Monday, July 01, 2013

அம்மா உணவகம்

பொதுவாக மானியங்கள் கொடுப்பதை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது என் பொருளாதாரக் கருத்து. மிகச் சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம். உதாரணம்: பசியைப் போக்கும் அனைத்தும். ஏனெனில் இன்று ஏழைமை மிகுந்த நம் நாட்டில் பசியால் வாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால்தான் இது என்று இடதுசாரியினர் சொன்னாலும் நான் அதனை ஏற்கவில்லை. சில ஏற்றத்தாழ்வுகளை விரைவாகச் சரி செய்ய முடியாது. அந்தச் சரிசெய்யல் நடைபெறும்வரை சில இடங்களில் மானியங்கள் கொடுக்கலாம். ஆனால் அதுவே ‘உரிமை’ என்ற பெயரில் நிலை நாட்டப்பட்டு, உண்மையான உற்பத்தி இல்லாது அரசின் தானத்தை மட்டுமே நம்பியிருப்பதோடு மேலும் மேலும் கேட்க நினைக்கும் ஓர் எண்ணத்தைக் கொண்டுவரும். இது கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டியது.

அம்மா உணவகம் ஆரம்பித்து அது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் அது unsustainable என்பதாகவே நான் கருதினேன். நல்லது என்றாலும் நடைமுறையில் அதனைச் செயல்படுத்துவது கடினம் என்பதனை விளக்கி ஆழம் இதழுக்கு ஒரு கட்டுரை வந்துள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்ட் இதழில்) வெளியாகும்.

சரியாக நிதி ஒதுக்காமை; அடுத்தடுத்துப் பல இடங்களில் ஆரம்பித்தல்; ஒரு நகரத்தில் தன்னை முதலில் நிலைநிறுத்துவதற்குமுன் பல நகரங்களுக்கு விஸ்தரித்தல்; இதற்கெனத் தனியாக யாரையும் நியமிக்காமல் மாநகராட்சி அதிகாரிகளை இந்த வேலையையும் செய்யுமாறு சொல்லுதல்; இடம் பார்ப்பது முதல் தக்காளி வாங்குவதுவரை எதனை எப்படிச் செய்வது என்று தெரியாத அதிகாரிகளைக் கூலி வேலைக்காரர்கள்போல ஓட ஓட விரட்டுதல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையிலும் ஓட்டைப்பானை போலப் பணம் செலவாதல்; இதற்கிடையே புதுப் புது மெனு ஐட்டம்களைச் சேர்த்தல். இப்படி எல்லாமே கோணல்.

ஓர் உணவகத்தை நடத்துவது என்பது எளிதல்ல என்பதை இந்தத் திட்டம் முற்றிலுமாக உடைந்து நொறுங்கியதும் அனைவரும் உணர்வார்கள். அப்போதுதான் ஓட்டல் நடத்தும் சிறு முதல் பெரு தொழில்முனைவோர்மீது மக்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

6 comments:

  1. சரியான கட்டுரை. இன்று இந்த
    உணவகம் சரி என்று எழுதும் சில
    ஊடகங்கள் இதே காரியத்தை
    வேறொரு அரசு செய்திருந்தால்
    இட்லி கடை வைப்பதா அரசு வேலை
    என்று நையாண்டி செய்திருப்பார்.

    ReplyDelete
  2. "அம்மா கறி கடை: இங்கு நல்ல மீன்கள் (மானிய விலையில்) விற்கப்படும்."

    --இன்னும் நிறைய எதிர்பார்ப்போர் சங்கம்.

    ReplyDelete
  3. லீனஸ். லிMon Jul 01, 06:15:00 PM GMT+5:30

    பத்ரி சார், வணக்கம்.

    அம்மா உணவங்களுக்கு ஏற்படும் நாளைய பிரச்சனைகளை பற்றி எழுதியிருந்தீர்கள். நாளை என்னவாகும் என்பதை நாளை தீர்மானிக்கட்டுமே. இன்று பலர் அம்மா உணவகங்களில் மனதார பசியாறுகிறார்கள். அதில் நாம் சந்தோஷப்படுவோம். ஆனால் உண்மையிலேயே கஷ்டப்பட்டவர்கள்தான் இந்த உணவகங்களில் பசியாறுகிறார்களா என்பது கேள்விகுறிதான். கஷ்டப்பட்டவர்கள் மட்டுமே பயன்அடையும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்.

    எனது ஊரில் உள்ள ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில், பிராத்தனைக்கு பின்னர் அன்னதானம் அளிக்கப்படுகின்றது. இதற்கு வரிசையில் முன்டியடித்து ஒன்றுக்கு நான்கு டோக்கன் வாங்குபவர்கள் அனைவரும் மிக வசதியானவர்களே. இதைப்பற்றி கேள்வி எழுப்பினால், ‘பிரசாதம்’ என நாங்கள் வாங்குகிறோம் என்று கூறும் இவர்கள் மேற்படி அன்னதானத்திற்கு ஒருமுறைகூட நிதிஉதவி செய்வதில்லை.

