(இது கிழக்கு பதிப்பகம் பற்றிய பதிவல்ல!)
மே மாதத்தில் மலேசியா சென்றிருந்தபோது அங்கே உமா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சோதிநாதன் என்பவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மிகவும் வருத்தத்தில் இருந்தார். அவர் சொன்ன கதையை இங்கே எழுதப்போகிறேன். இந்தக் கதையில் சில பெயர்களைக் குறிப்பிட முடியும் (செய்தித்தாளில் தகவல்கள் வந்துள்ளன; தமிழகக் காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுத்துள்ளது என்பதால்); வேறு சில பெயர்களைக் குறிப்பிட முடியாது (சட்டக் காரணங்களுக்காக. சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது, எனவே முடிவாகாத நிலையில் சிலவற்றைக் குறிப்பிடுதல் மானநஷ்ட வழக்குக்கு வழிவகை செய்யும் என்பதால்). எனவே பின்னூட்டத்தில் அந்தக் குறிப்பிடாத பெயர்கள் யார் யார் என்று யூகித்து வருபவற்றை அனுமதிக்கமாட்டேன்.
***
சோதிநாதன் மலேசியாவில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். உமா பதிப்பகம் என்பதை ஏற்படுத்தி மலேசியாவில் தமிழ்ப் புத்தகங்களை விற்பது, புதிய புத்தகங்களை தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் அச்சிட்டு விற்பது ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறவர்.
பல மாதங்களுக்குமுன் தமிழகத்திலும் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அதில் வேலை செய்ய என்று ஒரு தமிழ்நாட்டு நபரை வேலைக்கு நியமித்துள்ளார். உள்ளூரில் இருவரை அந்த நிறுவனத்து இயக்குனர்களாக நியமித்துள்ளார். இந்த நபருக்கு தன் செலவிலேயே திருமணம் செய்வித்ததாகவும் சொல்கிறார் சோதிநாதன். ஆனால் இந்த நபர் இயக்குனர்களின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, வங்கிக் கணக்குகளை மாற்றிக்கொண்டு, மலேசியாவிலிருந்து வரும் பணம் அனைத்தையும் முற்றிலுமாக சுருட்டுக்கொண்டு ‘மயூரா பதிப்பகம்’ என்ற நிறுவனமே தன்னுடையது என்கிறார்போல செய்துள்ளார் என்பது சோதிநாதனின் குற்றச்சாட்டு.
உமா பதிப்பகம் வண்ணச் சிறுவர் புத்தகங்கள் பலவற்றைத் தயாரித்திருந்தது. அவற்றை இந்தியாவில் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவெடுத்திருந்தது. அவற்றை தனதாக ஆக்கிக்கொண்ட இந்த நபர், அந்தப் புத்தகங்களையும் விற்பனை செய்து அதிலிருந்து வந்த வருமானத்தையும் சுருட்டிக்கொண்டாராம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கும் புத்தகங்களை சப்ளை செய்து அந்தப் பணத்தையும் பார்த்துள்ளார் என்றார் சோதிநாதன்.
விஷயம் தெரியவந்ததும் சோதிநாதன் சென்னை காவல்துறையில் வழக்கு பதிவுசெய்ய முயற்சி செய்துள்ளார். நயமாகப் பேசிய ஒரு பெண் போலீஸ் அதிகாரி, சோதிநாதனிடமிருந்து சோனி பிரேவியா டிவி வாங்கிக்கொடு, நோகியா மொபைல் போன் வாங்கிக்கொடு என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், சமரசமாகப் போகுமாறு அறிவுரை கொடுத்துள்ளார். அடுத்து அந்த இடத்துக்கு வந்த ஒரு காவல் அதிகாரி, மலேசியாவரை சென்று பைசா கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பைசா கொடுத்தால்தான் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி, இப்போது அந்த நபர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த நபர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்பான செய்தி நக்கீரன் | மாலைமலர்
***
இது இப்படி இருக்க, சென்னையிலிருந்து ஒரு பதிப்பாளர், மலேசியாவில் சோதிநாதன் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். தமிழகத்தில் தங்களது அச்சகத்திலேயே புத்தகங்களை அச்சடித்தால் மிகக் குறைவான செலவில் செய்துமுடிக்கலாம் என்று சொல்லி, கிட்டத்தட்ட 50 புத்தகங்களை அச்சடித்துத் தருவதாக அவற்றின் சாஃப்ட் காபியை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். ஒவ்வொன்றிலும் 1,500 பிரதிகள் அச்சடிக்க இத்தனை காசு ஆகும் என்று கையெழுத்தாகியுள்ளது.
சில மாதங்கள் ஆகியும் புத்தகங்கள் மலேசியாவுக்கு வரவில்லை. கேட்டால், பாதிப் பணம் முன்பணம் வந்தால்தான் வேலை ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்கள். பாதிப்பணம் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியும் வேலை ஆகவில்லை. மீதிப்பணமும் வந்தால்தான் என்றுள்ளனர். அதுவும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின்னும் வேலை நடக்கவில்லை. கேட்டால், இந்தப் பணம் போதாது; மேலும் கொஞ்சம் நெகடிவ் எடுக்க என்று ஆகும் என்று சொல்லி அந்தப் பணத்தையும் பெற்றுக்கொண்டபின், ஓரிரு மாதங்கள் கழித்து புத்தகங்கள் மலேசியா சென்றுள்ளன.
எல்லாம் 1,500 பிரதிகள் இருந்தும், ஒரு புத்தகம் மட்டும் 3,000 பிரதிகள் இருந்தன. ஆச்சரியம் அடைந்து சோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் பேச, அவர்கள், இது பிழையாக நடந்துள்ளது என்றும் அதற்காக அதிகத் தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும் சொல்லியுள்ளனர்.
