Friday, September 22, 2006

அப்புசாமி தாத்தாவோடு ஒரு மாலை

அப்புசாமி தாத்தாவின் முதல் புத்தகம் (கிழக்கு வழியாக) - அப்புசாமியும் 1001 இரவுகளும் வெளியானதை ஒட்டி எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனுக்கு ஒரு திடுக்கிடும் அதிர்ச்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் புத்தகம் அச்சானது அவருக்குத் தெரியாது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை அவர் 'அக்கறை' என்னும் நிகழ்வை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் gatecrash செய்தோம். புத்தக வரவைத் தெரிவிக்க ஒரு கேக் செய்திருந்தோம். அதில் அப்புசாமி, சீதாப்பாட்டி இருவரும் ஒருவரோடு ஒருவர் குத்துச்சண்டை போடுவது போன்ற படத்தை வரையச் செய்திருந்தோம். (படம் சுமார்தான்!)



உள்ளே நுழைந்து புத்தகம், கேக், ஒரு 'பட்டயம்' போன்றவற்றைப் பார்த்ததும் ஜ.ரா.சுவுக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி.



புத்தகத்துடன் நான், ஜ.ரா.சுந்தரேசன், ராணிமைந்தன்.



பட்டயத்திலிருந்து:

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து சூர்யா ஜோதிகா காலம் வரை மனித ஜென்மங்கள் கல்யாணம் செய்துகொண்டு - குழந்தைதானே பெற்றுக் கொள்கின்றன?

மாறுதலுக்கு நம் பாக்கியம் ராமசாமி மட்டும், தாத்தா - பாட்டி பெற்றுக்கொண்டவர்!

இவர் பெற்றெடுத்த ரெண்டு கிழத்துக்கும் விஷமம் ஜாஸ்தி! அதனால்தானோ என்னவோ, தொல்லை தாங்கமுடியாமல் அந்த ஜோடியைத் தமிழ்நாட்டுக்கே தாரை வார்த்துவிட்டார்.

'அப்புசாமி-சீதாவை அறியாத மூடனா நீ?' என்று கே.பி.எஸ் குரலில் பாடவே செய்யலாம். அந்தளவுக்கு அமெரிக்காவிலிருந்து அமிஞ்சிக்கரை வரை அடாவடி செய்துவிட்டு, இப்போது கிழக்கு பதிப்பகத்துக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் நூறு வருஷங்களுக்குப் பிறகும்கூட அப்புசாமி-சீதாப்பாட்டி தமிழ் நாட்டை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்கள். இப்படி ஒரு வெடிச் சிரிப்பைத் தந்துவிட்டு, ஒண்ணுமே தெரியாமல் நமுட்டுச் சிரிப்பு சிந்தும் 'காமெடி கிங்' ஜ.ராசுவுக்கு அல்வா தரக்கூடாது என்பதால்தான் கேக் கொடுக்கிறோம்!

அக்கறையுடன் எங்கள் அடாவடியைச் சகித்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி!

முந்தைய பதிவு: அப்புசாமி, சீதாப்பாட்டி

5 comments:

  1. ஒரு நல்லவருக்கு, நல்ல நேரத்தில், நல்ல முறையில் செய்யப்பட்ட நல்ல காரியத்துக்கு எனது நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. Badri,
    Its great to see Publishers are not just doing the job of publishing, they are making it a happy & enjoyable activity.. both to the writter and the publisher.. Surely this is would take Tamil Publisheres/Publishing to the next shift.. Good Luck...

    ReplyDelete
  3. அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.

    அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.

    இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"

    சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

    இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.

    இந்த குறும்பு தம்பதியினரை பற்றிய எனது பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. ரொம்ப ரொம்ப நல்ல காரியம்.

    வாழ்த்து(க்)கள் தாத்தா பாட்டியை பெற்றவருக்கும், சர்ப்ரைஸ் கொடுத்தவருக்கும்.

    ReplyDelete
  5. மதுரன்: மதன் ஏற்கெனவே எழுதி தொடராக வந்த சில புத்தகங்களை நாங்கள் கொண்டுவருகிறோம். கிமு கிபி - குமுதத்தில் தொடராக வந்தது இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. மதனின் மனிதனும் மர்மங்களும் - குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது, கிழக்கு மூலமாக புத்தகமாக வந்துள்ளது. வந்தார்கள் வென்றார்கள், விகடன் பிரசுரமாக வெளியாகியுள்ளது.

    நீங்கள் எதிர்பார்ப்பதுபோல மன்னர் வரலாறுகள் பலவற்றையும் புத்தகங்களாகக் கொண்டுவர விரும்புகிறோம். நூல்கள் வெளிவரும்போது தகவல் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete