[Grimms' Fairy Tales, The Giant with the Three Golden Hairs]
ஒரு பெற்றோருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த நேரத்தைக் கணக்கில் எடுத்த அந்த கிராமத்தவர் அனைவரும் இந்தப் பையன் நிச்சயம் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்வான் என்றனர்.
அந்தப் பக்கமாக அந்த நாட்டு ராஜா மாறுவேஷத்தில் போய்க்கொண்டிருந்தார். அவர் மக்களிடம் என்ன விசேஷம் என்று கேட்டார். அவர்களும் ராஜாவின் மகளை மணந்துகொள்ளப்போகும் பையன் அந்த ஊரில் பிறந்திருக்கிறான் என்று சொன்னார்கள். ராஜா அந்த வீடு எங்கே என்று விசாரித்துத் தேடிச் சென்றார்.
அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் அவர்களது பையனை நிறைய விலை கொடுத்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அவர்கள் முதலில் மறுத்தனர். ஆனால், பின்னர் தங்களது ஏழைமையான நிலையைக் கருத்தில்கொண்டு, மாறுவேடத்தில் இருந்த ராஜா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டனர்.
ராஜாவுக்கு யாரோ ஒரு ஏழைப் பயல் தனது மகளை மணந்துகொள்வதா என்ற கோபம். எனவே அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் தள்ளிவிட்டார். அந்தக் கூடை பத்திரமாக வெகுதூரம் சென்று ஆற்றங்கரையில் ஒதுங்கியது.
அந்தப் பகுதியில் இருந்த ஒரு மாவு அரைப்பவர், அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 14 ஆண்டுகள் ஆயின. அந்தப் பகுதிக்கு ராஜா வந்திருந்தார். இந்தப் பையனைப் பார்த்ததும், அவனது தந்தையிடம், “இது உனது பையனா?” என்று கேட்டார். “இல்லை ராஜாவே, 14 ஆண்டுகளுக்குமுன் ஆற்றங்கரையில் ஒரு கூடையில் ஒதுங்கிய குழந்தை இவன்” என்றார் அவர்.
ராஜாவுக்கு இந்தப் பையன் யார் என்று புரிந்துபோனது. அவர் வேறு வேலையாகச் சென்றுகொண்டிருந்தார். ஆனாலும் இவனது கதையை உடனடியாக முடிந்துவிட எண்ணினார். மாவு அரைப்பவரிடம், “ராணிக்கு ஒரு தகவல் அனுப்பவேண்டும். அதற்கு உனது பையனின் உதவி தேவை” என்றார். அந்தப் பையனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, எங்கும் நிற்காமல் விரைந்து சென்று நேராக ராணியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுக்குமாறு சொன்னார்.
பையனும் உடனடியாகக் கிளம்பினான். ஆனால் போகும் வழியில் தொலைந்துபோய், ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொண்டான். அங்கே ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்குச் சென்ற பையன் அன்று இரவு அங்கேயே தங்கிக்கொள்ளமுடியுமா என்று அங்குள்ள கிழவியிடம் கேட்டான். அவள், “இந்த இடம் கொள்ளைக்காரர்கள் சிலருக்குச் சொந்தமானது. அதனால் நீ இங்கே தங்கமுடியாது. உடனடியாக இங்கிருந்து போய்விடு” என்றாள். ஆனால் பையன் மிகவும் களைப்புடன் இருந்ததால், அங்கேயே ஒரு பெஞ்சில் படுத்துத் தூங்கிவிட்டான்.
இரவு, கொள்ளைக்காரர்கள் அங்கே வந்தனர். படுத்திருப்பவன் யார் என்று கிழவியை மிரட்டினர். பையன் கொண்டுவந்திருந்த கடிதம் அவர்கள் கண்களில் பட்டது. உடனே அதை எடுத்துக் கிழித்துப் படித்தனர். “இந்தக் கடிதம் கொண்டுவருபவனை வெட்டிக் கொன்று, எரித்து, புதைத்துவிடு” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. கொள்ளைக்காரத் தலைவன் உடனே அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, வேறொரு கடிதத்தில், “இந்தக் கடிதம் கொண்டுவருபவனுக்கு நமது மகளை மணம் முடித்துவிடு” என்று எழுதி வைத்தான். அன்று இரவே கொள்ளைக்காரர்கள் மீண்டும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
மறுநாள் காலை, பையன், கடிதத்தை எடுத்துக்கொண்டு நேராக ராணியிடம் சென்றான். கடிதத்தைப் படித்த அவள், வெகு விமரிசையாக, தனது மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.
சில நாள்கள் கழித்து மீண்டும் நாட்டுக்கு வந்த ராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது மருமகனிடம், தான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை என்றும், ஆனால் ஏற்கெனவே நடந்துவிட்டதால், இது தொடரவேண்டுமானால், அவன் எங்கோ தொலைவில் ஒரு குகையில் இருக்கும் ராட்சசனின் தலையில் உள்ள மூன்று தங்கமுடிகளையும் எடுத்துக்கொண்டுவந்து அவரிடம் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
அவனும், அதனை ஏற்றுக்கொண்டு, தன் மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினான்.
