இதன் மீதான எனது சென்ற பதிவில் இதற்கான தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாதா என்று ஒருவர் கேட்டிருந்தார்.
Current Account என்பதை 'நடப்புக் கணக்கு' என்கிறார்கள். Capital Account என்பதை 'முதலீட்டுக் கணக்கு' எனலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்றுமதி, இறக்குமதி, கடனுக்கான வட்டி, பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, சம்பளங்கள், செலவினங்கள் போன்றவை நடப்புக் கணக்கில் வரும். நிறுவனங்களில் முதலீடு செய்தல், கடன் கொடுத்தல், வாங்குதல், கடன் பத்திரங்கள், அரசாங்க நிதிக் கருவிகளில் முதலீடு போன்றவை முதலீட்டுக் கணக்கில் வரும்.
அன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்குள் வருகிறது என்பது பற்றி முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
வருடா வருடம் பெட்ரோல் முதற்கொண்டு பல இறக்குமதிகளுக்காக நாம் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறோம். அதேபோல தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முதற்கொண்டு பல சேவைகளையும் பொருள்களையும் ஏற்றுமதி செய்து டாலர்களைப் பெறுகிறோம். வெகு நாள்களாகவே நமது ஏற்றுமதிகளைவிட இறக்குமதிகள் அதிகமாக உள்ளன. அதாவது வர்த்தக ஏற்ற இறக்கங்களைச் சரி செய்ய நமக்கு அதிக அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னதாக Invisible receipts எனப்படும் என்.ஆர்.ஐக்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் - அவர்கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி - இந்த வர்த்தகத் துண்டுவிழுதலைவிட அதிகமாக இருந்தது. இதனால் நடப்புக் கணக்கில் நமக்குக் கையில் அதிக டாலர்களே இருந்து வந்தன. (current account surplus)
ஆனால் கடந்த சில காலாண்டுகளில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாலும் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டதாலும் இறக்குமதியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமதியின் அளவுக்குச் செல்லவில்லை. அதெ நேரம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிக்கவில்லை; சில காலாண்டுகளில் குறைந்துள்ளது. இதனால் தற்போது நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது. (current account deficit)
இதனால் நாம் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் முதலீட்டுக் கணக்கில் நிறைய வெளிநாட்டுப் பணம் உள்ளே வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (FDI) மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பணத்தை நேரடியாக முதலீடு செய்கின்றன. அதேபோல அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் (FII) இந்தியாவில் பங்குச்சந்தையிலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. பல துறைகளிலும் ஏற்கெனவே இருந்த தடைகள் நீக்கப்பட்டு முதலீடு செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல இந்திய நிறுவனங்களும் இப்பொழுது நேரடியாக வெளிநாடுகளிலிருந்து அன்னியச் செலாவணியில் கடன் பெறுகிறார்கள் (External commercial borrowing). இதன்மூலம் இந்தியாவுக்குள் நிறைய அன்னியச் செலாவணி வருகிறது.
ஆனால் இந்திய நிறுவனங்களோ தனியாரோ வெளிநாடுகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. தனியாரால் அதிகபட்சம் $25,000 முதலீடு செய்யமுடியும். நிறுவனங்களால் $200 மில்லியன் அளவுக்கு அனுமதி இல்லாமல் முதலீடு செய்யமுடியும். ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்து முதலீடு செய்யமுடியும். டாடா குழுமம் சிங்கப்பூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலையை வாங்கியுள்ளது. கொரியாவில் தேவூ மோட்டார் நிறுவனத்தை வாங்கியது. டெலிகுளோப் என்னும் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் ஜெர்மனியில் பாலியெஸ்டர் நிறுவனத்தை வாங்கியது. ஃபிளாக் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. இதைப்போல பல இந்திய நிறுவனங்கள் சீனா முதல் பல நாடுகளில் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு $1 பில்லியன் அளவுக்கு வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் முதலீடுகளைவிட உள்ளே வரும் முதலீடுகள் அதிகம். இதனால்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருந்தாலும் முதலீட்டுக் கணக்கில் அதிகம் அன்னியச் செலாவணி வந்து வாராவாரம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பை அதிகமாக்கிக்கொண்டே போகிறது. இந்தப் பாதை தொடரும். அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே செல்லவேண்டியிருக்கும் - இன்னமும் சில வருடங்களுக்கு. இந்தியாவின் பொருள் ஏற்றுமதி அதிகமாக அதிகமாக; சேவைகள் ஏற்றுமதி வெகுவாக அதிகமாக ஓரளவுக்கு இந்த நிலை மாறலாம். அதற்கு பெட்ரோல் விலை கட்டுக்குள் இருப்பதும் முக்கியம். ஆனால் இந்தப் பற்றாக்குறையை மிக எளிதாக உள்ளேவரும் முதலீடுகளால் சரிக்கட்ட முடியும். இந்த நிலையும் வரும் வருடங்களில் மாற வாய்ப்புகள் குறைவு.
