Friday, August 08, 2008

உண்ணாவிரதமும் காந்தியும்

இன்று ஆளுக்கு ஆள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “அடையாள உண்ணாவிரதம்” முதற்கொண்டு “சாகும்வரை உண்ணாவிரதம்” வரை பல வெரைட்டிகளைப் பார்க்கலாம்.

உண்ணாவிரதம் என்று பயமுறுத்தினால் உடனே ஒருவரது கோரிக்கை நிறைவேறிவிடுமா? இதுபோன்ற எமோஷனல் பிளாக்மெயில்மூலம் காரியத்தை சாதிப்பது சரியா? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம்.

உண்ணாவிரதம் என்பது அரசியல், சமூகப் போராட்டங்களின்போது ஓர் ஆயுதமாக காந்தியால் பயன்படுத்தப்பட்டது. அதையும் அவர் முதலில் அரசியல் களத்தில் பயன்படுத்தவில்லை. சுய தண்டனையாகவே இரண்டு முறைகள் பயன்படுத்தினார். ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் அவரது மகனும் மணமான இன்னொரு பெண்ணும் தகாத உறவு கொண்டிருந்ததாகத் தகவல் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த காந்தி, தனக்கான தண்டனையாக சில நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதேபோன்று அவரது இரண்டாவது மகன் ஆசிரமப் பணத்தை எடுத்து முதல் மகனின் ஊதாரித்தனத்துக்காக அனுப்பியது தெரியவந்ததும் மீண்டும் உண்ணாவிரதம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னுடைய உயர்ந்த, நேர்மையான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதில்லையே என்ற வருத்தமே அவரை உண்ணாவிரதத்தை நோக்கி இழுத்துச் சென்றது.

அவர் முதல்முறையாக அரசியல் களத்தில் உண்ணாவிரதம் இருந்தது அஹமதாபாத் நெசவுத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக. அப்போதும், முந்தைய தருணங்களைப்போல, மனத்தில் காயம் பட்ட காரணத்தால்தான்.

***

1918. அஹமதாபாதில் பல நெசவுத் தொழிற்சாலைகள் இருந்தன. அதில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் 35% சம்பள உயர்வு கேட்டனர். ஆனால் முதலாளிகள் 20%-க்குமேல் கொடுக்கமாட்டோம் என்றனர்.

காந்தி அப்போது அஹமதாபாதில் தன் ஆஸ்ரமத்தை அமைத்திருந்தார். எனவே தொழிலாளர்கள் அவரிடம் சென்று தங்களது நிலைமையைத் தெரிவித்தனர். நன்கு விசாரித்துப் பார்த்த காந்திக்கு, தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றே பட்டது.

எனவே நெசவாலை உரிமையாளர் அம்பாலால் சாராபாய் என்பவரிடம் காந்தி பேசினார். ஆனால் நெசவாலை உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள, மூன்றாம் நபராக ஓர் ஆர்பிட்ரேட்டரை நியமித்துக்கொள்ளுங்களேன் என்று காந்தி ஆலோசனை சொன்னார். ஆனால் அதற்கும் நெசவாலை உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

*

இங்கு அம்பாலால் பற்றிக் குறிப்பிடவேண்டும். காந்தி அஹமதாபாதில் ஆஸ்ரமம் அமைத்தவுடன் அந்த ஆஸ்ரமத்தில் தூதாபாய் தஃப்டா என்பவரும் அவரது மனைவியும் வந்து வசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் ‘தீண்டத்தகாத' சாதியைச் சேர்ந்தவர்கள். அதே ஆஸ்ரமத்தில் வசித்துவந்த காந்தியின் அக்கா மகன் மாகன்லாலின் மனைவிக்கு தீண்டத்தகாதவர்களுடன் சேர்ந்து வசிப்பது பிடிக்கவில்லை. எனவே சண்டைபோட்டுக்கொண்டு மாகன்லாலும் மனைவியும் வெளியேறிவிட்டனர். கஸ்தூர்பாகூட காந்தியுடன் இந்த விஷயத்தில் சண்டை போட்டார். ஆனால் காந்தி தனது நிலையிலிருந்து மாறவில்லை.