முதலில் அவன் ஒரு நகரத்தை அடைந்தான். அந்த நகரின் வாயிலில் இருந்த காவல்காப்போன், “நீ யார்? உனக்கு என்ன வேலைகள் தெரியும்?” என்று கேட்டான். “எனக்கு எல்லா வேலைகளும் தெரியும்” என்று இவன் பதில் சொன்னான். “அப்படியா? எங்கள் ஊரில் உள்ள நீர் ஊற்றில் இப்போது தண்ணீர் வருவது நின்றுவிட்டது. ஏன் என்று கண்டுபிடித்துச் சொல்வாயா? கண்டுபிடித்துத் தந்தால் இரண்டு கழுதை சுமந்துசெல்லும் அளவுக்கு உனக்குத் தங்கம் தருவோம்” என்றான். “ஓ, நிச்சயமாக, ஆனால் நான் திரும்பிவரும்போது செய்கிறேன்” என்றான் இவன்.
அடுத்த நகரை அடைந்ததும், அங்கிருந்த வாயில்காப்போனும் இவனது திறமை பற்றிக் கேட்டான். இவன், தன்னால் எல்லாக் காரியங்களையும் செய்யமுடியும் என்றான். “எங்கள் ஊரில் தங்க ஆப்பிள்கள் கொடுத்துவந்த ஒரு மரம் இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் இப்போது ஓர் இலைகூட முளைப்பதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தால் உனக்கு நிறையப் பரிசுகள் தருவோம்” என்றான் வாயில்காப்போன். திரும்பி வரும்போது செய்துதருகிறேன் என்று அவனுக்கும் பதில் சொன்னான் இவன்.
அடுத்து இவன் ஓர் ஏரியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகில் ஒரு படகோட்டி உட்கார்ந்திருந்தான். “நான் இந்தப் படகை பல காலமாக ஓட்டிவருகிறேன். என்னால் இந்தப் படகைவிட்டுக் கீழே இறங்கவே முடிவதில்லை. ஏன் என்று உன்னால் கண்டுபிடிக்கமுடியுமா” என்று கேட்டான் அந்தப் படகோட்டி. “நிச்சயம் செய்கிறேன். ஆனால் திரும்பி வரும்போது” என்று சொல்லி, அந்தப் படகில் ஏறிக்கொண்டான் இவன். படகோட்டி இவனை அடுத்த கரையில் இறக்கிவிட்டான்.
இப்படி, பல நகரங்கள் தாண்டி ஒரு காட்டுக்குள் ராட்சசன் வசிக்கும் குகையை வந்தடைந்தான் இவன். அப்போது ராட்சசன் எங்கோ வெளியே சென்றிருந்தான். ராட்சசனின் பாட்டி வீட்டில் இருந்தாள். இவன் பாட்டியிடம் சென்று, “எனக்கு ராட்சசனின் தலையில் இருக்கும் மூன்று தங்க முடிகளையும் எடுத்துத் தருவாயா” என்று கேட்டான். அத்துடன் தான் வரும் வழியில் தன்னிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் பாட்டியிடம் கேட்டான். “நீ இங்கே இருப்பதே ஆபத்து. நான் முடிந்தவரை உனக்கு உதவி செய்கிறேன்” என்று சொல்லி, பாட்டி அவனை ஓர் எறும்பாக மாற்றி, மடியில் கட்டிவைத்துக்கொண்டாள்.
ராட்சசன் குகைக்குத் திரும்பியதும் மனித வாசனை இருப்பதைக் கண்டுகொண்டான். “இங்கே யார் வந்திருப்பது” என்று கத்தி, அங்கும் இங்கும் தேடினான். ஆனால் யாரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சோர்வுடன் இருந்த ராட்சசன், பாட்டியின் மடியில் தலைவைத்து தூங்கப்போனான்.
கொஞ்ச நேரம் கழித்து பாட்டி ராட்சசனின் தலையில் இருந்த ஒரு தங்க முடியை வெடுக்கென்று பிடுங்கினாள். விழித்த ராட்சசன் கோபத்தில் கத்தினான். பாட்டி அவனிடம், “மன்னித்துக்கொள் அப்பா. தூக்கத்தில் ஒரு கனவு கண்டேன். அதில் ஓர் ஊரில் ஒரு நீரூற்றில் தண்ணீரே வராததுபோல் இருந்தது. அவசரத்தில் திடுக்கிட்டதில் இப்படி ஆகிவிட்டது” என்றாள். “ஓ, அதுவா. அந்த நீரூற்றின் அடியில் உள்ள கல்லில் ஒரு தேரை வளர்ந்துள்ளது. அந்தத் தேரையை எடுத்துவிட்டால், மீண்டும் அந்த நீரூற்றில் தண்ணீர் வரத்தொடங்கும்” என்று சொல்லிவிட்டு ராட்சசன் தூங்கப் போனான்.
சிறிது நேரம் கழித்து பாட்டி மீண்டும் ராட்சசனின் தலையில் இருந்த இரண்டாவது தங்க முடியையும் பிடுங்கினாள். தூக்கத்திலிருந்து விழித்த ராட்சசன் மீண்டும் கத்தினான். பாட்டி அவனிடம், “மன்னித்துக்கொள் அப்பா. மீண்டும் ஒரு கனவு. இதில் தங்க ஆப்பிள் மரம் ஒன்றில் இலையே துளிர்க்காமல் இருப்பது போலக் கண்டேன். திடுக்கிட்டதில் இப்படி ஆகிவிட்டது” என்றாள். “ஓ, அதுவா. அந்த மரத்தின் வேரை ஒரு சுண்டெலி கடித்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் பிரச்னை. அந்த சுண்டெலியைக் கொன்றுவிட்டால், அந்த மரம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கிவிடும்” என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றான்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து பாட்டி மூன்றாவது தங்க முடியையும் பிடுங்கினாள். இப்போது விழித்த ராட்சசன், “இப்போது என்ன” என்ற கேட்டான். “இந்தக் கனவில், ஒரு படகோட்டி, படகை விட்டு இறங்கமுடியாத நிலையில் இருப்பதைக் கண்டேன்” என்றாள் பாட்டி. “அவன் கையில் இருக்கும் துடுப்புதான் காரணம். அதை அவன் யாரிடமாவது கொடுத்துவிட்டால், அவன் தப்பித்துவிடுவான். ஆனால் அந்தத் துடுப்பு யார் கையில் இருக்கிறதோ, அவனால் அந்தப் படகைவிட்டு விலகமுடியாது” என்றான் ராட்சசன்.
அடுத்த நாள் காலை ராட்சசன் கிளம்பிச் சென்றதும், பாட்டி எறும்பை மீண்டும் பையனாக மாற்றி, அவனிடம் தங்க முடிகளைக் கொடுத்து, மூன்று கேள்விகளுக்குமான விடையைக் கொடுத்தாள்.
பையன் படகோட்டியிடம் வந்து தன்னை அக்கரைக்குக் கொண்டுசெல்லுமாறு கேட்டான். கீழே இறங்கியதும் அவனிடம், யாராவது பயணியிடம் துடுப்பைக் கொடுத்துவிட்டு ஓடுமாறு சொன்னான். அடுத்த நகருக்குச் சென்று, தங்க ஆப்பிள் மரத்துக்கு அடியில் தோண்டி, அங்குள்ள சுண்டெலியைக் கொல்லச் சொன்னான். அவர்கள் கொடுத்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து பக்கத்து ஊருக்கு வந்தான். அங்கே நீரூற்றின் அடியில் உள்ள கல்லைப் பெயர்த்து அதிலிருக்கும் தேரையை எடுக்கச் சொன்னான். அவர்கள் இரண்டு கழுதை சுமக்கும் அளவுக்கு தங்கம் கொடுத்தனர். அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.
ராஜாவுக்கு மகிழ்ச்சி. தங்க முடியுடன் ஏகப்பட்ட பரிசுகளும் தங்கமும் இருப்பதைப் பார்த்து, இவை எங்கே கிடைத்தன என்று கேட்டார். அதற்கு இவன், தொலைதூரத்தில் உள்ள ஏரிக்கு மறுபக்கம் நிறைய தங்கம் கிடைப்பதாகச் சொன்னான்.
உடனே ராஜா, பேராசையில் நேராக அந்த ஏரிக்கரைக்குச் சென்றார். படகோட்டியிடம் தன்னை மறுகரைக்கு அழைத்துச் செல்லக் கேட்டான். படகோட்டியும் ராஜாவிடம், “இந்தத் துடுப்பை சற்றே வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். ராஜா துடுப்பை வாங்கிக்கொண்டதும், படகோட்டி, தாவிக் குதித்து ஓடிவிட்டான். அன்றுமுதல் ராஜா அந்தப் படகைவிட்டு வெளியேறாதபடி நன்கு மாட்டிக்கொண்டார்.
பேனா மருத்துவமனை
6 hours ago
நன்றாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள். தமிழ்க்கதை படிப்பதுபோலவே இருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன். அன்புடன், ஜெயக்குமார்
ReplyDeleteஅசல் தமிழ்க் கதை படிப்பதுபோலவே இருக்கிறது. எனது முந்தைய பின்னூட்டத்தில் தமிழ்க்கதை படிப்பதுபோல இருக்கிறது என எழுதி இருந்தேன். ( அசல் விட்டுப் போச்சு)
ReplyDeleteஒரு நல்ல குழந்தைகளுக்கான கதையை
ReplyDeleteபல வருடங்களுக்கு பிறகு வாசித்திருக்கிறேன்.
நல்ல குழந்தைகளுக்கான கதை. (வன்முறை எதுவும் இல்லாமல்)
ReplyDeleteஇதுவரை சொன்ன கதைகளில் இது மிக அருமையான கதை.
ReplyDeleteclimax நல்ல comedy...:D
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் எழிலுக்கு ஒரு கதை சொன்னேன் நேற்றிரவு... நன்றி பத்ரி.
ReplyDeleteGood story! Thank you!
ReplyDelete