Thursday, August 14, 2008

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3

[பாகம் 1 | பாகம் 2]

ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றழுத்த மாறுபாட்டால் ஒரு விசையை உருவாக்கி, ஈர்ப்பை எதிர்கொண்ட பறப்பனவற்றைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதுதான் அடிப்படைத் தத்துவம். ஈர்ப்பு விசைக்கு மாற்றாக எதாவது ஒரு விசையை உயிர்கள் தங்களது உடல்மூலம் உருவாக்கவேண்டும்.

இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்குமுன், ஈர்ப்பு விசை போல அடிப்படையான விசைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் நலம்.

***

எடையுள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று தம்மை நோக்கி இழுப்பதால் (எடை) ஈர்ப்பு விசை ஏற்படுவதுபோல, ஒன்று நேர் மின்னூட்டம் (+), மற்றொன்று எதிர் மின்னூட்டம் (-) கொண்டதாக இருக்கும் இரண்டு பொருள்களுக்கு இடையே மின் ஈர்ப்பு விசை ஏற்படும். இதற்கு நிலை மின் விசை (electrostatic force) என்று பெயர்.

எப்படி, வான்வெளியில் ஒரு கனமான நட்சத்திரத்தைச் சுற்றி பல கோள்கள், கற்கள் ஆகியவை எடை ஈர்ப்பு விசை காரணமாகச் சுற்றி வருகின்றனவோ, அதைப்போன்றே ஓர் அணுவுக்குள் நேர் மின்னூட்டம் கொண்ட அணுக்கருவை (nucleus), எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுக்கள் (electrons) சுற்றி வருகின்றன.

நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானுக்கும் எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுவுக்கும் இடையேயான நிலை மின் விசை மிகவும் வலுவானது. அதே இரண்டு பொருள்களுக்கு இடையேயான எடை ஈர்ப்பு விசை, ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.

சில வெவ்வேறு வகை அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. உதாரணத்துக்கு சோடியம் அணுவும் குளோரின் அணுவும் ஒன்று சேர்ந்து சோடியம் குளோரைட் (அல்லது தசாவதாரம் படத்தால் மிகவும் புகழ்பெற்ற NaCl) எனப்படும் சாதாரண கடல் உப்பு மூலக்கூறு உருவாகிறது. ஹைட்ரஜன் வாயுவும் ஆக்சிஜன் வாயுவும் இணையும்போது, நீர் உருவாகிறது. ஒரு நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் உள்ளன.

இவ்வாறு மூலக்கூறுகள், பலவகையான வேதிப் பிணைப்புகள் (chemical bonds) மூலம் உருவாகின்றன. சோடியம் குளோரைட், அயணிப் பிணைப்பு (ionic bond) என்னும் வகையின்மூலம் உருவாகிறது.

சோடியம், பொடாஷியம் போன்ற அணுக்களில், அவற்றின் அணுக்கருக்களைச் சுற்றி பல மின்னணுக்கள் பல்வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் வெளிவட்டத்தில் உள்ள ஒரு மின்னணு, விட்டால் ஓடிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. நம்மூர் இலக்கிய வட்டங்களில்கூட இதைப் பார்க்கலாம். சில இலக்கிய பிரபலங்களைச் சுற்றி, “நகரவே மாட்டேன்” என்ற நிலையில் உள்வட்டத்தில் சில சீடர்கள் இருப்பார்கள். வேறு சிலரோ, “எப்படா, கழட்டிக்கொண்டு ஓடிவிடலாம்” என்ற நிலையில் வெளிவட்டத்தில் இருப்பார்கள்.

அதேபோல, குளோரின், ஃபுளோரின் போன்ற அணுக்களில், சீட்டுக்கட்டு விளையாடும்போது ஒரு கை குறைவதுபோல, ஒரு மின்னணு குறையும். “அந்த மின்னணுவும் வந்தா ஆட்டம் களை கட்டுமே” என்று இவை தேடிக்கொண்டிருக்கும். அதனால்தான் இயற்கையிலேயே சோடியத்துக்கும் குளோரினுக்கும் ஒரு ‘ஈர்ப்பு'. இரண்டையும் பக்கத்தில் கொண்டுபோய் விட்டால், பஞ்சு-நெருப்பு உதாரணமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அவ்வளவு தன்னிச்சையாக, சூடு கீடு செய்யாமலேயே இரண்டும் பற்றி எரிந்து, உப்பாகும். ஆனால் பொதுவாக நாம் இவ்விரண்டையும் அவற்றின் தனிம வடிவில் வினைபுரிய வைப்பதில்லை. ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு காரம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஊற்றிக் கலந்தால் அதிலிருந்து சோடியம் குளோரைடு உப்பும், நீரும் உடனடியாக, தன்னிச்சையாக உருவாகும்.

