சென்ற ஞாயிறோடு நெய்வேலி புத்தகக் கண்காட்சி முடிவுற்றது.
இம்முறை இரண்டு பிரச்னைகள் இருந்தன. ஒன்று டிஸ்-இன்வெஸ்ட்மெண்ட் தொடர்பான வேலை நிறுத்தப் போராட்டம். இதனால் அதிகம் பாதிப்பில்லை. ஒருநாள் மாலையில்தான் கண்காட்சி தொடங்கியது. மற்றொன்று நெய்வேலி ஊழியர்களது சம்பளத்தில் வீட்டுவரி தொடர்பான பிடித்தம். இதனால் disposable income கொஞ்சமாவது குறைந்திருந்தது. (என்.எல்.சி ஊழியர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்தும் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.)
சென்ற ஆண்டு வந்த சில தமிழ் பதிப்பாளர்கள் இந்த ஆண்டு நெய்வேலிக்கு வரவில்லை. காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கியப் பதிப்பாளர்கள் வரவில்லை. வானதி, கலைஞன் போன்ற சிலரும் வரவில்லை. கிழக்கு, நர்மதா, கவிதா, கண்ணதாசன், திருமகள் நிலையம், மணிமேகலை, பழனியப்பா பிரதர்ஸ், தமிழினி போன்ற பலர் வந்திருந்தனர். கீழைக்காற்று, அலைகள், பாரதி புத்தகாலயம், என்.சி.பி.எச் போன்ற இடதுசாரிச் சிந்தனை புத்தகப் பதிப்பாளர்கள், திராவிடன் புத்தக நிலையம், நக்கீரன், ராமகிருஷ்ண மடம் போன்றோர் இருந்தனர். ஈஷா யோகம், 'இயேசு அழைக்கிறார்' (சரியான பெயர் ஞாபகம் இல்லை) ஆகியோர் புதுவரவுகள். உமா, பிரேமா பிரசுரம், செட்டியார் பதிப்பகம் என்று ஆரம்பித்து பல தமிழ் பதிப்பாளர்கள் இருந்தனர்.
பள்ளி (CBSE), கல்லூரிப் புத்தகங்கள் விற்கும் ஹிக்கின்பாதம்ஸ், பெல் கோ ஆகியோர் எப்பொழுதும் போல இந்த ஆண்டும் நல்ல விற்பனை செய்தன.
குழந்தைகள் புத்தகங்கள் (ஆங்கிலம்) நன்றாக விற்பனை ஆயின. பெரியவர்கள் பொதுவாக ரூ. 100க்குக் கீழாக உள்ள புத்தகங்களை வாங்கினர். அதற்குமேல் என்றால் தயங்கினர்.
இலக்கியம் வாங்குவது பெரிதும் குறைந்திருந்தது. சுஜாதா புத்தகங்களைக் கேட்டுத் தேடினர். ஆனால் உயிர்மை புத்தகங்கள் சிலவே சில விற்பனையாளர்களிடம் இருந்ததாலும் திருமகள் நிலையத்திலும் மிகச்சிலவே இருந்ததாலும் வாசகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.
சமையல் புத்தகங்கள், ஜாதகம், ராசிக்கல், பிரமிட், வாஸ்து ஆகியவை தொடர்ந்து விற்றாலும் முந்தைய வருடங்களிலிருந்து வெகுவாகவே குறைந்துள்ளன.
கிழக்கு புத்தகங்களைப் பொருத்தமட்டில் விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 100% விற்பனை அதிகரித்துள்ளது (x, 2x, 4x). அடுத்து என்ன வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்கள் வரப்போகின்றன என்று கேட்டு ஆர்வத்தோடு வாங்கினார்கள்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் விற்பனைக்கு மேலான பல அம்சங்களும் உள்ளன. தென் தமிழகத்திலிருந்து பல எழுத்தாளர்கள் வருகின்றனர். பல புத்தக விற்பனையாளர்கள் வருகின்றனர். பலருடன் பேசமுடிகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஈடாக மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடைபெறாத ஒரே காரணத்தால் நெய்வேலி கண்காட்சி ஒரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் ஈரோடு கண்காட்சிக்குப் பின்னணியில் உழைப்பவர்களைப் பார்க்கும்போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சி ஈரோடுதான் என்பதுபோல இந்த வருடத்திலிருந்தே ஆகிவிடும் என்று தோன்றுகிறது.
would appreciate when the book exhibition at Erode is going to start.
ReplyDeletemany thanks,
Siva
August 5-15, 2006 @ Erode.
ReplyDelete