள்வி.

    -சுரேஷ்

    ReplyDelete
  5. தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை என்பதனால் ஹிந்தியையும், ஃபிரெஞ்சையும் தேர்ந்தெடுப்பவர்களும் உண்டு (வாய்ப்பிருக்கும்போது).
    அதிருக்கட்டும். அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் படித்தால் வேலைவாய்ப்பு சுலபம் என்ற கருத்தில்தான் சொன்னேன். (அந்தப் பையன் விளக்கம் கூறாமல் சென்றது பயிற்றுமொழி சார்ந்த நிகழ்ச்சியல்ல. அதனை சரியானபடி எடுத்துச் சொல்லாதது என் தவறு!) இன்னும் பொறியியல் சார்ந்த வேலைகளுக்கு தேர்வுகளும் நேர்காணலும் ஆங்கிலத்தில்தான் நிகழ்த்தப்படுகின்றன. அங்குதான் வேலைவாய்ப்பும் அதிகமாக உள்ளது. பத்ரி அவர்கள் தெரிவித்துள்ளபடி, ஆங்கிலப் பாடத்தில் அவ்வாறு பெருமளவில் தோல்வியடைந்த நிகழ்ச்சி, அதுவும் சென்னையில், மிகவும் கவலைக்கிடமானதே. இது அரசியல்வாதிகளும், ஏனையோரும் எடுத்திருக்கும் ஆங்கில எதிப்பு நிலைப்பாட்டின் நீட்சியாக இருக்குமோ? அதாவது தகுந்த மொழித்தேர்ச்சியில்லாத ஆசிரியர்கள் போன்ற காரணங்கள்.

    சரி. மொழிப்பாடத்தை மட்டும் படித்தால் என்னவிதமான வேலை வாய்ப்புகள் கிட்டும்?

    ReplyDelete
  6. S.K: ஆங்கிலத்தில் படித்து எஞ்சினியராகவும், டாக்டராகவும், வேறு என்னவாகவும் வர விரும்புபவர்கள் அதைத் தாராளமாகச் செய்யலாம். அவர்களை யாரும் தடுக்கவேண்டாம்.

    ஆனால் நம் நாட்டில் தாய்மொழியை மட்டும்தான் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் பலர் இருக்கிறார்கள். வேற்று மொழியைப் புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறார்கள். அதனால் பத்தாவது தேர்வில் தோல்வியடைகிறார்கள்.

    அவர்கள் படித்து எஞ்சினியராகப் போவதில்லை. அவர்கள் ஆனால் ஆரம்பகட்ட அறிவியலையும், சமூகவியலையும், கணிதத்தையும் கற்கக் கூடியவர்களே. அவர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் பாடம் நடத்துவதுதான் முறை.

    அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்றெல்லாம் நாம் பிற்பாடு யோசித்துக் கொள்ளலாம். அவர்களில் பெரும்பாலோர் மூட்டை தூக்கப் போவார்கள், பாத்திரம் கழுவப் போவார்கள், டிரைவராகப் போவார்கள், கடை திறந்து விற்பனை செய்வார்கள், அல்லது என்னவோ செய்துவிட்டுப் போகிறார்கள். இதற்கெல்லாம் ஆங்கிலம் தேவையில்லை.

    ஆனால் கணித அறிவும், அறிவியல் அறிவும் ஒருவருக்கு அடிப்படையாகக் கற்பிக்கப்பட வேண்டும். பொருண்மை, ஈரியல்பு, நுண்ணோக்கி, அணு, மூலக்கூறுகள் ஆகியவை அதற்கான ஆங்கிலப் பதங்களைவிடப் புரிந்துகொள்ள எளிதானவையே.

    ஆங்கிலத்திலேயே படித்து வளர்ந்த நமக்கு இந்தத் தமிழ் வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது புரியவில்லை என்பதால் தமிழகத்தின் கல்வி முறையை மாற்ற நாம் நினைக்கக் கூடாது.

    ஆனால் ஆங்கிலம் என்னும் பாடம் பலருக்கும் அவசியம் என்று நான் நினைக்கவில்லை. அவசியமானவர்கள் அதைப் படித்துப் புரிந்து கொள்ளட்டும். அவசியம் இல்லை என்பவர்கள் அதைப்படிக்க ஆகும் நேரத்தில், பிற பாடங்களை நன்றாகப் படித்துப் புரிந்துகொள்ளட்டும். Literacy என்றால் ஒரு மொழியில் நன்றாகப் படிக்க, பேச, எழுதக் கற்றுக்கொள்வதுதான்.

    அதற்கே தடுமாறும் பலரையும் காப்பாற்றுவதுதான் எனது நோக்கம்.

    ReplyDelete
  7. சுரேஷ்: பத்தாவதே பாஸ் செய்யக் கஷ்டப்படுபவன் பட்ட மேற்படிப்புக்குப் போனால் ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுவானே என்று நீங்கள் கவலையுறுகிறீர்கள்.

    முதலில் பலரும் பத்தாவதைத் தாண்ட வேண்டுமே? அதற்கு அறிவியலை முழுமையாகத் தமிழ்ப்படுத்தித்தான் ஆக வேண்டும்.

    கம்ப்யூட்டரில் தட்டும் நம்மை மட்டுமே மனத்தில் வைத்து நம் பாடத்திட்டங்களுடன் விளையாடக்கூடாது.

