அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்; அதன்மூலம் பயன் பெறமுடியும்?
அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.
சீனா, இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளாது. அதன் அரசியல் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு வழி ஏற்படாதவண்ணம் திபெத், அருணாசலப் பிரதேசம், அக்சாய் சின், பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பற்றிய சீனாவின் கருத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மேலும், சீனா, இந்தியாவை தன்னுடைய போட்டியாளராகவே பார்க்கும். கம்யூனிச அல்லது ஒற்றை ஆட்சி சீனா, ஜனநாயக இந்தியாவைத் தன் நெருக்கமான அரசியல் உறவாகப் பார்க்க எந்த வாய்ப்பும் இல்லை.
அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகொள்ள வாய்ப்புகள் உள்ளன; ஆனால் இது நடக்காது என்று தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தைச் செலுத்தும். ஆஃப்கனிஸ்தானில் கழுத்துவரை சிக்கியுள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனாலேயே அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படாமல் எக்கச்சக்கமான சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கும் கலாசாரரீதியில் உறவுகள் குறைவு. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, வரும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படப்போகும் காரணத்தால் ஏழை அமெரிக்கர்கள் இனவெறியுடன் நடந்துகொள்ளக் காரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் வளமான இந்தியர்கள் இந்த ஏழைகளின் இன்வெறிக்கு ஆளாக நேரிடும் அபாயங்களும் உள்ளன. இந்திய அரசு அமெரிக்க உறவை விரும்பினாலும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிஸ்டுகள், சுதேச இந்துத்துவர்கள், பொதுவான அறிவுஜீவிகள் என அனைவருமே அமெரிக்காவை வெறுப்பவர்கள்! அமெரிக்காவுடனான எந்தவித நல்லுறவுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு ஏற்படாவண்ணம் இவர்கள் நடந்துகொள்வார்கள்.
ஆனால், இந்தவிதமான பிரச்னைகள் ஏதும் ஜப்பான் உறவில் இல்லை. ஜப்பான் 1950-கள், 1960-களில் அணுகுண்டுத் தாக்குதல், இரண்டாம் உலகப்போர் தோல்வி ஆகியவற்றிலிருந்து மீண்டு, 1970-களிலும் 1980-களிலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், பிரிசிஷன் மெஷினிங் போன்ற பலதுறைகளில் உலகின் நம்பர் ஒன் நாடாகத் திகழ்ந்தது. விளைவாக ஏற்பட்ட டிரேட் சர்ப்ளஸ், அதன் விளைவாக கையில் எக்கச்சக்கமான பணம். இதன் காரணமாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பானின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கியுள்ளது. டிஃப்ளேஷன் ஒரு பெரிய பிரச்னை. ரியல் எஸ்டேட் முதல் பங்குச்சந்தை வரை கடுமையான வீழ்ச்சி. வயதானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகமாதல். இதனால் ஏற்படப்போகும் பென்ஷன் பிரச்னைகள். வருங்கால ஜப்பானியத் தலைமுறை நம்பிக்கை இழத்தல்.
இவற்றுடன், ஜப்பானின் ஜனநாயகத்தில் பொதிந்துள்ள அரசியல் குழப்பம் காரணம். ஜப்பானின் இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால் பொதுவாகவே நீங்கள் தடுமாறுவீர்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவரே பிரதமராக இருப்பாரா என்பதும் தெரியாது.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான சச்சரவுகள் எழப்போகின்றன. இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இத்தனூண்டு ஜப்பான் சீனாவைக் காலனியாக்கி சீன மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. நடந்தது 20-ம் நூற்றாண்டில். இதனைச் சீனர்கள் மறக்கப்போவதில்லை. ஜப்பான் தன் மூலப் பொருள்களுக்கு சீனாவையோ ஆஸ்திரேலியாவையோதான் பெருமளவு நம்பியிருக்கவேண்டும். சீனா இப்போதே தன் கச்சாப்பொருள் ஏற்றுமதியைக் குறைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டது. மறுபக்கம் ஆஸ்திரேலியா விரைவாக சீனாவின் சப்சிடியரி சுரங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.
அமெரிக்கா, ஜப்பானுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அமெரிக்கா தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டும்.
