Wednesday, November 15, 2006

உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம்

இது அவசரமான சுருக்கம். ஒலித்துண்டுகளை நாளை சேர்க்கிறேன்.

நான் சென்றபோது கூட்டம் தொடங்கியிருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார்; முடிக்கும் நேரம். "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?" என்று முடித்தார். முழுவதுமாகக் கேட்கவில்லை. ஆனால் என்ன சொல்லியிருந்திருப்பார் என்பது புரிந்தது. பின் மெதுவாகக் கைத்தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறிவிட்டார்.

[லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - வாசகர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி தமிழ் புத்தகங்கள் பதிப்பித்தவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகள். இப்பொழுது 80 வயதுக்கு மேல் ஆகிறது.]

மாலன் அடுத்து பேசினார். பஞ்சாயத் ராஜ் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ன சாதிக்க நினைத்தது என்பதை விளக்கமாகப் பேசிவிட்டு (Democracy, Decentralization, elimination of Discrimination, Development - 4Ds), எந்தவித விவாதமும் இல்லாமல் நகராட்சி, மாநகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கூடாது என்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டது, தேர்தலின்போது நடந்த வன்முறை, முறைகேடுகள் ஆகியவற்றைச் சாடினார்.

இரா.செழியன், வயது முதிர்ந்த காலத்திலும் உட்கார்ந்தவாறு பேசினார். வெவ்வேறு செய்தித்தாள்களிலிருந்து தேர்தல் வன்முறை தொடர்பாக வந்திருந்த செய்திகளைப் படித்தார். பின் எதிர்க்கட்சித் தலைவர்களது அறிக்கைகளிலிருந்து சில துண்டுகளைப் படித்தார். பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திமுகவின் வன்முறையைச் சாடியிருப்பதைப் படித்தார்.

அத்துடன் மாநிலத் தேர்தல் ஆணையாளர், மாநில DGP, மாநகராட்சி காவல்துறை ஆணையர் ஆகியோர் ஒரு பிரச்னையும் இல்லை என்று அறிக்கை விட்டதையும் படித்தார். காவல்துறையைக் கடுமையாகச் சாடினார்.

ராகவன் மீண்டும் வந்து சில கருத்துகளை முன்வைத்தார். அவை

1. உள்ளாட்சித் தேர்தலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் பார்வையில்தான் நடக்க வேண்டும்
2. எங்காவது முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
3. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4. வெளி மாநிலக் காவல்படை அல்லது பாராமிலிட்டரி படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலக் காவல்படையை நம்புவதற்கில்லை.
5. வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிப்பாளர்கள் வரவேண்டும்.

மாலன் அடுத்து ஒரு தீர்மானத்தை முன்வைத்து, கூட்டம் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று கேட்டார். தீர்மானம் பின்வருமாறு:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை, வன்முறை நடந்துள்ளது என்று பத்திரிகைகள் அனைத்தும் எழுதியுள்ளன. இந்தப் பத்திரிகைச் செய்திகளை முதன்நிலை அறிக்கையாக வைத்து தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் கமிஷன் மக்களிடம் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை, கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆமோதித்தனர். அப்பொழுது பார்வையாளர் தரப்பில் முதல் வரிசையிலிருந்த இல.கணேசன் எழுந்து, விசாரணைக் கமிஷன் தீர்ப்பை முன்வைத்து தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சேர்த்துக்கொள்ளச் சொன்னார்.

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

-*-

மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் மோசமானதா என்று தெரியவில்லை. ஆனால் மாநகராட்சித் தேர்தல் முழுப் பித்தலாட்டம் என்றே கருதுகிறேன். தேர்தலை ரத்து செய்துவிட்டு நியாயமான முறையில் மறுதேர்தல் என்ற ஒன்று நடைபெறாது என்றே கருதுகிறேன்.

மாநில தேர்தல் கமிஷனர் ஆளுங்கட்சியின் அடியாளாகவும், போலீஸ்துறை காந்தியின் குரங்குகள்போலவும் செயல்பட்டுள்ள நிலையில் மற்றொரு தேர்தல் நடந்தாலும் அதன்மீதும் யாரும் நம்பிக்கை வைக்க முடியாது. அதே சமயம், மாநிலத் தேர்தல் கமிஷனைக் கலைத்துவிட்டு மத்திய தேர்தல் கமிஷனின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் முடியாது - மாலன் சொன்னதுபோல அது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. (பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் மாநிலத் தேர்தல் கமிஷன் என்ற அமைப்புகளை உருவாக்கச் சொன்ன சட்டத் திருத்தம் தவறானது என்பது என் கருத்து. ஆனால் இப்பொழுதைய சட்டத்தை வைத்துப் பார்த்தால் மற்றொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவராமல் இதனைச் செய்ய முடியாது. மாநிலத் தேர்தல் கமிஷன்களை ரத்து செய்யுமாறு கொண்டுவரப்படும் எந்தச் சட்டத்தையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க மாட்டா!)

தேர்தலில் பணம் பாய்வதை இப்பொழுதைக்கு எந்த வழியிலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே அதைப்பற்றியோ, அல்லது மாநிலத் தேர்தல் ஆணையத்தை ஒழிப்பதைப் பற்றியோ பேசிப் பிரயோசனமில்லை.