சரி. இருக்கட்டும். இப்பொழுது இதைப்பற்றி என்ன பேச்சு? எல்லாம் மன்மோகன் சிங்கால் ஆரம்பம். இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் நிதிமையமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மன்மோகன். அதற்கு ஒரு முக்கியமான தேவை யாராலும் இந்திய ரூபாயை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிற கரன்சிகளுக்கு மாற்றக்கூடிய அனுமதி இருக்கவேண்டும். (அமெரிக்க டாலரையோ ஐரோப்பிய யூரோவையோ இப்படிச் செய்யலாம்.) அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கிலும் மூலதனக் கணக்கிலும் உள்ள பணங்களை ரூபாயிலிருந்து வேறெந்த கரன்சிக்கும் வேறெந்த கரன்சியிலிருந்தும் ரூபாய்க்கும் தன்னிச்சையாக மாற்றக்க்கூடிய நிலைமை வரவேண்டும்.
அதாவது full current account convertibility & full capital account convertibility.
இந்தியாவும் லண்டன், ஜூரிக், நியூ யார்க், சிங்கப்பூர் போல உலகின் முக்கியமான நிதி மையமாக இருப்பது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா? விஷயம் அவ்வளவு எளிதானதல்ல.
ஏற்கெனவே இந்தியா கிட்டத்தட்ட full current account convertibility நிலையில்தான் உள்ளது. முன்னெல்லாம் போல் இல்லாமல் கிரெடிட் கார்டு மூலமாக பிற நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் மக்களால் வாங்க முடிகிறது. (டொமைன் நேம் ரெஜிஸ்டிரேஷன், அமேசான்.காம் தளத்தில் பொருள்கள் வாங்குவது, இணையத்தள வழ்ங்கி சேவையைப் பெறுவது முதல் பல விஷயங்களை இப்பொழுது நம் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யலாம்.) பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அங்குள்ள ஏ.டி.எம் கருவிகளில் நமது கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ திணித்து அந்த நாட்டுப் பணத்தை வேண்டிய அளவுக்குப் பெறுகிறோம். அங்குள்ள கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். ரிசர்வ் வங்கியிடம் இதற்காக நாம் எந்தக் கணக்கையும் கொடுக்க வேண்டியதில்லை.
அதேபோல நிறுவனங்களும் பல பொருள்களையும் வேண்டிய அளவு இறக்குமதி செய்யமுடிகிறது. சில நேரங்களில் இறக்குமதிக்கு என்று தனியாக சுங்கவரி கட்ட வேண்டுமே ஒழிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. அச்சிடும் தாள் முதல் கணினி வரை எதற்கும் கட்டுப்பாடு இல்லை. ஆக full current account convertibility என்னும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
ஆனால் இப்பொழுது full capital account convertibility என்ற நிலையை அடைய மன்மோகன் சிங், சிதம்பரம் இருவரும் ஆசைப்படுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்?
முதலில் full capital account convertibility என்ற நிலை ஏற்பட்டால் நாம் யார் வேண்டுமானாலும் - தனியாரோ அல்லது நிறுவனமோ - நமக்குத் தேவையான கடன்களையும் பங்கு மூலதனத்தையும் வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கே முயற்சி செய்வோம். ஏன்? டாலர் - ரூபாய் மாற்று விகிதம் ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. கண்டபடி மாறப்போவதில்லை என்று தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கும் கடனுக்கான வட்டிவிகிதம் இந்தியாவை விடக் குறைவு.
