பொதுவாக எந்த பட்ஜெட் வந்தாலுமே எதிர்க்கட்சிகள் அதனை ‘சப்பையான பட்ஜெட்’, ‘மக்கள் விரோத பட்ஜெட்’, ‘ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்’ என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.
நேற்றைய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கான நேரடி மானியம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருந்தார்.
பொதுவாக ஏழை மக்களுக்கு (வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்) பலவிதங்களில் மானியங்கள் செல்கின்றன. இவை அனைத்துமே மறைமுக மானியங்கள். உதாரணமாக ரேஷன் அரிசி, கோதுமையை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு பொதுச்சந்தையில் என்ன விலைக்கு அரிசியும் கோதுமையும் விற்றாலும் அரசு மக்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் என்று வழங்க முடிவெடுக்கிறது. மத்திய அரசின் உணவு கார்பரேஷன் ஆஃப் இந்தியா கொள்முதல் விலை அரிசி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 என்று வைத்துக்கொள்வோம். அதனை மத்திய அரசு மாநில அரசுக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 5 என்று விற்கலாம். அவர்கள் தரும் மானியம் கிலோவுக்கு 5 ரூபாய். அதனை வாங்கும் மாநில அரசு, மேலும் ரூ. 4 மானியம் கொடுத்து, கிலோ அரிசி 1 ரூபாய் என்று தருகிறது என்று வைத்துக்கொள்வோம். மொத்த மானியம் கிலோவுக்கு ரூ. 9. இது மறைமுக மானியம்.
இதில் என்ன குறை?
(1) அரிசி புழுத்துப்போன மோசமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிச் சாப்பிட நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.
(2) ரேஷன் அதிகாரிகள் அடாவடி செய்து, அரிசியைக் கேரளாவுக்குக் கடத்திச் சென்று விற்றுப் பணம் சம்பாதிக்கலாம்.
(3) உங்களுக்கு மாதத்துக்கு 20 கிலோ அரிசி என்று அதிகபட்ச அளவு இருந்தால், அரசு உங்களுக்கென முடிவு செய்திருக்கும் மானியம் 20*9 = 180 ரூபாய். ஆனால், உங்களுக்கு அந்த மாதம் 10 கிலோ அரிசி போதும் என்றால், பாதி மானியம்தான் உங்களுக்குக் கிடைக்கிறது. 90 ரூபாய் உங்களுக்கென அரசு கொடுக்கவேண்டியது உங்களிடம் வருவதில்லை.
சரி, இதனை வேறு எவ்வாறு செய்யலாம்? அரிசிக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ. 180 மானியம் என்று முடிவெடுத்துவிட்டால் அந்தந்த மாதத்துக்கு அந்தந்தக் குடும்பத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பணத்தை, பணமாகவே கொடுத்துவிடலாம். இதைத்தான் நேரடி மானியம் என்கிறோம்.
பொதுவாக பொருளாதார வலதுசாரிகள் மானியமே கூடாது என்பர். ஆனால் மானியம் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால் நேரடி மானியம் சிறந்தது என்பர். என்? ரேஷன் அரிசி கொடுக்கிறேன் பேர்வழி என்று அதற்காக ஒரு பெரும் டிபார்ட்மெண்ட், அதில் வேலை செய்ய ஏகப்பட்ட பேர், அவர்களுக்குச் சம்பளம், அவர்கள் செய்யும் ஊழலுக்குக் கிம்பளம் என்று அரசாங்கப் பணம் பாழாவதற்கு, பேசாமல் வீட்டுக்கு ரூ. 180 என்பதற்கு பதில், ரூ. 280 கொடுக்கலாமே என்பதுதான் இந்த வாதம்.
ஆனால் பொதுவாகவே இடதுசாரிகள் இதனை எதிர்க்கிறார்கள். (பின்னர்? வலது ஆதரித்தால் இடது எதிர்த்துத்தானே ஆகவேண்டும்?) இந்தப் பணம் மக்களிடம் நேரடியாகச் செல்வதால் ஆதாயம் அடையப்போவது தனியார்கள். ஏழை மக்கள் மீண்டும் பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறது இந்த வாதம்.