எனவே இப்பொழுதைக்கு யதார்த்தமாக என்ன செய்யலாம் என்பதைப் பார்த்தால்:

1. மின்னணு வாக்குப் பதிவு... இதை அவசியமாக்க வேண்டும். அடுத்த ஒரு தேர்தல் வாக்குச்சீட்டில் இருக்கக் கூடாது.
2. மாநிலத் தேர்தல் ஆணையரது நியமனத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். இது ஒரு constitutional post. எனவே அனைத்துக் கட்சிகளும் ஏக மனதாக யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவரைத்தான் நியமிப்பது எனலாம். குறைந்தது எதிர்க்கட்சித் தலைவரது விருப்பம், குடியரசுத் தலைவரது விருப்பம் இரண்டும் தேவை எனலாம். அத்துடன் அவரது பதவிக் காலம் 6 வருடங்கள், 65 வயது வரை இருக்கலாம் என்று மாற்ற வேண்டும். (தற்போது 2 வருடம், 62 வயது வரை என்று உள்ளது.)
3. தேர்தல் கமிஷனரை நீக்கும் முறை மத்தியில் இருப்பது போல கடினமானதாக மாற்றப்பட வேண்டும்.
4. தேர்தலின்போது மாநில தேர்தல் கமிஷனருக்கு - மத்திய தேர்தல் கமிஷனுக்கு இருப்பது போல - முழுமையான அதிகாரம் இருக்குமாறு செய்ய வேண்டும்.

5. திமுக கொண்டுவந்த 'நகராட்சி/மாநகராட்சித் தலைவர் - நேரடித் தேர்தல் சட்டம் ரத்து' - அதனை வாபஸ் பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்டவற்றைச் செய்தாலே ஓரளவுக்கு தேர்தல் ஊழலைக் கட்டுப்படுத்தலாம்.

இது திமுகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு என்று பார்க்கவேண்டாம். இன்று திமுக செய்ததை நாளை அஇஅதிமுக இன்னமும் அதிகமாகச் செய்வார்கள். சென்ற முறை அஇஅதிமுக செய்ததைத்தான் இன்று திமுக பெரிய அளவில் செய்தார்கள்.

நமது உள்ளாட்சி ஜனநாயகம் வலுப்பெற வேண்டுமானால் இவை அனைத்தையும் உடனடியாகச் செய்யவேண்டும்.

29 comments:

  1. //பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. //

    :-) :-)

    நல்ல யோசனைகள். புத்திகெட்டுப்போகும் கட்சி குண்டர்களுக்கு வலுவான மூக்கணாங்கயிறு.

    அது சரி...கூட்டத்தில் துக்ளக் ராஜரிஷி இல்லையா..?? ;-)

    ReplyDelete
  2. //மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் மோசமானதா என்று தெரியவில்லை.//
    மோசமில்லை....

    //மாநிலத் தேர்தல் கமிஷன்களை ரத்து செய்யுமாறு கொண்டுவரப்படும் எந்தச் சட்டத்தையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க மாட்டா!//
    மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது..........

    ReplyDelete
  3. You are 100% correct.This is really an worst election.In future,All elections should be conducted under the leadership of kanji Jagath guru Sankaracharya swamigal(and if Swarnamalya has free callsheet date,She also can be included in to the panel).
    We should not allow all barbarians to vote.Voting should be allowed based on Varnashramam.
    If that happens,Then onbly we can get the Gupta's Golden period again

    ReplyDelete
  4. Report in The Hindu:

    http://www.hindu.com/2006/11/16/stories/2006111614180700.htm

    ReplyDelete
  5. சுந்தர்: சோ இல்லை. அவர் வந்திருந்தால் கூட்டம் வேறு திசையில் சென்றிருக்கலாம் என்பதால்கூட இருக்கலாம்.

    ஆனால் இரா.செழியன் பேச்சு சோ எப்படிப் பேசியிருப்பாரோ அப்படியே இருந்தது (மைனஸ் சோ டைப் கேலி, பிளஸ் செழியன் டைப் கேலி).

    ReplyDelete
  6. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெரிந்ததே. இந்த முறை அதிகம் உறுத்தியது காவல்துறையின் செயல்பாடு. கண்கூடாக சிறைகளைத் திறந்து விட்டு கள்ள ஓட்டு போட்டபின், ரெளடிகள் அனைவரையும் இரண்டு வாரங்களுக்கு பின் 'ரெளடிகள் பிடிப்பு' நாடகம் நடத்தி மீண்டும் சிறைக்கே சகல மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தமிழர்களை முற்றிலும் முட்டாள்களாக்கியுள்ளனர். கூட்டத்தில் யாராவது இதைப் பற்றி பேசினார்களா பத்ரி?
    இத்தகைய அதிகாரிகளை நடுத் தெருவில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்க வேண்டும். இவர்கள் எழுதித் தேர்ந்தது 'Public service commission' தானே? மக்கள் சேவையென்றால் என்ன என்பதாவது தெரியுமா??

    ReplyDelete
  7. // ராகவன் மீண்டும் வந்து சில கருத்துகளை முன்வைத்தார். அவை
    1. உள்ளாட்சித் தேர்தலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் பார்வையில்தான் நடக்க வேண்டும்
    2. எங்காவது முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
    3. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
    4. வெளி மாநிலக் காவல்படை அல்லது பாராமிலிட்டரி படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலக் காவல்படையை நம்புவதற்கில்லை.
    5. வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிப்பாளர்கள் வரவேண்டும்.//

    6. வது பாய்ண்டை சொல்ல மறந்துவிட்டார். வாக்குப்பதிவும், எண்ணிக்கையும் வெளிமாநிலங்களில் நடத்தப்பட வேண்டும். டெல்லியில் கூட வைப்பது மிகவும் நல்லது. உள்ளூர் கட்சிக்காரர்களை நம்புவதற்கில்லை.