    ‘அம்மா உணவகங்களில்’ வசதியற்றவர்கள் பயன் பெரும் விதமாக மற்றவர்கள் அங்கு உணவருந்துவதை மனமுவர்ந்து தவிர்த்தால் ஒருவேளை இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக நடக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete
  4. இன்று ஜூலை 2 ம் தேதியாகிவிட்டது. ஒன்றாம் தேதியோடு மூடுவிழா என்று அறிவித்திருந்த கூகுள் ரீடர் இன்னும் செயல்பட்டுவருகிறதே?!

    சரவணன்

    ReplyDelete
  5. //நாளை என்னவாகும் என்பதை நாளை தீர்மானிக்கட்டுமே//

    இது சரியல்ல. ஒரு திட்டம் வெற்றியடைய மிகுந்த திட்டமிடல், எதிர்காலத்தைப்பற்றிய கணிப்பு, சரியான இலக்கு எல்லாம் தேவை. ஒரு உதாரணம் சொல்லலாம். எம்ஜியாரின் சத்துணவுத்திட்டம், இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தொடங்கப்பட்டதல்ல. முறைப்படி தனி இயக்ககம் அமைக்கப்பட்டு, ஆட்கள் நியமிக்கப்பட்டு, மிகுந்த சிரத்தையோடு தொடங்கப்பட்டது. இன்று 30 ஆண்டுகளாகியும் பல பள்ளிக்குழந்தைகளுக்கு பலனளித்துவருகிறத்து மறுக்கமுடியாதது.

    இந்த கிட்டத்தட்ட விலையில்லா உணவகத்தின் நிதிஆதாரம் என்ன என்பதே கேள்விக்குறி. இது ஒரு போலித்திட்டம், சாயம் வெளுத்தவுடந்தான் அனைவரும் உணர்வீர்கள்.

    இந்த ராபின்ஹூட் திட்டங்கள் ஒழியும் வரை நாடு உருப்பட வழியில்லை.

    ReplyDelete
    Replies
    1. லீனஸ் லிThu Jul 04, 10:35:00 AM GMT+5:30

      ஒரு நலத்திட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு திட்டமிடல், எதிர்கால கணிப்பு மற்றும் சரியான இலக்கு தேவை என்பதை நான் மறுக்கவில்லை. இவை தனியாரின் திட்டங்களுக்கு மிக சரியாக பொருந்தும். ஆனால் இவை அனைத்தும் அரசின் திட்டங்களுக்கு நிறைவானதா என்றால், இல்லை. மேற்படி அத்தனை விஷயங்கள் இருந்தும் பல நலத்திட்டங்கள் வலுவிலந்து போயிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், ஒரு அரசு செய்ய ஆரம்பித்ததை அடுத்த அரசு தொடர விரும்பாததுதான் காரணம். எங்கே முந்தைய அரசின் திட்டத்தை தொடர்ந்தால் அதற்கான புகழ் ஆனது முந்தைய அரசுக்கு சென்று விடுமோ என்ற பயம்தான். ஆனாலும் அதையும் மீறி பல நலத்திட்டங்களை அடுத்து வரும் அரசு செயல்படுத்தப்படும் கட்டயாத்திற்கு ஆளாக்கபடுகின்றார்கள். முந்தைய ஆட்சியில் இருந்த மருத்துவக்காப்பீட்டு திட்டம் இன்று வரைமுறைப்படுத்தப்பட்டு தொடரப்படுகின்றது. ஒரு நலத்திட்டம் ஆரம்பிக்கும்போது, சில சமயங்களில் சரியான திட்டமிடல், எதிர்கால கணிப்பு மற்றும் சரியான இலக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த திட்டத்தின்மேல், மக்கள் எதிர்பார்ப்பு என்று ஒன்று வந்துவிட்டால் அனைத்து அரசுகளும் அந்த நலத்திட்டத்தை வரையறை செய்து தொடரும் நிலைக்கு வேறு வழியின்றி தள்ளப்படுவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனது பதிவு இந்த திட்டத்தின் நிறை குறையை பேசுவது அல்ல மேலும் இலவசமாக அரசு கொடுப்பதை நான் ஆதரிப்பவனும் அல்ல. நான் பதிவு செய்த கருத்தின் நோக்கம் இந்த திட்டத்தின் கீழ் கஷ்டப்பட்டவர்கள் பலர் மனதார தற்போது பசியாறுகிறார்கள் என்பதுதான். இந்த உணவங்களில் மற்றவர்கள் உணவருந்தி நன்கொடை கொடுத்தால், முறையாக இரசீது கொடுத்து ஏற்று கொள்ளும் வகையில் வழிசெய்யவேண்டும்.

      Delete