சீக்கிரமாகவே சாதி இந்துக்கள் ஆஸ்ரமத்தை பகிஷ்கரிக்க ஆரம்பித்தனர். பண வரவு குறைந்துவிட்டது. ஆஸ்ரமத்தைத் தொடர்ந்து நடத்துவது எப்படி என்று தெரியாத குழப்பமான நிலை.

அடுத்த வாரச் செலவுக்குப் பணம் இல்லை என்ற நிலையில் ஆஸ்ரம வாசலுக்கு திடீரென்று ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கும் ஒருவர் அவசர அவசரமாக காந்தியின் கையில் ரூ. 13,000 நோட்டுக்களைத் திணித்துவிட்டு சென்றுவிடுகிறார்.

தீவிர கடவுள் நம்பிக்கையாளரான காந்திக்கு, கடவுளே தனது செய்கை சரிதான் என்று காட்டுவதற்காக ஒருவரை அனுப்பியதாகத் தோன்றியது.

பின், மாகன்லாலும் அவரது மனைவியும் மனம் திருந்தி, தவறை ஒப்புக்கொண்டு ஆஸ்ரமத்துக்குத் திரும்பினர்.

அன்று காரில் வந்து கேள்வி ஏதும் கேட்காமல் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றவர்தான் அம்பாலால் சாராபாய்.

*

தொழிலாளர்களின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பதை காந்தி உணர்ந்தார். எனவே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்தம் பற்றிப் பேசினார். (ரஷ்யாவில் கம்யூனிசப் புரட்சி 1917-ல்தான் நடந்துமுடிந்தது என்று நினைவில் கொள்ளவும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் உருவாகாத தருணம் இது! தொழிற்சங்கங்கள் என்று எதுவுமே இந்தியாவில் இல்லாத நேரம் இது.)

“சாத்வீகமான முறையில் வேலை நிறுத்தத்தில் இறங்குங்கள். ஆனால் அடுத்த சில நாள்கள் கடினமானவை” என்றார் காந்தி. சுமார் 5000 தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அம்பாலால் சாராபாய் முதற்கொண்டு அனைத்து உரிமையாளர்களும் தொழிற்சாலைகளை இழுத்து சாத்தினர்.

சில தினங்களுக்குள்ளாக, வேலை நிறுத்தத்தை உடைக்க, 20% ஊதிய உயர்வில் வேலைக்குச் சேருபவர்களை முதலாளிகள் வரவேற்றனர். அதனை ஆரம்பத்தில் யாரும் ஏற்கவில்லை. ஆனால் நாளடைவில் வயிற்றுப்பாட்டுக்காக பலர் வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

அம்பாலால் சாராபாயின் தங்கை அனுசூயா சாராபாய், காந்தியின்மீது பற்று கொண்டவர். அவர் காந்தியைச் சந்திக்க தனது காரில் தினமும் ஆஸ்ரமத்துக்கு வந்துகொண்டிருந்தார். வேலை நிறுத்தம் நடந்தபோது அம்பாலாலும் சிலமுறை ஆஸ்ரமத்துக்கு தனது மனைவி சரளாதேவியுடன் வந்து போவார்.

நாளாக நாளாக, சில தொழிலாளர்கள் வெளிப்ப்டையாகவே காந்தியை சந்தேகிக்கத் தொடங்கினர். “ஜாலியாக காரில் உலா வந்துகொண்டு, வயிறுமுட்டச் சாப்பிடும் காந்திக்கு எங்களோட பட்டினிப் பிரச்னை பற்றி என்ன தெரியும்” என்றனர்.

இந்த விஷயம் காந்தியின் காதுகளுக்கு எட்டியது.

உடனடியாக ஒரு முடிவெடுத்தார். “தொழிலாளர் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும்வரையில் இனி நான் உண்ணப்போவதில்லை. காரிலும் ஏறி எங்கும் செல்லப்போவதில்லை.”

விஷயம் கேள்விப்பட்டு அம்பாலால் உடனே அங்கு ஓடிவந்தார். “இது எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னை. இதில் நீங்கள் என் தலையிட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறீர்கள்” என்று மன்றாடிப் பார்த்தார். ஆனால் காந்தி தன் முடிவிலிருந்து நகரவில்லை. அஹமதாபாத் நெசவாலை முதலாளிகளின் குடும்பத்திலிருந்தே அவர்களுக்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. அவர்கள் அனைவரும் நேரடியாக காந்தியைப் பார்க்க வந்தனர். காந்தி என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்வதாகச் சொன்னார்கள்.

