இன்று சுதந்தர தினத்தை முன்னிட்டு 1982-ல் வெளியான “காந்தி” படத்தை பொதிகையில் காட்டினார்கள். தமிழாக்கப்பட்ட குரல்கள். ஆனாலும் அவ்வளவு மோசம் இல்லை.
காந்தியைப் படமாக ஆக்குவது எளிதான முயற்சி இல்லை. ஆனாலும் இந்தப் படத்தில் காந்தியின் போராட்டங்கள், காந்தியின் அடிப்படைக் கொள்கைகள், காந்தியின் தலைமைப் பண்பு ஆகியவை முழுமையாக வரவில்லை என்றே நினைக்கிறேன். காந்தியின் “உப்பு சத்தியாக்கிரகம்” என்ற கருத்து, கடற்கரையில், ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளருடன் உட்கார்ந்து பேசும்போது அவருக்குத் திடீரெனத் தோன்றியதாகக் காண்பிக்கப்படுகிறது. காந்தி உப்பைப் பற்றி பல ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறார்.
காந்தி, தனது தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின்போது பொதுமக்கள் அனைவரையும் தொட்டால்தான் புரட்சி சாத்தியம் என்பதை அறிந்திருந்தார். மேலும் சத்தியாக்கிரகம் என்பதே பல ஆயிரம் பேர் அமைதியாக, அடக்குமுறையை எதிர்கொண்டு எதிராளியை வெட்கவைப்பதில், மனம் மாறவைப்பதில்தான் உள்ளது. அப்படிப்பட்ட போராட்டத்தில் வன்முறைக்கு வழியே இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில்தான் தென்னாப்பிரிக்காவில் கொத்தடிமைகள் மீதான வரியை எதிர்ப்பதன்மூலமாக, பெரும் ஆதரவைத் தேடிக்கொண்டார். ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் போராட்டத்தில் இறங்கினர். இதன் பின்னணியில்தான் தென்னாப்பிரிக்க அரசு, காந்தியை முக்கியமான ஒருவராக எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தது.
இந்தியாவிலும் இதுதான் பிரச்னையாக இருந்தது. கடுமையாகப் பிளவுபட்டிருந்த இந்தியாவில் எந்தக் கடைக்கோடி மனிதனுக்கும் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்று புரியவில்லை. “உப்பு” அனைவரையும் போராட்டத்தில் இறக்குவதற்கான ஒரு வழியாக மாறியது. ஏற்கெனவே காந்தி செயல்படுத்திய ஒத்துழையாமை இயக்கம் தோல்வியை அடைந்ததற்குக் காரணம், அது பலருக்கும் புரியாமல் போனதும், அதைச் செயல்படுத்துவதன்மூலம் பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் நஷ்டங்கள் ஏற்பட்டதுமே ஆகும்.
காந்தியின் முக்கியமான பண்பு, மிக முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கியது. இந்தத் தலைவர்களை அவர் கவனமாக உருவாக்கினார். தெற்குக்கு ராஜகோபாலாச்சாரியார், மேற்குக்கு வல்லபபாய் படேல், கிழக்குக்கு ராஜேந்திர பிரசாத் மற்றும் அபுல் கலாம் ஆசாத், நடு இந்தியாவுக்கு ஜவாஹர்லால் நேரு, வட மேற்குப் பிராந்தியங்களுக்கு கான் அப்துல் கஃபார் கான். இவர்கள் பலருக்கும் காந்தியை முழுமையாகப் பிடித்திருந்தது என்று சொல்லமுடியாது. பல விஷயங்களில் இவர்கள் காந்தியுடன் சண்டையிட்டனர். ஆனால் அரசியல் போராட்டங்களைப் பொருத்தமட்டில் காந்தியின் சிந்தனைக்கு முழுமையாக அடிபணிந்தனர்.
இந்தத் தலைவர்களை உருவாக்கியது, இவர்களை ஊர் ஊராகச் சென்று சாதாரண மக்களுடன் உறவாடச் செய்தது, என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பிரிந்து தனி அணி ஒன்றை உருவாக்காமல், சேர்ந்து பணியாற்ற வைத்தது ஆகியவை காந்தியின் மிக மிக முக்கியமான செயல்கள். இல்லாவிட்டால் சுதந்தரத்துக்குப் பிறகு இந்தியா ஆட்டம் கண்டிருக்கும்.
காந்திக்கு அரசியல் விடுதலை மட்டும் நோக்கமாக இருக்கவில்லை. துண்டு துண்டான மக்களாகப் பிரிந்திருக்கும் இந்தியாவில் நிச்சயம் வலியவர்கள் பிறரை அடக்கி ஆள்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆங்கிலேயர்கள் சென்றால், அந்த இடத்தில் வேறு சிலர்எளியோரைத் துன்புறுத்துவர் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். அதைப்பற்றி நிறைய எழுதினார்.
