Tuesday, December 23, 2008

செயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்


சென்ற சனிக்கிழமை, மேக்கரை என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் மூன்றாவது படிக்கிறார்கள். அந்தப் பள்ளியில் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1வது, 2வது வகுப்பு மாணவர்கள் ஒரே அறையில் படிப்பார்கள். 3வது, 4வது மாணவர்கள் ஒரே அறையில். மாணவர்கள் தரையில் பாய் போட்டு உட்காருவார்கள். ஆசிரியருக்கு நாற்காலி கிடையாது. அவரும் மாணவர்களுடன் தரையில் உட்காரவேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என நான்கு பாடங்கள் மட்டுமே.

பாரம்பரிய கற்றல் முறைப்படி ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்த, மாணவர்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும், கேள்விகள் இருந்தாலும், வலுக்காட்டாயமாக அடுத்த நாள், அடுத்த பாடம் என்று செல்வார்கள் அல்லவா? அது போல இல்லை. ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக தங்களால் தாங்கமுடிந்த வேகத்தில் ஒவ்வொரு பாடமாகத் தாண்டவேண்டும். ஒரே நேரத்தில் வகுப்பில் உள்ள பல மாணவர்களும் வெவ்வேறு கட்டத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடமும் ஓர் அட்டையில் உள்ளது. (கார்டு என்கிறார்கள் மாணவர்கள்.) அந்த அட்டையின் பின்பக்கத்தில் பாடத்துக்கான கேள்விகள் உள்ளன. கேள்விகளுக்கான விடைகளை மாணவர்கள் சொல்லிவிட்டால் அடுத்த பாடத்தை எடுத்துக்கொள்ளலாம்.

செயல்வழிக் கற்றல் பற்றி பலர் புகழ்ந்து பேசிவிட்டனர். அ.கி.வெங்கடசுப்ரமணியன் (முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலர், குடிமக்கள் முரசு பத்திரிகை ஆசிரியர்) தினமணி இதழில் விரிவான ஒரு கட்டுரையை ஓராண்டுக்கு முன்பே எழுதியுள்ளார். விரைவில் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக இருக்கும் அவரது கட்டுரைத் தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது. ரவிக்குமார் எம்.எல்.ஏ, காலச்சுவடு இதழில் விரிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதே நேரம், செயல்வழிக் கற்றலுக்கு எதிராக ஆசிரியர்கள், பெற்றோர்கள் போர்க்கொடி என்றும் செய்தித்தாள்களில் பார்த்துள்ளேன்.

நானே நேரடியாகப் பார்த்ததில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலாவது, குழந்தைகளுக்கு இருக்கும் தன்னம்பிக்கை. கடந்த சில மாதங்களின் நான் பல பள்ளிகளுக்குச் சென்று பல வகுப்பு மாணவர்களிடம் பேசிவருகிறேன். ஆனால், இந்த மூன்றாம் வகுப்புக் குழந்தைகளின் உடல்மொழியே அலாதியாக இருந்தது. பயம் இல்லை. தைரியமாக - தப்பான பதிலைச் சொல்லும்போது கூட - பயமின்றி பதில் சொன்னார்கள். ஒருவர் பதில் சொன்னபின்பும்கூட மற்ற சில குழந்தைகள் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தாங்களும் அந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் போட முயற்சி செய்து, அதில் தவறு இருந்தாலும் கவலைப்படாமல் சொன்னார்கள்.

இரண்டாவது, கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் தமிழில் படிப்பது மிக எளிதாக வந்தது. நான் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, அவர் இந்தக் குழந்தைகள் பாரம்பரிய முறையில் ஐந்தாவது, ஆறாவது படிக்கும் மாணவர்களைவிட இந்த செயல்வழிக் கற்றல் திட்டத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களால் நன்றாகப் படிக்க முடிகிறது என்றார்.

மூன்றாவது, எந்தக் குழந்தைக்கும் பள்ளிக்கூடம் பற்றிய பயம் இல்லை. அடுத்த நாள் தாங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றிய ஆர்வம் கண்ணில் தென்பட்டது. ஆசிரியர்கள்மீதோ, சக மாணவர்கள்மீதோ பயம் இல்லை. மிரட்சி இல்லை.

