Monday, June 06, 2005

கொட்டிவாக்கத்தில் கணினிப் பயிற்சி

தேவை: கணினி, இணையம் கற்றுக்கொடுக்க, சில தன்னார்வலர்கள்

நண்பர்களே! கொட்டிவாக்கம் என்பது சென்னையை அடுத்துள்ள சிறு கிராமம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. அங்குள்ள மீனவர்களுக்கு, சமீபத்தைய சுனாமியை அடுத்து, ஒரு கணினி கொடையாகக் கிடைத்துள்ளது. அரசு ஆதரவில் கணினியை வைக்க ஓர் இடமும், மின்சார வசதியும் கிடைத்துள்ளது.

இந்தக் கணினியின் மூலம் இங்குள்ள சிறுவர்கள், பெரியவர்களுக்கு கணினியிலிருந்து உபயோகமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்க தமிழும், கணினியும் தெரிந்த ஆர்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

முதல் கட்டமாக கணினி கற்றுக்கொள்ள வருபவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளோம்.
1. ஆறு வயதிலிருந்து பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்கள்
2. பதினேழு வயதிலிருந்து இருபத்தி இரண்டு வயதிலான மாணவர்கள்
3. இருபத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

முதல் குழுவுக்கு கணினியில் விளையாட்டுகளை விளையாட, பாடங்கள் கற்றுக்கொள்ள, படம் வரைய, டிஜிட்டல் கேமரா மூலம் படங்களை எடுக்க, படங்களை வைத்துக் கதை சொல்ல கற்றுக்கொடுப்போம்.

இரண்டாவது குழுவுக்கு இணையத்தளங்களை வடிவமைக்க (HTML, CSS, Graphics, Database), ஏதோ ஒரு மொழியில் கணினியில் நிரல்கள் எழுத (Visual Basic?) ஆகியவற்றைச் சொல்லிக்கொடுப்போம்.

மூன்றாவது குழுவினர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள். சணலில் கைவினைப் பொருள்கள் செய்து விற்பனை செய்ய உள்ளார்கள். அவர்களது பொருள்களுக்கு சற்றே விரிவான சந்தையை உருவாக்க ஒரு மின்-வணிகத் தளம் ஒன்றை உருவாக்கித் தரப்போகிறோம். அத்துடன் இந்தப் பெண்களுக்கு கணினியையும், இணையத்தையும் பயன்படுத்தவும் சொல்லித்தருவோம்.

வரும் 11 ஜூன் 2005, சனிக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.

இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித சம்பளமும் கிடையாது. உங்கள் செலவிலேயேதான் கற்றுக்கொடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டுப் போகவேண்டும். வார நாளாக இருந்தால் மாலை 5.00 - 7.00 மணிக்கு. வார இறுதியாக இருந்தால் காலையில் 10.00 - 1.00 மணிவரை. உங்கள் விருப்பத்தை எனக்கோ (bseshadri _at_ gmail _dot_ com) க்ருபா ஷங்கருக்கோ (shankarkrupa _at_ yahoo _dot_ com) மின்னஞ்சலில் தெரிவிக்கவும். இந்த பயிற்சி வகுப்புகளை க்ருபா ஷங்கர் ஒருங்கிணைப்பார்.

4 comments:

  1. பாராட்டுக்களுக்கும் அப்பாற்பட்ட சேவை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    தொடர, பெருக, விரிவடைய மனமுவந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் .
    --karthikramas

    ReplyDelete
  3. நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் பத்ரி.

    நீங்களும் க்ருபாவும் உங்களுடைய இந்த முயற்சி எப்படிப் போகிறது என்று சொல்லுங்கள். பிறருக்கும் இதுபோன்று செய்ய ஆர்வம் வரலாம்(வரவேண்டும்!)

    -மதி

    ReplyDelete
  4. சிறப்பானத் திட்டமாக தோன்றுகிறது.
    என்னைப் போன்றவர்களுக்குதான் இம்மாதிரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன்.
    உங்கள் முயற்சி வெற்றிபெற இம் மலேசியத் தமிழன் வாழ்த்துகிறான்.
    புமு.சுரேசு
    மலேசியா

    ReplyDelete