Sunday, July 25, 2004

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3

[பாகம் 1 | பாகம் 2]

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது 'உலக வரலாறும் மனித விடுதலையும்' என்னும் கட்டுரை. இந்த நீண்ட கட்டுரையில் பாலசிங்கம் ஹெகலின் இயங்கியலில் (dialectics) தொடங்கி, அங்கிருந்து கார்ல் மார்க்ஸின் தத்துவத்துக்குத் தாவுகிறார். மார்க்ஸைப் புரிந்து கொள்ள ஹெகலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று லெனினை மேற்கோள் காட்டுகிறார். ஹெகலின் கருத்து 'வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு'. மார்க்ஸ் ஹெகலின் எழுத்துகளை 'ஆன்மீகவாதம்' என்றும் 'புதிரான புராணக்கதை' என்றும் விமர்சித்தபோதும் அவரது இயங்கியல் கோட்பாட்டை வெகுவாகப் புகழ்ந்தார். 'ஹெகலின் கருத்துலகத்திலிருந்து இயங்கியலைப் பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சையை' மார்க்ஸியம் என்கிறார் பாலசிங்கம். "இயங்கியலின் அடிப்படையில் ஆன்மத்தின் சூட்சுமத்தை விளக்க முனைந்தார் ஹெகல். அதே இயங்கியல் விதிகளைக் கொண்டு இயற்கையின் இரகசியங்களை விளக்க முனைந்தார் எங்கல்ஸ். அதே விதிகளைக் கொண்டு சமூக வரலாற்று இயக்கத்தை விளக்க முனைந்தார் மார்க்ஸ்." என்கிறார் பாலசிங்கம்.

கட்டுரையில் தொடர்ந்து மார்க்ஸின் கொள்கைகளை விவரித்து, அதன்மீதான் அல்துசாரின் விமரிசனங்களைப் பற்றியும் விளக்குகிறார். கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' முதலாளிய சமூகத்தின் உற்பத்தி வடிவத்தை வகிர்ந்து காண்பிப்பது, முதலாளிய உற்பத்தி முறையில் நிலவும் முரண்கள், இந்த முரண்களால் முதலாளியம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி, பின்னர் சிதைந்து போகும் என்று எழுதியுள்ளது பற்றி விவரிக்கும் பாலசிங்கம் ஏன் மார்க்ஸின் தீர்க்கதரிசனம் பலிக்கவில்லை என்பதையும் விளக்குகிறார்.

மார்க்ஸின் கொள்கைகளைத் தொடர்ந்து ரஷ்யா, சீனா நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிச அரசுகள், நவ-மார்க்ஸியக் கருத்துகள் ஆகியவற்றை பாலசிங்கம் விவரமாக ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின் மூலம் சோசலிசம் சிதைந்ததற்கான காரணங்களையும் முன்வைக்கிறார்.

தொடர்ச்சியாக, புக்குயாமாவின் "சமூகப் பொருளுற்பத்தி வடிவங்களின் படிநிலை வளர்ச்சியின் உச்சமாக முதலாளியமும், அரசியலமைப்பின் உச்சமாக லிபரல் ஜனநாயகமும் உருவாக்கம் பெற்றதால் உலக நெருக்கடி நிலைமைகள் தணிந்து மனித வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது" என்னும் கருத்து இன்று பொய்த்துவிட்டது என்கிறார் பாலசிங்கம். "மானிட சமூகம் இன்னமும் உன்னதம் பெறவில்லை. மனிதர்களிடையே பிணக்குகள் இன்னமும் தீர்ந்துவிடவில்லை. முரண்பாடுகள் நீங்கிவிடவில்லை. மானிடம் இன்னும் விடுதலை பெறவில்லை." என்னும் பாலசிங்கம் சாமுவேல் ஹண்டிங்டனின் நாகரிகங்களின் மோதல் (Clash of Civilizations) எனும் கோட்பாட்டை அடுத்து அறிமுகப்படுத்துகிறார்.

"நாகரிகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. நாகரிகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்டனின் வாதம்" என்கிறார் பாலசிங்கம். ஆனால் இந்தக் கொள்கை மூலம் இன்றைய உலகில் உள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளை விளக்கி விட முடியாது என்கிறார் பாலசிங்கம். "இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் [ஹண்டிங்டன்] கண்டு கொள்ளவில்லை." என்கிறார் பாலசிங்கம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இலங்கையில் சிங்கள-தமிழ் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சண்டையையும், இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கான கருத்தியல் ரீதியான கோட்பாட்டு விளக்கத்தையும் பாலசிங்கம் வைக்கவில்லை. வேண்டுமென்றே விட்டுவைத்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

முதலிரண்டு அரசியல் கட்டுரைகளையும் நீக்கிப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் தமிழில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான புத்தகம் என்று நான் கருதுகிறேன். மேற்கத்தியத் தத்துவ உலகம் பற்றி அறிய விரும்பும் தமிழர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இதுவாக இருக்கலாம். இந்தச் சிந்தனைகள் பற்றி, இந்த அளவிற்கு எளிமையாகவும், அதே சமயம் செறிவாகவும் தமிழில் வேறு புத்தகங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆழ்ந்த படிப்பும், அதை வெளிச்சொல்லும் திறமையும் வாய்ந்த பாலசிங்கம் தமிழ்ச் சிந்தனை உலகில் மிக முக்கியமானவர் என்பதிலும் வேறு கருத்து இருக்க முடியாது. தன் மற்ற வேலைகளுக்கிடையில் பாலசிங்கம் இன்னமும் பரவலாக எழுதவேண்டும்.

