கடந்த சில வாரங்களில் மன்மோகன் சிங் பாஜக, கம்யூனிஸ்ட்கள் வாயில் விழுந்து புறப்பட வேண்டிய நிலைமை. தப்பு செய்த சிறுவனை ஆசிரியர் கையைத் திருப்பிக் காட்டச்சொல்லி முட்டியில் பிரம்பால் அடிப்பதைப் போல அடிக்க விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள். கூட சேர்ந்து கோஷ்டிகானம் பாட "Letters to the Editor" ரிடையர் ஆன மாமாக்கள், தி ஹிந்து எடிட்டோரியல் எழுதும் கூட்டத்தவர்.
முதலில் மன்மோகன் வாங்கிக் கட்டிக்கொண்டது அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது பேசிய பேச்சால். அந்தப் பேச்சில் அவர் ஒரேயடியாக பிரிட்டனைப் புகழ்ந்தார் என்று கம்யூனிஸ்டுகளும், தேச பக்தியில் ஊறித் திளைத்த பாஜகவினரும் திட்டுகிறார்கள். இப்படிச் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலர் வரலாற்றின் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்துச் சொல்லிவிடக்கூடும்! நடுப்பக்கக் கருத்துப் பத்திகளில் மன்மோகனை அனைவரும் திட்டித் தீர்த்தாயிற்று! நான் இரண்டு மூன்று முறைகள் மன்மோகனின் பேச்சைப் படித்துப் பார்த்தேன். ஒருவேளை எனக்குத்தான் அவரது பேச்சு புரியவில்லையோ என்னவோ? மன்மோகன் பிரிட்டிஷ்காரர்களை எங்குமே அளவுக்கு மீறிப் புகழ்ந்துவிடவில்லை. காலனியாதிக்கத்தையோ, ஏகாதிபத்தியத்தையோ கட்டிப்பிடித்துப் புளகாங்கிதம் அடையவில்லை.
விருப்பு வெறுப்புகளன்றி, பிரிட்டிஷ் ஆட்சியின் நல்லவை, கெட்டவை என்று சீர்தூக்கிப் பார்த்து சரியாகவே சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். "வங்காளத்தில் பஞ்சம்! 25 லட்சம் பேர் சாவு! அதெப்படி வெள்ளைக்காரன் ஆட்சி நல்ல ஆட்சி என்று சொல்லலாம்" என்று பலரும் சொல்கின்றனர். காலனியாதிக்கம் என்றாலே காலனியை அடிமையாக நடத்துவதுதான். இதில் என்ன நல்ல ஆட்சி, கெட்ட ஆட்சி என்று இரண்டு வகை என்று பலரும் கேட்கலாம். ஆனால் நல்லது, கெட்டது எல்லாமே "ரிலேடிவ்" - எதை ஒப்பிடும்போது எது அதிக நல்லது, கெட்டது என்பது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான் நமக்கு நாடளாவிய ஆட்சிமுறை, தேர்தல் முறை, குடியரசு முறை, மேற்கத்திய அறிவியல்பூர்வமான கல்விமுறை, மதங்களைக் கேள்வி கேட்கும் தனி மனிதனை முன்னிலைப்படுத்தும் கருத்தாக்கம், ஆங்கிலக் கல்வி போன்ற பல நல்ல விஷயங்கள் கிடைத்தன. ரயில்வே பிரிட்டிஷ்காரர்களின் சொந்த உபயோகத்துக்காக, அவர்களது வர்த்தகத்துக்காக என்றாலும்கூட, அதனால் இன்றைய அளவில் நன்மைகளைப் பெறுவது நாம்தான். மற்றபடி நாட்டைக் கொள்ளையடித்தார்கள் என்பது உண்மைதான். அதை முதலிலேயே சொல்லிவிட்டுத்தான் தன் கதையை ஆரம்பிக்கிறார் மன்மோகன். காந்தி முதல் பெரியார், அம்பேத்கார் வரையிலான அறிஞர்கள் நமக்குக் கிடைத்ததும் பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான். யாரோ சொன்னது போல, ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ்காரன் நாட்டை ஆண்டிருந்தால் இவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிவிட்டு 1975-ல் நாடு மொத்தமாக சவக்கிடங்காக இருக்கும்போது விடுதலை கொடுத்துவிட்டுப் போயிருப்பான்.
அப்படியொன்றும் மன்மோகன் தவறாகப் பேசியதாக எனக்குத் தோன்றவில்லை.