    சீரியசாக, ராகவனின் ஆலோசனைகள் "மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்துதல்" என்ற வழக்கமான மேட்டுக்குடி கருத்தையே பிரதிபலிக்கிறது. ஆனால் உள்ளாட்சி என்பது அடிமட்ட ஜனநாயக நிறுவனம். ஆகவே உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சிகள் அடிப்படையில்லாமல் நடத்தப்படுவதே சரியான அணுகுமுறை. உள்ளூர் பிரச்சினைகளை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட சரியான முறை இதுவே. கட்சிகள் அடைப்படையில் நடத்தப்படுவதாலேயே, கட்சித்தலைகள் உள்ளாட்சி அமைப்புகளையும் அதிகார மையங்களாக பாவித்து அங்கும் தங்கள் அதிகாரத்தை செலுத்து வகையில் தங்களுக்கு சாதகமாக என்னெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்.

    மற்றபடி, இந்த கூட்டம் பற்றி முன்பு வந்த செய்திகள், இந்த பதிவு, லக்கிலுக்கின் பதிவு எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இக்கூட்டம் நடத்தியவர்களின் சார்பு தேர்தல் நடத்தியவர்களின் சார்புக்கு எந்தவிதத்திலும் குறைந்தது மாதிரித் தெரியவில்லை.

    ReplyDelete
  8. பத்ரி,

    இந்தப் பதிவுக்கு நன்றி.

    எல்லாரும் சார்புடையவர்கள்தான். சார்புடையவர்கள் என்று அடுத்தவர்களைச் சொல்கிறவர்களும் குற்றவாளிகளுக்கும்கூட மாரல் சப்போர்ட் கொடுக்கிற அளவுக்குச் சார்புடையவர்களாக இருக்கலாம். சார்புடையவராக இருந்தால் என்ன தவறு. அந்தக் காரணத்தை வைத்தே குற்றங்களுக்கு சால்ஜாப்பு சொல்வதும், முந்தையக் குற்றங்களைக் காட்டி தற்போதைய குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குவதும் எப்போதும் நடந்து கொண்டுதானிருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாமல், இப்படி நீங்கள் கலந்து கொள்கிற கூட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாசகர்கள் எழுதுகிறவரின் சார்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பற்றி அவரவர்களாகவே முடிவு எடுத்துக் கொள்வார்கள். முக்கியமாக வெளிநாட்டில் இருக்கிற என்னைப் போன்ற வாசகர்கள் உள்ளூர் அரசியலை அறிய உங்களைப் போன்றவர்களின் பதிவுகளையும் நம்பியிருக்கிறோம். நன்றி.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  9. //மு. சுந்தரமூர்த்தி said...

    6. வது பாய்ண்டை சொல்ல மறந்துவிட்டார். வாக்குப்பதிவும், எண்ணிக்கையும் வெளிமாநிலங்களில் நடத்தப்பட வேண்டும். டெல்லியில் கூட வைப்பது மிகவும் நல்லது. உள்ளூர் கட்சிக்காரர்களை நம்புவதற்கில்லை.

    சீரியசாக, ராகவனின் ஆலோசனைகள் "மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்துதல்" என்ற வழக்கமான மேட்டுக்குடி கருத்தையே பிரதிபலிக்கிறது.
    //

    இல்லை. மேலிருந்து அதிகாரத்தை செலுத்துதல் என்பதை சொல்லவில்லை. மேலிருந்து தேர்தலை பாரபட்சமின்றி நடத்துவதை சொல்கிறது.

    //
    ஆனால் உள்ளாட்சி என்பது அடிமட்ட ஜனநாயக நிறுவனம். ஆகவே உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சிகள் அடிப்படையில்லாமல் நடத்தப்படுவதே சரியான அணுகுமுறை.
    //
    தேவையில்லை. உள்ளாட்சி தேர்தல்கள் கட்சி அடிப்படையில்லாமல் நடந்தாலும், நடக்காவிட்டாலும், யார் என்ன கட்சியை சார்ந்தவர்கள் என்பது மக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

    //
    உள்ளூர் பிரச்சினைகளை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட சரியான முறை இதுவே.
    //
    உள்ளூர் பிரச்னைகளை அறிந்தவர்கள்தான் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், கேள்வி உள்ளாட்சி தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதல்ல. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எப்படி அன்றைய மாநில அரசாங்கத்தின் கைக்கூலிகளால் தீர்மானிக்கப்படாமல், மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை பற்றியது.

    //
    கட்சிகள் அடைப்படையில் நடத்தப்படுவதாலேயே, கட்சித்தலைகள் உள்ளாட்சி அமைப்புகளையும் அதிகார மையங்களாக பாவித்து அங்கும் தங்கள் அதிகாரத்தை செலுத்து வகையில் தங்களுக்கு சாதகமாக என்னெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்.
    //
    கட்சி அடிப்படையில் நடத்தப்படுவதே பிரச்னை அல்ல. கட்சி சார்பின்றி தேர்தல் நடந்தாலும், மாநிலத்தில் தலைமையில் உட்கார்ந்திருபப்வர்களுக்கு எந்த உள்ளாட்சி அமைப்பு நம் கட்சியினரால் நடத்தபப்டுகிறது எது நடத்தபடவில்லை என்பது நிச்சயம் தெரியும்.
    அவை அதிகார மையங்கள்தான். ஆனால், அடிப்படை ஜனநாயகப்பண்பு மாநிலத்தலைமையிடம் இல்லை என்றால், அது பாரபட்சமற்ற அமைப்பு மூலம் இந்த தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோருவதில் எந்த தவறும் இல்லை.

