Saturday, February 21, 2009

கற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பதிவில் அவர் எழுதியுள்ள கட்டுரை: கற்கத் தவறிய பாடம்

மிக முக்கியமான பதிவு இது. பள்ளிகள் தொடங்கப்பட்டது முதற்கொண்டே, தவறாகக் கற்பிப்பது, மாணவர்கள் வாழ்க்கையை அழிப்பது ஆகியவையும் நடந்துகொண்டே வருகின்றன. பெற்றோர்களுக்கு, பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளின் படிப்பை எதிர்கொள்ளத் தெரியவில்லை.

நேற்றுடன், கடந்த 4 மாதங்களில் சுமார் 1,000 மாணவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இதில் பலர் 10, 12-ம் வகுப்பில் இருக்கும், மார்ச் மாதம் பரீட்சை எழுதப்போகும் மாணவர்கள். வேறு சிலரோ தொடக்கப் பள்ளி நிலையில் இருப்பவர்கள். இடையில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் சிலவற்றிலும் கலந்துகொண்டேன்.

ஒட்டுமொத்தமாகக் கல்வி முறை என்பதே ‘ஊத்தல்’ என்பதுதான் என் கருத்து. வயது அதிகமாக அதிகமாக, இயல்பாகக் கேள்வி கேட்கும் திறனை மாணவர்கள் இழக்குமாறு செய்துவிடுகிறார்கள் நம் ஆசிரியர்கள். சிறு குழந்தைகள் தைரியமாகப் பேசுகின்றனர். நாள் கடக்கக் கடக்க, அவர்கள் ஒவ்வொரு வகுப்பையும் தாண்டத் தாண்ட, ஊமைத்தனம் அதிகமாகிறது. பேச நா எழும்புவதே இல்லை. எதையாவது பேசினால், ‘சீ, வாயை மூடு, அதிகப் பிரசங்கி!’ என்று வாத்தியார் திட்டுவாரோ என்ற பயத்தில் மாணவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள்.

நான் பேசும் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எப்படியாவது உங்கள் மாணவர்களைக் கேள்வி கேட்பவர்களாக மாற்றுங்கள். எப்படியாவது அவர்களுக்குத் தைரியமாகப் பேசக் கற்றுக்கொடுங்கள். எழுதக் கற்றுக்கொடுத்தால் மேலும் நலம். மீதமெல்லாம் தானாக வந்துவிடும்.

மாணவர்களிடம் உரையாடும்போது, முடிந்தவரை ஆசிரியர்கள் அந்த அறையில் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அப்போது உரையாடல் தன்மை நிச்சயம் மேம்படுகிறது. ஆசிரியர்கள் திடீரென உள்ளே நுழைந்தால், போச்சு! அவ்வளவுதான். மாணவர்கள் மீண்டும் கைகட்டி, வாய் புதைத்து, அமைதியாகிவிடுகிறார்கள்.

***

வீட்டில் என் மகளிடம் மாற்றுவிதமாகப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் எனக்குப் பல பிரச்னைகள் எழுகின்றன. அவளது கவனம் பிசகுகிறது. பல நேரங்களில் நான் பள்ளிப் பாடத்திலிருந்து தொடங்கி எங்கோ கதை சொல்ல, அவள் பொறுமை இழக்கிறாள். ஆனால், பாடம் அல்ல என்று சொல்லி, கதையாக அதே விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தால் சந்தோஷமாகக் கேட்கிறாள்.

ஆக, பள்ளிப்பாடம் என்றாலே அதை ஒரு குறிப்பிட்ட விதமாகத்தான் படிக்கவேண்டும் என்ற அபத்த நிலை நம் குழந்தைகளிடம், வெற்றிகரமாகப் புகுத்தப்படுகிறது.

பாடப் புத்தகங்களின் போதாமை, ஆசிரியர்களின் தவறான கற்பித்தல் முறை, மாணவர்களிடம் காணப்படும் பதற்றம், தேர்வு தொடர்பான அச்சம், மதிப்பெண்கள் அதிகமாக வராவிட்டால் வீடுகளிலும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களிலும் நடக்கும் கூத்து... இத்தனையையும் மீறி ஒரு குழந்தை ஏன் பள்ளிக்குப் போகவேண்டும்?

தேர்வுகள் இல்லாத நேரத்தில் பிற மாணவர்களுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசுதல், விளையாடுதல், கலை விழாக்களில் பங்கெடுத்தல் போன்றவை மட்டும்தான் காரணமாக இருக்கமுடியும்.

தேர்வு பயம் இல்லாத, அறிவு வேட்கையை உருவாக்கக்கூடிய, குழந்தைகளிடம் ஆதரவாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் மிக மிக அவசியம். அதை நாம்தான் சோதனை முறையில் உருவாக்கவேண்டும்.

அதற்குள்ளாக மேலும் பல தலைமுறை மாணாக்கர்களை நாசமாக்கப்போகிறோம் நாம்.

10 comments:

  1. Excellent Topic! Kudos to S.Ramakrishnan and you for discussing an important issue. Just brings back the memory of school days fear. I will surely recommend this book for my sister whose son is going to join first grade this year.

