நேற்றுதான் ‘போர் நிறுத்த ஒப்பந்த'த்தைக் கிழித்து எறிந்துள்ளது இலங்கை அரசு. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே இரண்டு பக்கங்களும் மாறி மாறி அதனை மீறினர். ஆனால் ஒருவர் மீறும்போது அடுத்தவர் நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்வார். செய்த உடனேயே தன் தரப்பிலிருந்து மீறுவார். எதிர்ப்பக்கம் ஒரு புகார் கொடுக்கும்.
இன்று தி ஹிந்துவில் இலங்கை அரசு 351 முறையும், விடுதலைப் புலிகள் 3,830 முறையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஒரு தகவல் வந்துள்ளது. இது கண்காணிப்புக் குழுவின் அதிகாரபூர்வ தகவலா அல்லது தி ஹிந்துவின் திரிபா என்று தெரியவில்லை.
இனி கண்காணிப்புக் குழுவும் இலங்கையை விட்டுச் சென்றுவிடும். முழுப் போர் தொடங்கும். இது மிகவும் வருத்தமான ஒரு நிலை.
விடுதலைப் புலிகளின் வரலாற்றை முடிந்தவரை சுருக்கமாக விளக்க முயற்சி செய்கிறது கிழக்கிலிருந்து வெளியாகும் புத்தகம் ‘விடுதலைப் புலிகள்'. இலங்கைப் இனப்பிரச்னை எங்கிருந்து தோன்றியது, ஏன் சாத்வீக போராட்டங்கள் அங்கே வெற்றிபெறவில்லை, ஆயுதம் ஏந்திய போராளிகள் ஏன் உருவானார்கள், அவ்வாறு தோன்றிய பல குழுக்களின் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு மட்டும் இறுதியில் எஞ்சியது, பல்வேறு ஈழப் போர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப்படை இலங்கைக்குப் போனது, அங்கு ஏற்பட்ட குழப்பங்கள், புலிகளால் கொல்லப்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமி, அதன்பிறகான செயல்பாடுகள், சமீபத்திய நிலைமை என்று பலவற்றையும் தொட்டுப்போகிறது இந்தப் புத்தகம்.
இலங்கைப் பிரச்னையைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நிறைய எழுதவேண்டியுள்ளது. இந்தப் புத்தகம் ஓர் அறிமுகம் மட்டுமே.
முந்தைய பதிவு: மலையாளத்திலிருந்து தமிழுக்கு
Thursday, January 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி,
ReplyDeleteவிடுதலைப்புலிகள் பற்றிய உங்கள் புத்தகம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இப்புத்தகம் முழுமையான ஒன்றல்ல என கூறியிருக்கும் நேர்மை பாராட்டப்படவேண்டியதொன்று! ஏனெனில் இதுவரை பலர் புலிகள் பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளனர். எல்லோரும் தமது புத்தகமே முழுமையான ஆவணமென கூறும்போது நீங்கள் அவ்வாறு கூறாதது மகிழ்வை அளிக்கிறது.
புலிகள் பற்றி ஒரு 15% மட்டுமே தெரிந்த எனக்கு(ஈழத் தமிழன்) முன்னைய புத்தகங்கள் எல்லாம் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன. எனக்கு உறுதியாகத்தெரிந்த விடயங்கள் பல (எனது போராளி நண்பர்கள், தெரிந்த இடங்கள், சம்பவங்கள் சார் நிகழ்வுகள்) திரிபடைந்தும் விடப்பட்டும் இருந்ததைக் கண்டேன். அத்துடன் பல நிகழ்வுகள் 'கவர்ச்சிப்ப்டுத்தப்படவேண்டிய' நோக்குடன் மிகைப்ப்டுத்தப்பட்டும் இருந்தது. பல புத்தகங்கள் நிகழ்வுகளின் வெறும் தொகுப்புகளே! அவைகூட கால ஒழுங்கின்மையுடன் கூடியவையே. ஈழத்தவரல்லாத ஒருவருக்கு சுவாரசியமாக இருக்கலாம் ஆனால் ஒர் ஈழத்தவருக்கு குழப்பம் தருவதாக இருக்கும்.
இவற்றுக்கு புலிகளும் ஒரு வகையில் பொறுப்பேற்கவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் தமது இயக்க விடயங்களை வெளியில் விடுவதில்லை. அவ்வாறு விட்டாலும் மிகக்கவனமாக எதிர்கால திட்டங்கள் கருதி கட்டுப்படுத்தியே வெளியிடுவார்கள். பல விடயங்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியவர்களாலேயே வெளிக்கொணரப்படுகின்றன். அவைகூட வெளிக்கொணரும் ஆளின் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டே வருவதை கண்டிருக்கிறேன். உதாரணமாக ஒரு நண்பன் 1990களில் களத்தில் இருந்து விலகி பொதுவாழ்க்கைக்கு திரும்பியிருந்தான். அவன் அப்போது கூறியவற்றுக்கும் அதே நிகழ்வுகளை 2000களில் கூறியவற்றுக்கும் நிறையவே மாறுபாடு இருந்ததை கண்டேன். அதற்கு அவனது தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு மாறுபட்டதை காரணமாக காணக்கூடியதாக இருந்தது!!!இது ஒன்றும் ஆச்சரியம் தரக்கூடியதல்ல. அத்துடம் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் (விலகியவர்கள்) கூட புலிகள்/அவர்கள் சார் நிகழ்வுகள் பற்றிய தமது கருத்துக்களை மாற்றியதை அறிவேன். இவ்வாறு அக்கால கட்டத்தில் வந்த செய்திகளே தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளிவருகின்றன.
எனினும் உங்கள் வெளியீடு தரமானதாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி
ரகு