Monday, July 15, 2013

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம்

மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் என்று வராமல் அவசரச் சட்டமாக குடியரசுத் தலைவரை வைத்து வெளியிட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு. இந்தச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை என்பதால்தான் அருணா ராய் கோபித்துக்கொண்டு தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து விலகினார்.

இந்தச் சட்டம் என்ன செய்ய முனைகிறது?

* கிராமங்களில் 75% பேர், நகரங்களில் 50% பேர் வரை, ஆளுக்குக் குறிப்பிட்ட அளவு அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2, கம்பு/கேழ்வரகு/சோளம் போன்றவை கிலோ ரூ. 1 என்ற கணக்கில் விற்கப்படும்.
* இதற்கான மானியத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும்.

இதன்மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஏற்படும்; அவர்கள் பட்டினி கிடக்க நேரிடாது என்பது உட்கருத்து.

சரி, இதற்கு எதற்குச் சட்டம் போடவேண்டும்?

தமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 100% பேருக்கும் தானியங்கள் தரப்படுகின்றனவே? ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1, இன்னும் அதிகத் தரமான அரிசி கிலோ ரூ. 20 என்றெல்லாம் கிடைக்கிறதே? சத்தீஸ்கரிலும் இதேபோல ஒன்று நடைமுறையில் இருக்கிறதாம்.

ஆனால் மன்மோகன்/சோனியா அரசுக்கு எல்லாமே சட்டமாக்கப்படவேண்டும். அவை நிஜத்தில் நடக்கிறதா, இல்லையா, நடந்தால் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதுபற்றியெல்லாம் கவலை இல்லை.

ஒவ்வொரு மாநிலமும் தனக்கான சட்டங்களைத் தாமேதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையும் அதற்கு இடம் தரவேண்டும். ஆனால் அதுகுறித்தெல்லாம் மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தச் சட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மானியம் தரவேண்டும். இதனை இந்த இரு அரசுகளாலும் தாங்கிக்கொள்ள முடியுமா? இதனால் நிதிப் பற்றாக்குறை இருவருக்குமே அதிகமாகுமே, அதனை எவ்வாறு எதிர்கொள்வது?

தமிழகத்தில் சாராயக் கடைகளைப் பராமரிப்பதன்மூலமே அரசு இதுபோன்ற திட்டங்களுக்கான நிதியைப் பெறுகிறது. இரவோடு இரவாக சாராயக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் தமிழக அரசே இதுபோன்ற திட்டங்களை (இலவச அரிசி, இலவச லாப்டாப், அம்மா உணவகங்கள்...) நடத்துவதில் திண்டாட ஆரம்பித்துவிடும். எனவே பிற மாநிலங்களுக்கும் ஒரே வழி, அனைத்து மாநில அரசுகளும் சாராய வியாபாரத்தில் இறங்கவேண்டியதுதான்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை உண்மையிலேயே செயலாக்கவேண்டும் என்றால் அதனால் எம்மாதிரியான செலவுகளும் அதன்காரணமாக எம்மாதிரியான அழிவுகளும் ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் விளக்கியுள்ளனர்.

* மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும். Fiscal Responsibility and Budget Management Act, 2003 காற்றில் பறக்கவிடப்படும்.
* அரசு அதிகக் கடன்களைச் சந்தையிலிருந்து பெறவேண்டியிருக்கும்.
* இதனால் தனியாருக்குக் கிடைக்கக்கூடிய கடன் குறையும்; தனியார் கடன் வட்டி விகிதம் அதிகமாகும். (Crowding out.)
* இதனால் ஏற்கெனவே நலிந்துகொண்டிருக்கும் உற்பத்தித் துறை மேலும் நசியும்.
* இதனால் வேலைவாய்ப்புகள் கட்டாயமாகக் குறையும். ஏற்கெனவே தள்ளாடும் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்.
* குறைந்த விலை தானியம் தரப்படுவது உரிமை என்றானால், அவை பயனாகிறதோ இல்லையோ அவற்றை வாங்கி, மறுவிற்பனை செய்யும் முறை அதிகமாகும். உதாரணமாக அவற்றை அரைத்துக் கோழிகளுக்கும் மாடுகளுக்கும் தீவனமாகத் தரலாம். இதனால் அரசின் மானியம் போய்ச்சேரவேண்டிய மக்களுக்குப் போகாமல் பயனற்றுப் போகும்.
* விவசாயிகளிடமிருந்து அதிக நெல்/கோதுமை/தானியங்கள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும். Minimum support price அதிகமாகாது. அப்போதுதான் அரசின் மானியத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
* அரசுக்கே அதிக தானியங்கள் தேவைப்படுவதால், தனியார் கொள்முதலுக்குத் தானியங்கள் குறையும். தனியார் தொழில்கள் பாதிக்கப்படும்.
* ஏற்கெனவே தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அடித்திருக்கும் சாவு மணிக்கு மேலாக இந்தச் சாவு மணியும் சேர்ந்து விவசாயத்தைப் பாடையில் ஏற்றிவிடும்.

கல்வி உரிமை, உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உரிமை என்று அடுத்தடுத்து காங்கிரஸ் அரசு கொடுத்திருக்கும் உரிமைகள் எவையும் உண்மையில் உரிமைகளே அல்ல, அவை வெறும் கண்துடைப்பு, ஊழல் பெருக வாய்ப்பு என்பதை மக்கள் உணரும்போது நாம் இவற்றுக்குப் பெரும் விலை கொடுத்திருப்போம்.