    ReplyDelete
  8. //கம்ப்யூட்டரில் தட்டும் நம்மை மட்டுமே மனத்தில் வைத்து நம் பாடத்திட்டங்களுடன் விளையாடக்கூடாது.
    ///

    yessss

    ReplyDelete
  9. //அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்றெல்லாம் நாம் பிற்பாடு யோசித்துக் கொள்ளலாம். அவர்களில் பெரும்பாலோர் மூட்டை தூக்கப் போவார்கள், பாத்திரம் கழுவப் போவார்கள், டிரைவராகப் போவார்கள், கடை திறந்து விற்பனை செய்வார்கள், அல்லது என்னவோ செய்துவிட்டுப் போகிறார்கள். இதற்கெல்லாம் ஆங்கிலம் தேவையில்லை.//

    இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம்தான். அதுபோன்ற நிலைமையில் இருக்கும் மாணவர்கள் சிலரை சந்தித்து அவர்களின் நோக்கத்தை அறிய முற்படுகிறேன். எங்கள் தொழிலகத்திலேயே தொடங்குகிறேன் பேட்டியை :)

    ReplyDelete
  10. //எவனோ ஒருவனது மொழியைப் படித்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், கடைசியில் தேர்ச்சி பெறாமல் மனமுடைந்து போவது எவ்வளவு கொடுமை? இதெல்லாம் பலருக்கும் புரிவதில்லை.//

    பாடத்திட்டங்கள் தயார் செய்பவர்கள், ஏன் இந்த மாதிரியெல்லாம் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?

    கொஞ்சம் கொஞ்சமாகவாவது சூழ்நிலைக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை மாற்றலாம்.

    சும்மா, நமக்குள் மட்டுமே இதைப் பேசிக்கொண்டிராமல், பொதுவிலும் எடுத்துப் போவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. கிச்சு உங்களுக்கு ஆசிரியர் ஒரு பொருளைக் காட்டி இதுதான் மைக்கிரோஸ்கோப் என்னும்போது அது இதுவரைக்கும் நீங்கள் பார்க்காததாக இருந்தால் கூட உங்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறதல்லவா.அடுத்த முறை மைக்கிறோஸ்கோப் எனும்போது அதனுடைய உருவம் நினைவில் வருகிறதல்லவா.ஆனால் தமிழில் மட்டும் நினைவுக்கு வராமல் உருப்போடுகிறார்கள் என்றால் அது மாணவ்ர்களின் அறியாமை.

    மொழி என்பது பழக்கத்தில் வருவதுதான் தொடர்ந்து தமிழிலேயே கற்பித்தால் வழக்கத்திற்கு வந்துவிடும்.ஆங்கிலத்தில் மருத்துவம் படித்து ஆங்கிலேயருக்கு வைத்தியம் பார்க்கப் போவதில்லையே.மேலதிகக் கற்கைக்காக ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் போது ஏற்கனவே நினைவில் வைத்திருந்த தமிழ்ச்சொல்லுடன் பொருத்திப் பார்த்துப் படிப்பது கொஞ்சம் கடினம்தான்.ஆனாலும் தமிழ்யிலே அதற்கான உசாத்துணை நூல்கள் பரவலாக வெளிவந்தால் அந்தச் சிக்கல் போய்விடும்

    ReplyDelete
  12. Badri, The original might have been this; "Louis de Borglie's research on duality of matter helps in the development of electron microscope and the unerstanding of structure of matter through electron diffraction. His research is only applicable small objects like atoms and molecules. "

    Will write more later,

    ReplyDelete
  13. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது தான் சுவாரசியமாக இருக்குமென்றால் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதுகூட சுவாரசியமாகத் தான் இருக்கும்போல :-).
    diffraction-> விளிம்பு வளைவு -> edge deviation
    solid -> திண்மம் -> object
    molecule -> மூலக்கூறு -> sub-atomic particle
    பாடப்புத்தகத்தில் இருப்பதை உருப்போடுவது மட்டும் தான் படிப்பென்றால் இது அபத்தமாகத் தான் இருக்கும். அதை சரியாக விளக்க ஆசிரியர் என்று ஒருவர் இருக்க வேண்டும். நான் 10, 11 வகுப்புகளில் (பழைய 11+1+3 திட்டத்தில்) இயற்பியலை விருப்பப் பாடமாக தமிழில் படித்தேன். அப்போது கற்ற இயற்பியல் கோட்பாடுகள் தெளிவாக நினைவில் இருக்கின்றன. எங்களுக்கு இயற்பியல் கற்பித்த ஆசிரியர் திரு. எத்திராஜ் அவர்களின் ஆர்வமும், கற்பிக்கும் முறையும் அப்படி.

    (பின்னூட்டமெழுதிய பிறகு தான் வெங்கட்டின் சரியான மொழிபெயர்ப்பை கவனித்தேன். ஆகையால் அழித்துவிட்டு இந்த குறிப்போடு மீண்டும் பதிகிறேன்)

    ReplyDelete
  14. சரியாக இயல்பியல் தெரியாததனால், என் தமிழ்->ஆங்கில மாற்றம் அபத்தமாக வந்ததற்கு மன்னிக்கவும்:-)

    ReplyDelete