உணவுக்குப் பெரும் செலவு ஆவதில்லை என்றால், ஒரு குடும்பத்தில் பணமெல்லாம் எங்குதான் செலவாகிறது?
- பெரும்பகுதிச் செலவு வாழ்விடத்தின்மீதுதான். நகரங்களில் ஒருவர் செய்யும் மிகப்பெரும் செலவு மாத வாடகை. அல்லது வீடு கட்டுவதற்கான கடன் அடைப்பு. வீட்டின் பிற வசதிகளான மின்சாரச் செலவு, தொலைக்காட்சி, இணையம், செல்ஃபோன் ஆகியவற்றுக்கான செலவு. இதுதான் உணவைவிடப் பல மடங்கு ஆகிறது.
- அணிந்துகொள்ளத் துணி, செருப்பு, சோப்பு, ஷேவிங் கிரீம், முகப் பவுடர் இன்னபிறப் பொருள்கள்.
- சரியான அடுப்பு வசதி இல்லாதபோது அதற்காகமட்டுமே மிக அதிகமாகச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. என் வீட்டில் இப்போது பெரும்பாலும் மின்சார இண்டக்ஷன் அடுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். இதன்காரணமாக கேஸ் அடுப்பை மிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஓராண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் கூடப் பயனாவதில்லை. விரைவில் கேஸ் சிலிண்டரே பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இண்டக்ஷன் ஸ்டவ், சூழலுக்கு உகந்ததாக உள்ளது. செலவும் குறைவு. இலவசமாக மக்களுக்கு ஏதேனும் தரவேண்டும் என்று ஓர் அரசு ஆசைப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார இண்டக்ஷன் ஸ்ட்வ்களைத் தரலாம். இதனால் பல நன்மைகள். கேஸ் சிலிண்டருக்குத் தரும் மானியத்தை வெட்டிவிடலாம். கச்சா எண்ணெய்ப் பொருளை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஆனால் மாநிலத்தில் தரமான மின்சாரம் கிடைக்கவேண்டும்!)
- குடிநீருக்கு ஆகும் செலவு.
- உடல் நலத்துக்கு ஆகும் செலவு.
- நகரங்களில் தினசரிப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு. கிராமங்களில் இருந்தால் அவ்வப்பொது நகரத்துக்கு வந்து செல்ல ஆகும் செலவு.
- கல்விக்கு ஆகும் பெருஞ்செலவு.
- கேளிக்கைக்கு ஆகும் செலவு. (விருந்து, சாராயம், சினிமா பார்த்தல் முதலான பலவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.)
- மற்ற, எதிர்பாராத திடீர்ச் செலவுகள்.
ஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்?
- தரமான பொதுப் போக்குவரத்து. மெட்ரோ, பேருந்துகள், ரயில்கள் போன்ற பலவற்றை அதிகமாக ஓடச் செய்வதன்மூலம் இந்தச் செலவை ஏழைகளுக்குப் பெருமளவு குறைக்க முடியும்.
- தரமான கல்விச் சாலைகள் - இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்புவரை செலவே இல்லாமல் படிக்க முடியும் என்றாலும் உண்மை நிலை அதுவல்ல. அரசுப் பள்ளிகள்மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் எக்கச்சக்கமான பணத்தை தனியார் கல்வி நிறுவனங்கள்மீது செலவழிக்கிறார்கள்.
- குறைந்த கட்டணத்தில் தரமான குடிநீர். இது இன்று பெரும்பாலான இடங்களில் கிடையாது. சென்னையில் என் வீட்டுக்கு மிக மிகக் குறைந்த கட்டணத்தில் அளவற்ற குடிநீர் கிடைக்கிறது. இந்த நீரைத்தான் நாங்கள் அனைத்துக்கும் பயன்படுத்துகிறோம். ஓராண்டுக்கு நான் அதிகபட்சம் 1,500 ரூபாய்க்குமேல் செலவிடுவது கிடையாது. அதாவது மாதம் 150 ரூபாய்கூடச் செலவில்லை. ஆனால் அதே நேரம் நகரின் பல பகுதிகளில் நீர் தரப்படுவதே இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளிலும் மக்கள் நிராதரவாக விடப்படுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வைத்தான் மிக அவசரமாகத் தீர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் நியாயமான விலையில் நீர் தரப்படவேண்டும். இது சாத்தியம் என்றே தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் இதற்கான ஒழுங்கான ஒரு வழிமுறை இருப்பதுபோலத் தெரிகிறது.
- தரமான பொது மருத்துவமனைகள். கூடவே அரசு மானியம் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள். (எவ்வாறி அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளனவோ, அதுபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் மருத்துவமனைகளை நிறுவலாம். இதில் ரேட் கார்டை அரசு நிர்ணயிக்கும். சாதாரண கன்சல்டேஷனுக்கு இவ்வளவு, சிகிச்சைக்கு இவ்வளவு என்று. இவ்விடங்களில் நிறைய கீழ் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். ப்ளஸ் அரசின் காப்பீட்டில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை.
ஆனால் மிகப்பெரிய பிரச்னையே வீட்டு வசதிதான். முக்கியமாகப் பெருத்துக்கொண்டே வரும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை சமாளிக்க முடியாதபடிக்கு உள்ளது. அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
அரசே வீடுகளைக்கட்டி விற்கலாம் (தனியாருடன் இணைந்து), இடம் அரசாங்துடையது, வீடுகள் தனியாருடையது. இதனால் நிலத்தின் விலையும் கட்டுப்படுத்தபடும், வீட்டின் மொத்த விலையும் குறையும். நியாயமான விலையில் ஒருங்கிணைந்த நகரியங்கள் அமைப்பதும் ஒருவகையில் பயன் தரும்.
ReplyDeleteHouse rent is the biggest problem our friends face today. We nearly pay 25% of our salary for house rent. We live with pain in both mind and heart, rent problem gives me stress. Govt should think and do something otherwise you will loose the healthy capacity of human resources.
ReplyDelete