என்ன குறைகள்?
1. கொடுக்கப்படும் பணத்தை அவர்கள் அரிசி வாங்கத்தான் பயன்படுத்துவார்கள் என்றில்லை. மாறாக பெப்சி, சாராயம் என்று எதிலாவது வீணடிக்கலாம்.
2. மக்கள் கையில் அதிகம் பணம் கிடைக்கிறது என்று தெரிந்ததும் பொதுச்சந்தை அரிசி விலை அதிகரிக்கும். கடைசியில் இந்தப் பணத்துக்கு அவர்களுக்கு 4 கிலோ அரிசி கிடைக்குமா என்பதே சந்தேகம்!
3. இப்படிக் கொடுக்கப்படும் பணத்திலும் ஊழல் இல்லாமலா போய்விடும்? அதில் கமிஷன் அடிக்க அரசு ஊழியர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை வந்து நிற்பார்களே?
சரி, என்னதான் அய்யா வழி என்று இடதுசாரிகளைக் கேட்டால், விலை ஏற்றத்தைக் குறைக்கவேண்டும், ஏழைமையைக் குறைக்க ஒட்டுமொத்த முயற்சிகள் எடுக்கவேண்டும், நியோ-லிபரல் கொள்கைகளைச் செயல்படுத்தக்கூடாது, வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவேண்டும், உள்கட்டமைப்புகளில் அரசு அதிகம் செலவழிக்கவேண்டும் என்றெல்லாம் பொதுவான பதில்கள் வரும்.
மானியத்தை நேரடியாகக் கொடுப்பதை ஆதரிப்போர் என்ன சொல்கிறார்கள்?
1. மக்களை நம்பவேண்டும். அவர்கள் பணத்தை வீணடிக்கக்கூடியவர்கள் என்றால் அவர்களுக்கு நெடுநாளைய நோக்கில் வாழ்வே கிடையாது. பணத்தைக் காத்து வைத்துக்கொள்வது எப்படி என்று அவர்களுக்கு நிச்சயம் தெரியும். ஏற்கெனவே அவர்கள் மாதத்துக்கு 2,000-3000 ரூபாய் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் கொடுப்பது வெறும் 500-600 ரூபாயோ என்னவோதான். அதை மட்டும் வீணடித்துவிடுவார்கள் என்பது அபத்தம்.
2. பணம் வீணாகமல் போக, அவர்கள் அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு உருவாக்கி, ஏடிஎம் கார்டு கொடுத்துவிடலாம். மாதாமாதம் அவர்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் நேரடியாகப் போய்ச் சேர்ந்துவிடும். படு கிராமங்களில்கூட வங்கி வசதி கொடுக்க பிசினஸ் கரென்ஸ்பாண்டண்ட் என்ற முறையை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. கிராமப்புற ஏடிஎம் வசதிகள் வர ஆரம்பித்துள்ளன.
3. சந்தையில் விலை அதிகரிக்கும் என்பதை ஏற்க முடியாது. சந்தை விலை ஒரு சிலரது வாங்கும் சக்தியை மட்டும் கொண்டு முடிவாவது அல்ல. கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்று அரிசி வாங்கி பஸ்ஸில் ஏறி வந்துவிடலாம்.
***
நான் நேரடி மானியத்தை ஆதரிக்கிறேன். வேகமாக வளரும் எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சகஜமே. இவற்றைச் சரிக்கட்ட அரசால் உடனடியாக முடியாது.