அடுத்து மன்மோகனின் அமெரிக்கா பயணம். அமெரிக்கா போவதற்கு முன்னமேயே கம்யூனிஸ்டுகளுக்கு எங்கே மன்மோகன் இந்தியாவை விற்றுவிடுவாரோ என்று பயம். "இல்லை அய்யா, இந்தியா விற்பனைக்கு இல்லை" என்று மன்மோகன் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதா என்ன? மன்மோகனின் பூர்விகத்தை அலசி அவர் "ஐ.எம்.எஃப் டாய்லெட்டில் ஒண்ணுக்கடித்தவர்தானே" என்று ஒரேயடியாக அவரை மறுதலித்துவிடலாம்!
அமெரிக்காவில் மன்மோகன் மூன்று பெருந்தவறுகளைச் செய்துவிட்டாராம். ஒன்று: அணு மின்சாரம் தயாரிக்கும் சிவிலியன் பணிகளில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெறுவதற்காக இந்திய சிவிலியன் அணு உலைகளை சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்த ஒப்புக்கொண்டிருப்பது. இரண்டு: பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்கு ஏற்ற ஆசாமி அல்ல என்று சொல்லியிருப்பது. மூன்று: இரான்-இந்தியா எரிவாயுக் குழாய்கள் அமைப்பதன் மீதான் சில சந்தேகங்களை முன்வைத்திருப்பது.
சில வாரங்களுக்கு முன்னர் (அதாவது மன்மோகன் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாகவே), Observer Research Foundation, சென்னைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஒரு வாராந்திரப் பேச்சில் எல்.வி.கிருஷ்ணன் அணு ஆயுதங்கள் பற்றி, அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது (Non-proliferation), அணு ஆயுதக் குழுவில் இன்னமும் சேர்த்துக்கொள்ளப்படாத இந்தியாவின் நிலை, இந்தியா என்ன செய்யவேண்டும் ஆகியவை பற்றி ஆழ்ந்து விளக்கினார். அதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. சோம்பல் காரணமாக அதை மேலே ஏற்றவில்லை. இந்த வாரத்தில் அதைச் செய்கிறேன். அவரது கருத்து, இந்தியா தனது சிவிலியன் அணு ஆராய்ச்சி ஸ்தாபனங்களை, அணு மின் நிலையங்களை IAEA-வின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது சரிதான் என்பதே. மன்மோகன் சிங் அதைத்தான், "தன்னிச்சையாக" - அதாவது அமெரிக்காவின் வற்புறுத்தல் ஏதுமின்றி - ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். உண்மையில் அமெரிக்காவே வற்புறுத்தியிருந்தாலும், இது தேவையானதே.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் IAEA கண்காணிப்பு சிவிலியன் அமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். சிவிலியன் அமைப்புகளில் அணு ஆயுத உற்பத்தி ஏதும் நடக்காது இருப்பதையும் சரியான முறையில் பொதுவாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று கண்காணிப்பதையும் செய்வதுதான் IAEA. இதனால் இந்திய மக்களுக்குத்தானே நன்மை? இந்தியா தனியாக வேறோர் இடத்தில் வேண்டுமானால் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யலாமே? அதைத்தானே பிற அணு ஆயுத நாடுகளும் செய்கின்றன? அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ அல்லது அணு உலை எரிபொருளையோ இந்தியாவுக்குத் தர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த எரிபொருள்கள் வழிமாறி, இடம் மாறி, அணு ஆயுதங்களாக உருவெடுப்பதை ஏற்றுக்கொள்ளாதுதானே? எனவேதான் உபகாரத்துக்குப் பிரதியாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கவேண்டும். தவறு ஒன்றுமில்லை! அமெரிக்காவே கேட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் கல்பாக்கம் (சென்னை), கூடங்குளம் போன்ற பல்வேறு அணு மின் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் மக்கள், தம்முடைய சொந்தப் பாதுகாப்பைக் கருதி, இந்தியா IAEA கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது தேவை என்று கேட்டாலும் அதிலும் தவறில்லை!