எதிர்க்கட்சியான பாஜக இதனை முழுமையாகப் புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை. நாங்கள் உணவுப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கிறோம் என்று தைரியமாகச் சொல்லமாட்டேன் என்கிறார்கள். யஷ்வந்த் சின்ஹா, நரேந்திர மோதி ஆகியோர் எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். அவ்வளவுதான். இந்தச் சட்டம் தேவையே இல்லை, மாநிலங்கள் தாமாகவே தத்தம் மாநிலங்களுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை செயல்முறையில் கொண்டுவருவார்கள் என்று மிக வலுவாகச் சொல்வதுதான் சரியானது.

இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்.

6 comments:

  1. தமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 100% பேருக்கும் தானியங்கள் தரப்படுகின்றனவே? ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1,

    ஏற்கெனவே நலிந்துகொண்டிருக்கும் உற்பத்தித் துறை மேலும் நசியும்.
    * இதனால் வேலைவாய்ப்புகள் கட்டாயமாகக் குறையும். ஏற்கெனவே தள்ளாடும் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்.இந்தச் சாவு மணியும் சேர்ந்து விவசாயத்தைப் பாடையில் ஏற்றிவிடும்.

    தமிழ்நாட்டில் விவசாயமும் , உற்பத்தித் தொழிலும் குறைய , முப்பது வருடங்களாக நடை பெற்று வரும் மானிய விலை பொது விநியோக முறையா காரணம் .


    தமிழ்நாட்டில் , நுகர் பொருள் வாணிபக் கழகம் சட்டம் அமைத்தே தனி நிறுமமாக தொடங்கப் பட்டு , பின் கொள்முதல் விற்பனை பெருகியதால் அரசு பொது நிறுவனம் ஆனது .

    சக மனிதர் உணவின்றி பசியால் வாடட்டும், என் உற்பத்தித் தடை படாது இருக்க வேண்டும், எனக்குக் குறைந்த வட்டியில் கடன் வேண்டும்
    என்பது என்ன சித்தாந்தம் .

    ReplyDelete
    Replies
    1. //சக மனிதர் உணவின்றி பசியால் வாடட்டும், என் உற்பத்தித் தடை படாது இருக்க வேண்டும், எனக்குக் குறைந்த வட்டியில் கடன் வேண்டும்
      என்பது என்ன சித்தாந்தம் . //


      உணவு , உடை எல்லாவற்றையும் அரசே இலவசமாக வழங்க வேண்டும்......மக்கள் ஏழ்மையை காரணம் காட்டிக்கொண்டு சோம்பேறிகளாகவே இருக்கவேண்டும்.....இதுதானே உங்கள் [ சோஷியலிச ] சித்தாந்தம்?

      தேவையான மின்சாரமும் , நியாயமான வட்டியில் கடனும் கிடைத்தால் , இப்போது ஊழியர்களாக உள்ள பலர் , தொழில்முனைவோர்களாக மாறுவர்......உற்பத்தியும் , வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்......மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே வாங்கும் தகுதியை அடைவர்....... அரசாங்கத்திடம் கையேந்தவேண்டிய அவசியமே இல்லை...இதைத்தான் பத்ரி கூறுகிறார்......

      Delete
  2. What about the price rise for others who are not covered by FSB ??

    ReplyDelete
  3. லீனஸ்.லிMon Jul 15, 11:13:00 AM GMT+5:30

    பத்ரி சார், வணக்கம்.

    ‘பசியுடன் இருப்பவனுக்கு மீன்களை தருவதைவிட, அவனுக்கு துhண்டில் கொடுத்து - மீன் பிடிக்க கற்றுக்கொடு”. இந்த சொற்களின் முக்கியதுவத்தை எப்போது நமது அரசுகள் புரியப் போகின்றன.

    100 நாள் வேலை திட்டம் வந்தபிறகு விவசாயம் பார்க்க ஆள் கிடைக்கமால் கிராமங்களில் பலர் விவசாயத்தையே கைவிட்டுவிட்டார்கள்.

    கூடிய விரைவில் ‘அனைவருக்கும் உடை (உடை பாதுகாப்பு) ’ எனும் திட்டமும் வந்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு நூற்றாண்டில் நம்மில் பலருக்கு ‘உழைப்பு’ என்பதே மறந்து, முழு சோம்பேறிகளாகிவிடுவார்கள். இதைத்தானே ஆதிக்க நாடுகள் எதிர்பார்க்கின்றன.

    ReplyDelete
  4. பதிவு பாதி கிணறு தான் தாண்டி இருக்கு....


    --பரதன் சுந்தரராஜன்

    ReplyDelete
  5. உணவுப் பாதுகாப்பு சட்டம் மூலம் ஓட்டுகளைக் கவர்ந்து வருகிற மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கூட்டணி கருதுகிறது.
    பாஜக இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் (அவரவர் தாய் மொழியில் வெளியாகிற) புதுப்புது சினிமாப் படங்களைக் காண மேல்வகுப்பு டிக்கெட் இர்ண்டு ரூபாய்க்கும் கீழ் வகுப்பு டிக்கெட் ஒரு ரூபாய்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய சட்டம் கொண்டு வ்ருவோம் தேர்தல் வாக்குறுதி அளித்தால் போதும். காங்கிரஸ் கூட்டணி பணால்.

    ReplyDelete