அயனி என்றால் ஒரு மின்னணுவை அல்லது சில மின்னணுக்களை விட்டொழித்த அணு அல்லது அவற்றைச் சேர்த்துக்கொண்ட அணு. இரு அயனிகளுக்கு இடையேயான பிணைப்புதான் அயனிப் பிணைப்பு. சோடியம் அணுவிலிருந்து ஒரு மின்னணு ஓடிப்போய்விடுவதால் உருவாகும் சோடியம் அயனி (Na+) நேர் மின்னூட்டம் கொண்டது. குளோரின் அணுவுடன் ஒரு மின்னணு சேர்ந்துகொள்வதால் உருவாகும் குளோரின் அயனி (Cl-), எதிர் மின்னூட்டம் கொண்டது. இந்த நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் கொண்ட அயனிகளுக்கு இடையே உருவாகும் நிலை மின் விசைதான் அயனிப் பிணைப்பை உருவாக்குகிறது.



அயனிப் பிணைப்பு மிகவும் வலுவானது. ஆனால் எல்லா மூலக்கூறுகளும் அயனிப் பிணைப்பால் மட்டுமே உருவானவை அல்ல. அயனிப் பிணைப்பில் ஓர் அணு தன்னுடைய மின்னணுவை முழுவதுமாக விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். மற்றொரு அணு, அப்படித் தனக்குக் கிடைக்கும் மின்னணுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதாவது பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் இருவேறு தன்மை உடையனவாக இருக்கவேண்டும். இதை மேலும் புரிந்துகொள்ள “தனிம வரிசை அட்டவணை” (periodic table), அல்லது மின்னணுக்களின் சுற்றுப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் எத்தனை மின்னணுக்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் போன்ற பல விஷயங்களை ஆராயவேண்டும். அதைப்பற்றி இந்தத் தொடரில் பேசப்போவதில்லை. வேறொரு கட்டத்தில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

இப்போது மற்றொரு வகையான அணுப் பிணைப்பைப் பார்ப்போம். கரி (கார்பன்), ஆக்சிஜன் ஆகியவை இணைந்து கரியமில வாயுவை (CO2) உருவாக்குகின்றன. இன்று புவி சூடேற்றத்துக்குக் காரணமான வில்லன் என்று எல்லோராலும் தூற்றப்படும் இந்தக் கரியமில வாயுவை நொடிக்கு ஒரு தரம், நீங்களும் நானும் மூச்சுவிடும்போது வெளியேற்றுகிறோம். நமது ஈருருளி வண்டிகளும் நான்குருளி வண்டிகளும் தூவும் கரும்புகையில் பெரும்பான்மை இந்தக் கரியமில வாயுதான்.



நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இணைந்து நைட்ரஸ் ஆக்சைடு (N2O) என்ற வாயுவை உருவாக்குகின்றன. இதை முகர்ந்தால் முகத்தில் உள்ள நரம்புகள் சுளுக்கிக்கொண்டு நாம் சிரிப்பதுபோல இருக்குமாம். (நான் செய்துபார்த்தது இல்லை.) அதனால் இதற்கு சிரிப்பு வாயு என்று பெயர்.

இந்தச் சேர்மங்களில் எந்த அணுவும் தன்னுடைய மின்னணுவை முழுமையாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. “எனக்கு உன்னுடையது வேண்டும்” என்று அடுத்தவருடையதைக் கேட்கின்றன. ஆனால் அடுத்ததும் அப்படியே! ஆக, இரண்டு அணுக்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். “சரி, உனக்கும் வேண்டும், எனக்கும் வேண்டும். எனவே இருவரும் நமது மின்னணுக்களை பங்குபோட்டுக்கொள்வோமே.” இருவரது வெளிச்சுற்றுகளிலும் இருக்கும் சில மின்னணுக்கள் இரு அணுக்களையும் சேர்ந்து சுற்றுகின்றன. இதன் விளைவாக உருவாகும் பிணைப்புக்கு “சக பிணைப்பு” (co-valent bond) என்று பெயர்.