இதனால் முதலில் மறைமுகமாகவும் பின்னர் அரசு நினைத்தால் நேரடியாகவும் வீட்டுக்கடன் முதல் பெர்சனல் லோன் வரை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பிக்கும். இந்தப் போட்டியைச் சமாளிக்க இந்திய வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும். இதனால் வங்கிகளில் பணத்தைப் போடுபவர்களுக்கு வருமானம் குறையும். போஸ்ட் ஆஃபீசில் போட்டால் 8%, ப்ராவிடெண்ட ஃபண்டில் 9% என்பதையெல்லாம் மறந்துவிடலாம்.
அல்லது இந்தியர்கள் பணத்தை வங்கியில் வைப்பதைவிட மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றுக்குப் போகவேண்டியிருக்கும். இதில் பெரிய தவறு எதும் இல்லை. ஆனால் இவை இரண்டுமே முதலுக்கு முழுதாக உத்தரவாதத்தைக் கொடுக்கமுடியாதவை. முதலீடுகள் மேலே போகலாம், ஆனால் கீழே இறங்கவும் செய்யலாம். மேலும் இந்தியாவில் பங்குச்சந்தையும் சரி, மியூச்சுவல் ஃபண்ட்களும் சரி, இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்குப் பலவருடங்கள் ஆகலாம்.
இதுநாள்வரையில் போஸ்ட் ஆஃபீஸ், பிராவிடெண்ட் ஃபண்ட் ஆகியவற்றுக்கு தமது பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்பொழுதுதான் போஸ்ட் ஆஃபீசுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல இந்தியாவின் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தமது நிதில் 25% மட்டும்தான் பங்குச்சந்தையில் போடலாம். இந்திய வங்கிகளும் அதைவிடக் குறைந்த அளவே பணத்தை பங்குச்சந்தையில் போடலாம். ஒரேயடியாக இவை பணத்தை பங்குச்சந்தையில் போட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பங்குச்சந்தை உடனடியாக விரிவடைய முடியாது. இதன் விளைவு பங்குச்சந்தை தேவையின்றி சூடாகி உப்பிப் பெரிதாவதுதான். அது உடைந்தால் இந்திய வங்கிகள், இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை நொறுங்கிப்போகும். அதனால் பல லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் வாழ்க்கையே பாழாகிவிடும்.
இந்திய நிதி நிறுவனங்களும் பங்குச்சந்தையும் சரியான அளவு வளர்ச்சி அடையாத நிலையில் இந்தியாவின் வட்டி விகிதம் குறைவது சரியாக இருக்காது.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையில் இருக்கும் வட்டி விகிதம், CRR போன்றவற்றை அவரால் தன்னிச்சையாக மாற்ற முடியாது. உலக நிலைமை என்ன, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன ஆகியவற்றையும் அவர் கவனிக்க வேண்டி வரும். பல நேரங்களில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுவார்கள். தேவையின்றி அழுத்தம் தருவார்கள். இந்தியாவின் fiscal deficit எப்படி இருக்க வேண்டும், இந்தியாவின் வட்டி விகிதம் எப்படி இருக்கவேண்டும் என்று நேரடியாகவும் IMF, உலக வங்கி மூலமும் இந்தியாவை மிரட்டுவார்கள். Full capital account convertibility இல்லாவிட்டால் இந்தியா கடுமையான டிரேட் சர்ப்ளஸ் வைத்திருந்தால் வேறுவிதமாக மிரட்டுவார்கள். இப்பொழுது சீனாவிடம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரென்மின்பியின் மதிப்பை அதிகமாக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களே - அதைப்போல.
ஆனால் இப்பொழுது அது மாதிரியான இடையூறுகள் இல்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இப்பொழுது இருக்கும் வட்டி விகிதம் மோசமானதே அல்ல.
