சமீபத்தில் மன்மோகன் சிங், சிதம்பரம் இருவருமே கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி பற்றி அதிகமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். "இதோ வந்துவிட்டது", "நாம் ஏற்கெனவே ரெடியாக இருக்கிறோம்" என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர்.
முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்காக எளிதான ஒரு விளக்கம். இப்பொழுதைக்கு இந்திய ரூபாயை வேறு எந்த - அதாவது அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், ஐரோப்பிய யூரோ, ஜப்பானிய யென் என்ற எந்த - நாணயத்துக்கும் யார் வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. எந்த மாற்றமும் கடைசியாக இந்திய ரிசர்வ் வங்கி வழியாகவோ அவர்கள் அனுமதித்திருக்கும் சில பணமாற்று நிறுவனங்கள் வழியாகவோதான் முடியும். அதைப்போலவே பிற நாட்டு கரன்சிகளை இந்திய ரூபாயாக மாற்றுவது. முழு மாற்றுதல் இப்பொழுது முடியாது. ஆனால் ஓரளவுக்கு முடியும். நாம் கிரெடிட் கார்ட் கொண்டு வெளிநாட்டு இணைய வர்த்தகத் தளத்தில் பொருள்/சேவை வாங்கலாம். பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்கு கிரெடிட் கார்டுகள்மூலம் பொருள்களை/சேவைகளைப் பெறலாம். அனுமதிக்கப்பட்ட பிற செலவுகளை - மருத்துவச் செலவுகள், படிப்புச் செலவுகள், முதலீடுகள் ஆகியவை - செய்யலாம், அதுவும் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்க டாலரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்டு மக்களுக்கு எந்த சட்ட திட்டங்களும் கிடையாது. அவர்கள் தமது டாலரை எந்த நாட்டு கரன்சியாகவும் மாற்றிக்கொள்ளலாம்; யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. அதை எந்த நாட்டிலும் எப்படியும் செலவழிக்கலாம்.
முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி வந்துவிட்டால் இந்தியார்களும் இந்திய ரூபாயை இப்படிச் செய்யலாம். பல கட்டுப்பாடுகள் நீங்கிவிடும்.
அப்படியானால் செய்யவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். பல பிரச்னைகளும் உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பல இதைச் செய்து ரொம்பவே திண்டாடிப் போய் விட்டன ஒரு காலத்தில். பல இன்னமும்கூட மீண்டு வரவில்லை.
எனவே இந்தியாவில் இப்பொழுது தேவை இதைப்பற்றிய பொது விவாதம். இப்பொழுதைய சட்ட விதிமுறைகளுக்குள் கேபினெட் விரும்பினால் ரிசர்வ் வங்கி உதவியுடன் இதனை நிறைவேற்றலாம்; நாடாளுமன்றத்தில் சட்டங்கள் ஏதும் இயற்றவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்த சில தினங்களின் சென்னையில் இரண்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.
1. Observer Research Foundation - சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கும் பேச்சு. 8 ஏப்ரல் 2006, 11.00 - 13.00 மணி. கே.சுப்ரமணியம், முன்னாள் இணைச் செயலர், மத்திய நிதி அமைச்சகம் இதைப்பற்றிப் பேசுகிறார்.
2. சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (Swadeshi Jagran Manch) ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கம் - சென்னை விவேகானந்தா கல்லூரி, ஓபுல் ரெட்டி அரங்கில் 16 ஏப்ரல் 2006, மாலை 6.00 மணி அளவில். SJM தேசிய ஒருங்கிணைப்பாளர் முரளிதர் ராவ், ஓய்வு பெற்ற IAS அதிகாரி பி.எஸ்.ராகவன் (இவர் மத்திய அளவில் பல துறைகளில் செயலராகவும், மாநில தலைமைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்) ஆகியோர் பேசுகிறார்கள்.
====
இரண்டுக்கும் போக முயற்சி செய்வேன். என் கணிப்பில் இப்பொழுது முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டிக்கு இந்தியா போகவேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். இன்னமும் ஐந்து-பத்து வருடங்கள் பொறுத்திருக்கலாம்.
காலவரிசை:
மார்ச் 18: கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி இந்தியாவுக்கு நல்லது என்கிறார் மன்மோகன் சிங்.
மார்ச் 20: கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி சீக்கிரமே என்கிறார் சிதம்பரம்.
மார்ச் 20: ரிசர்வ் வங்கி, தனது முன்னாள் துணை ஆளுனர் தாராபூர் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்து, முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடிக்கு எவ்வாறு செல்வது என்று வழிகாட்டச் சொல்கிறது. இவர்களது அறிக்கை ஜூலை 31க்குள் கிடைக்கும் என்று தெரிகிறது.
மார்ச் 21: பிரதமரை பத்திரிகைகள் தவறாக மேற்கோள் காட்டியுள்ளன. இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி பற்றிய தெளிவான பாதை வேண்டும் என்றுதான் சொன்னார் என்கிறார் சிதம்பரம் மாநிலங்கள் அவையில்.
மார்ச் 22: தாராபூர் கமிட்டியை இழுத்து மூடு! முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
மார்ச் 23: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் முழு கேபிடல் கன்வெர்டிபிலிடியை எதிர்த்து அறிக்கை விடுகிறது.
மார்ச் 24: கன்வெர்டிபிலிடிக்கு வெகு அருகில் இருக்கிறோம் என்கிறார் சிதம்பரம். அதே நேரம் ரிசர்வ் வங்கி ஊழியர்களின் எதிர்ப்பைக் குறை சொல்கிறார் சிதம்பரம். ("They should examine the idea and contribute to the debate if they so wish. But an idea should not be opposed merely because one is not familiar with it," he said")
விண்திகழ்க!
3 hours ago
//பல பிரச்னைகளும் உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பல இதைச் செய்து ரொம்பவே திண்டாடிப் போய் விட்டன ஒரு காலத்தில். பல இன்னமும்கூட மீண்டு வரவில்லை.
ReplyDelete//
எந்த விதத்தில் பிரச்சனைகள் வரும் என்று கூறுகிறீர்கள்? இதனால் உண்டாகக் கூடிய தொல்லைகளைப் பற்றி இன்னும் எழுதக் கூடாதா?
பொன்ஸ்: நாளை எழுதுகிறேன்.
ReplyDeleteகேப்பிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடியை 'முதலீடு கணக்கு மாற்றவியலுமை' என மொழிபெயர்த்து ஒரே நேரத்தில் தமிழக் கொலையும் தமிழ்த் தொண்டும் செய்யலாமே!
ReplyDelete