நான்காவது, நான் மிகக் கடினமான பல கேள்விகளைக் கேட்டபோது அவர்கள் அதனை எதிர்க்கவில்லை. “எங்க சிலபஸ்ல இல்லை சார்” என்று சொல்லவில்லை. பயந்து பின்வாங்கவில்லை. தங்களால் முடிந்த அளவு தெரிந்ததைச் சொன்னார்கள். தெரியாததற்கு வெட்கப்படவில்லை. நான் அந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் வழிமுறைகளையும் சொல்லச் சொல்ல, நன்கு புரிந்துகொண்டார்கள்.

இதனால் எல்லாம் இவர்கள் மிகச் சிறந்த மாணவர்களாக வருவார்கள் என்று நான் சொல்லவரவில்லை. பள்ளிக்கூடம் பற்றிய அடிப்படை பயம் இவர்களிடம் இல்லை என்பதுதான் முக்கியம். இவர்களிலும் பலர் மோசமான மாணவர்களாக இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இல்லாவிட்டாலும் இவர்களால் சுயமாகப் படிக்கமுடியும் என்பது மிக நம்பிக்கை தரும் விஷயம்.

இந்த செயல்வழிக் கற்றல் பாடத் திட்டம் மீது எனக்கு நிறைய விமரிசனங்கள் வருகிறது. சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் பாடங்கள் (கார்டுகள்) எல்லாம் மிகச் சிறப்பானதாக உள்ளதாகச் சொல்லமுடியவில்லை. ஆனால், தமிழ் நாடு பாடநூல் நிறுவன அபத்தக் களஞ்சியங்களைக் காணும்போது, இந்தப் பாடங்கள் கண்ணுக்குக் குளுமையாக, தவறுகள் குறைவானதாகவும், போரடிக்காமலும் உள்ளன.

இதுதான் செயல்வழிக் கற்றல் முறையில் நான் பார்க்கும் முதல் பள்ளிக்கூடம். அடுத்த சில நாள்களில் மேலும் சில பள்ளிக்கூடங்களைப் பார்வையிட உள்ளேன். அதன்பின், இதைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி தொடர்பாக ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் இது என்று தோன்றுகிறது.

9 comments:

  1. என் மகளின் பள்ளியில் இப்படிதான் பாடம் நடக்கிறது.

    அவள் இன்னும் ஒண்ணாங்கிளாஸுக்குக்கூட வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் நீங்கள் சொல்லும் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக, பள்ளி செல்ல பயம், தயக்கம் இல்லை, தவறான பதிலுக்கு வெட்கம் இல்லை, கற்கும் ஆர்வம்) அவள் வகுப்புக் குழந்தைகளிடம் பார்க்கமுடிகிறது.

    இந்த அட்டைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றனவா? நாமே வீட்டில் பிள்ளைகளுக்கு இதைப் பயிற்றுவிக்கமுடியாதா? (அல்லது அப்படி ஒரு Hybrid Mode சரிவராதா? குழந்தைகளுக்கு Pressure அதிகமாகிவிடுமோ?)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  2. நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த காலங்களில் பள்ளி ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு அதிகம் (ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு பள்ளியில் முகாம்)

    அப்பொழுது தான் இத்திட்டம் குறித்த கருத்துரையாடல்களும், பயிற்சிகளும் நடந்து கொண்டிருந்தன

    தற்போதைய திட்டத்தை விட இது பல மடங்கு சிறப்பானது என்பதில் சந்தேகம் கிடையாது என்பதை ஆசிரியர்களின் கருத்து

    ReplyDelete
  3. Very Interesting. Even more surprised this is done in a govt school. Pl do write more about this concept. Can you take some pictures of the cards?

    ReplyDelete
  4. சொக்கன்: குழந்தைகள் வரைந்த சில படங்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சில படங்கள், பாடத்திட்டம் ஆகிய சிலவற்றை மங்கிய வெளிச்சத்தில், ஃப்ளாஷ் இல்லாத மொபைல் போன் கேமராவில் பிடித்தேன். அவற்றை இந்தப் பதிவிலேயே சேர்க்கிறேன். கார்டுகளைத் தனியாகப் பிடிக்கவில்லை. ஒரு படத்தில் கொஞ்சமாகத் தெரியும்.