இரண்டாவது பாகிஸ்தான் பற்றியது. இன்றைய தி ஹிந்து கருத்துப் பத்தியில் மாலினி பார்த்தசாரதி கம்பை எடுத்து மன்மோகனை நாலு சாத்து சாத்தியிருக்கிறார்! பாகிஸ்தானை மன்மோகன் சிங் ஏதோ குறை சொல்லிவிட்டாராம். என்ன சொன்னாராம்? "குடியாட்சி முறையில் நடக்கும் நாடு என்பதாலும், அணு ஆயுதங்கள் முழுக்க முழுக்க சிவிலியன் அரசு கையில் இருப்பதாலும் (அதாவது ராணுவத்தில் கையில் இல்லாததாலும்) இந்தியா தனது பக்கத்தில் உள்ள நாடுகளை விட (அதாவது பாகிஸ்தானை விட) அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்கிறது" என்று சொல்லியிருக்கிறார். இது முழுக்க முழுக்க சத்தியம்தானே?
அணு ஆயுதமே கூடாது என்ற நிலைதான் எனது நிலை என்றாலும் ஒருவகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் அணு ஆயுதம் பரவ இந்தியாவும் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. இந்திரா காந்தி காலத்திலிருந்து கவிஞர் வாஜ்பாய் காலத்தைத் தாண்டி இன்று நாம் ஓர் அணு ஆயுத நாடு. அதே சமயம் போட்டிக்குப் போட்டியாக பக்கத்து நாடு பாகிஸ்தான் உலகின் பல பாகங்களிலிருந்தும் அணு ஆயுதத் தயாரிப்புக்காகவென கடத்தல்கள் பல செய்து, பொய்யான கம்பெனிகளை உருவாக்கி, BCCI என்ற வங்கியின் உதவியால் AQ கானை வைத்து அணு குண்டுகள் செய்து, பின் அதே வேகத்தில் இரான், லிபியா என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு ஆளுக்கு ஒன்று என்று விற்கத் தயாரானது அனைவருக்கும் தெரிந்ததுதானே?
நாளை உலகின் ஏதோ ஒரு பாகத்தில் தீவிரவாதிகள் அணு ஆயுதம் கொண்டு தீவிரவாதத்தை நிகழ்த்தினால் அதற்கு பாகிஸ்தான் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்பதும் அப்பட்டமான உண்மை. அதை வெளியே சொல்வதில் என்ன தவறு? நாம் பாகிஸ்தானுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற காரணத்தால் AQ கான் என்ற ஒரு நபர் - உலகின் முதல் ந்யூக்ளியர் டெரரிஸ்ட் - இந்த உலகிலேயே இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன?
மூன்றாவது: இரான்-இந்தியா பைப்லைன். இது பற்றி பேச்சுவார்த்தை வந்ததுமே இது முட்டாள்தனமான செய்கை என்று எனக்குத் தோன்றியது. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் வழியாக எரிவாயுவை குழாய் மூலமாக நாம் இந்தியாவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம் என்பது எத்தனை முட்டாள்தனமானது? இதில் அமெரிக்கா எனும் நாடு ஒன்று இருப்பதை நாம் மறந்துவிடுவோம். உலக சட்டாம்பிள்ளை இரானைப் பிடிக்கவில்லை என்று கண்டதையும் பேசுவதை மறப்போம். இந்தத் திட்டம் நடப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனை இடைஞ்சல்கள்? திடீரென ஒரு ஜிஹாத் குழு பாதிக் குழாயை நோண்டி ஓர் அணையாத பீடியைச் சொருகினால் எப்படியிருக்கும்? எத்தனை பில்லியன் டாலர்கள் காலி?
இரானுடன் கடல்வழியாக ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்த்து அதைச் செய்யலாம். அல்லது சீனா, நேபாளம் வழியாக மலையைக் குடைந்து ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு பாகிஸ்தானுடனான பிரச்னை முடிவதற்கு முன்னால் அந்த வழியாகக் குழாய் போடுகிறேன் என்று நினைப்பதே முட்டாள்தனம். அதைத்தான் மன்மோகன் சிங் சொன்னார். ஏதாவது வங்கி இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுத்தால் அந்த வங்கியை நடத்துபவனும் முட்டாள். இந்தத் திட்டத்துக்கு காப்பீடு செய்யும் இன்ஷூரன்ஸ் கம்பெனியும் முட்டாள். தி ஹிந்து எடிட்டோரியலில் இன்று இதற்குமாகச் சேர்த்து ஒரு குட்டு மன்மோகனுக்கு.
நியாயவான், புத்திசாலி - இப்படியெல்லாம் யாரும் நாட்டுக்குப் பிரதமராகவே வந்துவிடக்கூடாதே?
மனிதன் கடவுளைப் படைத்தானா?
4 hours ago
மிக, மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி!
