Tuesday, February 17, 2009

அமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்

இன்று பா.ராகவன் தன் பதிவில், தன் புத்தகங்கள் அமேசான் தளத்தில் கிடைப்பது பற்றிப் பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக NHM புத்தகங்கள் பெரும்பாலானவற்றை அமேசான் (USA) தளத்தில் ஏற்றியுள்ளோம். இனி வரும் மாதங்களில், இதுவரையில் சேர்க்காத பிற புத்தகங்களும் சேர்ப்பிக்கப்படும்.

இந்தப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சாகி, அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருந்து விற்கப்படுபவை அல்ல. Print-on-demand (POD) என்ற முறையில் அமேசானின் BookSurge என்ற நிறுவனத்தின் வாயிலாக அச்சாக்கப்பட்டு, வட அமெரிக்காவில் விநியோகிக்கப்படுபவை. அமெரிக்காவில் அச்சாவதால், இவற்றின் விலையும் இந்திய விலையுடன் ஒப்பிடும்போது அதிகம்தான்.

இவை மின்னணுக் கோப்புகளாகவே உள்ளன. உங்களிடமிருந்து ஆர்டர் வந்தபின்னர், தாளில் அச்சாகி, தபாலில் அதன்பின் அனுப்பிவைக்கப்படும்.

இந்தப் புத்தகங்களை இந்தியாவில் http://nhm.in/shop/ என்ற இடத்திலிருந்து வாங்கி அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்புவதற்கும், அமேசானிலிருந்து அமெரிக்க முகவரி ஒன்றுக்கு அனுப்புவதற்கும் என்ன விலை வித்தியாசம் இருக்கலாம்?

சில உதாரணங்களைப் பார்ப்போம்:

நான் அமேசானில் கீழ்க்கண்ட நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்தேன்: டெலிவரி அட்ரஸ் அமெரிக்காவில்.

1. நலம் தரும் வைட்டமின்கள்: $8.44
2. கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு: $7.45
3. அம்பானி - ஒரு வெற்றிக்கதை: $7.95
4. நெப்போலியன் - போர்க்களப் புயல்: $7.95
மொத்தம்: $31.79

சூப்பர் சேவர் ஷிப்பிங்கில் ($25-க்கு மேல் கூட்டுத்தொகை இருக்கும் பட்சத்தில்), தபால் செலவு = 0. மொத்தச் செலவு இந்திய ரூபாய் மதிப்பில் (இன்றைய மதிப்பில்): சுமார் 1,500 ரூபாய்.

சுமார் 5-6 நாள்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இன்று ஆர்டர் செய்துள்ளேன். எவ்வெளவு நாள்களில் கிடைக்கும் என்று தெரியப்படுத்துகிறேன். இதே புத்தகங்களை nhm.in கடையில் வாங்குவதாக இருந்தால், புத்தக விலை: ரூ. 295. அமெரிக்காவுக்கு அனுப்ப தபால் செலவு (ஏர்மெயில்) = ரூ. 330. மொத்தம் = ரூ. 625. இது அமெரிக்கா வந்துசேர எவ்வளவு நாள்கள் ஆகும்? 15 நாள்கள் ஆகலாம். அல்லது அதற்குமேலும் ஆகலாம்.

ஆனாலும் ஆகும் செலவு, பாதிக்கும் குறைவே! அப்படியிருக்க, அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் ஏன் அமேசானில் இந்தப் புத்தகங்களை ஆர்டர் செய்வார் என்று நீங்கள் கேட்கலாம்:-)

உடனடியாகப் படிக்கும் ஆர்வம் காரணமாக இருக்கலாம்! அமேசானில் நான்கைந்து ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கும்போது இதனையும் சேர்த்து வாங்குவது காரணமாக இருக்கலாம்.

***

எங்களது புத்தகங்கள் கூடிய விரைவில் கிண்டில் (Kindle) மின்புத்தகங்களாகவும் கிடைக்கும். அது நடந்தபின், அதற்கான அறிவிப்பைப் தருகிறேன். அதேபோல, விரைவில் அமேசான் UK தளத்திலும் POD புத்தகங்களாக இவை கிடைக்கத்தொடங்கும். ஆனால் விலை பவுண்டில் (மேலும் அதிகமாக) இருக்கக்கூடும்.

6 comments:

  1. தெளிவான விளக்கம் &

    Good marketing strategy.

    Wishes

    ReplyDelete
  2. How about quality of printing the same book?

    Thanks,
    Senthil

    ReplyDelete
  3. படிக்கனும்னு நினைச்சா இந்த விலை சரியானதாகவே தெரியுதுங்க. நேரம் மிச்சம். இருந்தாலும் India- USA -normal register post costs only INR 80+ You can check that too..

    ReplyDelete
  4. செந்தில்: தாளின் தரம் உயர்வானதே. அச்சின் தரமும் நன்றாக உள்ளது. ஆனால், அமேசான் விலை அதிகமாகக் காரணம் வேறு. ஒவ்வொரு புத்தகமாக அச்சிடும்போது அச்சு விலை ஏறத்தான் செய்யும்.

    இளா: நான் கொடுத்திருக்கும் அமெரிக்காவுக்கான பார்சல் விலை மிக மிகக் குறைவானது. இதற்குக்கீழ் விலை இருக்க முடியாது. ஒரு கடிதத்தை ரெஜிஸ்டர் போஸ்ட் செய்வதற்கும் புத்தகப் பார்சலை அனுப்புவதற்குமான வித்தியாசம்தான் இது.

    மேலும் தபால்துறை கடல்வழி அல்லது தரைவழி பார்சல் அனுப்புதல் என்பதை நீக்கிவிட்டனர். எல்லாமே விமானவழிதான் என்கிறார்கள். அத்துடன் ஒரு பார்சலில் இரண்டு கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கட்டாயம் உள்ளது.

    ReplyDelete
  5. NHM writer, Mac-ல் எப்பொழுது வரும்? ;)

    ReplyDelete
  6. Amazon this year sold more kindle books than papar books. This is the trend and it will reach in india in a few years...BTB, When are you going to publish in Kindle?. I am still waiting for it

    ReplyDelete