பல அணுக்கள் தனித்தனியாக இயங்கக்கூடியவை. ஆனால் வேறு பல அணுக்கள், நிலைத்தன்மை உடையதாக இருக்க இரட்டை இரட்டையாக சேர வேண்டியுள்ளது. சோடியம், பொடாஷியம் போன்றவை தனித்தனி அணுக்களாக இருக்கும். ஆனால் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 என்று இரட்டை இரட்டையாக இருக்கும். அப்போது அவை தமக்குள்ளாக உருவாக்கும் பிணைப்புகளும் சக பிணைப்புகள்தாம்.

இந்த சக பிணைப்புகளை சற்றே ஆழமாகப் பார்க்கலாம்.

இரண்டு அணுக்களில் ஒன்று முழுமையாகத் தன்னுடைய மின்னணுவை விட்டுக்கொடுக்காவிட்டாலும், பெரும்பான்மை நேரம் அதன் மின்னணு அதனிடத்தில் இல்லாமல் பங்காளியின் இடத்தில் இருக்கும். உதாரணத்துக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) என்ற சேர்மத்தை எடுத்துக்கொள்வோம். சோடியம், குளோரின் கதையில் சோடியத்திடமிருந்து பிரிந்து அந்த மின்னணு முழுவதுமாகவே குளோரின் பக்கம் வந்துவிடும். ஆனால் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில், ஹைட்ரஜன் தனது மின்னணுவை முழுவதுமாக விடாவிட்டாலும், அந்த மின்னணு கிட்டத்தட்ட குளோரின் பக்கம்தான் இருக்கும்.



இங்கு ஹைட்ரஜன் நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும், குளோரின் எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும் இயங்குகின்றன. இதனால் இவற்றுக்கிடையே மின் ஈர்ப்பு ஏற்பட்டு நிலை மின்விசை உருவாகிறது. இதுபோன்ற பிணைப்புக்கு இருமுனை-இருமுனை விசை (dipole-dipole force) என்று பெயர். இருமுனை என்பது இரு மாறு மின்னூட்ட துருவங்கள் அல்லது இரு எதிர் காந்தத் துருவங்கள். இவற்றுக்கிடையேதான் ஈர்ப்பு சக்தி ஏற்படும். அயனிப் பிணைப்பும் இதுபோன்றதுதான். ஆனால் மிக வலுவானது.

இந்த இருமுனை-இருமுனை விசையிலும் ஒரு விசேஷ வகை உள்ளது. குளோரினுக்கு பதிலாக, ஃப்ளூரின், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற அணுக்களுடன் ஹைட்ரஜன் இணையும்போது இந்தப் பிணைப்பு மேலும் வலுவாகிறது. ஹைட்ரஜனும் ஃப்ளூரினும் சேர்ந்து ஹைட்ரோஃப்ளூரிக் அமிலத்தை (HF) உருவாகி்றது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீர் (H2O) உருவாகிறது. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் சேர்ந்து அம்மோனியா (H3N) உருவாகிறது. இந்த மூன்று மூலக்கூறுகளிலும் ஹைட்ரஜனது மின்னணுவை அதன் பங்காளிகள் சற்று அதிகமாகவே பிடுங்கிக்கொள்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் இருமுனை-இருமுனை விசை, சாதாரண இருமுனை-இருமுனை விசையைவிட அதிகமானது. இதற்கு “ஹைட்ரஜன் பிணைப்பு” என்ற விசேஷப் பெயர் உண்டு.

ஒரே அணு, நிலைத்தன்மையை அதிகரிக்க, இரட்டை இரட்டையாகத் தோன்றும் என்று மேலே பார்த்தோம் அல்லவா? ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 இப்படித்தான் இருக்கும் என்றோமல்லவா? சிறு சிறு இடைவெளிகளில், இந்த இரட்டையரில் ஒருவர் மற்றவரிடமிருந்து ஒரு மின்னணுவைத் திருடிக்கொள்வார். அந்தக் கணத்தில் ஓர் ஆக்சிஜன் அணு நேர் மின்னூட்டத்துடனும், மற்றொன்று எதிர் மின்னூட்டத்துடனும் இருக்கும். அப்போதும் அவற்றுக்கு இடையில் இருமுனை-இருமுனை விசை தோன்றும். ஆனால் இந்த விசை கணப்பொழுதில் மறையக்கூடியது. மிகவும் தாற்காலிகமானது. இப்படிப்பட்ட விசையை “கலையும் விசை” (dispersion force) என்கிறோம். உருவாகி, உருவாகி, கலைந்துகொண்டே இருக்கும் இருமுனை இது.



