[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.]
நான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற கனவுகள்தான் விதைக்கப்பட்டன.
நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பொறியியல்/மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும். அது போதும்.
1970, 1980களில் இதுபோன்ற எண்ணம் மாதச்சம்பள மத்தியதர வகுப்பினரிடையே இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களது கனவுகள் குறுகியவை. மாதச்சம்பளம் மட்டும்தான் அந்தக் கனவுகளில் முதன்மையாக இருந்தது. பொறியியல் படித்தால் உயர்ந்த வேலை கிடைக்கும். மருத்துவம் படித்தால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கும். அல்லது, மாதச்சம்பளமாக இல்லாவிட்டாலும், சொந்தத் தொழிலில் தினசரி வருவாய் இருக்கும். மனிதர்கள் உள்ளவரை வியாதிகளும் உண்டுதானே?
தொழில் தொடங்குவது என்பது இவர்களது கனவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. தொழில் தொடங்க முதல் வேண்டும். வசதியான பின்னணி இல்லாத நிலையில் அதைப்பற்றி ஏன் கனவு காண்பானேன்?
தொழில் தொடங்க மனோதிடம் வேண்டும். லாபம் இருக்கலாம், ஆனால் நஷ்டமும் இருக்குமே? கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது? கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது? கடன் வாங்குவதே தவறு என்ற பின்னணியில் வந்தவர்களாயிற்றே இவர்கள்?
தொழில் செய்வதானால் அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் செய்ய வேண்டியிருக்கும். யாரோ ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீசரிடம் கைகட்டி, வெட்கி, தலைகுனிந்து நிற்பதற்குபதில் நாமே அந்த ஆஃபீசராக ஏன் இருக்கக்கூடாது?
தொழில் செய்வதென்றால் நிறைய பேரை வேலைக்கு வைத்து மேய்க்க வேண்டும். அவர்கள் பிரச்னை செய்யும் ரகமாக இருப்பார்கள். கொடி தூக்குவார்கள். விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? நம் காசைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
இப்படி எதை எடுத்தாலும் சமாதானம் சொல்லி, பிரச்னைகளை மட்டுமே முன்னுக்கு நிறுத்தி, நத்தை கூட்டுக்குள் உடலைச் சுருக்கிக்கொள்வதைப்போல தானுண்டு, தன் வேலையுண்டு, மாதச்சம்பளமுண்டு என்று இருக்க, வாழப் பழகிக்கொண்ட மக்கள்.
இவர்களிடத்தில் இருந்துதான் புதிய தொழில்முனைவோர் முளைக்கப்போகிறார்கள் என்று இவர்கள் அன்று அறிந்திருக்க மாட்டார்கள்.
*
தொழில்முனைவோர் என்ற சொல் ஆங்கிலச் சொல்லான 'entrepreneur' என்பதற்கு இணையாகத் தமிழில் புழங்கப்படுகிறது. இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. எந்தக் கலாசாரத்திலும் முனைந்து தொழில் செய்வோர் இருந்து வந்துள்ளனர். எனவே மொழியைப் பற்றியோ கலாசாரத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டாம். இந்தச் சொல்லின் தமிழ் வேரை ஆராய்வதற்குபதில் ஆங்கிலச் சொல்லுக்கு இன்று கொடுக்கப்படும் பொருளை ஆராய்வது உபயோகமானது.
ஒரு தொழில்முனைவர், தொழிலில் உள்ள அபாயத்தைக் கண்டு (ரிஸ்கைக் கண்டு) பயப்பட மாட்டார். சொல்லப்போனால், தொழில் அபாயம் அவருக்குப் பிடிக்கும். மலையேற்றம், பஞ்சீ ஜம்ப்பிங் (எலாஸ்டிக் கயிறைக் காலில் கட்டிகொண்டு மலையிலிருந்து தலைகீழாகக் குதிப்பது), கடல் அலைகள்மீது சர்ஃப் போர்டில் மிதந்து செல்வது, ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள், அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் ஜிவ்வென்று பரவும் அட்ரினலின் ஹார்மோன் கொடுக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோன்று தொழில் அபாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபுதிய தொழில்களில் இறங்கி 'ஒரு கை' பார்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு தொழில்முனைவர் புதுமையாக ஒன்றைச் செய்வார். யாரும் எதிர்பார்க்காத வாய்ப்பை இவர் மட்டும் கவனிப்பார். அந்த வாய்ப்பை ஒரு கருவியாக, ஒரு சேவையாக, ஒரு முழுதான தொழிலாக மாற்ற முனைவார். ஹென்றி ஃபோர்ட் வருங்காலத்தில் கார்களுக்குப் பெரும் தேவை இருக்கும் என்பதைக் கண்டறிந்து மிக அதிகமான எண்ணிக்கையில், தரமான, மக்கள் விரும்பும் கார்களை எப்படி உருவாக்குவது என்ற செயல்முறையைக் கண்டுபிடித்தார் அல்லவா? அவர் ஒரு தொழில்முனைவர். அவருக்கு முன்னும், அவர் காலத்திலும் பலரும் கார்களைச் செய்தனர். ஆனால் யாருக்கும் ஃபோர்டுக்குத் தோன்றிய தொழில்முறை (அசெம்ப்ளி லைன்) தோன்றவில்லை.