அப்போதே காந்தி உடனடியாக 35% சம்பள உயர்வைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் அதுவாக இல்லை. இரண்டு எதிரெதிர் பக்கங்களும் ஒன்றாக வந்து தங்களது பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமே.

பேச்சுவார்த்தையில் இவ்வாறு முடிவானது:

1. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை விட்டுவிட்டு வேலைக்குச் சேர்வார்கள். முதல் நாள் அவர்களுக்கு 20% உயர்வில் சம்பளம் கிட்டும். இரண்டாம் நாள் 35% உயர்வில் சம்பளம். மூன்றாம் நாளிலிருந்து 27.5% உயர்வில் சம்பளம்.

2. ஓர் ஆர்பிட்ரேட்டர் நியமிக்கப்படுவார். அவர் கடைசியாக என்ன முடிவு கொடுக்கிறாரோ அதை இரண்டு பக்கங்களும் ஏற்றுக்கொள்ளும். அந்தச் சம்பள உயர்வுக்கும் 27.5%-க்கும் இடைப்பட்ட வித்தியாசம் பின்னர் சரிசெய்துகொள்ளப்படும்.

ஆக, ஒரு பக்கம் வெற்றி, மற்றொரு பக்கம் தோல்வி என்ற நிலையை விடுத்து, சமரசமான முடிவு எனதை நோக்கியே காந்தியின் எண்ணம் இருந்தது. அதேபோல பல முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து, பிரச்னைகளைத் தீர்க்க வேறு வழி இல்லை என்ற நிலையில்தான் உண்ணாவிரதம் என்பதை நோக்கி அவர் சென்றார். அதற்கு வேறு சில பேச்சுகளும் காரணம் என்பதையும் கவனிக்கவேண்டும்.

உண்ணாவிரதத்தின் முடிவாக அவர் எந்தத் தீர்ப்பையும் திணிக்கவில்லை. சத்தியத்தின் பலம் அவருக்குத் துணையாக நின்றது.

[இரு பக்கமும் மதித்த கல்லூரி முதல்வர் ஒருவர் ஆர்பிட்ரேட்டராக நியமிக்கப்பட்டு கடைசியில் 35% சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.]

***

உண்ணாவிரதம், ஒத்துழையாமை, வேலை நிறுத்தம் போன்ற பலவும் காந்தி இந்தியாவுக்கும் உலகுக்கும் அளித்த புது ஆயுதங்கள். அவை கத்தி, துப்பாக்கிகளைவிட வலிமையானவை. ஆனால் அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது.

அதனால்தான் இன்று உண்ணாவிரதங்கள் பொதுவாக ‘ஷோ' காண்பிக்க மட்டுமே பயன்படுகின்றன.

18 comments:

  1. இப்படியொரு அருமையான உண்மைச் சம்பவத்தை எழுதியதற்கு நன்றி நன்றி .... நன்றி

    ReplyDelete
  2. வழக்கம் போல, நீங்க உங்க உண்ணாவிரதம் இருந்த அனுபவத்தைச் சொல்லி முடிப்பீங்கன்னு இறுதிப்பகுதிக்கு வந்தா.... ஹூம்

    ReplyDelete
  3. பத்ரி!
    நல்லதொரு இடுகை. ஜெயமோகனின் "காந்தியின் எளிமைச்செலவை"(http://jeyamohan.in/?p=557) நினைவுபடுத்துகிறது. அப்பொழுதே win-winஆக முயன்றிருக்கிறார்! ஹீம்! பெருமூச்சுதான் மிஞ்சுகிறது! (சற்றே க்ளிஷேவாக உணர்கிறேன்!)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    ReplyDelete
  4. இன்னிக்கு தான் எதேச்சையா ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி படம் பார்த்தேன். சில கேள்விகள்:

    * காந்தியின் உண்ணாநோன்புகள் எல்லாமே தனக்கு கீழ் உள்ள, தன்னை மதிக்கக்கூடியவர்களிடம் மனமாற்றத்தை உண்டு பண்ணவே செய்திருப்பது போல் இருக்கிறது. வீட்டில் மூத்தவர்கள் சாப்பிடாமல் இருந்தால் இளையவர்கள் மனம் வருந்தி திருத்திக் கொள்வது போலத் தான் இதைப் பார்க்க இயல்கிறது. இதுவே, காந்தியின் செய்கையால், அவரது அதிகாரத்துக்கு மேற்பட்ட ஆங்கிலேய அரசு தன்னுடைய செயற்பாடுகளில் முக்கிய மாற்றம் ஏதும் செய்திருக்கிறதா?