***

இவ்வாறு சக பிணைப்புகளில், ஹைட்ரஜன் பிணைப்பு விசை, இருமுனை-இருமுனை பிணைப்பு விசை, கலையும் விசை ஆகிய அனைத்தையும் சேர்த்து வான் டெர் வால்ஸ் விசைகள் என்கிறோம்.

யோஹானஸ் வான் டெர் வால்ஸ் என்பவர் நெதர்லாந்து நாட்டுக்காரர். இவர் வாயுக்கள், திரவங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான் மேற்கண்ட விசைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டறிந்தார்.

அது என்ன, திரவத்துக்கும், வாயுக்கும், மேலே சொன்ன விசைகளுக்கும் சம்பந்தம் என்கிறீர்களா? உண்டு!

எந்த மூலக்கூறில் வெறும் “கலையும் விசை” மட்டும் உள்ளதோ, அது சாதாரண அறை வெப்பத்தில் வாயுவாக இருக்கும். ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், குளோரின் ஆகியவை எல்லாம் வாயுக்களே. ஆனால் எப்போது மூலக்கூறுகளுக்கு இடையே விசை அதிகமாக உள்ளதோ, அப்போது அவை நெருக்கமாக இருக்கும் காரணத்தால் திரவமாக ஆகும். அதனால்தான் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு வாயுக்கள் இணைந்து உருவாக்கும் நீர் என்ற மூலக்கூறு ஹைட்ரஜன் பிணைப்பு விசை காரணமாக திரவமாகிறது. அதைப்போன்றேதான் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (பிற அமிலங்களும் அப்படியே) திரவமாக உள்ளது.

அறை வெப்பத்தில் ஒரு பொருள் (தனிமம் அல்லது சேர்மம்) வாயுவாக இருக்குமா, திரவமாக இருக்குமா, திடமாக இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழவேண்டும். ஒரு திடப்பொருள் படிக வடிவில் (crystal) இருக்குமா அல்லது தூள் நிலையில் (amorphous) இருக்குமா என்பது அடுத்த பெரும் கேள்வி. இவற்றுக்குள் புக இங்கே நேரம் கிடையாது.

சரி, இந்த விசைகளை ஏன் இவ்வளவு விலாவரியாகப் பார்த்தோம்?

அவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

10 comments:

  1. பள்ளிக்கூடத்துல எங்க வாத்தியார் கூட இவ்வளவு அழகா பாடம் எடுத்தது கிடையாது.

    ReplyDelete
  2. ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிரினங்கள் பற்றிச் சொல்லும் போது மனிதன் தண்ணீரில் நீந்துவது கூட பறவைகள் காற்றில் பறப்பது போன்றது தானே. என்ன தண்ணிரின் surface resistance காற்றை விட ஜாஸ்தியாக இருப்பதால் மனிதனால் பறக்க முடியவில்லை. இந்த surface resistance'ஐ எதிர்கொண்டு விட்டால் மனிதனும் பறக்கலாமல்லவா?

    ReplyDelete
  3. மனிதன் தண்ணீரில் நீந்துவதை, பறவைகள் காற்றில் பறப்பதற்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் அதனால் மனிதனாலும் காற்றில் பறக்கமுடியும் என்று சொல்லிவிடமுடியாது.

    மனிதன் காற்றில் பறப்பதற்கு எதிராக இருக்கும் ஒரு முக்கியமான விஷயம் அவனது (எடை/பரப்பளவு) விகிதம் மிக அதிகமாக இருப்பதுவே. ஒரு பாய்மத்தின் இடையே வேகமாக முன்னேறும்போது ஏற்படும் அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் விசையே ஏற்றவிசையாக மாறுகிறது.

    குறிப்பிட்ட எடை கீழ்நோக்கி இழுக்கும்போது, அதற்கு எதிராக மேல்நோக்கி செலுத்தப்படும் விசை பரப்பளவையும் அழுத்த மாறுபாட்டையும் பொருத்தது. குறிப்பிட்ட எடைக்கு பரப்பளவு அதிகமாக இருந்தால், தானாகவே மேல் நோக்கிய விசை அதிகமாக இருக்கும்.

