இந்த நிறுவனத்தைத் தூசு தட்டி எடுத்து ஸ்டார் நிறுவனம், ஸ்டார் நியூஸ் கன்னலை (TV Channel) இந்த நிறுவனத்தின் சொத்தாக மாற்றியது. அதன் பின்னர், முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல இந்தியர் பலரை இந்த நிறுவனத்தில் பங்கு வாங்க வைத்தது. போட்டி நிறுவனங்கள் - முக்கியமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் மற்றும் இந்தியா டுடே குழுமம் (இது பற்றித் தனியாக இன்னொரு பாகத்தில் பார்ப்போம்) - இதைப் பெரிதாக்கி எழுதத் தொடங்கின. ஒரு தொலைக்காட்சியை நடத்த வேண்டுமானால் பல கோடி ரூபாய்கள் தேவை. ஆனால் MCCS நிறுவனத்தின் பங்குத் தொகையே வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான், எனவே இந்த MCCS வெறும் ஓடு நிறுவனம், இதன் பின்னணியில் இருந்து கொண்டு பொம்மலாட்டம் ஆட வைப்பது ரூப்பர்ட் மர்டாக்தான் என்றன. இதற்கு பதிலளித்த ஸ்டார் நிறுவனம், "இப்பொழுதுள்ள பங்குத் தொகை வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான், ஆனால் இதை மூன்று கோடிக்கு உயர்த்த Foreign Investment Promotion Board (FIPB) என்னும் அரசு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம், அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் இந்த மாற்றம் நிகழும்" என்றது.
இதற்கிடையில் குமார மங்கலம் பிர்லா தன்னுடைய பங்கை சுஹேல் சேத்திடம் விற்று விட்டார். பிர்லாவுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்கள் (கணிமம், ஆடைகள், சிமெண்டு எனப் பலவேறு துறைகளில் - இப்பொழுதுதான் L&T என்னும் நிறுவனத்தின் சிமெண்டு உற்பத்தி செய்யும் துறையை வாங்கித் தன்னுடைய சிமெண்டு நிறுவனங்களோடு சேர்க்க ஒரு உடன்பாட்டைச் செய்திருந்தார்) உண்டு. அவர் இந்தமாதிரியான குழப்பம் நிறைந்த, மற்றும் அவதூறு வரவைக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை போலும். ஆனால் இதன் மூலம் ஸ்டாருக்கும் ஒரு நன்மை: சுஹேல் சேத் 30% பங்குடன் தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால், தாங்கள்தான் MCCSஐ ஆட்டிப்படைக்கிறோம் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பி விட்டோம் என்று.
ஆனால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரத் துவங்கின:
- ஸ்டார் நிறுவனம் MCCSஐ வெறும் செயற்கைக்கோள் மேலேற்றும் வேலையை மட்டும் செய்யுமாம். இந்த நிறுவனத்தில் ஹாங்-காங்கின் ஸ்டார் டெலிவிஷன் புரடக்ஷன் (STPL) என்னும் நிறுவனம்தான் 26% பங்கு வைத்துள்ளது. மேலும் MCCS க்கும், STPL க்கும் உள்ள உடன்பாட்டுப் பத்திரத்தின் மூலம்தான் MCCSக்கு ஸ்டார் என்னும் பெயரைப் பயன்படுத்த அனுமதியும், அதற்கு ஈடாக MCCS தனது நிருபர்கள், ஆசிரியர்கள் என்று வேலை பார்க்கும் அத்தனை பேரையும் பணியில் அமர்த்தவோ, பணியிலிருந்து நீக்கவோ STPLஇன் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை உள்ளது.
- ஸ்டாரின் மற்றொரு நிறுவனமான "டச் டெலிகண்டெண்ட்", ஸ்டுடியோ மற்றும் எடிடிங் சேவைகளை அளிக்கும்.
- ஸ்டாரினால் ஆளப்படும் ஹ்யூஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனம் தேவையான infrastructureஐ கொடுக்கும்.
- ஸ்டாரின் விற்பனையாளர்களே விளம்பரத்தை விற்பார்கள்.
இப்படி எல்லாமே ஸ்டாரின் கையில். அரசுக்கும் இது தெரியாமல் இல்லை. அதனால் மீண்டும், மீண்டும் அரசு விளக்கம் அளிக்கக் கோரி ஸ்டாரிடம் கடிதங்கள் அனுப்புகிறது. ஸ்டாரும் மீண்டும், மீண்டும் பதிலனுப்பி ஒவ்வொரு வாரமாக நீட்டிப்பு செய்து கொண்டு வருகிறது.
ஸ்டார் பலகோடி ரூபாய்களை முதலீடு செய்து பல தொலைக்காட்சிக் கன்னல்களை நடத்தி வருகிறது. திடீரென்று கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, ஆனால் எப்படியாவது தன் சொத்துக்களைத் தன்னிடமே தக்க வைத்துக்கொள்ள சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவே அனைவரும் முயற்சி செய்வர். யாரும் பலகோடி ரூபாய்களை விட்டெறிந்து விட்டு ஓடிப்போய்விடப் போவதில்லை.
இன்னும் தொடரும்
No comments:
Post a Comment