ஏனெனில், வளரும் பொருளாதாரத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏழைகளால் எளிதில் முடிவதில்லை. தேவையான படிப்பு அவர்களிடம் இல்லை. கிரெடிட் வசதி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும் தொழில்முனைவதற்குத் தேவையான ‘ரிஸ்க் எடுக்கும் உணர்வு’ அவர்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. ‘ஓரிரு ஆண்டுகள் முயன்று பார்ப்போம்; கட்டி இழுப்போம்; கிடைத்தால் மலை, போனால் மயிர்’ என்ற தைரியத்தைப் பெறுவது எளிதல்ல. ஆண்டாண்டு காலமாக அரை வயிறும் கால் வயிறுமாக உணவு பெற்று, எப்படியடா வாழ்க்கையைக் கழிப்போம் என்ற புரியாத நிலையில் இருப்போர் ஒரேயடியாக தொழில்முனைவோர் ஆகிவிடுவதில்லை. (ஒரு சிலர் தவிர!) எனவே இந்த ஏழைகளின் தேவை வயிறு நிறைய உணவும், படிப்பும். படிப்பு அவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆக்கும். தொடர்ந்து, நிலையான வருமானம் தரும் வேலை கிடைத்தவுடன் அவர்களுடைய பிள்ளைகள் புதிய பொருளாதாரத்தில் தமக்குரிய இடம் என்ன என்பதை முடிவு செய்துகொள்ளமுடியும்.
இதுவரை நான் பேசியது உணவு பற்றி மட்டுமே. இந்த மக்களுக்குத் தேவையான தரமான கல்வியை எப்படி நாம் கொடுக்கப்போகிறோம், அங்கும் நேரடி மானியம் உதவுமா என்பது அடுத்த கேள்வி. அதனைத் தனியாகப் பார்க்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு உணவைப் பொருத்தமட்டில் நேரடி மானியம் நிச்சயம் அதிகப் பலன் தரும் என்பதே என் கருத்து.
Tuesday, March 01, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி!
ReplyDeleteஉங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்! பணமாக எவ்வளவு கொடுத்தாலும் மக்களுக்கு போதும் என்று தோன்றாது, இதிலும் கொள்ளை அடிப்பார்கள். தரமான பொருள்களை விநியோகித்தாலே போதும்! இப்போதும் எத்தனையோ பேர் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள். நானே 10 வருடங்களுக்கு முன்னால் ரேஷன் அரிசி சாப்பிட்டிருக்கிறேன். ரேஷனில் போலி அட்டைகளை ஒழித்தாலே மானியம் நிறைய குறையும்! நன்றி!
மக்கள் எவ்வளவு கொடுத்தாலும் மேலும் கேட்பார்கள் என்பது நியாயமானதாகத் தெரியவில்லை. ஏழைகள் கண்ணியமாக உயிர்வாழக் கொடுக்கும் பணம் வேறு, மிடில் கிளாஸ் ஒய்யாரமாக வாழக் கொடுக்கும் பணம் வேறு. ஆசைகள் அதிகமாகலாம்; ஆனால் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான பணம் அதிகமாகிக்கொண்டே போகாது.
ReplyDeleteரேஷனில் போலி அட்டைகளை ஒழித்தால் போதும் என்பது எளிதான ஸ்டேட்மேண்ட். பிரச்னையே அவற்றைச் செய்யமுடியாது என்பதுதான். மேலும் போலி அட்டைகளைத் தாண்டி கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. பிறகு சப்-ஸ்டாண்டர்ட் ரகப் பொருள்கள், ரேஷன் ஊழியர்களின் அலட்சியப் போக்கு... இவை ஏழைகளின் கண்ணியத்தைக் குலைக்கத்தான் செய்கின்றன.
பத்ரி! மிகத் தெளிவாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் எழுதி இருக்கிறீர்கள். இன்றைய நிலையில் நேரடி மான்யம் உகந்தது என்று நானும் கருதுகிறேன். ஆதார் அளிக்க இருக்கும் அட்டையின் அடிப்படையில் நேரடி மானிய்ம் ஏ.டி.எம். மூலம் பயனாளர்களுக்குப் போய்ச் சேர வழி வகுக்கலாம்.
ReplyDeleteநல்ல ஆழ்ந்து யோசித்து எழுதப்பட்ட பதிவு, திரு பத்ரி.
ReplyDeleteமானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் கொடுக்கலாம். இது நல்ல யோசனை.
வாழ்த்துக்கள்.