    * நோன்பு இருப்பவரின் ஆன்ம பலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவரது அதிகார இருப்பும் முக்கியமாகத் தோன்றுகிறது. கடைசி வரை சாப்பிடாமல் நோன்பிருந்து மடிந்த விடுதலைப்புலிகளின் திலீபனின் எந்த வகையில் குறைந்தது?

    பிற புறக் காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல் உண்ணாநோன்பை துப்பாக்கி, கத்திகளை விட வலிமையானதாக கூறுவதை ஏற்க முடியவில்லை.

    ReplyDelete
  5. //அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது//

    அருமையான தெளிவான பதிவு. படித்தவுடன் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் பொருட்டு இந்த மறுமொழி.

    ReplyDelete
  6. காந்தியின் உண்ணாவிரத ஆயுதத்தால் ஜின்னாஹ்வை மாற்றமுடியவில்லையே ?

    ReplyDelete
  7. உண்ணாவிரதம் என்பது ஒரு அறப்போர்.அது எப்போதும் வெல்லும் என்று உத்தரவாதம் இல்லை.தன்னை வருத்திக்கொள்வது என்பது ஒரு எதிர்ப்புச் செயல்.இதற்கு பின் தார்மீகம்/அறம் குறித்த கோட்பாடுகள்
    உள்ளன.அதை வெறும் வரட்டு/முரட்டு எதிர்வினையாகக்
    புரிந்து கொள்ளக்கூடாது.

    சத்தியாகிரகம்,உண்ணா நோன்பு போன்றவை மரபிலிருந்து பெறப்பட்டு
    அவரால் மறு உருவாக்கம்
    செய்யப்பட்டவை.தரம்பால் இது குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார் (Civil Disobedience and Indian Tradition).

    வெற்றி/தோல்வி என்றவற்றிற்கு
    அப்பாற்பட்டு அறம் சார்ந்து நிற்பவர்களால்தான் உண்ணாநோன்பினை அதன் சரியான
    பொருளில் நடைமுறைப்படுத்த
    முடியும்.இது win-win செயல்திட்டம்
    அல்ல.காந்தியைப் பொறுத்தவரை
    ஒரு தரப்பு தோல்வி,இரு தரப்பு
    வெற்றியா என்பது முக்கியமல்ல.
    போராட்டம்,அதன் நோக்கம் இரண்டும்
    அறம் சார்ந்து சரியானவையாக
    இருக்க வேண்டும்.Means and Ends
    are justified only by their
    moral visions and practices
    not by their results or outcomes.
    நடைமுறையில் இதைக் கைக்கொள்வது எளிதல்ல.காந்தியின் கோட்பாடுகளும்,செயல்களும்
    பல்வேறு நாடுகளில்,பல்வேறு
    போராட்டங்களில் முற்றிலும்
    மாறுபட்ட கருத்துடையவர்களால்
    கையாளப்பட்டுள்ளன.கம்யுனிச
    அடக்குமுறை எதிர்ப்பாளர்கள்,
    பசுமை இயக்கத்தினர்,நிறவெறி
    எதிர்ப்பாளர்கள்,பெண்ணிய, அமைதி
    இயக்கத்தினர் என பல உதாரணங்களை
    காட்ட இயலும்.

    ReplyDelete
  8. //உண்ணாவிரதம், ஒத்துழையாமை, வேலை நிறுத்தம் போன்ற பலவும் காந்தி இந்தியாவுக்கும் உலகுக்கும் அளித்த புது ஆயுதங்கள். அவை கத்தி, துப்பாக்கிகளைவிட வலிமையானவை. ஆனால் அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது. அதனால்தான் இன்று உண்ணாவிரதங்கள் பொதுவாக ‘ஷோ' காண்பிக்க மட்டுமே பயன்படுகின்றன.//

    பத்ரி ஸார்.. நல்ல பதிவு. காந்தி தந்த பலமான ஆயுதங்கள் இன்னமும் நம்மிடையே இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தத் தகுதி வாய்ந்த 'தாத்தா' மாதிரியான ஆன்ம பலமுள்ள ஆட்கள்தான் நம்மிடையே இல்லை..