ஓரிரு மாதங்களில் கொழும்புவில் புத்தகக் கண்காட்சி. அதில் பங்கேற்கச் சென்ற சோதிநாதனுக்கு அதிர்ச்சி. அங்கே அவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஒரு கடையில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அவரோ இலங்கைக்கு எதையும் இன்னும் ஏற்ற்மதி செய்யவில்லை. புத்தகத்தைத் திறந்துபார்த்தால் ‘உமா பதிப்பகத்தின் அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது’ என்று உள்ளே எழுதியுள்ளது; புத்தகத்தில் காணப்படும் லோகோ, சென்னையைச் சேர்ந்த இந்தப் பதிப்பகத்துடையது.
சோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்துடன் தொடர்புகொண்டுள்ளார். முதலில் இதுமாதிரி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுத்த நிறுவனத்தினர், பின்னர் ஒப்புக்கொண்டு, விற்பனையாகும் புத்தகங்களுக்கு ராயல்டி கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியுள்ளனர். சோதிநாதன் ஒப்புக்கொள்ளாமல் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு சென்னையில் வாய்தா வாய்தாவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
இது சோதிநாதன் தரப்பு வாதம். எதிர்த் தரப்பின் வாதம் என்னவென்று எனக்குத் தெரியாது.
***
தமிழ்ப் பதிப்புத் துறையில் இதுபோல இதற்குமுன் பெரிய அளவு குற்றச்சாட்டுகள், பிரச்னைகள் வந்துள்ளதாக எனக்கு நினைவில்லை.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
துப்பறியும் நாவல் போல உள்ளது.
ReplyDeleteஇப்படியா ஒருவர் எல்லாரையும் நம்பிப் பணம் அனுப்புவார் என்று பாவமாகவும் (!) உள்ளது.
மலேசியா சென்றபோது திரு. சோதிநாதன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன் (நண்பர் திரு. ஆர். வெங்கடேஷ் அறிமுகப்படுத்தினார்), மிகவும் அன்பாகப் பழகினார். அவர் ஒரு பத்திரிகையும் நடத்திவந்ததாகச் சொல்லி அதன் பழைய பிரதிகளைக் காண்பித்தார். அவரிடம் எனக்கு ஒரு பெரிய புத்தகம் (மலேசியக் கவிதைக் களஞ்சியம்) வாங்கினேன், பலமுறை வற்புறுத்தியும் பிடிவாதமாகப் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
ReplyDeleteஇப்போது இந்தப் பதிவைப் படித்தபிறகு, நானும் அவரை ஏமாற்றிவிட்டதுபோல் வருத்தமாக இருக்கிறது :(
- என். சொக்கன்,
பெங்களூரு.
மலேசியத் தமிழர்களை அந்த நாட்டு அரசு இந்த விரட்டு விரட்டும் போதே தெரியவில்லையா...அவர்கள் இன்னும் வெகுளிகளாகவே இருக்கிறார்கள் என்று..
ReplyDeleteமுதல் தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியானது.
ReplyDeleteசென்ற மாதம் தான், புத்தகம் விநியோகம் குறித்து 'மயூரா' பதிப்பகத்தின் பேசியிருந்தேன். நல்ல வேலையாக தப்பித்தேன்.
இரண்டாவது தகவல்.
எழுத்தாளருக்கும், புத்தகம் போடும் ஏஜேண்ட் ( பெரும்பாலும் டி செய்பவர்களுக்கும் ) இது போன்ற பண பிரச்சனைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.எல்லா தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
தமிழகப் பதிப்பாளர் சங்கம், பெட்டர் பிசின்ஸ் ப்யுரோ, போன்ற அமைப்புகள் இது போன்ற பன்னாட்டு வணிகர்களுக்கு உதவலாம். திரு. சோதிநாதன் மலேசிய தூதரகத்தின் உதவியை நாடியிருந்தால் இந்திய அரசு இதற்கான நடவடிக்கை எடுத்திருக்கும். இது போன்ற நடத்தைகள் இந்தியாவின், தமிழகத்தின் பெயரைக் கெடுப்பதால், குற்றவாளிகளைத் தண்டிப்பதில் தயங்கக் கூடாது. வெளிநாட்டுக் குடிமகனிடம் லஞ்சம் வாங்க முயன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதால் இதை சி.பி.ஐ.க்குக் கூட எடுத்துச் செல்லலாம்.
ReplyDeleteஇதைச் சோதிநாதன் விட்டுவிடக்கூடாது. அதே போல் நல்ல முறையில் தொழில் நடத்தி வரும் தமிழகப் பதிப்பாளர்களும் இப்படிப் பட்ட முறைகேடான நடத்தைகளைக் கடுமையாகக் கண்டித்து இது போன்ற செய்கைகள் செய்வோரைப் பதிப்பாளர் சங்கத்திலிருந்து விலக்க வேண்டும்.
மணி மு. மணிவண்ணன்
தமிழ் நாட்டுத் தமிழனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டாமா? இதெல்லாம்தானே இங்கே திறமை... !!
ReplyDelete2007 முதல் நடந்து வரும் இன்னுமொருபுத்தகத் திருட்டு.
ReplyDeleteஇது மார்க்சிஸ்ட் கட்சியின் பாரதி புத்தகாலயத்தின் புத்தகத் திருட்டு.
https://www.amazon.com/DYFI-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-Puthakalayathin-ebook/dp/B0964FNYT6/ref=mp_s_a_1_22?dchild=1&qid=1628489640&refinements=p_n_feature_nine_browse-bin%3A3291482011&s=books&sr=1-22