    இவை அனைத்துமே SSA திட்டத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வெளிக்கடைகளில் கிடைக்காது. ஆனால் வேண்டும் என்றால் சேகரிப்பது கடினமில்லை.

    இவற்றைக்கொண்டு வீட்டிலேயே பாடம் நடத்துவது ரிஸ்க்தான். அதற்கான கற்பித்தல் முறை வீட்டில் தாய்க்குத் தெரிந்திருந்தால் செய்யலாம். ஆனால் பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகுவது மிகவும் உபயோகமானதல்லவா?

    இலவசக்கொத்தனார்: அரசுப் பள்ளிகளில்தான் இந்த முறை பயிற்றுவிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பித்து, இன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 30,000 அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. காலச்சுவடில் திருமதி வசந்தி தேவி அவர்களும் செயல்வழிக் கற்றல் பற்றிய கட்டுரை எழுதியுள்ளார்.

    சொக்கன்: "யுரேகா புக்ஸ்" செயல்வழிக் கற்றல் சம்பந்தமான அட்டைகளையும் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்கள். யுரேகா புக்ஸின் "படிப்பும் இனிக்கும்", "வாசிப்புத் திறனுக்கான கையேடு" போன்ற புத்தகங்களும் செயல்வழிக் கற்றலுக்கு உதவும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. காலச்சுவடில் வெளியான திருமதி வசந்தி தேவி அவர்களின் "செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்" கட்டுரையின் இணைப்பு: http://www.kalachuvadu.com/issue-106/page26.asp

    ReplyDelete
  7. This new method learning was adapted from the practices developed at The School, Madras and from schools run by KFI.The School has been a pioneer in this and schools run by KFI have also been doing excellent work in education.
    The underlying philosophy is influenced by teachings of Jiddu Krishnamurti.

    ReplyDelete
  8. பத்ரி,

    செயல்வழிக் கற்றலுக்கு எதிரான குரல்களும் (குறிப்பாக ஆசிரியர்களிடத்தில்) நிறைய கேட்கிறது. உங்களின் அடுத்த பதிவில் இதைப்பற்றி எழுதுங்கள். செயல்வழிக் கற்றலில் ஆசிரியர் - மாணவர் இடைவெளி பெரும்பாலும் குறைகிறது. ஆசிரியர்கள் நட்புணர்வுடன் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய கட்டயாத்துக்கு உள்ளாகிறார்கள்.பிரம்பை தூக்கியே பழகிப் போன ஆசிரியர்களுக்கு தங்கள் மேலோங்கிய நிலை பறிபோவது குறித்து பயங்கொள்ளுகிறார்கள் என ஊகிக்கிறேன்.

    ReplyDelete
  9. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
    அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இதர பயிற்சிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றிற்கான அரசு செய்யும் செலவுகள் மிகவும் இரகசியமாக வைக்கப்படுகிறது. இதில் கையாடல் அதிகம் நடைபெறுகிறது. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
    இவ்வகை பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் ஒதுக்கப்டும் வகைவரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்படி இருந்தால் பயிற்சியின் மீது பயிற்சியாளர்களுக்கு அக்கறை ஏற்படும். கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை இச்சமுகத்திற்கு வெளிப்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் ஊழல் குறையும்.

    1. ஒவ்வொரு பயிற்சியின் தொடக்கத்திலேய பயிற்சிக்கான செலவுகளுக்கு ஒதுக்கப்ட்ட நிதியினை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
    2. கருத்தாய்வு மையங்களில்() நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை பொதுமக்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும்.
    3. கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் கருத்தாய்வு மையம் நடைபெறும் பள்ளியின் பெற்றோர் அடங்கிய குழுவினை உருவாக்க வேண்டும்.
    4. மேற்படி குழுவினை வட்டார வளமைய அளவிலும் உருவாக்க வேண்டும்.

    ReplyDelete