ReplyDelete//நியாயவான், புத்திசாலி - இப்படியெல்லாம் யாரும் நாட்டுக்குப் பிரதமராகவே வந்துவிடக்கூடாதே?//
:)
இன்றைய சூழ்நிலையில் இரானிலிருந்து குழாய் மூலமாக அதுவும் பாகிஸ்தான் வழியாக...ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதென்பது இதுதான்! இதைப்பற்றிப் பிரதமர் கருத்துச் சொல்லாமல் யார் சொல்ல வேண்டுமோ?
ReplyDeleteநல்ல பதிவு, பத்ரி. நன்றி. மன்மோகனின் ஆக்ஸ்போர்டு பேச்சை நானும் முழுவதும் படித்தேன். அதை விமர்சிக்க இடமே இல்லை - அருமையான உரை. அணுமின் நிலைய பரிசோதனை குறித்து நீங்கள் சொன்னதும் உண்மை தான். ஈரான் குழாய்த் திட்டம் ஒரு தண்டச் செலவு. அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு தேசிய மும்முரத்தோடு மாற்று எரிசக்திகள் குறித்து ஆராய்ச்சி செய்தால் எத்தனையோ லாபம்...
ReplyDeleteகாலனி பற்றிய கருத்துக்களோடு உடன்பாடு.குழாய் திட்டத்தை பற்றிச் சொல்லமுடியவில்லை.
ReplyDeleteஉங்களின் கருத்து மிகவும் ஏற்புடையதே!
ReplyDeleteஇதை பத்திரிக்கைகளில் பந்தி வைத்தாலென்ன?
ஒட்டுமொத்தமாக letters to the Editor - க்கு எழுதுபவர்களைச் சாடி விட்டீர்களோ என்ற நினைப்பில்...உங்களுக்கு ஒரு மறுப்பும்,
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு ஒரு உடன்பாடும் இந்த எனது பதிவில்
அப்பாடா, கொஞ்சம் மன அழுத்தம் குறைந்த மாதிரி இருக்கிறது. ஹிந்து எடிட்டோரியலை படிப்பதை நிறுத்தி பல நாட்கள் ஆகின்றன. இருந்தாலும் மற்ற பல ஊடகங்களும் இதையேதானே சொல்லிக்கொண்டு குட்டையில் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல கட்டுரை பத்ரி.
ReplyDeleteIndian Prime Minister at Nat'l Press Club Luncheon
ReplyDeletertsp://video.c-span.org/15days/e072005_npc.rm
// நாம் பாகிஸ்தானுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற காரணத்தால் AQ கான் என்ற ஒரு நபர் - உலகின் முதல் ந்யூக்ளியர் டெரரிஸ்ட் - இந்த உலகிலேயே இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன? //
ReplyDeletePrecisely! So why state the obvious? Recording this for the nth time in yet another forum didn’t serve any purpose. It might actually stall the diplomacy that is currently underway. Forunately, Musharaf right now is busy defending Pakistan’s terror exports to London and Egypt, so we haven’t heard from him. Remember he has reacted sharply (both using overt words and covert action) in the past for lesser comments from India.
// பாகிஸ்தானுடனான பிரச்னை முடிவதற்கு முன்னால் அந்த வழியாகக் குழாய் போடுகிறேன் என்று நினைப்பதே முட்டாள்தனம் //
I completely agree on this one.
// அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ அல்லது அணு உலை எரிபொருளையோ இந்தியாவுக்குத் தர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த எரிபொருள்கள் வழிமாறி, இடம் மாறி, அணு ஆயுதங்களாக உருவெடுப்பதை ஏற்றுக்கொள்ளாதுதானே? //
This is probably the most enlightened of all the new initiatives by this new government. While so much noise is being made about Singh’s supposed capitulation to IAEA scrutiny, not many are talking about the tremendous good that this will do to the country’s energy sector. Set against the backdrop of the current energy situation and how it is getting worse by the day, this is a trivial concession.
yetanothervenkat
பத்ரி,
ReplyDeleteஇதுவரை வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது, எதிர்மறையாக எழுத சற்று பயமாக இருக்கிறது :)
நீங்கள் எழுதியுள்ள, இரானியன் பைப்லைன் மற்றும் பாகிஸ்தான் குறித்த கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே. ஆனால்,
அமெரிக்காவுடனான பாதுகாப்பு/அணு உலைகள் குறித்த ஒப்பந்தம் குறித்து சில கேள்விகள் உள்ளன, IAEA ஆய்வுக்கு நமது உலைகளை உட்படுத்த ஒப்புக் கொண்டது தவிர்த்து!