ஆனால் முழு கன்வெர்டிபிலிட்டி வந்துவிட்டால் நம்மிஷ்டத்துக்கு நம் நாட்டுக்கு ஏற்ற முறையில் இதையெல்லாம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் ஆர்பிட்ராஜை வைத்தே பணத்தைக் கொள்ளையடித்துவிடுவார்கள் சிலர். உதாரணத்துக்கு இந்தியாவில் வங்கியில் பணத்தை வைக்க 7% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 9% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் வங்கியில் பணத்தை வைக்க 4% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 6% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்கள் கடன் பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் வங்கியில் போட்டால் 1% தாராளமாக தூங்கிக்கொண்டே சம்பாதிக்கலாம். இது ஓர் உதாரணமே. முழு கன்வெர்டிபிலிடி இருந்தால் இந்த spread குறைந்துகொண்டே வரும். வித்தியாசங்கள் இருக்காது.
ஆனால் வாழ்க்கை முறைகள் வேறுபடும். இந்தியர்கள் அதிகப்பணத்தைச் சேமிக்க விரும்புவார்கள்; அமெரிக்கர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க விரும்புவார்கள் என்று (ஓர் உதாரணத்துக்கு) வைத்துக்கொள்வோம். இதனால் இரு நாட்டு ரிசர்வ் வங்கிகளும் வெவ்வேறு விதமான monetary கொள்கைகளை எடுக்க முடிவு செய்யலாம். அமெரிக்கா பணச்சேமிப்பை அதிகரிக்கவும் கடன் வாங்கிச் செலவழிப்பதைக் குறைக்கவும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இந்தியா சேமிப்பைக் குறைத்து செலவழிப்பை அதிகரிக்க (அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் விரிவடையும்) வட்டி விகிதத்தைக் குறைக்கும்; கடன் வாங்கிச் செலவழிப்பதை அதிகரிக்க விரும்பும். இதனை இடைத்தரகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் (மேலே கூறிய முறைப்படி).
இதுபோன்ற விஷயங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி தன் மூளையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் வேலைதான் அதிகமாகும்.
உலக அளவிலான போட்டியாலும் வீழ்ச்சியடையும் வட்டி விகிதத்தாலும் வங்கிகளின் வருமானம் குறையும். பல சிறு இந்திய வங்கிகள் திவாலானாலும் ஆகும். ஏனெனில் இந்தியாவின் பல்வேறு கடன் வாய்ப்புகளை நோக்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும் பேங்க் ஆஃப் அமெரிக்காவும் போட்டிபோடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள்? இதனால் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்ள சற்றே ரிஸ்க் அதிகமான வர்த்தகத்தில் ஈடுபடலாம் - டெரிவேடிவ்ஸ் இது அது என்று. அது கையை ஒரேயடியாகச் சுட்டு வைக்கலாம். இதெல்லாம் இல்லாமலேயே இந்தியாவின் கூட்டுறவு வங்கிகள் நாசமாகப் போகின்றன. ஊழல் காரணங்களால் இந்தியன் வங்கி போன்றவையே அழிந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச வங்கிகளுடன் போட்டிபோடக்கூடிய திறத்தில் இந்தியாவில் ஒரு வங்கிகூடக் கிடையாது என்று நினைக்கிறேன். ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி இரண்டுமேகூடத் திண்டாடவேண்டும்.
மேலும் பல பிரச்னைகளும் உண்டு. இந்தியர்களுக்கு தமது ரூபாய்களை இஷ்டத்துக்கு பிற கரன்சிகளுக்கு மாற்ற உரிமை கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றி அமெரிக்கப் பங்குச் சந்தையில் போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாளை சீனா தான் அமெரிக்க டிரெஷரி செக்யூரிட்டிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுத்து அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது (நாலைந்து மாபெரும் ஐரோப்பிய பெட்ரோலிய நிறுவனங்களை வாங்குகிறார்கள்) என்று வைத்துக்கொள்வோம். இதனால் திடீரென அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரியத் தொடங்கும். விளைவு: இந்தியர்களின் முதலீட்டு மதிப்பு சரியும். அதாவது எங்கோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால் நமக்கு நெறி கட்டும்!