பத்ரி, ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டது. இலவச மின்சாரத்திற்கு பதிலாக விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்களுக்கு மின்கட்டணத்தொகை மணியார்டர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திட்டம் தோல்வியடைந்தாலும் நல்ல முயற்சி.
ReplyDeleteபுரியவில்லை பத்ரி..இப்போது 10 ருபாய் மானியத்தில் 1 ரூபாய்க்கு அரிசி போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ReplyDeleteகாசாக 10 ரூபாய் மானியம் கொடுத்தால், கடையில் 35 ரூபாய் அரிசியை 25 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை வந்து விடாதா?
பத்ரி,
ReplyDeleteநேரடி மான்யம் என்பது பயனில்லாத ஒன்று. நீங்கள் கூறியது போல் அவர்கள் பெப்ஸி/சாராயம் வாங்கலாம். பொதுவாக அதயே செய்வார்கள். இப்பொழுது NREGA எப்படி மகா மகா ஊழலாக இருக்கிறதோ அதே போல். முதலில் அரிசி விலை வீழ்ந்தாலும் பிறகு வியாபரிகள் விலை ஏற்றி விடுவார்கள்.
distribution ஸிஸ்டத்தை சரி செய்வதுதான் நன்று. நேரடி பணம் கொடுப்பது இன்னும் இன்ஃப்லேஷ்னை அதிகரிக்கும். அதனால் வாங்கும் திறன் குறையும். தமிழ்நாட்டில் பரவாயில்லை. மும்பயில் தனியாக ரேஷ்ன கடையே கிடையாது. தனியார் கடைதான் இதையும் செய்யும்.
கணேஷ்.
நடராஜ்: கடைகளில் - பொதுச் சந்தையில் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அரிசி வகைகள் கிடைக்கின்றன. ரேஷன் கடைகளிலேயே 5 ரூபாய், 7 ரூபாய் அரிசிகள் எல்லாம் கிடைக்கின்றன.
ReplyDeleteஇந்த முயற்சி ஆதார் மூலம் 2012 மார்ச்சு மாதம் முதல் செயல் படுத்தப் போகிறார்கள். ஆனால் உணவுக்கல்ல. உணவுக்கு நேரடி மானியம் வேலைக்காவாது. மற்ற விவசாய இடு பொருட்களுக்கான மானியத்தை நேரடியாக வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் நன்மை. உணவைப் பொறுத்தவரை distribution சரி செய்வது, அல்லது food stamps கொடுப்பதுதான் சிறந்த தீர்வு. வள்ர்ந்த நாடுகளில் உணவு செலவு வருமானத்தில் 10% க்கும் குறைவு. அதனால் வேலையில்லாதவர்க்கு சராசரி வருமானத்தில் 20% வரை dole கொடுத்தாலே போதுமானது. நம்ம ஊரில் அந்த நிலமை வரும் வரை உணவுக்கு நேரடி மானியம் கடினம்.
ReplyDeleteInstead of money the government can issue food coupons. Subramaniayn Swamy is advocating this for years.
ReplyDelete(sorry for typing in Eng)
Saravanan
How about food coupons? You can buy only food and can be used anywhere from hotels to local shops. Even for TV they should have provided coupons.Coupons for Rs.7000, if you want a better TV invest 2000 more.
ReplyDeleteமானியங்கள் எல்லாமே சொசியலிசத்தின் பரிணாமங்களே. அதை அறவே இல்லமல் ஆக்குவது தான் ஒரு திறமையான அரசின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
ReplyDeleteமானியங்கள் கொடுத்தே வோட்டு வாங்கி ஆட்சிசெய்யவேண்டும் என்ற குறிக்கொள் கொண்ட அரசியல் கட்சிகள் தான் நம்மிடையே அதிகம் உள்ளது. கூப்பன் கொடுக்கலாம், நேரடியாக கொடுக்கலாம், மறைமுகமாகக் கொடுக்கலாம் என்பதெல்லாம் காலம் முழுதும் பிச்சைக்காரர்களை உருவாக்கும் வழிகள் தான்.
Sir,
ReplyDeleteShouldnt the govt concentrate on providing jobs to people in BPL,rather than giving them free money?