1. Should the Govt. (in a democracy!) not discuss issues of vital national interest in parliament (or in a consultative meeting attended by representatives of major national parties and Experts) before having an agreement in place ? This is a minimum requisite, I guess!
2. Nuclear Experts are of the opinion that segregation of civil and military infrastructure is technically a onerous task that is highly cost prohibitive. No other major power like France, China seems to have done this. Can India afford to spend so much to get American fuel (?) for our reactors ? Is it not worthwhile to spend money and effort on alternate sources of energy ?
3. Will not our nuclear R&D be hampered as India has agreed for a moratorium on nuclear testing ? But the US and others (so called BIG FIVE) will jolly well do what they want to do !!!!!
இந்த ஒப்பந்தத்தால் சீனாவுக்கு பெருத்த மகிழ்ச்சி என்பதால், இடதுசாரிகள் கூச்சல் மட்டும் போட்டு விட்டு சும்மா இருந்து விடுவார்களா என்பதை போகப் போக பார்க்க வேண்டும் !!!
in the long run, America will make lot of money selling power and arms to India.
http://balaji_ammu.blogspot.com/2005/07/india-cheated.html
என்றென்றும் அன்புடன்
பாலா
என்றென்றும் அன்புடன் பாலா: உங்களது பதிவைப் பார்த்தேன். அதில் உள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடல்ல.
ReplyDeleteஃப்ரான்ஸ், சீனா இரண்டும் தமது சிவிலியன், மிலிட்டரி அணுச்சாலைகளைப் பிரித்து வைக்கவில்லை - உண்மைதான். ஆனால் அவை பிற நாட்டிடம் கையேந்தவில்லை. தமக்குத் தேவையான அணு எரிபொருளைத் தாமே உற்பத்தி செய்கின்றார்கள். அதனால் தன்னிஷ்டத்துக்கு நடந்துகொள்கிறார்கள். நமக்குத்தான் ப்ளுட்டோனியமோ வேறென்னவோ அமெரிக்காவிடமிருந்தோ ரஷ்யாவிடமிருந்தோ வேண்டும். அப்பொழுது அவர்கள் நிச்சயமாக தான் கொடுக்கும் மூலப்பொருள் மின் உற்பத்திக்கு மட்டும்தான் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தான். அதற்கு ஏற்றவாறு IAEA கண்காணிப்புக்கு ஒப்புக்கொள்வதும் நியாயம்தான்.
இதில் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தக் குந்தகமும் கிடையாது. செலவு உண்டுதான்! அந்தச் செலவை நம்மால் நன்றாகவே ஏற்றுக்கொள்ளமுடியும். இந்தச் செலவை ஏற்றுக்கொள்ளமுடியாத ஏழை நாடு இந்தியா என்று சொல்லவரும் நிபுணர்கள் யார் என்று பார்ப்போம்...
மேலும் அமெரிக்காவிடமிருந்து அணு எரிபொருள் வாங்க காசு கொடுக்கத்தான் வேண்டும். சும்மா, ஓசியிலா கொடுப்பார்கள்? ஆனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் fossil fuel காசுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கும்!
பாலா: ந்யூக்ளியர் மின்சாரமே மாற்று மின்சாரம்தான்! வேறு என்னவகை மாற்று மின்சாரத்தை எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள்? இன்றைய தேதியில் இந்தியா தீவிரமாக காற்றிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கிறார்கள் (அதற்கும் பெருவாரியான தொழில்நுட்பம் வருவது வெளிநாடுகளிலிருந்துதான்)! சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கும் மின்சாரம் வீட்டில் இரண்டு விளக்குகளைப் போடவே சரியாக வராது! ஆக அணு வழி மின்சாரத்தை ஃப்ரான்ஸ் அளவில் செய்யாவிட்டாலும் நாட்டின் தேவையில் 20-25% ஆவது அதிலிருந்து வருமாறு செய்வது நல்லது.
பத்ரி,
ReplyDeleteஉங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.
இருந்தும், இவ்விடயங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தி பிரதமர் முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அ.அ.பாலா
பத்ரி,
ReplyDeleteஉங்கள் பதிவிற்கு பதிலளிக்க தொடங்கி பதில் கொஞ்சம் நீண்டு விட்டதால் தனிப் பதிவாக பதிவு செய்துள்ளேன்
http://thamizhsasi.blogspot.com/2005/07/blog-post.html