ஒரு தொழில்முனைவர் 'முதலாளி' என்ற பெயர் குறிப்பிடுவதுபோல நடந்துகொள்ள மாட்டார். அதாவது அலுவலகம் வந்து, பிறரை அதிகாரம் செய்து, மாலை ஆனதும் கிளப்புக்கு சீட்டாடச் செல்லும் சீமான் அல்லர் இவர். அடிமட்டத் தொண்டன் செய்வதைச் செய்யக்கூடியவர். அலுவலகத்தில், தொழிற்சாலையில் உள்ள அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்த்து அவர்களிடத்தில் மாறாத விசுவாசத்தை உருவாக்குபவர். தன்மீது மதிப்பை உருவாக்குபவர்.
ஒரு தொழில்முனைவர் பணத்தில் புரளவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் மிக உயரத்தை எட்டிய தொழில்முனைவர்கள் யாருமே பணக்காரர்களாகப் பிறந்ததில்லை. நடுத்தரவர்க்கத்தினர்தான். அம்பானி, நாராயண மூர்த்தி, பில் கேட்ஸ், ஹென்றி ஃபோர்ட் என்று யாராக இருந்தாலும் சரி. எனவே தொழிலைத் தொடங்க பெரும்பணம் என்பது தேவையே இல்லை. ஆனால் தொழில்முனைவோர் பணத்தைப் பிறரிடமிருந்து எப்படிப் பெறுவது என்பதை அறிந்திருப்பார்கள்.
ஒரு தொழில்முனைவர் தன் வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக வெற்றியைப் பெற வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் பலமுறை இவர் தோல்வி அடைந்திருப்பார். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டிருக்க மாட்டார். மனத்தளவில் எந்தவிதத்திலும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்.
*
மேற்கு உலகம் தொழில்மயமான ஆரம்பகாலத்தில் நிலச்சுவான்தார்கள்தாம் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள். பின்னர் தொழிற்சாலையில் பொருள்கள் உற்பத்தி செய்யும் முதலாளிகள் என்ற தனிவர்க்கம் உருவானது. நிலச்சுவான்தார்களைவிட இவர்கள் வலுவான நிலையை அடைந்தார்கள். எப்படி நிலச்சுவான்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாள்களை நசுக்கிச் சுரண்டினார்களோ, அதேபோல ஆரம்பகாலத்தில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள். ஆனால் நாளடைவில் அரசுகள் இயற்றும் சட்டங்களாலும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு உருவாக்கிய தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் நிலைமை முன்னெறியுள்ளது.
ஆனால் தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே தொழிலாளர்களையும் முதலாளிகளாகக் கருதும் தன்மை வாய்ந்தது. இந்தத் தொழில்கள் பலவும், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் எனப்படும் முறைமூலம் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரையும் (அல்லது பலரையும்) நிறுவனத்தின் பங்குதாரர்களாகச் செய்கிறது. முதலாளி, தொழிலாளர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நாளடைவில் நிலைத்துநிற்கும்.
*
இந்தத் தொழில்முனைவோர் என்ன மாதிரியான தொழிலைச் செய்கின்றனர்? இதற்கு எத வரைமுறையும் கிடையாது. சோப்புத்தூள் செய்யலாம். எலெக்டிரானிக் கருவிகளைச் செய்து விற்கலாம். பொம்மை செய்யலாம். சாக்லேட் செய்யலாம். தலைமுடி வெட்டும் சலூன்களை நாடெங்கும் நிர்மாணிக்கலாம். நாடெங்கும் சுகாதாரமான மொபைல் கழிப்பிடங்களைக் கட்டி கட்டண முறையில் செயல்படுத்திப் பணம் செய்யலாம்.
அட, இதில் என்ன புதுமை உள்ளது? நாட்டில் சோப்புத்தூளே இல்லையா? சாக்லேட் இல்லையா? இதென்ன என்னைப்போய் அம்பட்டன், தோட்டி வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனிப்போம்.