இந்த நிலையில் ஜப்பான் இயல்பாகப் பார்க்கவேண்டிய நாடு இந்தியா. ஜப்பானிடம் இப்போதும் நிறையப் பணம் உள்ளது. அதனை மேலும் மேலும் அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதில் பிரயோஜனம் இல்லை. அதை அவர்கள் இயல்பாக முதலீடு செய்யவேண்டியது இந்தியாவில்தான். அதையும் மிக அழகாக, தங்களுக்கும் இந்தியாவுக்கும் லாபம் வரும் வகையில் செய்யலாம்.
உதாரணமாக இந்தியாவில் படுவேக ரயில் போக்குவரத்து நெட்வொர்க் ஒன்றை அமைக்கும் ஒப்பந்தத்தை ஜப்பான் செய்துகொள்ளலாம். அதற்கு சுமார் 200-300 பில்லியன் டாலர் செலவாகும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் கஷ்டமான தொகை அல்ல ஜப்பானுக்கு. அந்த முழுத்தொகையை ஜப்பான் இந்தியாவுக்குக் கடனாக வழங்கும். அந்த படுவேக மெக்லெவ் ரயில் சேவையை அமைத்துத்தர இந்தியா முழுவதும் ஜப்பானிய கட்டுமான நிறுவனங்களை மட்டுமே நாடவேண்டும் என்று கடன் ஒப்பந்தத்தின் ஷரத்தாக ஆக்கலாம். இதனால் ஜப்பானிய நிறுவனங்களுக்கு வளமான பணம் வருமானமாகப் போய்ச் சேரும். இந்தியாவுக்கு அதி அற்புதமான அதிவேக ரயில் சேவை கிடைக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமைக்கப்போகின்றன என்பதால் தரத்துக்குப் பிரச்னை இருக்காது. அதனை நிர்மாணிப்பதில் இந்திய நிறுவனங்கள் சப்-காண்டிராக்டர்களாக இருப்பதால் இந்தியர்களுக்கு இந்தத் துறையில் நல்ல நிபுணத்துவம் கிடைக்கும். இதனால் கிடைக்கும் அதிக வருவாயைக் கொண்டே இந்திய அரசு கடனைக் கட்டிவிட முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
இந்திய, ஜப்பானிய உறவுக்குள் பிரச்னை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஜனநாயகரீதியாக, மதரீதியாக, ஏன் மொழிரீதியாகக்கூட. இந்தியர்கள் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது. (மேலும் பதிலாக நாம் அவர்களுக்கு ரஜினிகாந்த் படங்களையும் மீனாவின் கண்களையும் கொடுத்துவிடலாம்! இதுமட்டும் ஜோக்!)
இப்போது மன்மோகன் சிங் ஜப்பான் பிரதமருடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே இந்தியாவிலோ, நாம் அடுத்து ஒபாமா இரண்டு நாள்கள் இங்கு வருவதைப் பற்றி அதிசயித்துக்கொண்டிருக்கிறோம். ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.
நன்கு வளர்ந்த இந்தியாவால், ஜப்பானுக்கு அரசியல்ரீதியிலும் லாபம் உண்டு. அப்போது சீனா வேறுவழியின்றி இந்தியாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிவரும். அதனால் ஜப்பான்மீது கொஞ்சம் கவனத்தை எடுக்கும். இன்னும் சிலாக்கியமானது அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆக்ஸிஸ். ஆனால் இது நடக்க வாய்ப்புகள் குறைவு. குறைந்தது ஜப்பான்-இந்தியா உறவையாவது மேம்படுத்த நாம் முயற்சி செய்யவேண்டும்.
மிக தெளிவாக அழகா எளிய நடையில் இருக்கு. அதுவும் ரொம்ப நாளைக்குப் பிறகு.
ReplyDeleteExcellent write up . Is japan financing chennai metro . What happenned to hogenekkal water project
ReplyDeleteExcellent analysis and reasoning for India to be aligned with Japan on both economic and democratic fields. It would be a win-win situation. Mr. Badri, may I suggest that you send this article, in English, to a national newspaper?