    கவனியுங்கள். தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்பது பற்றி யாரும் பேசவில்லை. தேர்தல் எப்படி நடக்கக்கூடாது என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். நிச்சயமாக முந்தைய தேர்தலில் அராஜகம் செய்தவர்கள்தான் பேசுகிறார்கள். இந்த தேர்தலில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதனால்தான் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதன் மூலமாகவே தாங்கள் முன்னால் செய்தது தவறு என்பதையும் உள்ளூர ஒப்புக்கொள்கிறார்கள். இதன் மூலமாகத்தான் பாரபட்சமற்ற தேர்தல் அமைப்பை நோக்கி போக முடியும்.

    இங்கு தேவையானது ஜனநாயகப்பண்பு. அது இல்லை என்பதுதான் நடுநிலையாளர்களின் வருத்தம். இந்த தேர்தலில் யார் ஜெயித்தாலும் கவலைப்படாத ஒரு கும்பல்தான் அந்த நடுநிலையாளர்கள் என்றால், அந்த நடுநிலையாளர்கள் தமிழ்நாட்டில் வசிக்காதவர்கள் என்றால், அவர்கள் மூலம் தேர்தலை நடத்துவது மிகச்சரியானதுதான். அதே போல தமிழ்நாட்டுக்காரர்கள் உத்தர பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல்களை நடத்தட்டும்.

    //
    மற்றபடி, இந்த கூட்டம் பற்றி முன்பு வந்த செய்திகள், இந்த பதிவு, லக்கிலுக்கின் பதிவு எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இக்கூட்டம் நடத்தியவர்களின் சார்பு தேர்தல் நடத்தியவர்களின் சார்புக்கு எந்தவிதத்திலும் குறைந்தது மாதிரித் தெரியவில்லை.

    Thu Nov 16, 08:38:54 PM IST
    //
    உங்கள் சார்பும் கூட நன்றாகவே தெரிகிறது

    ReplyDelete
  10. இங்கு மின்னணு வாக்கு பதிவு பிடிக்காதவர்கள்
    absentee ஓட்டு போடுகிறார்கள். அது போல
    ஓட்டை போஸ்ட் பண்ணிடலாம்.

    ReplyDelete
  11. "வெற்றி"
    //உங்கள் சார்பும் கூட நன்றாகவே தெரிகிறது//

    நான் எழுதிய நாள், கிழமை, நேரம் என்று ஒரு எழுத்து விடாமல் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். அதில் என்னுடைய சார்பு எங்கு தெரிகிறதென்று சுட்டிக்காட்ட முடியுமா? பரவாயில்லை, உங்கள் பிளாக்கர் கணக்க்குப் பெயரிலேயே எழுதுங்கள். ஒன்றும் செய்துவிடமாட்டேன்.

    உங்கள் மற்ற கருத்துக்கள் குறித்து,
    நானும் தேர்தல் முறையைப் பற்றிதான் பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல்களை கட்சி அடிப்படையில்லாமல் நடத்துவதற்கும், அடுத்த மாநிலத்தவரைக் கொண்டு நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. முன்னது உள்ளாட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை அளிக்கும். பின்னது நம் ஜனநாயக முறையின் மீது அவநம்பிக்கையை உண்டாக்குவது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றியும், என் கருத்துக்கள் உங்களை எழுதத் தூண்டியதற்காக மகிழ்ச்சியும்.

    ReplyDelete
  12. இப்ப உள்ளாட்சி தேர்தல்லாம் கட்சி சின்னத்துலயா நடக்குது. அப்படி இருந்தா அங்கீகரிப்பட்ட கட்சி சின்னத்த உள்ளாட்சி தேர்தல்ல தடை பண்ணினாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துடும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. //பரவாயில்லை, உங்கள் பிளாக்கர் கணக்க்குப் பெயரிலேயே எழுதுங்கள். ஒன்றும் செய்துவிடமாட்டேன்.
    //

    நீங்கள் என்னதான் உறுதிமொழி கொடுத்தாலும் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறதே!

    //உங்கள் மற்ற கருத்துக்கள் குறித்து,
    நானும் தேர்தல் முறையைப் பற்றிதான் பேசியிருக்கிறேன்.//

    இல்லை. தேர்தல் முறையை பற்றி பேசவில்லை. தேர்தல் முறை பற்றி பேசியவர்களை விமர்சித்துத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். அவர்களை விமர்சித்துத்தான் முடித்திருக்கிறீர்கள். இடையே ஒன்றுக்கும் உதவாத ஒரு ஆலோசனையுடன்

    // உள்ளாட்சித் தேர்தல்களை கட்சி அடிப்படையில்லாமல் நடத்துவதற்கும், அடுத்த மாநிலத்தவரைக் கொண்டு நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.//

    உள்ளாட்சி தேர்தலை கட்சி அடிப்படையில்லாமல் நடத்துவது வீண். அது வெறும் கண்துடைப்பு. அடுத்த மாநிலத்தவரை கொண்டு நடத்துவது பாரபட்சமின்றி மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுப்பது. தேர்தல் பாரபட்சமில்லாதவர்களால் நடத்தப்படுகிறது என்ற நம்பிக்கையை கொடுப்பது.

    // முன்னது உள்ளாட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை அளிக்கும். பின்னது நம் ஜனநாயக முறையின் மீது அவநம்பிக்கையை உண்டாக்குவது.//

    முன்னது கண்துடைப்பு. உள்ளாட்சி தேர்தலை இப்போது "நடத்தியவர்கள்" தான் அப்போதும் "நடத்தப்போகிறார்கள்". அப்போதும் இதே கூத்துத்தான் நடக்கும்.