    ReplyDelete
  9. //நோன்பு இருப்பவரின் ஆன்ம பலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவரது அதிகார இருப்பும் முக்கியமாகத் தோன்றுகிறது. கடைசி வரை சாப்பிடாமல் நோன்பிருந்து மடிந்த விடுதலைப்புலிகளின் திலீபனின் எந்த வகையில் குறைந்தது?//

    நோக்கம் ஒன்றுதான் ரவிசங்கர். தாங்கள் நினைத்ததை அடைய முயற்சித்தார்கள்.

    ஆனால் யாரை எதிர்த்து என்று பார்த்தீர்களானால் இந்திய, இலங்கை அரசுகளைவிட பிரிட்டன் அரசு மனித நேயமுள்ள அரசுதான் என்பது புரிகிறது..

    ReplyDelete
  10. ரவிசங்கர்,
    அஹிம்சை கோழைகளின் ஆயுதம் அல்ல என்று காந்தி கூறியிருக்கிறார்.
    திலீபனின் தியாகம் மகத்தானது.

    ”வழக்கம் போல, நீங்க உங்க உண்ணாவிரதம் இருந்த அனுபவத்தைச் சொல்லி முடிப்பீங்கன்னு இறுதிப்பகுதிக்கு வந்தா.... ஹூம்”

    பிரகாஷ், நீங்கள் உண்ணாவிரதம்
    இருந்த கதைகளை எழுதலமே :).
    வயிறு சரியில்லை என்பதற்காக
    சாப்பிடாமல் இருந்ததையெல்லாம்
    இதில் சேர்க்க வேண்டாம் :).

    பத்ரி, கார்னெலில் உண்ணாவிரதம்
    இருந்திருக்கிறார், கூட சமைத்த
    மாணவன் மோசமாக சமைத்ததை கண்டித்து, ஆனால் அது ஒரு மணி நேரம்தான் நீடித்ததாம், பீட்சா ஆர்டர் செய்து, சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாராம் :).அதெல்லாம்
    தனி பதிவுகளுக்கான சமாச்சாரம்
    என்பதால் இதில் எழுதவில்லையாம் :).

    ReplyDelete
  11. ஒரு நல்ல பதிவைப் படித்த த்ருப்தி இருந்தது
    நன்றி

    ReplyDelete
  12. //ஆனால் யாரை எதிர்த்து என்று பார்த்தீர்களானால் இந்திய, இலங்கை அரசுகளைவிட பிரிட்டன் அரசு மனித நேயமுள்ள அரசுதான் என்பது புரிகிறது..//
    உண்மைதான். அன்றைய இங்கிலாந்து அரசு டீசண்டாக நடந்து கொண்டது உண்மை.

    //ஆனால் அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது.//

    இல்லை பத்ரி

    அகிம்சையின் பலம் அதை யார் உபயோகிக்கிறார்கள் என்பதால் தீர்மானிக்கப்படுவது அல்ல

    அது யாருக்கு எதிராக உபயோகிக்கப்படுகிறது என்பதை வைத்தே அகிச்சையின் பலம் தீர்மானிக்கப்படுகிறது

    ”நீ அவனை கல்யாணம் செய்து கொண்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று ஒரு பெண்ணின் தாய் / தந்தை சொல்லும் போது சோதிக்கப்படுவது அந்த பெண்ணின் ஆன்ம பலம் தானே தவிர அந்த தந்தையின் பலம் அல்ல :) :)

    --

    அதே போல் காந்தியின் உண்ணாவிரதத்திற்கு இறங்கியது / இரங்கியது

    ஆங்கிலேயர் தானே தவிர

    ஜின்னாவும் அல்ல !
    கோட்சேயும் அல்ல !!