புதுமை என்பது புதிய கருவியைச் செய்வதில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ராக்கெட் செய்தாலும் ரப்பர் பேண்ட் செய்தாலும், செய்வதில் ஏதேனும் புதுமை, அதனை விற்பனை செய்வதில் ஏதேனும் புதுமை, அதன்மூலம் மக்களுக்கு அதிகப்படி நன்மை - இதுதான் தொழில்முனைவோருக்கு அவசியம். நம் நாட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்க தேங்காய் நார், சாம்பல், கரித்தூள் என்று இதுநாள்வரை பயன்படுத்தி பாத்திரங்களை வீணடித்தனர். இப்பொழுது ஸ்காட்ச் பேட், திரவ சோப் என்று வந்துள்ளன அல்லவா? ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா? அது புதுமை. இந்த முறையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தொழில்முனைவரின் திறமை.
அடுத்து, ஒரு தொழில்முனைவர் தான் செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். இது அவசியமா, தேவை உள்ளதா, ஒரு குறிப்பிட்ட முறையில் இந்தச் சேவையைத் தருவதன்மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா? அவ்வளவுதான்.
*
இந்தத் தொழில்முனைவோர் எங்கிருந்து உருவாகின்றனர்? எப்படி உருவாகின்றனர்? இதற்கு என்று தனியான படிப்பு ஏதெனும் உள்ளதா?
இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன், புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தனர். தொழில்களிலும் பெருமளவு புதுமையோ திறமையோ இருக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பெற மூலதனம் தேவைப்பட்டது. வங்கிகள், வென்ச்சர் கேபிடல் ஆகியவை இல்லாத நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுதந்தரத்துக்குப் பிறகும் இதே நிலைதான் தொடர்ந்தது.
நடுநடுவே ஓரிரு கீழ்மட்ட, நடுத்தரப் பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களும் தங்களது விடாமுயற்சியின்மூலம் தொழில்முனைவோராக மிளிர முடிந்தது.
ஆனால் 1990களுக்குப் பிறகு தொழிமுனைவோராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது அதிகத்தேவை நல்ல படிப்பு, உலக ஞானம், கம்யூனிகேஷன் திறன், ஆர்வம், விடாமுயற்சி ஆகியவையே. கொஞ்சம் பணம் இருந்தால் போதும். கொஞ்சம் என்றால் எவ்வளவு? ஓரிரு லட்சங்கள் இருந்தால்கூடப் போதும். அதனைவிடக் குறைந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்கமுடியும்.
எந்தப் பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும்? எந்தப் பின்னணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெரு நகரங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறு கிராமங்களில் மிகக்குறைந்த வாய்ப்புகள். இது இன்றைய நிலை. இந்த நிலை அடுத்த சில வருடங்களில் மாற்றம் அடையலாம்.
இதற்கென படிப்புகள் ஏதும் உள்ளனவா? சில கல்வி நிறுவனங்கள் Entrprenuership துறையில் பாடங்களை நடத்துகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதுபோன்ற பாடங்கள் அபத்தமானவை என்றே நினைக்கிறேன். சொல்லிக்கொடுப்பதால் தொழில்முனையும் திறன் வந்துவிடாது. பிற தொழில்முனைவோரின் வாழ்க்கையைக் கூர்ந்து படிப்பதாலும், அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலும், தண்ணீரில் குதித்து தானே நீந்தக் கற்றுக்கொள்வதாலுமே இது கிடைக்கிறது.
*
மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக்குப் போவதற்கு முன்னமேயே தங்கள் எதிர்காலக் கனவுகளைக் காணத் தொடங்குகிறார்கள். தொழில்முனையும் கனவு அந்த நேரத்திலேயே வந்துவிடவேண்டும். டாக்டராகுபவர்கள் டாக்டராகட்டும். இஞ்சினியர் ஆகவிரும்புவோர் இஞ்சினியராகட்டும். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் ஆக ஒரு வகுப்பின் 5 சதவிகிதம் மாணவர்களாவது முயற்சி செய்யவேண்டும்.
வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம் நம் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளைத் தரப்போகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி முனைந்து தொழில் செய்யுங்கள்.
Wednesday, April 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
அருமை....
ReplyDeleteபள்ளிக்கூட மாணவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலே, ஜார்கன் எல்லாம் போட்டு பயமுறுத்தாமல் எழுதிய விதமும் அருமை...
எளிய தமிழில் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteதேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2007/04/19/thozilmunaivor/
கலக்கல் கட்டுரை !!!
ReplyDelete