    பின்னது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உறுதி செய்வது. பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கேஸாக இருந்தால் கூட ஏன் சிபிஐ விசாரணையை சில சமயங்களில் கேட்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். அந்த நிலைமைக்கு பாதிக்கப்பட்டவர்கள் வருவது லோக்கல் போலீஸ் மீது மக்கள் அவநம்பிக்கை அடைந்ததைத்தான் குறிக்கிறது. அது போன்ற நிலையைத்தான் இங்கு மாநில அரசு அடைந்திருக்கிறது. இதே நிலைமை மற்ற மாநிலங்களில் (உதாரணமாக கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம்) இல்லை என்பது தமிழர்களின் வெட்கக்கேடாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

    ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை தேர்தலை துஷ்பிரயோகம் பண்ணுவதால்தான் வருகிறது. ஜனநாயகத் தேர்தலை யார் நடத்துகிறார்கள் என்பதால் அல்ல.

    // உங்கள் கருத்துக்களுக்கு நன்றியும், என் கருத்துக்கள் உங்களை எழுதத் தூண்டியதற்காக மகிழ்ச்சியும். //

    உங்களுக்கு பதில் சொல்வது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் அல்ல. இருப்பினும் உங்களது கருத்துக்களை இறுதி கருத்துக்கள் என்று சிலர் எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் இதனை பதிவு செய்யவேண்டியதாக இருக்கிறது.

    ReplyDelete
  14. வெற்றி, வெற்றி உமதே!

    ReplyDelete
  15. from Today's Dinakaran
    --------------------

    தி.மு.க. கோட்டையை இடிக்க கிளம்பும் கும்பல்


    கருணாநிதி கடிதம்


    சென்னை, நவ. 17: கொள்கை மறவர் குருதியை குழைத்துக் கட்டிய திமுக கோட்டையை இடித்திட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
    முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
    ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு திட்டம் தொடக்கம். நல்லாட்சி நடக்கிறது என்று புகழ் மாலை. இதைச் சகித்துக் கொள்ள சில பேருக்கு முடியவில்லை.
    நாம் நேரடியாக எதிர்த்தால் “பரம்பரை யுத்தத்தில் ஒரு பகுதி“ என்பது பச்சை உண்மை ஆகி விடுமே யென்று விபீஷண, சுக்ரீவர்களை விட்டு விடக்கூடாதென்று பிடித்துக் கொண்டார்கள்.
    அவர்களை அழைத்து “ஐஸ்“ வைத்து, அவைக் களத்தில் நிறுத்தி- பட்டு பரிவட்டங்கள் சாத்தி, “அட்டாக்“ பண்ணுங்கள்; திமுகவையென்று உசுப்பி விடுகிறார்கள். அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு காட்சியை அண்மையில் மைலாப்பூர் மண்டபம் ஒன்றில் காண நேரிட்டது.
    விபீஷண சுக்ரீவர்கள்; என்று யார் யாரைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால்; அய்யோ பாவம்; பட்டுக்கோட்டை நமது பழைய சீனுவாசன்! அண்ணா இருக்கும் வரையில் பட்டம், பதவி, பெற்றுக் கொண்டு; அண்ணா மறைந்த பிறகு இதுவரை அவர் நினைவு நாளைக்குக் கூட அந்தக் கல்லறை பக்கம் செல்லாத -பல “கட்சித் தாவி. அவர்கள் கூட்டம் போட்டு, கொள்கை மறவர் கொட்டிய குருதியை குழைத்துக் கட்டிய இந்தக் கோட்டையை இடித்திடக் கிளம்பியுள்ளனர்.
    சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 155 வார்டுகளிலுமா வன்முறை? குறைபாடு? தவறு? இல்லை! சில வார்டுகளில் மட்டுமே! அதிலும் சில “பூத்“களில் மட்டுமே!
    அப்படி நடந்ததாக புகார் தரப்பட்ட சில இடங்களில் கூட மறுதேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
    “ஆகா! வன்முறை! ஆபத்து ஜனநாயகத்துக்கு! என்றலறும் பழைய பட்டுக்கோட்டை சீனுவாசன்களும்- அவர்களின் மருங்கிருந்து கலகமூட்டும் மாலன், பாலன்களும்; தமிழ்நாட்டிலேயே பணியாற்றாத ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரும்; மடித்து வைத்துள்ள தின ஏடுகளை எடுத்துப் படித்துக் காட்டுகிறார்கள்.
    அடடா; என்ன இது? என்ன ஏடு இது? இந்த ஆண்டு(2006) ஏடு என நினைத்து; பாரியாள் பழைய (2001) ஏட்டையல்லவா எடுத்துக் கொடுத்திருக்கிறாள்! என் செய்வது? அந்த ஏடுகளை இவர்கள் படிக்காவிடினும் நாம் படித்துப் பார்ப்போம்!
    இரண்டு ஏடுகள்:-
    ஒன்று “இந்து“- மற்றொன்று இன்று அவர்களின் பேச்சை பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ள “தினமலர்“.
    “இந்து“ 17.10.2001
    “சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்தலின்போது ஆயுதம் தாங்கிய கும்பல், பூத்துகளைக் கைப்பற்றியதோடு நகரின் சில பகுதிகளில் வாக்காளர்களை அதிக அளவில் பயமுறுத்தி கொசப்பேட்டையில் உள்ள திமுகழகத் தேர்தல் அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இந்தக் கூட்டம் வாக்குச்சீட்டுகளையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அ.தி.மு.க. மற்றும் ஒரு சில சுயேச்சைகளின் ஏஜெண்டுகளைத் தவிர மற்ற கட்சிகளின் ஏஜெண்டுகளையெல்லாம் விரட்டி விட்டு ஓட்டுப் பெட்டிகளுக்குள் அந்த வாக்குச்சீட்டுகளைத் திணித்துக் கொண்டனர்“
    தினமலர் நாளேட்டில் வெளிவந்த செய்தியின் சுருக்கம் வருமாறு:
    “சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில் அதிமுக வேட்பாளர் சங்கர் உட்பட 200 பேர் கொண்ட கும்பல் பள்ளியில் உள்ள அனைத்து பூத்துகளையும் இழுத்து மூடினர்“ என்று எழுதியுள்ளது.
    அது நம்- அம்மா ஆட்சி- அப்போது எதுவும் நடக்கலாம்- அது நம்மவா ஜனநாயகம்!
    “தமிழக திமுக அரசை ‘போஸ்ட் மார்ட்டம்‘ செய்ய வேண்டும்“ என்று பட்டுக்கோட்டையார் கத்தினாராம்-
    கொள்கை மறவர் குருதி குழைத்துக் கட்டிய கோட்டை இது என்பதை, அந்தக் கும்பல் உணர்ந்து கொள்ளட்டும்!
    இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

