Monday, January 17, 2005

புத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று

மற்றுமொரு கூட்டம் அதிகமான நாள்.

பலர் ஏற்கெனவே முடிவுசெய்திருந்த நூல்களை வந்து வாங்கிச்சென்ற நாள். பலரும் பொறுமையாக ஒவ்வொரு பதிப்பாளரிடமிருந்தும் நூல் பட்டியலை வாங்கிக்கொண்டு வீடு சென்று விடுகின்றனர். பின் தமக்கு வேண்டிய நூல்களை அதில் குறித்துக்கொண்டு, நேரம் செலவு செய்யாமல் நேராக அந்தந்தக் கடைக்குச் சென்று குறிப்பிட்டுள்ள நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.

காலையில் எங்கள் சிறப்பு விருந்தினர் ஹரி கிருஷ்ணன். இணைய நண்பர்கள் யாரும் அதிகமாகத் தென்படவில்லை. அருள் (மீண்டும்) வந்திருந்தார். (வெங்கட் கேட்ட புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா?) சாகரன் வந்திருந்தார். (ஞாயிறு அன்றா இல்லை சனியா? மறந்துவிட்டது.)

காலையில் காலச்சுவடு கண்ணன், அய்யனார் இருவருடனும் பெருமாள் முருகன் வந்தார். முதன்முறையாக பெருமாள் முருகனைப் பார்க்கிறேன். அவரது சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். இரண்டு வார்த்தைகள் அவருடன் பேச முடிந்தது.

ஜெயமோகன் மரத்தடி (யாஹூ குழுமம்) வாசகர்களுடன் உறவாடிய கேள்வி-பதில்களைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். தமிழினி வெளியீடு. இன்னமும் நான் பார்க்கவில்லை. அதில் முன்னுரையில் இகாரஸ் பிரகாஷ், மாலன், பா.ராகவன், சாரு நிவேதிதா, ஆர்.வெங்கடேஷ் போன்று இணையத்தில் எழுதுபவர்கள் பற்றி ஏதோ எழுதியிருப்பதாகக் கேள்வி. பார்த்ததும் எழுதுகிறேன்.

இரவு சிறப்பு விருந்தினராக பிரபஞ்சன் வந்திருந்தார். அவரைப் பார்க்க கவிதா சொக்கலிங்கம் வந்திருந்தார். கவிதா சொக்கலிங்கத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன். பிரபஞ்சனின் முழு சிறுகதைகள் தொகுப்பாக கவிதா வெளியீடாக வந்துள்ளன.

நூற்றாண்டு கண்ட பதிப்பகம் அல்லயன்ஸ் ஸ்டாலுக்கு நடிகர் சிவக்குமார் விருந்தினராக வந்திருந்தார். சிவக்குமாரின் "இது ராஜபாட்டை அல்ல" எனும் சுயசரிதை அல்லயன்ஸ் வெளியீடாக வந்துள்ளது. அல்லயன்ஸ் ஸ்டாலில் இருந்துவிட்டு, நேராக கிழக்கு பதிப்பகம் ஸ்டாலுக்கு வந்து முன்னதாகவே முடிவு செய்தது போல இரா.முருகனின் "ராயர் காப்பி கிளப்" கட்டுரைத் தொகுதியையும் "அசோகமித்திரன் கட்டுரைகள்" இரண்டு தொகுதிகளையும் வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று விட்டார். புகைப்படத்தில் பிடிக்கவோ, சற்று பேசவோ கூட நேரம் இல்லை. சிவக்குமாருடன் கூட அல்லயன்ஸ் சீனிவாசனும் வந்திருந்தார்.

===

இன்று (திங்கள்) கடைசி நாள். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். நாளை முழுவதும் ஐஐடி சென்னையில் ஒரு கான்பரன்ஸ் நடைபெற உள்ளது, அதில் இருப்பேன். புதனுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சி அல்லாத பிற விஷயங்கள் பற்றிய பதிவு இருக்கும்.

இன்று முடிந்தவரை சில புத்தகங்கள் வாங்க வேண்டும்.

5 comments:

  1. சிங்கையின் இன்றைய தமிழ்முரசில் ஒரு செய்தி வந்திருந்தது: கண்காட்சியில் இந்த வருட விற்பனை ரூபாய் 5.40 கோடியை தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று. படிப்பவர்கள் இன்னும் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதும் மிகவும் சந்தோச, நம்பிக்கை கொடுக்கிறது. வாழ்த்துக்கள்.