8 comments:

  1. //அதுதவிர இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வேயின் உதவியுடன் நடந்த, பிரபாகரன் ஈடுபடாத, அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக தலைமையேற்றது பாலசிங்கமே.// (பாகம் 1) இந்த வாக்கியம் மிக வினோதமாக இருந்தது. பிரபாகரன் வேறு, புலிகள் வேறு என்றும் தோன்றும் படியாக இருக்கிறது. இந்துப் பத்திரிக்கை புலிகள் வேறு ஈழமக்கள் வேறு என்று வலிந்து எழுதுவதை நினைவு படுத்துகிறது. நமது ஊடகங்கள் புகட்டியவை எவ்வளவு வலிமையானவை என்று நான் இப்போதும் வியக்கிறேன். Island of Blood ல்லும் (அனிதா பிரதாப் எழுதியது ) இராஜிவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் நடந்த போது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள், அப்பேச்சுவார்த்தையினை நடத்த இராஜீவுக்கு இருந்த நோக்கம் போன்றவைகள் பற்றிய விவரங்கள், அவற்றினூடே அவர் பிரபாகரனை எடுத்த பேட்டி பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கும். நானும் இந்தப் புத்தகத்தை (விடுதலை) படிக்க எண்ணியிருந்தேன் (நானும் இது சாகசங்களை பற்றியதாக கூட இருக்கலாம் என்று அதிக ஆர்வம் செலுத்தவில்லை). உங்களுடையது நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. தங்கமணி: சிலர் கண்களுக்கு எல்லாமே வினோதமாகப் புலப்படலாம். பிரபாகரன் ஈடுபட்டால் அவர் பக்கத்தில் நின்று முக்கிய ஆலோசனைகளை வழங்குவார், ஈடுபடாத போது (என்றால் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாத போது என்று பொருள்) தானே தலைமை தாங்குவார் - என்று பொருள்பட எழுதினேன். அதாவது விடுதலைப் புலிகள் தலைமையில் மிகவும் முக்கியமானவர் என்று பொருள்பட.

    இந்து பத்திரிகை என்று இங்கு தேவையற்ற கதைகள் வேண்டாமே? நன்றி.

    ReplyDelete
  3. perhaps you have not read books by s.v.rajadurai on alienation and existentialism in tamil.on contemporary philosophers like habermas,baskar roy and others there is not much in tamil on them, as far as i know.

    ReplyDelete
  4. இங்கு சென்றதுண்டா: http://tamil.blogdrive.com/

    >>>>Fair quotation எனும் கணிப்பில் அந்த முழுச் சுருக்கத்தையும் வெளியிடுவது நியாயமானதா என்று
    தெரியவில்லை. வேண்டுமானால்
    பிறகு தனியாகத் தட்டச்சிடுகிறேன்.----

    அவசியம் இடவேண்டும். எப்படியாக இருந்தாலும், அனைவரும் புத்தகத்தை வாங்கி விடுவோம்.

    படு ஹெவி கட்டுரையாக இருந்தாலும், முக்கியமான புத்தக அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. பாலாஜி: http://tamil.blogdrive.com/ யாருடைய தளம்? பல மாதங்களாக அங்கு எதுவும் அப்டேட் ஆகவில்லையே.

    ReplyDelete
  6. க்ரியா பதிப்பகம் 1975ல் வெளியிட்டுள்ள எக்சிஸ்டென்ஷியலிசம் என்ற எஸ்.வி.ராஜதுரையின் நூலில் அவர் ஹெகல், ப்ளெய்ஸ் பாஸ்கால் போன்றவர்களின் சிந்தனைகளையும் காம்யு, சார்த்தர், நீட்சே, ஹைடெகர் போன்ற இருத்தலியலாளர்களின் சிந்தனைகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1983ல் வெளியாகியுள்ளது.

    எஸ்.வி.ராஜதுரை அந்நியமாதல், மார்க்சியம்-ஓர் அறிமுகம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளதாகத் தெரிகிறது

    ReplyDelete
  7. பத்ரி அண்ணா இவை பிரம்மஞானி என்ற பெயரில் பாலசிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.விடுதலைப்புலிகளின் ஆரம்பகால இடைக்காலச் செயற்பாடுகள் குறித்து பாலசிங்கத்தின் வழிகாட்டலுடன் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் சுதந்திரவேட்கை என்னும் நூலை எழுதியுள்ளார்.அதிலும் பாலசிங்கம் அவர்களுடைய அரசியல்,தத்துவ செயற்பாடுகளைப் பார்க்கலாம்

    ReplyDelete
  8. if you want to read what has been written in Tamil read such books.But if your intention is to get a comprehensive understanding start with introductory books or books in series like Fontana Modern Masters.
    In the late 70s and 80s existentialism did have an impact in tamil literary world and it has waned since then.

    ReplyDelete