மற்றொரு பிரச்னை மேலே சொன்னதன் நேரெதிர். இந்தியர்கள் தம்மிஷ்டத்துக்கு அமெரிக்க வங்கிகளிடமிருந்து டாலர்களாகக் கடன் வாங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்திய ரூபாயும் டாலரும் கிட்டத்தட்ட மாறாத விகிதத்தில் உள்ளன. திடீரென்று பாகிஸ்தானில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ராணுவத் தளபதி இந்தியா காஷ்மீரைத் தர மறுத்தால் இந்தியாமீது அணு குண்டை வீசுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தையெல்லாம் இந்தியாவிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். பங்குச்சந்தை கவிழ்கிறது. இதனால் ஹெட்ஜ் ஃபண்ட் ஆசாமிகள் புகுந்து விளையாடி (மே 2004 நாடாளுமன்றத் தேர்தல் ஞாபகம் வருகிறதா?) பணம் பண்ண, பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்கிறது. இதனால் பணம் நாட்டைவிட்டு வெளியேற டாலர்கள் மதிப்பு ஏற ரூபாய் மதிப்பு சரேலெனக் கீழே விழுகிறது. இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் நிலை கோவிந்தா. தற்கொலைதான் ஒரே வழி.
சர்வதேச பணச் சந்தையைப் பற்றிய மிகக் குறைவான புரிதல்கள் இருக்கும்போது நாமா full capital account convertibility வேண்டும் என்று மன்மோகன் சிங்கைக் கேட்டோம்? அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார்? சிதம்பரத்துக்கு 1997 முதலே முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி மீது ஒரு காதல். "வந்ததுடா சான்ஸ்" என்று இப்பொழுது குதிக்கிறார்.
என் கருத்து: இப்பொழுது நமக்கு முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை. எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளனவோ, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவோம். ஒருவருக்கு $25,000 முதலீடு என்பதை விரிவாக்கி $50,000, $100,000 என்று கொண்டு செல்வோம். எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நாட்டுப் பங்குச்சந்தையிலும் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யலாம் என்று அனுமதி தருவோம் (இப்பொழுது அப்படி இல்லை). இந்திய நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களை 10 பில்லியன் டாலர் மதிப்பு வரையிலும் வாங்கலாம் என்று விதிகளைத் தளர்த்துவோம். அதற்கு மேலும் வேண்டுமென்றாலும் கேட்டால் அனுமதி உடனே என்ற நிலைக்குக் கொண்டுவருவோம். இப்பொழுதைக்கு - அடுத்த பத்தாண்டுகளுக்கு - அது போதும். அதேபோல வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம். பின் பிற நாட்டவரும் நேரடியாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம்.
மற்றபடி நம் நேரத்தை இந்தியாவின் ஏழை மக்களை முன்னுக்குக் கொண்டுவருவதில் செலவழிப்போமே?
கிழக்காசிய நாடுகள் 1997 முதல் எப்படி முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டியால் கஷ்டப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள - East Asian financial crisis.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
6 hours ago
From Doctor Bruno - converted from TSCII to Unicode
ReplyDeleteநான் Savings Account மற்றும் Current Account இரண்டுக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பும் சராசரி ஆள். அப்பிடி பட்ட எனக்கே புரியும் படி விளக்கி விட்டீர்கள். hats off to you
விளக்கமான பதிவு. Asian Financial Crisis பற்றி ஏற்கனவே குருமூர்த்தி துக்ளக்கில் (Indian Express English Edition too I guess) எழுதியிருக்கிறார். நீங்கள் இந்தியாவில் உள்ள நிலையை அலசி சாமானியன் அளவில் ஓப்பீடுகளும் செய்திருப்பதால் நன்றாகவே புரிகிறது.
ReplyDeleteஎனக்கும் Savings Account மற்றும் Current Account/Checkings Account உள்ள நுண்ணிய வேறுபாடுகள் புரியவில்லை.
அதை பற்றியும் பதிவு எழுதுவீர்களானால் மகிழ்ச்சி!
மிகத் தெளிவான பதிவு
ReplyDeleteநியாயமான சில கேள்விகளை எழுப்புகிறது.
நன்றி.
Hi Badri
ReplyDeleteYa,its written in simple way and quite understandable.
To have too much money also a problem in maintaining.
Anyway we knew bit of "capital Covertability" after reading this post.
Well done-Keep it up.
Kumar-singapore.
Very very nice article...
ReplyDelete- Sankar
Hi Badri,
ReplyDeleteYou have explained about capital accounr covertibility simply and beautifully. Thank you very much.