ReplyDeleteசர்வதேச பிரச்சினைகளில் காலை வாரும் அமெரிக்காவை விட ஜப்பான் எவ்வளவோ மேல்.ஜப்பானுடன் நாம் ஏற்கனவே நெருக்கமாகத்தான் இருக்கிறோம். மிகுந்த பொருட்செலவில் செய்யப்படும் (சுமார் ரூ.4 லட்சம் கோடி) Delhi-Mumbai Industrial Corridor திட்டத்தை ஜப்பானின் நிதியுதவியுடன்தான் இந்தியா செய்து வருகிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் படுவேக ரயில் போக்குவரத்து நெட்வொர்க் திட்டமும் நல்ல திட்டம்தான்.
நல்ல பதிவு.
சரியான நேரத்தில் தேவையான அலசல். கட்டுமான துறைக்கு மட்டும் ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மதிப்பீடு உண்மையிலேயே அசர வைக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கூட ஜப்பானின் ODAவில் துவங்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தவிர Electronics துறையில் இன்னும் அதிக M&Aக்கான சாத்தியத்தையும், Subsidiaryக்களையும் நல்லுறவு தோற்றுவிக்கலாம். சீனாவுக்கு ஜப்பான் எவ்வளவோ தேவலாம். இந்தியா அமெரிக்க/ ஐரோப்பிய பொருளாதார சார்பு நிலைகளைத் தாண்டி ஆசிய நாடுகளின் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம். இத்தருணத்தில் நிகழ்ந்துள்ள பிரதமரின் கிழக்காசிய பயணம் குறித்து யாரும் விரிவாக எழுதவில்லையே என்று நினைத்த சமயத்தில் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் ஒரே கவலை, ஜப்பான் இந்தியாவுடன் வணிக உறவு தாண்டிய அரசியல் உறவுக்குக்கும், ஒத்துழைப்பிற்கும் வற்புறுத்தாமல் இருக்க வேண்டும்.
ReplyDeleteஇது குறித்தும் Look East Policy குறித்தும் இன்னும் விரிவாக எழுத முடிந்தால் செய்யவும்.
ராமதுரை எழுதியது
ReplyDeleteதங்களது கட்டுரை மிகச் சிறந்த மதிப்பீடாகும். எவ்வளவு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெளி நாட்டவ்ர் குடியேற்றத்தை ஜபபான் அனுமதிப்பதில்லை.ஆகவே இந்தியாவிலிருந்து யாரும் ஜப்பானில் குடியேற வாய்ப்பில்ல (அங்கு இடமும் இல்லை). ஆகவே அவர்களது பல தொழில் தயாரிப்புகளை ஜப்பான் இந்தியாவில் மேற்கொள்ள முன்வரும். ஜப்பானுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவில் நாம் நெருக்கமாக பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ள நாடுகள் தென் கொரியா, வியட்னாம் ஆகும்.
ஆனால் இதற்கெல்லாம் அந்த நாடுகளின் கடந்த கால வரலாறு அறியப்பட வேண்டும். கலாச்சார உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தடுக்கி விழுந்த கல்லூரிகளில் எல்லாம் பிரெஞ்சு போதிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு பல்கலைக் கழகங்களில் ஜப்பான், கொரியா, வியட்னாம் பற்றிய ஆய்வுப் பீடங்கள் உள்ளன? எவ்வளவு பேர் ஜப்பானிய, கொரிய, வியட்னாமிய மொழிகளைக் கற்கின்றனர? அதற்கு ஏதாவது ஏற்பாடு உள்ளதா? சரியாக்ச் சொல்வதானால் தமிழகப் பல்கலைக் கழகங்களில் தென் கிழக்காசியா பற்றிய படிப்புகள் பிரதான இடம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பிரபல் ஆங்கிலப் பத்திரிகைகளில், டிவி சேனல்களில் அமெரிக்க விஷயங்களைத் தான் காண முடிகிறது. மேலிருந்து கீழ் வரை அடிப்படைப் போக்கு மாறினால் ஒழிய ஜப்பான், கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடன் நமக்குள்ள அரசியல் பொருளாதார, கலாச்சார உறவுகளை நமக்குப் பயன் தரும் வகையில் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ராமதுரை
அருமையான பதிவு,ஆனால் படித்து முடித்ததும் காமன்வெல்த் குழப்பங்கள் ஞாபகத்துக்கு வருவதை தடுக்க முடியவில்லை.
ReplyDeleteநல்ல அலசல், பத்ரி. நடந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete"ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது."
ReplyDeleteyes its true .