    ReplyDelete
  16. மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தை 'பார்ப்பனர்கள் + கூட்டாளிகள் கூட்டம்' என்று கருணாநிதி பேசியிருப்பது அபத்தமானது. இரா.செழியன் "பட்டுக்கோட்டை நமது பழைய சீனுவாசன்!" ஆகிவிடுகிறார். அவர் 'பல கட்சித் தாவி'யாம். இவர்தான் திமுக உருவானபோது அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கூட இருந்தவர்; திமுக உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பல வருடம் இருந்தவர்.

    "அவர்களின் மருங்கிருந்து கலகமூட்டும் மாலன், பாலன்களும்" - மாலன் தனிப்பட்ட முறையில் கருணாநிதி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். சமீபத்தில் ரஜினி ராம்கி எழுதிய மு.க நூல் மீதான அவரது விமரிசனம் இங்கே உள்ளது (ஒலித்துண்டு).

    "தமிழ்நாட்டிலேயே பணியாற்றாத ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரும்" - B.S.ராகவன் - தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச தமிழகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர்தான் தேவையா? ராகவன் தமிழர். மேற்கு வங்க கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவர். மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக இருந்தவர். முக்கியமாக, கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர்; சென்னை நகராட்சி வார்டில் வாக்காளர். இந்தத் தகுதி போதும் என்று நினைக்கிறேன்.

    ===

    "கொள்கை மறவர் கொட்டிய குருதியை குழைத்துக் கட்டிய இந்தக் கோட்டை" - நல்ல கவிதை நயம் மிகுந்த வரிகள். ஆனால் திமுக ரவுடிகள், தங்களது எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரின் ரத்தத்தைச் சிந்த வைத்து அதில் குழைத்துக் கட்டிய கோட்டை என்றுதான் ஒரு சிலருக்காவது தோன்றுகிறது.

    ===

    2001-ல் நடந்தது அட்டூழியம்தான். அதனைப் பற்றி வெளிப்படையாகவே பலர் (பார்ப்பனர்களும்தான்!) பேசியுள்ளனர். அப்பொழுது பொதுக்கூட்டங்கள் நடந்தனவா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அப்பொழுது வலைப்பதிவுகளும் கிடையாது. அன்று சொல்லவில்லையே, இன்று சொல்கிறாயே என்றெல்லாம் பேசுவது அபத்தம். இன்று திமுக அனுதாபிகள் பலரும் இதைத்தான் சொல்கின்றனர்.

    பொதுமக்கள், கட்சிச் சார்பற்றவர்கள் தங்களது உரிமைகள் பறிபோவதைப் பற்றி மட்டும்தான் பேச விரும்புகிறார்கள். அது தங்களுக்குச் ஆதரவானது என்பதால் வை.கோ, இல.கணேசன், பாலகங்கா போன்றோர் முன்வரிசையில் உட்கார்ந்து பார்க்கிறார்கள். நாளை வை.கோ, ஜெயலலிதாவால் பொதுமக்கள் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால் அப்பொழுதும் பொதுமக்கள் அமைப்புகள் முன்னின்று போராடவேண்டும். போராடுவார்கள் என்று நம்புகிறேன்.

    மக்களது உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தும் விதத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுகிறோம். திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரின் "உரிமைகள்" பற்றி இங்கு நாம் கவலைப்படவேண்டியதில்லை.

    ReplyDelete
  17. 2001-ல் நடந்தது அட்டூழியம்தான். அதனைப் பற்றி வெளிப்படையாகவே பலர் (பார்ப்பனர்களும்தான்!) பேசியுள்ளனர். அப்பொழுது பொதுக்கூட்டங்கள் நடந்தனவா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அப்பொழுது வலைப்பதிவுகளும் கிடையாது. அன்று சொல்லவில்லையே, இன்று சொல்கிறாயே என்றெல்லாம் பேசுவது அபத்தம். இன்று திமுக அனுதாபிகள் பலரும் இதைத்தான் சொல்கின்றனர்.

    பொதுமக்கள், கட்சிச் சார்பற்றவர்கள் தங்களது உரிமைகள் பறிபோவதைப் பற்றி மட்டும்தான் பேச விரும்புகிறார்கள். அது தங்களுக்குச் ஆதரவானது என்பதால் வை.கோ, இல.கணேசன், பாலகங்கா போன்றோர் முன்வரிசையில் உட்கார்ந்து பார்க்கிறார்கள். நாளை வை.கோ, ஜெயலலிதாவால் பொதுமக்கள் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால் அப்பொழுதும் பொதுமக்கள் அமைப்புகள் முன்னின்று போராடவேண்டும். போராடுவார்கள் என்று நம்புகிறேன்.