    பறப்பது அல்லது நீந்துவது என்னும்போது ஏற்றவிசை போலவே மிதக்கும் தன்மை (buoyancy) என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு பாய்மத்தில் போடப்பட்ட எந்த ஒரு பொருளும், மிதக்கும் தன்மை காரணமாக மேல் நோக்கிய ஒரு விசையைப் பெறும். அந்தப் பாய்மத்தின் அடர்த்தி அதிகமானால் மேல் நோக்கிய மிதவை விசை அதிகமாகும். காற்றுக்கு இந்தத் தன்மை குறைவு. தண்ணீருக்கு அதிகம். இதுவே பாதரசமாக இருந்தால் மிக மிக அதிகம். இது ஆர்க்கிமிடிஸ் கொள்கை காரணமாக ஏற்படுவது.

    இதையும்கூட நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் காற்றைப் பொருத்தமட்டில் அது கொடுக்கும் மிதவை விசை பொருட்படுத்தத்தக்கதே அல்ல.

    ReplyDelete
  4. பத்ரி,

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சந்தேகம். இந்த கேள்வியை பகிர்த்துகொண்ட என் நண்பனுக்கு என்னால் த்ரிப்திகரமாக பதில் சொல்ல தெரியவில்லை.

    அரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. (நம் தலைவர்களை நாமே தேர்தெடுத்துக் கொள்வது என்றால், சுதந்திரத்துக்கு முன்பாக-க்கூட தேர்தல்கள் நடந்தாக தெரிகிறது. பத்திரிக்கை சுதந்திரம் பற்றி ஒரு அளவுக்கு புரிகிறது. முன்பு ஒரு அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதினால் சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்க முடிந்தது).

    ஒரு சாமான்ய மனிதன், சுதந்திரத்துக்கு முன் வாழ்வதற்கும் பின் வாழ்வதற்கும் என்ன வித்யாசம் உணர்வான்?

    கொஞ்சம் விளக்கவும்.

    -நகுல்

    ReplyDelete
  5. //அரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. //

    நீங்கள் யாரால் ஆளப்படுகிறீர்கள் என்பது முக்கியம்.

    உங்களுக்கு முகலாயர் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலேயரின் வருகை தான் சுதந்திரம்

    --

    ஈராக்கில் உள்ளவர்களில்

    அமெரிக்கா யாருக்கெல்லாம் பிடிக்குமோ - தற்பொழுது அவர்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள்

    அமெரிக்க யாருக்கெல்லாம் பிடிக்காதோ - அவர்கள் அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் போது சுதந்திரம் அடைவார்கள்

    It is all relativity

    ReplyDelete
  6. எனக்கு பிடித்த பாடம் வேதியியல் ஏனெனில் எனக்கு சொல்லிக்குடுத்த வாத்தியார் அப்படி (சையது - அழகப்பா கலைக்கல்லுரி) ..நீங்கள் அணுகும் முறையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளது. அனைத்து விளக்கங்களும் அருமை..

    உங்களைப்போல எளியநடையில் அறிவியலை அணுகினால் நமது மொழியும் மக்களும் பயன்பெறுவார்கள்....நன்றி பத்ரி

    ReplyDelete
  7. would highly appreciate the effort sir. excellent article

    why don't you write a intermediate level science for students physics and maths are highly in needed. or suggest some. may be your publication can re-publish (in Tamil) some of the great books from Feynman, Yakov Perilmen etc.,

    waiting to see the below part ....

    " இதை மேலும் புரிந்துகொள்ள “தனிம வரிசை அட்டவணை” (periodic table), அல்லது மின்னணுக்களின் சுற்றுப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் எத்தனை மின்னணுக்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் போன்ற பல விஷயங்களை ஆராயவேண்டும். அதைப்பற்றி இந்தத் தொடரில் பேசப்போவதில்லை. வேறொரு கட்டத்தில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்."

    ReplyDelete
  8. EXCELLENT.. WAITING FOR THE NEXT ONE( CONTINUTION).. I WAS A UNFORTUNATE STUDENT IN SCHOOL DAYS , MOREOVER DIDNT STUDY MY HSC.. BUT ALL THESE FUNDAMENTALS ARE NEEDED FOR ME NOW.. PLZ CARRY ON THIS SERVICE..

    ReplyDelete