நம் தலைவர்களுக்கு இந்த தொலைநோக்கு சிந்தனை இல்லையே .
சார்,
ReplyDeleteரொம்ப தாங்ஸ். என் பையன ஜப்பான் மொழிய கத்துக்க சொல்லுதேன். யூ ஸ் ஃபுல்லா இருக்கும் ஹி,ஹி,ஹி......
அருமையான கட்டுரை இது போன்ற கட்டுரைகளை அதிகம் எதிர்பார்கின்றேன்... நன்றி...
ReplyDeleteஜப்பானிய தூதரக அதிகாரிகள் மீது பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இப்போதைய செய்தி.
ReplyDeleteபாகிஸ்தான் வழக்கம்போல, சீனாவின் அடிவருடியாக செயல்படுகிறது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பிரச்னை வந்தால் அது பாகிஸ்தனில் வெடிக்கிறது.
nice view badri.what about brazil.some experts saying brazil also important to look.
ReplyDeleteஒரு அதிகம் பேசப்படாத காரணத்தினால் ஜப்பானியர்களுக்கு இந்திய மேல் பிரியமுண்டு.ரஜனிகாந்த் பாப்புலாரிடியை சொல்லவில்லை.
ReplyDeleteஇரண்டாம் உலகப்போருக்கு பின், ஜப்பானின் போர் குற்றங்களை விசாரிக்க ”சர்வதேச கீழைநாட்டு போர்குற்ற விசாரணை” என்பது ஜப்பானியர்கள் போர் குற்றங்களுக்கு பொறுப்பு என்றது. ஆனால் அந்த 11 நீதிபதிகளில் ஜஸ்டிஸ் ராதாபினோத் பால் என்ற இந்தியர் மட்டும் அதை ஒப்புக்கொள்ள வில்லை.
ஜஸ்டிஸ் பால் படி அந்த விசாரணை மன்றமே “வெற்றிபெற்றவர்களின் நீதி”, அதனால் அதற்க்கு எந்த ஜப்பானியரையும் குற்றவாளியாக்கும் தகுதியில்லை, என குற்ற கேஸ்களை தள்ளிவிட்டார்.
ஜப்பானை போர்குற்றவாளியாக தீர்ப்பிட மறுத்த இந்தியரை இன்னும் ஜப்பானியர் அன்புடனும், கடமையுடனும் நினைக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படியாக உரக்க சொல்ல முடியாது.
http://en.wikipedia.org/wiki/International_Military_Tribunal_for_the_Far_East#Judgment
விஜயராகவன்
ஜப்பான்.... நல்ல ஐடியாதான்.... தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஜப்பான் - பிரேசில் - தென்னாப்பிரிக்கா இம்மூன்றும் நன்மைதரும். பொலிடிக்கல் லெவலில் ராஜரீக டிப்ளமாட்டிக் ஹிட்டன் அஜென்டா, கன்னிங்னெஸ் இவையெல்லாம் இல்லாத நாடுகள். அமெரிக்கா வழக்கம் போல் இந்தியாவில் ஒரு வீரப்பேச்சும், அடுத்த ஃப்ளைட்டில் பாகிஸ்தான் போய் இன்னொரு பேச்சும் பேசும். மாசசூசட்ஸில் மகன் 20கோடியில் வீடு கட்டியிருப்பதை மியூசிக் அகாடமி, அயோத்தியா மண்டபம், நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் வாசலில் நின்று பெருமையுடன் பேசும் அனந்தராமன் களும், ராமசுப்பிரமணியன் களும் அவர்தம் தர்மபத்தினிகளும் மட்டும் அமெரிக்காவின் ஆதரவு தேவை (யாருக்கு!!!!) என்று இந்துலயும் சந்துலயும் எழுதுவார்கள். இது தவிர, முத்து படத்துக்குப் பின் ரஜினி படங்கள் எதுவும் ஜப்பானில் சாதித்ததாக செய்தியே இல்லையே?? இத்தனைக்கும் பாபாவில் கைகோ என்ற ஜப்பானியப் பாத்திரம் வேறு !!!
ReplyDeleteஜெம் வீரமணியின் தொடர்புடைய வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் (ஒபாமாவின் இந்திய விஜயம் தொடர்பான) கட்டுரை
ReplyDeleteஅன்புடன்
வெங்கட்ரமணன்