மாஃபா எனும் மனிதவள நிறுவனத்தை நடத்தி வரும் பாண்டியராஜன், அவர் மனைவி லதா, உடன் பணியாற்றும் முஸ்தஃபா ஆகியோர் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.
இந்த அறக்கட்டளை சென்னையில் ஒரு பள்ளியை நடத்துகிறது. பல மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டுகிறது. ஆண்டுதோறும் சென்னையைச் சேர்ந்த சிறந்த பத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 'எழுச்சி விருது' என்ற விருதினைக் கொடுக்கிறார்கள். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு 'இளம் சாதனையாளர் விருது' கொடுக்கிறார்கள்.
இளம் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக நான் இருந்தேன். விருது வழங்கும் விழா 25 நவம்பர் 2006, சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த விருதைப் பற்றி எந்த அளவுக்கு தமிழகம் முழுதும் தெரிந்திருந்தது என்று தெரியவில்லை. முந்நூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. கல்வித்துறை (எழுத்து, அறிவியல், கணிதம், பிற பாடங்கள்), விளையாட்டு, கலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சாதனை செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது அதிகபட்சம் 11-வதில் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதல் கட்டத்தில் விண்ணப்பங்களை சலித்து சுமார் 40 விண்ணப்பங்களை என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து 10-ஐ நான் தேர்வு செய்ய வேண்டும்.
கல்வி, விளையாட்டு இரண்டு துறைகளிலும், துறைக்கு மூவர்; கலைத்துறையிலிருந்து நான்கு பேர் என்று தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்.
சென்னையைச் சேர்ந்த பலருக்கு பல்வேறு துறைகளில் பரிமளிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சிறுவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதனால் பிற மாவட்ட மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா வெயிட்டேஜ் கொடுப்பது என்று முடிவு செய்தேன். பெண்களுக்கு என்று தனி வெயிட்டேஜ் எதுவும் கொடுக்கவில்லை; ஆனால் கடைசித் தேர்வில் சொல்லிவைத்தாற்போல 5 ஆண், 5 பெண் என்று வந்தது.
உடல் குறைபாடு உள்ளோர்க்கு என்று தனியாகத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் விண்ணப்பங்களையும் சாதனைப்பட்டியலையும் பார்த்தபோது ஒரே ஒருவர்தான் அப்படிப்பட்ட பின்னணியில் விண்ணப்பித்திருந்தார். அவர் தன் சாதனையின் அடிப்படையிலே தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 25 நவம்பர் அன்று நடந்த விழாவில் கவிஞர் கனிமொழியிடம் விருது பெற்றார்கள்.
-*-
ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் சொர்ணம்மாள் தினம் என்னும் இந்த விழாவில், நிறையக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பெரும்பாலும் சொர்ணம்மாள் அறக்கட்டளைப் பள்ளி மாணவர்களே கலை நிகழ்ச்சிகளைச் செய்தார்கள். ஆனால் ஒரு நிகழ்வு கூத்துப்பட்டறையின் ந.முத்துசாமி வடிவமைத்திருந்த 'துடும்பாட்டம்' ஆக இருந்தது.
துடும்பாட்டம் என்பது பலவித பறைகளைக் கொண்டு அடிக்கப்படும் ஒத்திசைவு ஆட்டம். மேட்டுப்பாளையத்துக்கு அருகே உள்ள ஓர் இடத்தில் தெலுங்கு பேசும் தலித் மக்களது பாரம்பரிய இசை ஆட்டம்.
சுமார் 8 பேர் என்று நினைக்கிறேன். அரை வட்டமாக நின்றுகொண்டு நான்கு விதமான வெவ்வேறு பறைகள், தப்பட்டைகளைக் கொண்டு அடித்தவாறும் அவ்வப்போது குதித்தவாறும் இருந்தனர். ஆட்டம் என்பது குறைவுதான். ஓசைதான் பிரதானம்.
-*-
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ் (இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்), வாசிமலை (தானம் அறக்கட்டளை), கவிஞர் கனிமொழி, டாக்டர் கலாநிதி ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.
நிகழ்ச்சி பற்றிய பத்திரிகைச் செய்திகள்:
Young Achiever awards presented
சொர்ணம்மாள் அறக்கட்டளை 6-ம் ஆண்டு விழா
விண்திகழ்க!
4 hours ago
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்படி ஒரு அறக்கட்டளை இருப்பது இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteவளர்க அவர்கள் நற்பணி.