சமூக அளவில் மூன்று முக்கியமான பிரச்னைகள் இருப்பதை அவர் பார்த்தார். ஹிந்து-முஸ்லிம் பிரச்னை, ஹிந்துக்களுக்குள்ளாக “தீண்டாமை” மற்றும் சாதி வேறுபாட்டுப் பிரச்னை, ஆண்-பெண் உறவில் ஆணாதிக்கம். ஆனால் மொழி ஒரு பெரும் பிரச்னையாகப் பின்னர் ஆகக்கூடும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பல மொழிகளை எளிதில் கற்கக்கூடியவராகவும், பிற மொழிக்காரர்களுடன் எளிதில் பழகக்கூடியவராகவும் அவர் இருந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இன்றும் ஹிந்து-முஸ்லிம் பிரச்னை தொடர்கிறது. சாதிப் பிரச்னை அப்படியே உள்ளது. ஒரு கட்டத்தில் இவ்விரண்டுக்குமே “கலப்பு மணம்” தீர்வாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கட்டத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே இது சாத்தியம். காந்தி ஹிந்து-முஸ்லிம் திருமணத்தை ஆதரிக்கவில்லை. அதைப்பற்றி அவர் முழுமையாக யோசிக்கவில்லை. அவரது இரண்டாவது மகன் மணிலால், தென்னாப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னபோது, காந்தி மணிலாலை அந்த எண்ணத்திலிருந்து விலக்கினார். குஜராத்தி வைஸ்ய சாதி ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தார். ஆனால் மற்றொரு மகனான தேவதாஸ், ராஜகோபாலாச்சாரியின் பெண் லக்ஷ்மியை மணக்க விரும்பியபோது அதனைத் தடுக்கவில்லை. சற்றே காலம் கடத்தினார். அவ்வளவே.
அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் ஹிந்து-முஸ்லிம் + ஹிந்து சாதிப் பிரச்னைகள் இந்தியாவில் தொடர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
ஹிந்து சாதிப் பிரச்னைகளை, ஹிந்து மதத்துக்கு உள்ளாகவே தீர்க்கமுடியுமா அல்லது மதத்துக்கு வெளியாகவா? நூறு திருமணங்களில் எத்தனை கலப்பு மணமாக இருந்தால், சாதி வித்தியாசம் பார்த்தல் என்பது அழிவதற்கான வாய்ப்பு உள்ளது? நகரமயமாக்கல் இதில் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்? பொருளாதார உறவுகள் எந்த அளவுக்கு பாரம்பரிய சாதிக் கட்டுமானங்களைத் தொடரவைக்க அல்லது அழிக்க உதவும்?
ஹிந்து-முஸ்லிம் உறவு ஒருவகையில் சாதிப் பிரச்னையின் ஒரு நீட்சி என்றே எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களுக்கு இடையேயான சாதிப் பிரச்னையைத் தீர்க்காமல் ஹிந்து-முஸ்லிம் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
excellent piece. Thank you
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteகாந்தி படத்தை பற்றி சொல்லிவிட்டு Ben Kingsley-ன் அபாரமான நடிப்பை பற்றி சொல்லவில்லையே!!
இன்று நகர்புறங்களில்,அதிலும் குறிப்பாக மென்பொருள் துறையில் இருப்பவர்களிடம் கலப்பு மணம் அதிகரித்து வருவதை நான் கண்டு வருகிறேன். எல்லாமே காதல் திருமணங்கள் தான். பெற்றோர்கள் இதற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதில்லை என்றாலும், இவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் 'ஊரை கூட்டி'யே கல்யாணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பின் இருவரும் ஏதோ ஒரு சாதியில் ஐக்கியமாவார்கள் என்றாலும்,இதனால் எல்லாம் சாதி ஒழியாது என்றாலும், சாதியை பொருளாதாரத்திற்கு அடுத்த நிலையில் வைக்க (சில பேராவது) தயாராக இருப்பது இப்போது சிறிய அளவிலாவது நகர்புறத்தில் நடக்கிறது என்றே நினைக்கிறேன். இதனால் சாதி சிறிய அளவில் நீர்க்கும் என்று நம்புவோம்.
//ஹிந்துக்களுக்கு இடையேயான சாதிப் பிரச்னையைத் தீர்க்காமல் ஹிந்து-முஸ்லிம் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. //
ReplyDeleteகரெக்ட், காந்தி சொன்னதும் அதே, கலப்பு மணத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை. அது நிரந்தர தீர்வாகாது என்று நினைத்து சொன்னார். இன்றைக்கும் அது உண்மைதானே,
இங்கே முஸ்லீம் என்பது குறியீடுதானே... கிறித்துவம், பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களும் உள்ளடக்கம் என்கிற அர்த்தத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்
ஜெ, ராம்கி
மழை: நான் முழுமையான விமரிசனமாக இதனை எழுதவில்லை. அந்தப் படம் பார்த்ததும் தோன்றியதை அப்படியே எழுதினேன்.