    மக்களது உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தும் விதத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுகிறோம். திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரின் "உரிமைகள்" பற்றி இங்கு நாம் கவலைப்படவேண்டியதில்லை.

    Well said.But Lucky Looks and
    Kuzhalis will pretend as if
    these words have not been written.

    ReplyDelete
  18. //2001-ல் நடந்தது அட்டூழியம்தான். அதனைப் பற்றி வெளிப்படையாகவே பலர் (பார்ப்பனர்களும்தான்!) பேசியுள்ளனர். அப்பொழுது பொதுக்கூட்டங்கள் நடந்தனவா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அப்பொழுது வலைப்பதிவுகளும் கிடையாது. அன்று சொல்லவில்லையே, இன்று சொல்கிறாயே என்றெல்லாம் பேசுவது அபத்தம். இன்று திமுக அனுதாபிகள் பலரும் இதைத்தான் சொல்கின்றனர்.//

    யாரும் பேசியதாக நினைவில்லையே?

    குறிப்பாக சோ போன்றோர் கண்டனப் பொதுக்கூட்டம் எதுவும் நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    "செலக்டீவ் அம்னீஷியா" கொண்டவர்களின் ஜனநாயகப் பற்று கேலிக்குரியதாகவே இருக்க முடியும் என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.

    ReplyDelete
  19. //யாரும் பேசியதாக நினைவில்லையே?

    குறிப்பாக சோ போன்றோர் கண்டனப் பொதுக்கூட்டம் எதுவும் நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    "செலக்டீவ் அம்னீஷியா" கொண்டவர்களின் ஜனநாயகப் பற்று கேலிக்குரியதாகவே இருக்க முடியும் என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை. //

    அந்த தேர்தல் முடிந்த பின்னால் வந்த துக்ளக் பத்திரிக்கை இதழை எடுத்துப்பாருங்கள்.

    ஆமாம் சோ. கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. அதே போல, இந்த முறையும் அவர் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தவில்லை. (அவர் இந்த முறை நடத்துவதாக இருந்தது தடை செய்யப்பட்டது!) இந்த முறை அவர் நடத்த முன்வந்ததே உங்களை உறுத்தினால், நீங்கள் அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அவரது முக்கியத்துவத்தைதான் உரத்துகூறுகிறது.

    செலக்டிவ் அம்னீஷியா என்பது திமுக, அதிமுக, காங்கிரஸ் என்ற எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுச்சொத்து. ஆனால், எதிர்கட்சியில் இருப்பவர்கள்தான் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை உரத்து கூற முடியும்.

    ஆனால், நீ 10 ரூபாய் திருடியவன் அதனால் நான் லட்சம் ரூபாய் திருடியதை சொல்வதற்கு உனக்கு யோக்கியதை இல்லை என்று பேசுவது நான் திருடன் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.

    எதிர்கட்சிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உரத்து கூறவேண்டும். அவ்வாறு உரத்துக் கூறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம். கருணாநிதி செய்த ஊழல்கள் அவரை ஜெயலலிதா செய்யும் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு தடை செய்யக்கூடாது. அதே போல ஜெயலலிதா செய்யும் ஊழல்கள் கருணாநிதி செய்யும் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு தடை செய்யக்கூடாது.

    இதுதான் ஜனநாயகம். எதிர்கட்சியினர் பேசுவதையே தடை செய்வேன். அவர்களுக்கு சொல்ல அருகதை இல்லை போன்ற வார்த்தைகள் தீவிர கட்சி அனுதாபிகளிடமிருந்து வரும் வார்த்தைகள்

    ReplyDelete
  20. "வெற்றி"
    //நீங்கள் என்னதான் உறுதிமொழி கொடுத்தாலும் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறதே!//

    என்மேல் நம்பிக்கையை இல்லாததைவிட உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்னவோ.

    நான் முகத்தைக் காட்டிப் பேசும்போது என்னோடு உரையாடுபவரும் முகத்தைக் மறைக்காமல் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாதா? நம்பிக்கையான சில வலைப்பதிவுகளைத் தவிர, அனாமதேயங்கள் புழங்கும் இடங்களில் பொதுவாக அடியெடுத்து வைப்பதில்லை. இனி முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

    எப்படியானாலும், ஓகை வாழ்த்தியிருப்பதைப் போல "வெற்றி உமதே". வெற்றிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  21. //அந்த தேர்தல் முடிந்த பின்னால் வந்த துக்ளக் பத்திரிக்கை இதழை எடுத்துப்பாருங்கள்//

    அதெயெல்லாம் பார்க்க நாங்களென்ன நடுநிலைவாதிகளா...கழக கண்மணிகளைய்யா, கழக கண்மணிகள்...எங்களுக்கு தெரிந்தது, தெரிந்ததாக காட்டிக்கொள்வது தினகரன், முரசொலி, மட்டுமே....தலைவர் 'சோ' வை எதிர்க்கிறார் எனவே நாங்களும் எதிர்க்கிறோம்...

    ReplyDelete
  22. //அந்த தேர்தல் முடிந்த பின்னால் வந்த துக்ளக் பத்திரிக்கை இதழை எடுத்துப்பாருங்கள்.//

    ஆமா. ஆமா. எதிர்த்து கிழிச்சிட்டாரு :-)

    பத்ரியும் இதுவரை அதிமுகவையோ, அதிமுக தலைமையையோ குறை சொல்லியோ, எதிர்த்தோ எதுவும் சொன்னதில்லை.

    ஒரு வேளை அதிமுக உண்மையிலேயே ஜனநாயக பாதையில் தான் நடக்கிறதோ?

    ReplyDelete
  23. //எதிர்கட்சிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உரத்து கூறவேண்டும். அவ்வாறு உரத்துக் கூறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். //

    தயிர்சாதங்களுக்கு திமுக ஆட்சி வரும்போது மட்டும் தான் இந்த மாதிரி உரிமைக்குரல் எழுப்ப தோணுமா?

    ReplyDelete
  24. யாரோ ஓர் அனானிமஸ் இவ்வாறு சொல்லியுள்ளார்:

    //பத்ரியும் இதுவரை அதிமுகவையோ, அதிமுக தலைமையையோ குறை சொல்லியோ, எதிர்த்தோ எதுவும் சொன்னதில்லை.//

    நான் 2003-லிருந்து வலைப்பதிவில் எழுதி வருகிறேன். நிறைய உதாரணங்களைக் கொடுக்க முடியும். ஒரு சில உதாரணங்கள் மட்டும் இப்பொழுது. முழுதாகத் தேட நேரமில்லை.

    1. தினம் ஒரு அறிவிப்பு
    2. ஆவின் திண்டாட்டம்
    3. ஜெயலலிதா - கரன் தாபர் HardTalk
    4. கோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு
    5. சீரணி அரங்கம் இடிப்பு

    இன்னமும் பல பதிவுகள் இருக்கும். 2003, 2004-ம் வருடங்களிலிருந்து மட்டும் திரட்டிய சில பதிவுகள் இவை.

    ReplyDelete
  25. //பத்ரியும் இதுவரை அதிமுகவையோ, அதிமுக தலைமையையோ குறை சொல்லியோ, எதிர்த்தோ எதுவும் சொன்னதில்லை.//


    http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_28.html

    ReplyDelete
  26. //என்மேல் நம்பிக்கையை இல்லாததைவிட உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்னவோ.

    நான் முகத்தைக் காட்டிப் பேசும்போது என்னோடு உரையாடுபவரும் முகத்தைக் மறைக்காமல் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாதா? நம்பிக்கையான சில வலைப்பதிவுகளைத் தவிர, அனாமதேயங்கள் புழங்கும் இடங்களில் பொதுவாக அடியெடுத்து வைப்பதில்லை. இனி முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

    எப்படியானாலும், ஓகை வாழ்த்தியிருப்பதைப் போல "வெற்றி உமதே". வெற்றிகள் தொடரட்டும்.//

    திரு சுந்தரமூர்த்தி,

    நான் அனாமதேயமாக இருப்பதைப் பற்றி நானே கவலைப்படாதபோது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். பத்ரி அனாமதேயமாக கருத்தை சொல்ல இங்கே அனுமதித்திருக்கிறார். நான் எழுதுகிறேன். அனுமதிக்கவில்லை என்றால் நான் எழுதியிருக்க மாட்டேன்.

    முகத்தை காட்டி பேசும்போது, உங்களது எழுத்தில் உள்ள ஓட்டைகளை காட்டும்போது அவற்றை ஒத்துகொண்டு மேலே பேசும் பண்பு இருந்தால் நிச்சயம் பேசலாம். அது பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. விவாதப்பொருளுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை இழுத்துவந்து விவாதத்தை இன்னொரு திசையில் திசை திருப்பும் வேலை தான் நடக்கும். அதனாலேயே விவாதப்பொருளை மட்டுமே குறித்து பேச அனாமதேய பெயர் கொண்டு பேசும் நிலை வருகிறது.

    அவன் அது செய்தானே அவனை கேட்டாயா என்று இங்கே சிலர் நீட்டி முழக்குவதை காணலாம். அது வெறுமே திசை திருப்பும் வேலை.

    அது போலத்தான் எனது அனாமதேய கருத்து பற்றிய உங்களது ஆதங்கமும்.

    ஒரு கொலையை துப்பு துலக்கவில்லை என்பதால் எந்த கொலையையும் துப்பு துலக்கக்கூடாது என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

    இன்றைக்கு நடந்த ஊரறிந்த திருட்டை கண்டியுங்கள் முதலில்.

    நன்றி

    ReplyDelete
  27. திருவாளர் "வெற்றி",
    //நான் அனாமதேயமாக இருப்பதைப் பற்றி நானே கவலைப்படாதபோது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். பத்ரி அனாமதேயமாக கருத்தை சொல்ல இங்கே அனுமதித்திருக்கிறார். நான் எழுதுகிறேன். அனுமதிக்கவில்லை என்றால் நான் எழுதியிருக்க மாட்டேன்.
    //

    பத்ரி அநாமதேயங்களை அனுமதிப்பது குறித்தோ. நீங்கள் அநாமதேயமாக எழுதுவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. நான் எதிர்பார்ப்பது "என்னோடு உரையாடுபவரும் முகத்தைக் மறைக்காமல் பேசவேண்டுமென்று" மட்டும்தான். நீங்கள் அதற்குத் தயராக இல்லையென்றால் உங்களோடு மேற்கொண்டு பேச ஏதுமில்லை. நீங்கள் என் சார்பை கண்டுபிடிப்பது, என்மீது நம்பிக்கை வைக்காமலிருப்பது, நான் சொல்வதை யாராவது நம்பிவிடாமல் தடுப்பது போன்றவை உங்கள் பிரச்சினைகள். என் கவலைகளில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பை இனி அநாமதேயங்களுக்கு இங்கோ அல்லது அநாமதேயங்களை அனுமதிக்கும் வேறு பதிவுகளிலோ அளிக்கமாட்டேன். அவ்வளவே.

    ReplyDelete
  28. எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
    -அய்யன் திருவள்ளுவன்

    :-)
    அது அனாதை, நியோ மாதிரியான அனானி நண்பர்களாக இருந்தாலும்
    :-))

    ReplyDelete