    ReplyDelete
  2. மிக முக்கியமான பொருளைத் தாங்கிய கட்டுரையைச் சுட்டியமைக்கு நன்றி! தேர்வும், மதிப்பெண்ணுமே கல்வி என்றாக்கிவிடப்பட்டுவிட்ட தற்காலக் கல்விச் சூழலில், கல்வியின் இயங்கு தளத்தைக் குறித்த சிந்தனைகளை யார் காதில் வாங்கப்போகிறார்கள்!

    ReplyDelete
  3. பத்ரி இங்கு[அமெரிகாவில்] உள்ள சில பள்ளி ஆசிரியர்களையும், அவர்களின் வகுப்பில் பார்வையாளாராக இருக்கவும், மாணவர்களுடன் எனது பள்ளி கல்லூரி வாழ்வை பற்றி பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிகவும் சுவாரசியமாக வகுப்பை நடத்துகிறாரகள். உதாரணத்திற்கு 12 வயது மாணவர்களுக்கு தேவைக்கும்[need], ஆசைக்கும்[wish] இடையே உள்ள வித்தியாசத்தப் பற்றி 2 மணி நேர வகுப்பெடுக்கிறார்கள், குழந்தைகள் தயங்காமல் கேள்வி கேட்கிறார்கள். அதில் என்னை கவர்ந்த சில கேள்விகள் மற்றும் பதில்கள், உடலுறவு தேவையா ஆசையா என்று ஒரு மாணவன் கேட்ட கேள்வி எனக்கு ஒரு கணம் அப்படியே மூச்சு நின்று விட்டது. நம்மூரில் இந்த கேள்வியை கேட்டால் என்ன நிலை ஆகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். மற்றொரு மாணவியிடம் அவளது ஆசைகளையும் தேவைகளையும் என்னவென்று கேட்டதற்கு அவள் சொன்ன பதில், தேவை அம்மா, ஆசை அப்பா.

    நம்ம ஊரைப் போன்று இங்கேயும் சில[வெகு சில என்பது எனது கணிப்பு] ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் தனது மாணவனை கழிவு தொட்டியில்[toilet sink] வைத்து முக்கினார் என்று கேள்விப் பட்டேன், ஆச்சரியமான விசயம் அவர் எந்த தண்டணைக்கும் ஆளாக வில்லை என்பது.

    நம்மூர் கல்வி முறையப் பற்றியும், இந்தியாவை விட அமெரிக்காவில் எவ்வளவு கல்வி வேலை வாய்ப்புகள் இருக்கிறது எனபதையும் சொல்லிய பிறகு சில மாணவர்களின் நடவடிக்கைகள் மாறியிருக்கிறது என்றார் எனது நண்பர். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. படங்களுடன் விரைவில் இதைப் பற்றி விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
  4. நீங்கள் சமீப காலத்தில் எழுதிய ஒரே உருப்படியான பதிவும், முற்றிலும் ஏற்புடையதுமான பதிவும் இதுவே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //ஆக, பள்ளிப்பாடம் என்றாலே அதை ஒரு குறிப்பிட்ட விதமாகத்தான் படிக்கவேண்டும் என்ற அபத்த நிலை நம் குழந்தைகளிடம், வெற்றிகரமாகப் புகுத்தப்படுகிறது.//

    கசப்பான உண்மை

    ReplyDelete
  6. மாற்றுக் கல்விக்கு முயற்சி செய்து, வெற்றி பெற்ற பள்ளி ஆசிரியர் கிஜுபாய் பகேகா அவர்களின் நூல் ‘பகல் கனவு’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.

    ஜப்பானில் மாற்றுக் கல்வி பள்ளியில் படிக்கும் சிறுமி் டாடோ சானின் அனுபவம் ‘ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

    இரண்டு புத்தகங்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சைன்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கிறது.

    சுஜாதா

    ReplyDelete
  7. This was a nice post! our schools are just functioning as a factory to churn out dummies for the society...

    ReplyDelete
  8. நீங்கள் கோவை-க்கு சென்றால்... இந்த பள்ளிக்கு சென்று, அந்த பள்ளியை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

    http://www.ishahomeschool.org/

    -நகுல்

    ReplyDelete
  9. மிக நல்ல பதிவு. இது போன்ற பதிவுகளை இவ்வளவு ஆண்டுகள் பார்க்கவிலையே என வருந்துகிறேன். இது போன்ற பதிவுகளை ஆசிரியர்கள் பார்ப்பதில்லை; புது கருத்துக்களைப் பற்றி தெரிந்துகொள்ள கிஞ்சித்தும் ஆசைப்படுவதில்லை என்பதே என் வருத்தம். தான் செய்யும் பணியில் எதாவது நல்ல மாறுதலும் முன்னேற்றமும் கொண்டுவர முடியுமா என ஒவ்வொரு மனிதனும் மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டும்; இந்த மனநிலை அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  10. பள்ளிகள் இப்படி இருக்க...கொஞ்சம் கல்லூரி பக்கமும் பார்க்கனும் என்று தோன்றுகிறது.சில கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் போதிக்கும் முறை வெகு அபத்தமாக இருக்கு,இங்கிருந்து வெளியேரும் மாணவர்கள் செய்யப்போகும் வேலையை யோசித்தால் தலையை சுற்றுகிறது.பல வேலைகளுக்கு மென்பொருள் வந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது இல்லாவிட்டால் ஒரு பஸ் நிறுத்ததுக்கு கீழே போகக்கூட காசு சுண்டிப்பார்க்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete