இன்றைய தி ஹிந்து செய்தியின்படி மேற்கொண்டு சில விவரங்கள்:
1. தமிழக அரசு ரூ. 6,866 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது. அதில் கிட்டத்தட்ட 40% கடன்கள், அதாவது ரூ. 2,750 கோடி மதிப்புள்ள கடன்களை வெறும் 10% வாங்கியுள்ளனர். ஆக ஏழைகளைவிட பலனடைந்தவர்கள் பணக்காரர்களே. சிலருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.
2. இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது விவசாயக் கூட்டுறவு வங்கிகள். தமிழக அரசு இந்த வங்கிகளுக்கு இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் இதை தமிழக அரசு உடனடியாகச் செய்யப்போவதில்லையாம். வரும் ஐந்து வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யப்போகிறார்கள். வருடத்துக்கு சுமார் ரூ. 1,300 கோடி கொடுக்கப்போகிறார்கள். இதனால் யார் பாதிக்கப்படப்போகிறார்கள்? விவசாயிகள்தாம்! ஏனெனில் விவசாயிகள் மீண்டும் கடன் கேட்டால் கொடுப்பதற்கு விவசாயக் கூட்டுறவு வங்கிகளிடம் பணம் தேவைப்படும் அளவு இருக்காது.
3. "நியாயமான" விவசாயி, அதாவது கடனைத் திருப்பிக் கொடுத்த விவசாயி - இவரது கடன் தொகையும் இவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் எப்பொழுது? தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின்னர். அதாவது பணத்தை ஒழுங்காகச் செலுத்திய விவசாயிகள் இன்னமும் ஐந்து வருடங்கள்வரைகூடப் பொறுத்திருக்கவேண்டியிருக்கும்.
4. ஐந்து வருடங்கள் என்று காலம் தாழ்த்தாமல் ஒரேயடியாகப் பணத்தை வங்கிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளின் ஊழியர் சங்கம் மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. பல கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை படுமோசமாக இருப்பதால் மேற்படி பணம் உடனடியாக அவர்களுக்குக் கிடைக்காவிட்டால் இந்த வங்கிகளால் மேற்கொண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
எதற்குரியது நம் வாழ்க்கை?
7 hours ago
No comments:
Post a Comment