இந்திய அரசியலில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அவரது பங்களிப்பு சரியாக ஆராயப்படவேண்டும். ஒட்டுமொத்தப் புகழ் பாடுதலும் தேவையில்லை; ஒட்டுமொத்த நிராகரிப்பும் அல்ல.
அண்ணாவின் பங்களிப்பாக நான் கீழ்க்கண்டவற்றைப் பார்க்கிறேன்:
1. இந்திய தேசியம் என்ற கொள்கையை முழுமையாக ஏற்காத நிலையிலும் குடியாட்சி முறையில் அனுமதிக்கப்பட்ட வழிகள்மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்று போராடிக் காண்பித்தவர் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிரான அண்ணாவின் போராட்டமே இந்தியா என்ற நாடு உடையாமல் இன்று இருப்பதற்குக் காரணம். ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாளர்கள் இதனை வலியுறுத்துகின்றனர்.
2. பிராந்தியக் கட்சி என்ற ஒன்று உருவாகி ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதை இந்தியாவில் சாதித்துக் காட்டிய முதல் தலைவர் அண்ணா. திமுகவுக்கு முன்னதாகவே காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஆனால் அவை கம்யூனிஸ்டுகள் (கேரளாவில்), அல்லது காங்கிரஸிலிருந்து பிரிந்த குழுக்கள், அல்லது சுதந்தரத்துக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்த பல மாநிலங்களில் பரவியிருந்த தேசியக் கட்சிகள் என்றே சொல்லலாம். (காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியை சில காரணங்களுக்காக விட்டுவிடுவோம்.) பிராந்திய நலனை முன்வைக்க தேசியக் கட்சிகள் தடுமாறும்போது பிராந்தியவாதத்தை முன்வைத்து, அதைமட்டுமே முன்வைத்து மக்களைத் தம் பக்கம் கவரலாம் என்று காண்பித்தவர் அண்ணா.
3. வலுவான உட்கட்சி அரசியலை முன்வைத்து கட்சியை உருவாக்கியவர் அண்ணா. அந்தக் கட்டத்தில் பெரியாரின் பாசறையிலிருந்து பிரிந்துவந்தபோதும், பெரியாரின் சர்வாதிகார இயக்க அமைப்பை ஏற்காமல், அனைவரது கருத்துகளுக்கும் இடம் கொடுக்குமாறு திமுகவை அவர் உருவாக்கியது ஒருவிதத்தில் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி.
4. அரசியல் எதிர்ப்பு என்று இருந்தாலும், அதற்கு அப்பால் அனைவருடனும் மனித நேயத்தோடு, குறைந்தபட்சக் கண்ணியத்தோடு பழகவேண்டும் என்று காட்டியவர் அண்ணா. இன்று தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளே அந்தப் பண்பு இல்லாமல் இருப்பது வெட்கக்கேடு.
5. பதவி இருந்தாலும், கடைசிவரை அப்பழுக்கற்ற வாழ்வு வாழமுடியும் என்று காட்டியவர் அண்ணாதுரை. காசு சேர்க்காமல், திருடாமல், கொள்ள அடிக்காமல், புகழை மட்டும் சேர்த்துவிட்டுச் சென்றவர். இன்றைய அரசியல் அசிங்கங்களைப் பார்க்கும்போது அன்றைய அண்ணாவின் நடத்தை மேலும் சிறப்புடையதாகிறது.
***
அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, இலக்கியத் தரம் ஆகியவற்றில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு. மேடைப் பேச்சு என்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய அண்ணாவின் எழுத்து வேண்டுமென்றே தரம் குறைந்துபோனது என்பது என் கருத்து. ஆரிய மாயை, கம்ப ரசம் போன்ற புத்தகங்கள் ஒரு தேர்ந்த முறையில் விவாதிக்கப்படாத, ரெடாரிக் நிறைந்த மோசமான எழுத்து வகையைச் சார்ந்தவை.
இன்று அண்ணாவின் நூற்றாண்டு விழா நடக்கும் நேரத்தில் ‘Essential Anna' என்ற தலைப்பில் அண்ணாவின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை தெளிவாக வகைப்படுத்தி, அவற்றின்மீது கிரிடிக்கலான பார்வையையும் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்காவிட்டாலும் ‘அண்ணா நிபுணர்கள்' முன்வரவேண்டும்.
பதிப்பிக்க நான் தயார்.
மானுடத்தின் வெற்றி
6 hours ago
அண்ணா நிபுணர்கள் இதற்கெல்லாம் வழி விட்டு தமிழர்களை அறியாமையை விட்டு வெளியே வரச்செய்யும் நாளே தமிழர்களின் பொன் நாள்!
ReplyDelete‘Essential Anna' என்ற தலைப்பில் அண்ணாவின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை தெளிவாக வகைப்படுத்தி, அவற்றின்மீது கிரிடிக்கலான பார்வையையும் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்காவிட்டாலும் ‘அண்ணா நிபுணர்கள்' முன்வரவேண்டும்
ReplyDelete'அண்ணா நிபுணர்கள்' - who are they and what are they?
very honest and needful post. let constructive criticism be there.
ReplyDelete"‘Essential Anna' என்ற தலைப்பில் அண்ணாவின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை தெளிவாக வகைப்படுத்தி, அவற்றின்மீது கிரிடிக்கலான பார்வையையும் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது ..,எடுக்காவிட்டாலும் ‘அண்ணா நிபுணர்கள்' முன்வரவேண்டும். பதிப்பிக்க நான் தயார்."
ReplyDeleteபடிக்க நான் தயார்