    ReplyDelete
  13. பத்ரி

    தாங்கள் சொல்வது மிகவும் நியாயமான விஷயம் கூடவே திரு ஜமாலனின் பதிவுகளில் காந்தியின் உண்ணாவிரதங்கள் பற்றிய விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது, ஒரு நண்பர் கூறியுள்ளது போல அது ஜின்னாவிடம் பலிக்கவில்லை என்பதையும் காணவேண்டும், ஒரு கணவன் மனைவி பிணக்கு போன்றுதான் காந்தியும் அவரின் சண்டைகளும் இருந்தன என்பதற்கு காரணம் அப்போது இரண்டு புறமும் சத்தியம் நேர்மை என்பன இருந்தது,ஜின்னா போன்றவர்களிடன் அது எடுபடாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே

    ReplyDelete
  14. //,ஜின்னா போன்றவர்களிடன் அது எடுபடாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே//

    ஜின்னா போன்றவர்களிடமும் கோட்ஸே போன்றவர்களிடமும் அது எடுபடாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே

    ReplyDelete
  15. ஒருவர் உண்மை என்று நம்புவதை, தன்னைச் சார்ந்தவர்கள் அல்லது எதிர் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் உணராமல் இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம் இருக்க முடியும்?

    ஒன்று, அவர்் நம்புவதை மற்றவர்களுக்குப் புரியும் படி விளக்கி எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. அல்லது, அவர் நம்புவது தவறு.

    இந்த இரண்டுக்குமே அடிப்படை அவரில் இருக்கும் குறைதான். உணவை ஒதுக்கி விரதம் இருக்கும் போது எண்ணங்கள் தெளிவு பெற்று இரண்டில் ஒரு திசையில் விடை கிடைத்து விடும்.

    சத்தியாக்கிரகத்தின் அடிப்படை சக மனிதர்களின் நல்லியல்பு மீதான நம்பிக்கைதான்.

    உண்ணா விரதம் மூலம் தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்வது மூலம் அவர்களுக்கு அதை உணர வைக்கும் கருவியாக மாற முயற்சிப்பதுதான் உண்ணா விரதம்.

    அப்படி விரதம் இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அது மற்றவர்களின் குறை இல்லை. உண்ணா விரதம் இருப்பவரிடம் இருக்கும் குறைதான். சத்தியாக்கிரகத்தின் முடிவைத் தீர்மானிப்பது பிரிட்டிஷ் அரசோ சிங்கள அரசோ இல்லை, 'உண்மையான சத்தியாக்கிரகி ஒரே ஒருவர் இருப்பது வரை சத்தியாக்கிரகம் தோற்பதில்லை' என்று காந்தி சொல்லியிருக்கிறார்.

    உண்ணாவிரதத்தை மிரட்டும் ஆயுதமாகப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தால் விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும்.

    மா சிவகுமார்

    ReplyDelete
  16. //ஒன்று, அவர்் நம்புவதை மற்றவர்களுக்குப் புரியும் படி விளக்கி எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. அல்லது, அவர் நம்புவது தவறு.//

    அப்படியென்றால் கோட்ஸே, சர்வார்கர் மற்றும் ஜின்னாவின் செயல்கள் காந்தியின் தவறா ??

    //அப்படி விரதம் இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அது மற்றவர்களின் குறை இல்லை. உண்ணா விரதம் இருப்பவரிடம் இருக்கும் குறைதான். //

    இதை விட காந்தியை யாரும் (ஆர்.எஸ்.எஸ் உட்பட) கேவலப்படுத்த முடியாது

    மாசி, சறுக்கிவிட்டீர்கள்
    அவ்வளவு தான்

    //'உண்மையான சத்தியாக்கிரகி ஒரே ஒருவர் இருப்பது வரை சத்தியாக்கிரகம் தோற்பதில்லை' என்று காந்தி சொல்லியிருக்கிறார்.//

    பீன் ஏன் அவர் ஜின்னாவிடமும் சர்வார்கரிடமும் தோற்றார் :) :) :)

    ReplyDelete
  17. பாபி சாண்ட்ஸ் என்று நினைக்கிறேன்...ஐயர்லாந்து புரட்சியாளர், பிரிட்டன் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்து போனார்.

    ReplyDelete
  18. நன்றி பத்ரி அவர்களே,

    மகாத்மாவின் உண்ணாவிரதத்தை பற்றி அழகாக கூறியதற்கு நன்றி..
    //அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது//
    உண்மையான வார்த்தை...என்னைப்பொறுத்தவரையில் இதில் உடன்பாடில்லை..

    ReplyDelete