    அதுபோக பிப்ரவரியின் மத்தியில் மதுரையிலும் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும் தகவல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இந்த ரூபாய் 5.40 கோடி எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லை.

    இதுவரையில் பபாசி எங்களிடம் எத்தனை விற்பனையானது என்று கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்து வேறு பல பதிப்பாளர்களிடமும் கேட்கவில்லை, அவர்களும் சொல்லவில்லை.

    சும்மா குத்துமதிப்பாகச் சொல்லவேண்டுமானால் இவ்வளவு சரியாக (5.40 கோடி!) என்றா சொல்வார்கள்? சுமார் 5 கோடி இருக்கலாம் என்றல்லவா சொல்லவேண்டும்?

    மொத்த விற்பனையில் 90% மேல் பணம் கொடுத்து வாங்குவது. 10%க்கும் குறைவானவையே கிரெடிட் கார்டுகள் மூலம். எனவே சரியான யூகம் என்று ஒன்றும் இருக்க முடியாது.

    -*-

    நிற்க. இந்த மதுரைக் கண்காட்சி பற்றியும் பதிப்பாளரான எங்களுக்கு எந்தச் சரியான தகவலும் இல்லை. யாரோ ஒருவர் இரண்டு நாள்கள் கண்காட்சி என்றார். அதெல்லாம் ஒத்துவராத விஷயம். பத்து நாள்கள் தேவை.

    பிப்ரவரி மத்தியில் என்பதும் சரியான நேரம் அல்ல. ஒரு காலாண்டுக்கு ஓரிடம் என்ற வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி (தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆகிய இடங்களில் பெரிய அளவில் கண்காட்சிகளை நடத்த வேண்டும்.

    சென்னை - ஜனவரி
    மதுரை - ஏப்ரல்
    கோவை - ஜூலை
    திருச்சி - அக்டோபர்

    என்றால் சரியாக இருக்கும். (மழை பெய்யும் என்றால் அதற்குத் தகுந்தாற்போல இடவசதிகளை கவனிக்க வேண்டியிருக்கும்.)

    பிற மாதங்களில் அடுத்த முக்கிய நகரங்களாக இன்னமும் எட்டு நகரங்களைத் தெரிவு செய்து அங்கு சற்று சிறிய கண்காட்சியாக நடத்தலாம்.

    ReplyDelete
  3. இந்த தகவல்களை தந்தவர், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தலைவர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ".... இதில் 250 விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 9 நாள்களில் இதுவரை இல்லாத அளவாக ரூ. 5.40 கோடி மதிப்புள்ள 54 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.10 லட்சம் பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வந்துள்ளனர். சிங்கப்பூர் அரசு பொது நூலகத்துறை அலுவலர்கள் குழு முகாமிட்டு ஏராளமான நூல்களை தேர்வு செய்து வாங்குகிறது......


    தென் மாவட்ட மக்கள் பயனடயும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பிப் 5 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நா முத்துக்குமாரசாமி.

    ReplyDelete
  4. பத்ரி,
    நீங்கள் சொல்வது சரி. ஆனால், ஏப்ரல் எந்த வகையில் சரியான மாதம் என்று தெரியவில்லை. பொது தேர்வுகள், SSLC, +2 தேர்வுகள் நடைபெறும் காலமது. ஆகையால், பொது மக்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், பிற மாவட்ட பதிப்பகத்தார்கள் போன்று சென்னையில்லுள்ள பதிப்பகத்தார்கள் எந்த அளவுக்கு பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்கள் நூல்களை விற்பனை செயவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறி.

    ஆயினும், இத்தகைய முயற்சிகளால், புத்தகம் வாங்கும் பழக்கம் பெருகும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  5. //சென்னை - ஜனவரி
    மதுரை - ஏப்ரல்
    கோவை - ஜூலை
    திருச்சி - அக்டோபர்//

    மதுரைக்குக் கீழே? திருநெல்வேலி? புதுமைப்பித்தன், பாரதியார், சுந்தர ராமசாமி, கலாப்ரியா, ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் என்று ஏகப்பட்ட பேர் மதுரைக்குக் கீழேயிருந்தும் வந்திருக்கிறார்கள் என்பதால்.... படிப்பார்வமும் ஓரளவு இருக்கும் என்றே நம்புகிறேன் :-)

    ReplyDelete