Wednesday, June 15, 2005

எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள்

சுதாங்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சுட்டாச்சு சுட்டாச்சு என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்ட பின்னிணைப்பு.

-*-

எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை...

12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச் சுட்டார்கள் என்பதில் பிரச்னை. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா தவிர வாசு என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். இவர்கள் மூவரையும் தவிர சுட்டதை நேரில் பார்த்தவர் வேறு எவரும் இல்லை. அரசுத் தரப்பு வாதம் - லைசென்ஸ் காலாவதியான துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டார், பின் தன்னையும் சுட்டுக்கொண்டார் என்பது. எம்.ஜி.ஆர், வாசு இருவரும் இதைத்தான் சொன்னார்கள். எம்.ஆர்.ராதா தரப்பு வாதம் - எம்.ஜி.ஆர் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார், தொடர்ந்து நடந்த கைகலப்பில் எம்.ஆர்.ராதா அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது.

முதலில் சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்த வழக்கு, பின் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் சென்றது. அங்கு எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

-*-

தீர்ப்புக்குப் பின்...
சுதாங்கன்

ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.

திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.

விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.

அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.

வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.

சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.

'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.

தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.

ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.

ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.

20 comments:

  1. //ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார்.//
    ஓரு மனிதன் எந்த அளவிற்கு கொள்கைப் பிடிப்போடு இருந்திருக்கிறான். இதைப் பற்றி நீங்கள் கடற்கரையில் பேசும்போதே, எம்.ஆர்.ராதாவின் ஆளுமையினைப் பற்றி எண்ணி வியந்திருக்கிறேன்.

    //அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது.//
    இந்த ஒலிநாடக்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா. இருந்தால் சொல்லுங்கள், வாங்கி MP3-யாக்கி வணிகரீதியாக முறைப்படுத்தலாம்.

    பிற்சேர்க்கை, ஏற்கனவே சுட்டாச்சு, சுட்டாச்சு முதல் பிரதி வாங்கியவர்களுக்காக, பின்னிணைப்பு மட்டும் PDF கோப்பாக கிடைக்க வழி செய்யமுடியுமா ?

    ReplyDelete
  2. எம்.ஆர். ராதா துணிவுக்கும் கொள்கைப்பிடிப்புக்கும் பெயர் பெற்றவர். ஒரு முறை அவர் வெறும் கால்சட்டையும், பனியனும் அணிந்து சென்னைக் கடற்கரையில் நின்றிருந்த பொழுது அன்றைய தினம் நாடகங்கள் பற்றிய விவாதமோ, சட்டமோ சென்னை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது என்று அறிந்தார். அப்படியே அவ்வுடைகளுடன் சென்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, வெறும் அரையாடை அணிந்து காந்தி லண்டன் சென்று வட்டமேசை மாநாட்டிலேயே கலந்துகொண்டார், இந்த சட்டசபையிலே நான் நுழைய முடியாத என்று வாதிட்டு நுழைந்தார்.

    அவரது பல நாடகங்கள் அதில் இருந்த புரட்சிக்கருத்துக்களுக்காக தடைசெய்யப் பட்டபோதும், அடுத்த நாளே அதே நாடகத்தை வேறொரு பெயரில் அரங்கேற்றி காவலரை ஏமாற்றுவதும் அவரது உத்திகளில் ஒன்றாக இருந்தது.

    அரங்குகளைத் தாக்கியும், திரைகளைக் கிழித்தும் அவரைத் தடுக்க நினைத்தவர்கள் சோர்ந்து போகுமாறு எந்த தொய்வுமில்லாமல் இடைவிடாது நாடகத்தை நடத்தும் மனத்துணிவு அவருக்கு இருந்ததாம்.

    ReplyDelete
  3. இராதா தமிழ்நாட்டில் சுயமாக சிந்திக்கத் தெரிந்த, அதை யார் தடுத்தாலும் துணிவுடன் வெளிப்படுத்தவும் முனைந்த சிலரில் ஒருவராக இருந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை முறையாக வெளிக்கொண்டுவந்தால் சுவையான சம்பங்களும், தமிழ்நாட்டின் ஒரு காலப்பகுதியை பற்றிய செய்திகளும் பலருக்கும் தெரியவரும்.

    ReplyDelete
  4. தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.

    அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள்

    i think there is an error here.if my memory is right these films தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்
    were released in post 1977.ஆடுபாம்பே was produced by poompukhar productions owned by family members of karunanidhi.And jayshankar acted only in ஆடுபாம்பே.in கந்தரலங்காரம் he acted in the role of a beleiver in God.in 1978 his daughter radhika was introduced by bharathiraja in
    kizeke pokum rail.i think they acted together in one film.

    ReplyDelete
  5. //in கந்தரலங்காரம் he acted in the role of a beleiver in God.//

    கந்தரலங்காரத்தில் எம்.ஆர்.ராதா இரண்டு வேஷங்களில் நடித்தார். ஒரு வேடம், வழக்கமான பாணியில் கடவுளைக் கேலி செய்யும் வேடம். மற்றொன்று, முருக பக்தராக, கோயிலில் உபன்யாசம் செய்யும் வேஷம். இறுதியில், நாத்திகர் ராதா, ஆத்திகராக மாறுவார்.

    நல்ல ஹோதாவுடன் இருந்தவர்கள், பின்னால், வயதாகி, இரத்தம் சுண்டிய பின்னர், வறுமை காரணமாக, நடித்த படங்களைப் பார்ப்பது கொடுமையானது. சந்திரபாபு, எஸ்.ஏ.அசோகன், சாவித்திரி, போன்றவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.

    //his daughter radhika was introduced by bharathiraja in
    kizeke pokum rail.i think they acted together in one film. //

    ஆம் நடித்திருக்கிறார்கள். "காலம் பதில் சொல்லும்" என்று நினைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  6. எம்.ஆர்.ராதா, ரஜினியுடன் 'நான் போட்ட சவால்' என்கிற படத்தின் சில காட்சிகளில் நடித்ததாக ஞாபகம். விஷயம் தெரிஞ்சவங்க உறுதிப்படுத்தினா நல்லாயிருக்கும். இந்தப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக நடிக்க இருந்தார் என்பது கொசுறு.

    ReplyDelete
  7. /எம்.ஆர்.ராதா, ரஜினியுடன் 'நான் போட்ட சவால்' என்கிற படத்தின் சில காட்சிகளில் நடித்ததாக ஞாபகம். விஷயம் தெரிஞ்சவங்க உறுதிப்படுத்தினா நல்லாயிருக்கும்./
    கடைசியிலே ரஜனி. ராம்கியுடன் ஒத்துக்கொள்ள ஒரு விடயம். உண்மை. அதிலே ராதா ஒரு வில்லன் (அவர் மகன் வாசுவும் நடித்திருந்தார் என்று ஞாபகம்).

    ReplyDelete
  8. இந்த ஒலிநாடக்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா. இருந்தால் சொல்லுங்கள், வாங்கி MP3-யாக்கி வணிகரீதியாக முறைப்படுத்தலாம்

    that should be available.i have listened to them.he compares the
    malays and tamils and ridicules the tamils.i hope i remember it right.

    'நான் போட்ட சவால்'
    rajni and latha.direction by
    puratchidasan who was known for
    films like Gunfight Kanchana,
    Revolver Rita and for dialog and songs in films dubbed from telugu.
    i dont remeber asto whether i saw the film but i think that rajni acted in a cow boy get up.i think
    it is a typical son revenges the
    killers of dad or parents story.
    from mid 60s till 80s, perhaps even later they were many films
    on same or similar theme.jayalalith made a re entry in
    late 70s after a gap of few years but could not really make it big as a star.so she stopped acting in
    films and started writing in kumudam etc.and you all know what
    happened later.
    even if radha had lived longer he would not have regained the lost
    place in tamil films.because there was hardly any scope for him in the
    neo nativity genre films.

    ReplyDelete
  9. ராதா தமிழர்களின் சினிமா மோகத்தினை கிண்டல் செய்தார். இங்கே என்னவென்றால் அவர் பெயரைச் சொல்லி சினிமா தொடர்புடைய தகவல்களைப் எழுதுகிறீர்கள். என்ன கொடுமை இது.

