இரு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தாலுக்காவில் உள்ள கரசமங்கலம் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் அமைத்திருந்தனர். அந்த கிராமத்தில் சில சுத்த/சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, அங்குள்ள மக்களிடம் பல தகவல்களைச் சேகரிப்பது போன்றவை அவர்களது வேலைகள். அந்த மாணவர்களிடமும் அங்குள்ள மக்களிடமும் ‘உரை’ ஆற்ற நான் சென்றிருந்தேன்.
கல்வி என்பதைப் பொருத்தமட்டில், பெரும்பான்மையினர் அதனை ஒரு பேப்பர் சான்றிதழ் பெற்றுத்தருவதாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு டிகிரி, அடுத்து ஒரு வேலை, அது கொடுக்கும் சம்பளம், அதனால் வரும் வசதிகள் என்றோடு மட்டும் கல்வி என்பதைக் குறுக்கிவிட முடியாது.
இதுதான் நான் எடுத்துக்கொண்ட டாபிக். கல்வி என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, கல்வியால் எப்படி சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன்மூலம் மக்கள் வாழ்வில் மலர்ச்சியைக் கொடுக்கமுடியும் போன்றவற்றை சில உதாரணங்களுடன் பேசினேன்.
அது ஒரு தலித் காலனி. அங்குள்ள வீடுகளில் மக்கள் வாசலில் உட்கார்ந்துகொண்டு, பீடி சுற்றிக்கொண்டே பேச்சைக் கேட்டனர். அவர்களுடனும் என் உரையாடல் தொடர்ந்தது. வாழ்வுக்கு வழி இல்லாத நிலையில், இந்தக் கல்வியால்தான் என்ன பயன் என்று அவர்கள் கேட்கலாம். அவர்களது கிராமத்தில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசினேன். அவர்களைப் பார்க்கும்போது திகிலாக இருந்தது. தேவையான ஊட்டச்சத்து இல்லை. அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எந்தவிதமான கல்வி கற்பிக்கப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
முத்து என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் - பார்க்க இரண்டாம் வகுப்பு மாணவனைவிடக் குள்ளமாக வளர்ச்சி அதிகம் இன்றி இருந்தான். “படிச்சப்புறம் என்னவா ஆக ஆசை?” என்று கேட்டேன். “வாத்தியாரா” என்று பதில் சொன்னான். சுற்றி உள்ள அனைத்துக் குழந்தைகளும் கைகொட்டிச் சிரித்தனர்.
ஏன் வாத்தியார்? நல்ல வேலைதான். தப்பில்லை. ஆனால் இந்தப் பையன் அந்த வேலையை விரும்பக் காரணம், அந்த வேலையின் உயர்வால் அல்ல. கையில் பிரம்பு வைத்திருப்பார். அதிகாரத்தின் சின்னம் பிரம்பு. பசங்களை மிரட்டி, உருட்டி வேலை வாங்குவார். அவருக்குக் கோபம் வந்தால் பிரம்பால் விளாசுவார். அந்த அதிகாரம், சக்தி வேண்டும் அந்தச் சிறுவனுக்கு. அவன் பார்வையில் அங்கு அதிகாரம் மிகுதியாக இருக்கும் ஒரே ஒருவர் அந்த ஆசிரியர்.
இந்த மாணவர்களின் எதிர்காலம் பெருத்த கவலையைத் தருகிறது. அடுத்தடுத்த படிநிலைகளைத் தாண்டி, படித்து, பணப் பற்றாக்குறையை எப்படியோ சரி செய்து, கல்விமீது ஆழ்ந்த பற்று கொண்டு, அதிகார அத்துமீறல்களை, வன்கொடுமைகளைத் தாண்டி, நல்ல வேலை ஒன்றை இவர்கள் பெறுவதற்கு என்ன விலை கொடுக்கவேண்டுமோ!
பிரச்னையின் அடி ஆழம் தெரியாமல் தீர்வுகளைச் சொல்லமுடியாது. மேலும் பல கிராமங்களுக்கு அடுத்து வரும் நாள்களில் செல்ல உள்ளேன்.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
//முத்து என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் - பார்க்க இரண்டாம் வகுப்பு மாணவனைவிடக் குள்ளமாக வளர்ச்சி அதிகம் இன்றி இருந்தான்.//
ReplyDeleteஇது மிகவும் கவலை தரும் விசயம். 1990களில் நான் ஊர்ப்புற உயர்நிலைப்பள்ளியில் படித்த போது மாணவர்கள் அனைவரும் வாட்ட சாட்டமாக உயரமாக இருப்பார்கள்.
இப்போது என் பள்ளிக்கு சென்று பார்த்தால் எல்லாரும் அளவில் மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள்.
சுற்றுப்புற ஊர்களில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் காரணமாக உணவு நஞ்சானது இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர். ஆராய வேண்டிய விசயம்.
உங்கள் பேச்சின் ஒலிபதிவு இருகிறதா? உங்களுடைய கல்லூரி பேச்சின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது :)
ReplyDeleteலோக்: இதன் ஒலிப்பதிவு உள்ளது. பொதுவாக நான் பேசுவதை நான் ஜாக்கிரதையாகப் பதிவு செய்துவைப்பது வழக்கம். இதற்குமுன்னும் பல மாணவர்களிடம் பேசிய சில மணி நேரங்களுக்கான பதிவும் உள்ளன. ஆனால் அவை இணையத்தில் சேர்க்கும் அளவுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சொல்லமாட்டேன். எனவே இதனை ‘கிளீன்’ செய்வதற்கான நேரத்தை இப்போது செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
ReplyDeleteவிவசாயத்தை சரியான வழியில் நடத்தினால் தான் சத்தான உணவு பெற முடியும்!
ReplyDelete//அவர்களைப் பார்க்கும்போது திகிலாக இருந்தது. தேவையான ஊட்டச்சத்து இல்லை.//
ReplyDeleteஊட்டச்சத்துகுறைவினால் இந்தியா தினமும் 3000 குழந்தைகளை இழந்து வருகிறது..இதைப்பற்றி எந்த ஒரு விவாதமும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. எந்த அரசியல்வாதியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை...பொதுமக்களிடையேயும் எந்தவித விழிப்புணர்வும் இல்லை :(
http://beta.thehindu.com/opinion/op-ed/article20324.ece
http://krgopalan.blogspot.com/2009/09/child-malnutrition-in-india.html
அவ்வளவு ஏன் பத்ரி.? பெரும்பாலன கிராமப்புர பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலுக்கு போட்டுக்கொள்ள இரப்பர் செருப்புகூட இல்லாமல் வெறும்காலில்தான் பள்ளிக்கு வருகின்றனர் :(
ReplyDelete