ReplyDeleteஇந்தியப் படங்களுக்கும் “காந்தி”க்கும் உள்ள பெரிய வித்தியாசம், படத்தில் பெரும்பான்மை நேரத்துக்கு பின்னணி இசையே இருக்காது. (தேவையும் இல்லை.) கஸ்தூர்பா சாகும்போது, காந்தி இறந்த மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டே இருப்பார். “ஐயோ போய்ட்டியே, இனி நான் என்ன செய்வேன்” அபத்தங்கள் இருக்காது.
ஆனால் காந்தி படம் பார்ப்பவர்களுக்கு முழுமையான வரலாறு கிடைக்காது. வைஸ்ராய் என்று ஒரே ஒருவர் முகம்தான் (கீல்குட் - இர்வின் பிரபு) காண்பிக்கப்படும். மவுண்ட்பேட்டன் வரும்போதுதான் மற்றொருவர் தெரிவார்.
ஆனால் ரெடிங், இர்வின், வில்லிங்டன் என்று பல வைஸ்ராய்களைப் பார்த்தவர் காந்தி. ஒவ்வொருவரும் காந்தியைச் சிறையில் அடைத்து பிறகு விடுவித்தனர்.
பென் கிங்ஸ்லி - பாராட்டப்படவேண்டிய நடிப்பு. மாற்றுக் கருத்தே இல்லை.
வெகு நாட்களுக்குப் பிறகு தான் (15 வயதில் தான்) காந்திப் படத்தை அட்டன்பரோ என்ற அயல் நாட்டவர் தான் காந்தி திரைப்படத்தை எடுத்தார் என்பது தெரிய வந்தது. என்ன கொடுமை. ஒரு இந்தியருக்குக் கூட, காந்தியின் கதையை திரைப்படமாக எடுக்கும் அறிவு இருந்திருக்கவில்லையே!
ReplyDelete//காந்தியின் முக்கியமான பண்பு, மிக முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கியது.//
ReplyDeleteதகுதி அடிப்படையில், சுய விருப்பு வெறுப்பின்றி உருவாக்கியது.
--
//பல விஷயங்களில் இவர்கள் காந்தியுடன் சண்டையிட்டனர். //
இது தான் முக்கியம்
தனக்கு “ஜால்ரா” அடிக்காதவர்களை கூட அவர்களின் தகுதி அடிப்படையில் இரண்டாம் நிலை தலைவராக ஆக்கியது தான் காந்தியின் மேண்மை.
--
இதில் தான் காந்தி பிற (தனது கருத்தை வெளிப்படுத்துபவர்களை அருகில் அண்ட விடாமல் செய்யும்) சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களிடமிருந்து வேறு படுகிறார்
>>>>காந்தியின் “உப்பு சத்தியாக்கிரகம்” என்ற கருத்து, கடற்கரையில், ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளருடன் உட்கார்ந்து பேசும்போது அவருக்குத் திடீரெனத் தோன்றியதாகக் காண்பிக்கப்படுகிறது.
ReplyDeleteதிடீரென்று தோன்றவில்லை, ஆனால் பாஸ்டன் டீ பார்ட்டியை மனதில் கொண்டுதான் தனக்கு உப்பு சத்யாக்கிரகம் நடத்த உந்துதல் தோன்றியதாக காந்தி குறிப்பிட்டதாக William Shirer ரின் புத்தகத்தில் படித்த நினைவு.
ஆட்டன்பரோ காந்தி பற்றி படித்ததும் நினைவுக்கு வந்தது காந்தி பற்றிய மற்றொரு அருமையான படம் - The Making of Mahatma. 96ல் வந்த ஷ்யாம் பெனகலின் படம். இந்த படத்தைப் பற்றி ஒரு அமெரிக்கர் மூலம் கேள்விப்பட்டேன். காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை குறித்த படம் இது. காந்தி சத்தியாக்கிரக மார்க்கத்தை தழுவியது குறித்தான கதை. காந்தி பற்றி நிறைய விஷயங்கள் இந்த படத்தில் தெரிந்து கொண்டேன். உதாரணத்துக்கு - பலரை மண்ணைக் கவ்வ வைத்த இந்த கேள்வி: காந்தி தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு வருடங்கள் வாழ்ந்தார்? முதலில் பதிலைச் சொல்லிவிட்டு பிறகு கூகுள் பண்ணவும் :-)
ReplyDelete