    இது என் சுய விமர்சனம் :). இப்பொதெல்லாம் நம்மை நாமே விமர்சித்துக் கொண்டு முதலிலேயே எழுதிவிடுவது பாதுகாப்பானது :)

    ReplyDelete
  10. /'நான் போட்ட சவால்'
    rajni and latha.direction by
    puratchidasan who was known for
    films like Gunfight Kanchana,
    Revolver Rita and for dialog and songs in films dubbed from telugu./
    படமே டப்பின படம் மாதிரியாகத்தான் இருந்தது. ;-) எம். ஆர். ராதா முகத்தினைக் கிழித்து, எம். ஆர். ஆர். வாசுவாக ஆவதுபோல ஒரு காட்சி ஞாபகம்

    ReplyDelete
  11. நானும் என்பங்குக்கு எதனாச்சும் எழுதலான்னுதான் வந்தேன். எனக்கும் சேத்து ரவிசிரினிவாஸ் சுயவிஷர்மனம் செஞ்சுட்டதாலே இத்தோட நான் ஜகா வாங்கிக்கறேன்.

    ReplyDelete
  12. சுயவிமர்சனம் என்றால் ஒன்றுமே சொல்லாமல் போவதில்லை. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அப்புறம் சுயவிமர்சனம் ஒன்று வைத்து விட்டால் ஆயிற்று. அப்புறம் சுய விமர்சனம் செய்துகொண்டதால் என்று இன்னும் நமக்குத் தெரிந்ததை சொல்லிவிட வேண்டியதுதான். :)
    come on prakash, share your knowledge.

    ReplyDelete
  13. பிரகாஷ்,
    தலைவருக்கு இப்போது எத்தனை வயது? :-)

    பத்ரி,
    எம்.ஆர். ராதா தகவல்களுக்கு நன்றி. வெளிநாடுகளுக்கு புத்தகம் அனுப்ப ஆரம்பித்தயிற்றா?

    ReplyDelete
  14. //பிரகாஷ்,
    தலைவருக்கு இப்போது எத்தனை வயது? :-)//

    சு.மு : புரியலையே... நீங்க யாரைச் சொல்றீங்க? எனக்கு மொத்தம் மூணு தலைவருங்க..... ஒர்த்தர் ஸ்ரீரங்கம், இன்னொருத்தர் பண்ணைப்புரம், மூணாமவர் மந்திராலயம். இதுல நீங்க யாரைச் சொல்றீங்க?

    ReplyDelete
  15. பிரகாஷ்,
    மந்திராலயத்துக்காரர் தான்.
    // நல்ல ஹோதாவுடன் இருந்தவர்கள், பின்னால், வயதாகி , இரத்தம் சுண்டிய பின்னர், வறுமை காரணமாக, நடித்த படங்களைப் பார்ப்பது கொடுமையானது.//

    இதுக்காகக் கேட்டது :-)

    ReplyDelete
  16. //மந்திராலயத்துக்காரர் தான்.
    // நல்ல ஹோதாவுடன் இருந்தவர்கள், பின்னால், வயதாகி , இரத்தம் சுண்டிய பின்னர், வறுமை காரணமாக, நடித்த படங்களைப் பார்ப்பது கொடுமையானது.////

    சு.மு : சொல்லுவேன்.....ஆனால் பத்ரி ப்ளாக்லே வேணாம். எங்கூட்டுலே, இல்லே உங்க ஊட்டுலே வெச்சிக்கலாம்.

    ReplyDelete
  17. ஆஹா, பெயரிலியோடு பேச ஒரு சந்தர்ப்பம். அபத்தமான படம்தான். தெலுங்கு மார்க்கெட்டை மனதில் வைத்து பண்ணப்பட்ட திரைக்கதை. என்னதான் சொல்லுங்க.... அந்த 'சுகம் சுகமே' பாட்டு மாதிரி ஒரு சுகமான பாட்டு உண்டோ?

    ReplyDelete
  18. சுவாரசியமாக உள்ளது.

    எம்.ஆர்.ராதா போன்றோர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யாமல் நிறைய விதயங்களைத் தவறவிடுகிறார்கள் நம் மக்கள்.

    ReplyDelete
  19. இராதா "நான் தான் சுட்டேன்" என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கத் தொடங்கினார். பின்னால் அதன் தலைப்பை "சுட்டான், சுட்டேன்" என்று மாற்றினார்.அதன் விளம்பரத்தை குமுதத்தில் பார்த்த நினைவு இருக்கிறது. அந்தப் படம் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

    திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ராதாவுக்குச் சொந்தமான காலனி ஒன்று இருந்தது. அதில் பிராமணர்களைத்தான் அவர் குடிவைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.பொன்மலையில் பணிபுரிந்த காலத்தில் பலமுறை அந்தக் குடியிருப்பைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete